![]() |
வெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -1]Posted : வியாழக்கிழமை, மார்ச் 29 , 2018 14:43:56 IST
![]() இவ்வளவு நூல்களா என்று வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்ததில் கால்மணி நேரம் போனதே தெரியவில்லை. திடீரென கதவைத் திறந்துகொண்டு கால்சட்டை, டீ ஷர்ட், கறுப்புக் கண்ணாடி சகிதம் உள்ளே வந்தார் மிஷ்கின். சோபாவில் காலை மடக்கி அவர் அமர, எதிரே நாற்காலிகளை நாங்கள் ஆக்கிரமித்தோம். கேளுங்க என்றவாறே மிஷ்கின் புன்னகைக்கிறார். அவரது படங்களைப் போலவே அவரது பதில்களும் உணர்வுப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் இருக்கின்றன. ஒரு கேள்விக்குப் பதில் சொல்லி முடித்தபின் கறுப்புகண்ணாடியை கழற்றி வைத்த மிஷ்கின் எங்களுக்கு மேலும் நெருக்கமானவர் ஆகிறார். இடையில் சிகரெட்டுக்காக ஒரு பிரேக். பின்னர் மதிய உணவுக்காக ஒரு பிரேக். ஓர் அறையை விட்டு இன்னொரு அறைக்குச் சென்று அங்கே நேர்காணலைத் தொடர்கிறோம். அங்கிருக்கும் படுக்கையில் போர்ஹேயின் புத்தகம் ஒன்று இருக்கிறது. நூல்களுக்குள் பயணப்படுவதுபோல்தான் இந்த நேர்காணலும் அமைந்துவிட்டது.
சண்முகராஜா ஆக இருந்த இளைஞர் மிஷ்கின் ஆக மாறியது எப்படி? இதன் பின்னர் இருந்த கனவு என்ன? இருவிதமாக கனவுகளைப் பார்ப்பேன். வாழ்வில் ஒரு கஷ்டமான நிலையில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லவேண்டும் என்று நினைப்பது ஒரு கனவு. அது பகல் கனவு என்று சொல்லலாம். சினிமா தான் நமக்கு வாழ்க்கை; சினிமாவுக்குப் போனால் முன்னேறலாம், சாதிக்கலாம் பணம் சம்பாதிக்கலாம் என்று பலர் வருகிறார்கள். நான் அப்படி வரவில்லை. நான் அதற்கு முன்பாக 72 தொழில்களைச் செய்து அதில் உழன்றுகொண்டிருந்தவன். ஏன் 73வது தொழிலாக சினிமாவைச் செய்யக்கூடாது என்று வந்தவன். எனக்கு சாதிக்கவேண்டும் என்ற வெறி கிடையாது. இன்று என்னிடம் உதவியாளர்களாக வருகிறவர்களின் பார்வை எதுவும் என்னிடம் இல்லை. அப்போது நான் நிறைய சினிமா பார்த்தவன் அல்ல. காத்தவராயன், கணவனே கண்கண்ட தெய்வம், கைதிகண்ணாயிரம், போன்ற படங்களே சிறுவயதில் மிகவும் பிடித்த படங்கள். பெரிதாக எந்த படங்களையும் நான் பார்த்திருக்கவில்லை. ஆதர்ச படங்கள் என்று எதுவும் இல்லை. அப்போதே எம்ஜிஆர், ரஜினி படங்கள் பிடிக்காது.
சிவாஜி, கமல் படங்கள் கொஞ்சம் பிடிக்கும். அதில் ஓரளவுக்கு வாழ்க்கை இருந்ததால். நான் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். என் அப்பா ஒரு பெரியாரிஸ்ட். பின் சமயத்துக்குள் போனார். பின் தேவைப்படும் போதெல்லாம் பெரியாரிஸ்டாக மாறிக்கொண்டார். இப்படிப் பல குழப்பங்களுடன் இருந்தார். அதைப் பார்த்துத்தான் நான் வளர்ந்தேன். சின்னவயதில் நான் பார்த்த இமேஜ் மூணு அடிக்கு மூணு அடி பெரிய பெரியார் படம். அந்த குளோசப் பார்த்து மிரண்டிருக்கிறேன். அது என்னை இன்னும் துரத்திக்கொண்டிருப்பதாக நினைக்கிறேன். பிற்காலத்தில் ப்ராய்டையும் யுங்கையும் படித்தபின் கனவுகளைப் பற்றிப் புரிந்துகொண்டேன். எங்கள் வீட்டில் பாட்டி கனவுகளுக்குப் பலன் சொல்ல முனைவார். அம்மா கண்ட கனவுகளுக்கு அவர் பலன் சொல்வார். பதினந்து ஆண்டுகளுக்கு முன்புபல வேலைகள் செய்துகொண்டிருந்தபோது 1500 ரூபாய் கிடைக்கும். அந்தப் பணம் சினிமாவுக்குப் போனால் கிடைக்கும் என்றுதான் வந்தேன். இயக்குநர் ஆகணும் என்றெல்லாம் வரவில்லை. எனக்குத் தெரியாது. I was purely innocent அல்லது idiotically innocent என்று சொல்லலாம். அன்றைக்கு ஒரு வெண்ணிற சுவரைப்பார்த்து ஏன் வாழ்க்கை இப்படி சூனியமாக இருக்கிறது என்று யோசித்தபோது அந்தப் பெரிய வெண்ணிறச் சுவர் ஒரு திரைச்சீலை போல் தெரிந்தது. ஏன் திரைப்படத்துக்குப் போகக்கூடாது என்று தோன்றியது. அது ஆழ்மனத்தில் இருந்து என்னை வழிநடத்திய ஒரு விஷயமாகப் பார்க்கிறேன். நண்பர்களிடம் இதைச் சொன்னேன். அவர்கள் அப்பழுக்கற்ற, உயர்வான நண்பர்கள். ஆனால் அவர்கள் அதைக் கேலி செய்து சிரித்தார்கள். அவர்கள் சிரித்தவுடனே நான் முடிவு செய்தேன் அதைத்தான் செய்வது என்று. எப்போதும் அப்பா அம்மா எதைச் செய்யவேண்டாம் என்று சொல்கிறார்களோ அதையே செய்வது எனக்குப் பழக்கம். இந்தப் பெண்ணைக் காதலிக்கக்கூடாது என்றால் காதலித்தேன். கல்யாணம் செய்யக்கூடாது என்றார்கள். ஓடிப்போய் கல்யாணம் செய்துகொண்டேன். ஒரு ரிபெல் மாதிரிதான் இருந்தேன். அதனால் நண்பர்கள் சினிமா வேண்டாம் என்று உண்மையான அக்கறையுடன் சொன்னபோது நான் அதை மீறினேன். எப்படி உருப்படியாக சினிவை அணுகுவது என்று யோசித்தேன். என்னுடைய வறுமையான சூழலில் அப்படி ஒரு சரியான முடிவை எடுத்தேன். என் வாழ்க்கையில் எனக்குப் பிடித்தது அல்லது முழுமையாகச் செய்ய முடிவது என்னவெனில் கதை சொல்வது.
சின்னவயதில் இருந்தே பாடப்புத்தகங்களை விட அதைச் சொல்லித்தரும் ஆசிரியர்களின் முகபாவங்களே எனக்கு நினைவில் இருக்கும். நான் 16 வயதில் படித்த முதல் இலக்கியமே புத்துயிர்ப்பு நாவல்தான். அப்போது எவ்வளவு புரிந்தது என்று தெரியவில்லை. ஆனால் அந்த நெகலதோவ் பிரபு சோம்பேறித்தனத்துடன் படுத்திருக்கும் இமேஜ், அந்தப் பெண்ணுக்குத் தீங்கிழைத்துவிட்டோமே என்று அடைகிற துயரம், பின்னர் அவளுடன் செல்வது ஆகிய விஷயங்கள் மனதில் பதிந்தன. இதுபோன்ற விஷயங்கள் என்னைக் கதை சொல்லியாக ஆகத் தூண்டின. எனக்கு சினிமாவில் யாரையும் தெரியாது. இளையராஜாவின் பாடல்கள் தவிர. எங்கள் வீட்டில் எல்லோரும் பாடுவோம். பாடுடா என்றால் அந்த ‘டா’முடிவதற்குள் நான் பாட ஆரம்பித்துவிடுவேன். எந்தத் தயக்கமும் எனக்குக் கிடையாது. கதைகளை விட்டால் சினிமா இசை.
சினிமாவுக்குச் செல்ல என்ன வழி? நான் அதுவரை படிப்பின்மீது பெரும் ஆர்வம் இல்லாமல் இருந்தவன். 12ஆம் வகுப்பு பெயில். எனக்குப் படிக்கப் பிடிக்காமல் தேர்வில் இருந்து பாதியில் எழுந்து வெளியேறிவிட்டேன். அதன் பின்னர் செட்டிநாடு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்தேன். அப்பகுதியை ஆவாரம்பூக்கள் நிரம்பிய ஸ்டெப்பி புல்வெளியாக நான் பார்த்தேன். கல்லூரியின் பெரிய விக்டோரியா கால தூண்கள் நினைவில் இன்னமும் இருக்கின்றன. இவற்றை விட்டால் அந்த மூன்று ஆண்டுகளில் நான் எப்படி புகை பிடிப்பது, மது அருந்துவது என்பதைத்தான் கண்டுகொண்டேன். அந்தக் கல்லூரிக்கு 14 கிமீ 8-ஏ என்ற பேருந்தில் பயணம் செய்தபோது பார்த்த முகங்கள்.. இவைதான் என்னிடம் சினிமாவுக்குச் செல்லும்போது இருந்தன. கதை சொல்லி என்பதன் நீட்சிதான் திரைக்கதை ஆசிரியன். திரைக்கதை என்றவுடன் நேராக லேண்ட்மார்க் புத்தக நிலையத்தில் இருக்கும் சினிமா புத்தகங்கள் பிரிவு ஞாபகம் வந்தது. புத்தகங்களை விலைக்கு வாங்க முடியாத நிலை. எனவே அங்கே வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே சேர்ந்தால் படிக்கலாமே என்பதால். முழுமையாக அதைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டேன். Innocence இல் இருந்து sincerity வந்தது அங்கேதான். டேவிட் மேமட், ஹிட்ச்காக், ழான் ஃபியரி மெல்வில், டகாஷி கிடானோ ஆகியோர் பரிச்சயமாகிறார்கள். அங்கே புத்தகங்களுக்கு ‘பார்கோட்’ ஒட்டி டிஸ்ப்ளேவுக்கு அனுப்பும் வேலை. அப்படி அனுப்புகையில் சினிமா பற்றிய புத்தகங்கள் வரும்போது ஒருநாள் கழித்து அனுப்புவேன். அதற்கு என் மேற்பார்வையாளர் அனுமதித்தார். ஆறுமணி வரை வேலை முடிந்ததும், புத்தகங்களைப் புரட்டிப் படித்து குறிப்புகள் எடுப்பேன். ஓராண்டு அங்கே வேலை செய்தேன். அப்போது 10,000 பக்கங்கள் எழுதி இருப்பேன். ஃப்ரான்ஸ் ட்ரூபோ, ஹிட்ச்காக் ஆகியோரின் பெரிய பேட்டிகள் கொண்ட புத்தகம் நான் படித்ததில் முக்கியமானது. இதற்கு இடையில் இலக்கியங்களையும் தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தேன். தினமும் அவற்றைப் படிக்காமல் நான் உறங்குவதே இல்லை.
இந்தச் சமயத்தில் இயக்குநர் கதிர் என்னை அழைத்துச் சென்றார். அவரது எந்தப் படமும் நான் பார்த்தது இல்லை. அவருடைய சினிமா பற்றிய பார்வை எனக்கு ஒவ்வாதது. அவரிடம் வேலை செய்தேன். அதன் பின்னர் வின்செண்ட் செல்வா. அவர் பார்வையும் எனக்கும் ஒத்துப்போகாது. அங்கே பலர் சேர்ந்து சீன்களை விவாதிப்பது வழக்கம். ஆனால் எனக்குத் தெரிந்த மாஸ்டர்கள் அப்படிச் செய்யவில்லை. தாங்களே உட்கார்ந்து எழுதினார்கள். நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டார்கள். ஒரு வெள்ளைத்தாளின் முன்னால் அமர்வது என்பதுதான் திரைக்கதை எழுதுவதின் மிக அடிப்படையான விதி. அதெல்லாம் எனக்கு புத்தகங்கள் கற்றுக்கொடுத்திருந்தன. கதிர் அப்போது பெரிய இயக்குநராக இருந்தவர். அவரிடம் ஒரு சின்ன பிரச்னையில் வெளியே வந்துவிட்டேன். வின்செண்ட் செல்வா என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டார். அப்போதும் எனக்கு எந்தக் கனவும் இல்லை. நான் எங்கே போகப்போகிறேன் என்பது பற்றியும் திட்டங்கள் இல்லை. எனக்கு நிறைய இடங்களில் பொய்களை விட உண்மைகள் உதவி செய்தன. முதன்முதலில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொன்னேன். என்ன பட்ஜெட் என்று கேட்டார். நான் தெரியாது என்று சொன்னேன். நான் நூறு ரூபாய்கூட பார்த்தது இல்லை. நான் எப்படி கோடிகளைப் பற்றிச் சொல்ல முடியும்? என்னை அறிமுகப்படுத்திய நண்பருக்குக் கோபம். நிஜமாகவே தெரியாது என்றேன். ஒன்றரை கோடியில் எடுக்கலாம் என்று அவரே சொன்னார். அப்படித்தான் இக்னொரண்ட் ஆக இருந்தேன். ‘வாளமீன் விலாங்குமீன்’ பாட்டு எடுக்க ஒரு பெரிய டான்ஸ்மாஸ்டரைப் போட்டிருந்தேன். ஆனாலும் அவர் சொன்ன மாதிரி எடுக்கலை. நான் இஷ்டத்துக்கு எடுத்துக்கிட்டிருந்தேன். நான் எளிமையாக எல்லாவற்றையும் அதே சமயம் ஆழமாகக் கற்றுக்கொண்டேன்.
ஒரு பெரிய விநியோகஸ்தர் என் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு போட்டுக்காட்டுமாறு கேட்டார். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். இந்த மாதிரி அறிவில்லாத தனங்கள் என்னிடம் நிறைய இருந்தன. எனக்கு சினிமா எப்படி ஓடும் என்று எதுவும் தெரியவில்லை. சித்திரம் பேசுதடி எடுத்து அதன் ரிலீஸ் கஷ்டங்கள் எல்லாம் முடியும்போது சினிமா என்றால் என்னவென்று எனக்கு ஒரளவுக்குப் புரிந்தது. எனக்கு எந்தக் கனவும் இல்லை. அதனால் எந்த அச்சமும் இல்லை. காட்டாற்று வெள்ளம் போல் எதோவொன்றைச் செய்வது என்று நான் செயல்பட்டேன். அதைச் செய்வதில் நான் மிகவும் தீர்க்கமாகவும் ஆழமாகவும் இயங்கினேன். பிராய்டையும் யுங்கையும் வாசிக்கும்போது வேறு கனவுகள் எனக்குப் புரியவந்தன. என்னுடைய நனவிலி மனம் இரவில் காணும் கனவுகள் மிகப்பெரிய திரைக்கதை ஆசிரியர்களாக இருக்கின்றன. இப்போது 46 வயதாகிவிட்டது. சினிமா மூலமாக நான் சென்றடையப்போகிற இடம் என்று எதாவது இருக்கிறதா என்றால் எதுவும் இல்லை! 22 ஆஸ்கார், 44 தேசிய விருதுகள் வாங்கினாலும் எதுவுமே உதவாது. அதுக்காக ஏங்குதல் போராடுதல் எதுவுமே விருப்பமில்லை. எனக்கு நல்ல படித்த நண்பர்கள் இருக்கிறார்கள். இந்த சினிமா மூலம் அடையும் இடம் என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அதற்குக் காரணம் பௌத்தம் என்று நினைக்கிறேன். ஆனால் என் கனவுகளை நான் படமாக எடுக்கிறேன். ஒரு 55 வயது மனிதர் தன் மகளை அன்பாக வளர்க்கிறார். ஆனால் அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு விலைமாது வீட்டுக்குப் போகிறார். இது ஒரு கனவு. இரு நண்பர்கள். ஒருத்தனுக்கு வேலை கிடைக்கிறது. இன்னொருத்தனுக்குக் கிடைக்கலை. வேலை கிடைக் காதவன் பெரும் எதிரியாக மாறுகிறான் என்பது இன்னொரு கனவு. இரு குழந்தைகள் ஒரு தாயைத் தேடிச்சென்று பார்க்கும் பயணத்தில் வாழ்க்கையைக் காண்கிறார்கள்- இது ஒரு கனவு. தீங்கிழைக்கப்பட்ட ஒரு மிக அழகான குடும்பம் ஒன்று அந்தத் தீயவர்களை கத்தியைக் கையிலெடுத்து துண்டு துண்டாக வெட்டுகிறது. இதெல்லாம் என் கனவுகள். வாழ்க்கையில் ஒரு கேள்வி நம்மை வெறிநாய் போலத் துரத்திக்கொண்டே வருகிறது. இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்ற கேள்வி. எல்லாவீட்டிலும் இறப்பு நடக்கிறது.. இதற்கு அர்த்தம் என்ன? இந்த கேள்விகளுக்கு என் படங்களில் நான் என்னால் முடிந்த பதில்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அறம் என்றால் என்ன என்பதை தத்துவ விசாரணையின் மூலமாக நான் தெரிந்து கொள்ளவில்லை. என் கதைகளின் மூலம் தெரிந்துகொள்கிறேன். என் கனவுகளால் கதை சொல்லியின் கேள்விகளை முன்வைத்து அதற்கொரு முடிவு சொல்கிறேன். அந்த முடிவு அந்தக் கதை சொல்லலின் முடிவுதான். ஆனால் பல கேள்விகளை பதில் சொல்லாமலேயே பார்வையாளர்களிடம் விட்டு விடுகிறேன். அவர்களாலும் பதில் சொல்லமுடியாது.
யுத்தம் செய் படம் வெளிவந்தபின்னர் ஒரு நள்ளிரவில் சேரன் அழைத்து இப்போ உனக்கு பத்து நிமிடத்தில் ஒரு போன் வரும் என்றார். யாரோ சினிமாக்காரர்கள் அழைப்பார்கள் என்று நினைத்திருந்தேன். மதுரையில் இருந்து ஒருவர் கூப்பிட்டு ஒரு மணி நேரம் அழுதார். என் குடும்பத்துக்கும் இப்படித்தான் நேர்ந்தது. நானும் கொலைகாரன் ஆகவேண்டியது. ஆனால் இனி ஆகமாட்டேன். இந்தப் படம் பார்த்துவிட்டேன். நான் செய்யவேண்டியதை விட பல மடங்கு இந்தப் படத்தில் நீங்கள் செய்துவிட்டீர்கள் என்றார். அந்த மனிதனின் நிஜக் கனவை இந்தக் கதையும் போய் பூர்த்தி செய்திருக்கிறது. மொத்தக் கனவுகளையும் இப்படித்தான் பார்க்கிறேன்.
திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு எப்போது வந்தீர்கள்? இதுபோன்ற கேள்விகள் பயங்கரவாதக் கேள்விகள்போல் தெரிகின்றன. அநாகரீகமானவை. இவற்றின் மூலம் என்னைப் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் கேட்கும் கேள்வியாக மட்டும் என்று இதை சொல்லவில்லை. என்னைப் பொறுத்தவரை எனக்கு ஏற்பட்டது இடப்பெயர்வு என்று நினைக்கிறேன். நான் ஓர் இடத்தில் பிறக்கிறேன். அங்கே ஐந்து வயது வரை இருக்கிறேன். அங்கேயிருந்து இன்னொரு இடத்துக்கு வருகிறேன். அங்கே பத்து வயசுவரை இருக்கிறேன். இன்னொரு புறநகருக்குப் போகிறேன். அப்புறம் இந்தப் பெருநகருக்கு இடம்பெறுகிறேன். அதனால் ஒரு குறிப்பிட்ட பழக்கங்கள், விழுமியங்கள், நியாய தர்மங்கள் என்று எதையும் பிடித்துக்கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் என் தொப்புள்கொடி வெட்டப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் என் குடும்பத்தின் வறுமையைக் காரணமாகச் சொல்லவேண்டும். ஆஸ்கார் விருது பெறும்போது பெனினி(Benigni) சொன்னார்: “எனக்கு வறுமையைக் கொடுத்த என் தந்தை தாய்க்கு நன்றி என்று!” நானும் அதற்காக என் தந்தை தாய்க்கு நன்றி சொல்கிறேன். நான் சினிமாவுக்கு வருவதற்கு ஒரே காரணம் என்னுடைய குடும்ப வறுமைதான்! பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருந்தால் வாழ்க்கை பற்றிய எந்த கேள்வியும் எனக்கு இருந்திருக்காது! சினிமா பண்ணுவதற்காக இடம்மாறி தங்குகிறேன். அது எனக்குப் பிடித்திருக்கிறது. இந்த இடப்பெயர்வுகளால் நிறைய புதிய விஷயங்களைக் காண்கிறேன். அது ஒரு வரப்பிரசாதம் என்று நினைக்கிறேன்! நான் ஒரு வலசைப் பறவைப் போல என்று சொல்லாம்.
சென்னைக்கு வராவிட்டால்? கற்பனையான கேள்வி இது. சென்னைக்கு வந்திராவிட்டால் எழுத்தாளன் ஆகியிருக்கலாம். இரண்டு மணி நேரத்தில் ஒரு வாழ்க்கையைச் சொல்லவேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது, எழுத்தாளர்களுக்கு அப்படி இல்லை. 500 பக்கங்களில் அவர்கள் சொல்லலாம். ‘ஹாட்ஜி முராத்’ நாவலில் வீட்டுக்குப் போகிற வழியில் பூக்களை அவன் பறித்துச் செல்வது பற்றி ஒன்றரை பக்கம் எழுதி இருப்பார் டால்ஸ்டாய். இதை ஒரு கதை வடிவத்தில் மட்டும்தான் சொல்லமுடியும். நான் அதிகம் போனால் மூன்று ஷாட் காண்பிக்கலாம். அதற்குமேல் போனால் பார்வையாளர்கள் மலைப்பார்கள். குறிப்பாக இந்தியப் பார்வையாளர்கள் திணறுவார்கள். உங்கள் கேள்வி ஹைப்போதட்டிகல் கேள்வி. என்னவேண்டுமானாலும் ஆகியிருக்கலாம் என்பதுதான் சரியான பதில். காலச்சுழற்சியில் நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன்.
எதிர்காலத்தைக் குறித்த அச்சம் மனிதர்களின் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. உங்களுக்கு அது உண்டா? வலசைப்பறவைகளின் மரபணு எனக்கு இருக்கிறதென்று நினைக்கிறேன். சிலபேருக்கு சோகத்தன்மையும், மகிழ்ச்சித்தன்மையும், விரக்தித்தன்மையும் அவர்கள் மரபணுவிலேயே இருக்கிறது. அது அவர்களின் வம்சாவளியால் தரப்பட்டிருக்கலாம். நான் சிறுவயதில் நிறைய கஷ்டங்கள் பட்டிருக்கேன். அதனால் கசப்புள்ள மகனாக நான் இருந்திருக்கவேண்டும். ஆனால் அது அல்ல நான். எப்போது சந்தோஷமாக குழந்தைத்தனத்துடன்தான் நான் இருந்திருக்கிறேன். அல்லது சின்னவயதிலிருந்தே நான் படித்த கதைகள், கதையைவிட எதுவுமே எந்த மொழியுமே முக்கியமல்ல என்கிற நிலைக்கு என்னைத் தள்ளியிருக்கலாம்! எனக்கு இன்னிக்கும் சோகங்கள் இருக்கின்றன. அவை எதுவுமே என்னைப் பாதிக்கவில்லை! நல்ல புத்தகத்தைக் கையில் எடுக்கும்போது, திரைப்படத்தைப் பார்க்கும்போது, பூக்களை, மழையை, வாகனங்களின் நிறங்களைப் பார்க்கும்போது சந்தோஷமே அடைகின்றேன். சோகமும் மகிழ்வும் நிரம்பியதுதான் வாழ்க்கை. நாம் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். நிர்வாணத்தைச் சொன்ன புத்தரின் முகமும் சிரிக்கிறது. ஜே.கே.வும் சிரிக்கச் சொல்கிறார். எல்லாகாலத்திலும் வலி இருக்கிறது. நாம் என்ன எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியம். பிறப்பு என்பது ஒரு மகிழ்ச்சி. இறப்பு துயரம்தான். இடையில் கொஞ்சம் சிரிப்போமே... ஏன் இப்படி இருக்கீங்க என்று கேட்பார்கள். எப்படியாவது காசு வந்துடும். படம் கிடைச்சுடும்னு எனக்குத் தெரியும். நிறையபேர் திடீரென சூப்பர் ஸ்டார் ஆகிடுவாங்க.. பெரிய பணக்காரர் ஆகிடுவாங்க. இது ஒரு வாழ்க்கை சுழற்சி. ஒரு பேப்பர் திடீரென ஈபிள் டவரில் ஒட்டிக்கும். அது பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? எப்போதுமே ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. பக்கத்து வீட்டைப் பார்த்து ஒப்பிட்டுக்கொள்கிறார்கள். நான் கார் வைத்துள்ளேன். அதனால் பேருந்தில் செய்யும் புதிய புதிய பயண அனுபவத்தை இழந்துள்ளேன். அஞ்சரை அடிதான் படுக்கறதுக்குத் தேவை. கல்யாணத்துக்கு செலவு என்கிற பெயரில் செய்ற கொடுமை இருக்கே.. ரொம்ப மோசம். என் மகள் கல்யாணத்துக்கு அஞ்சாயிரம் ரூபாய்க்குள் திருமணம் செய்யணும்னு இருக்கேன். அவளுடைய ஒரு நாள் திருமணத்துக்காக 30 வருடம் சேமித்த காசை செலவழிக்கவேண்டுமா? அவளுடைய வாழ்க்கைக்கு அதை முதலீடாகக் கொடுக்கலாமே.. சமூகத்தைப் பார்த்து நாமும் அது போலவே செய்ய நினைப்பதுதான் இதற்குக் காரணம்.
நாம ஏதோ ஒரு இலக்கை நோக்கிச் செல்லவேண்டும் அதுதான் சந்தோஷம் என்பது மிகவும் தவறு. நான் வெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன். நிறைய படிக்கவும் இயற்கையுடன் இருக்கவும் ஆசைப்படுகிறேன். ஒரு ஐந்து மாடுகளை வைத்து வாழலாமே என்று நினைக்கிறேன்... நமக்குள் தேவையில்லாத அச்சங் கள் இருக்கின்றன. டால்ஸ்டாய், தாஸ்தாவ்யெஸ்கி, பைபிள், குரான் படித்துவிட்டால் பயமே இல்லாமல் போய்விடும். அதனால்தான் என் உதவி இயக்குநர்களைப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் பத்துபடங்கள் எடுத்து எல்லாமே ஃப்ளாப் ஆனாலும் சாலையில் தைரியமாக அமர்ந்து படம் வரைந்தோ கதை சொல்லியோ வாழ்ந்துவிட முடியும். வாழ்க்கையில் எதுவும் அசிங்கம் இல்லை. கொஞ்ச நாள் முன்பாக மழையில் சிக்கியபோது பெரும் பிரபுக்கள் சாலையில் வந்து கை நீட்டினார்கள். சுனாமி வந்தபோது கடலோர மக்கள் மடிந்தனர். பெரிய விபத்து நடந்தால் புரிகிற இந்த விஷயத்தை இலக்கியம் ஒவ்வொரு நாளும் புரிய வைக்கிறது. பயம் இல்லாமல் வாழலாம். பயம் இருக்கும்போதுதான் பெரும் வன்முறைக்குச் செல்கிறோம்.
உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்த உருக்கமான அனுபவங்கள், சம்பவங்கள் சிலவற்றைச் சொல்லமுடியுமா? கதையில்தான் இப்படி நடக்கும். ஒரு சம்பவம் ஒருவரின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும். ஆனால் நிஜவாழ்க்கையில் பலசம்பவங்கள் அதற்குக் காரணமாக இருக்கின்றன. அப்போ சென்னையில் ஒரு புறநகர்ப் பகுதியில் தங்கி இருந்தேன். திடீரென நள்ளிரவில் மகளுக்குக் கடுமையான ஜுரம். கையில் காசே இல்லை. இரவில் வீட்டைவிட்டு வெளியேறி என் வீட்டிலிருந்து ஒண்ணு ரெண்டு மூணு என்று எண்ணிக்கிட்டே போய் பத்தாவது வீட்டுக் கதவைத் தட்டினேன். திறந்தவங்க என்னைப் பார்த்து பயந்துட்டாங்க. குழந்தைக்கு உடம்பு சரியில்லை, காசு வேணும் என்றேன். ஐந்து ரூபாய் கொடுத்தாங்க. அதேபோல் இன்னும் பத்துவீடு தள்ளிச் சென்று தட்டினேன். அங்கே ஒரு ஐந்து ரூபாய் கொடுத்தாங்க. 25 ரூபாய் இப்படி வாங்கிக்கொண்டு குழந்தையை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனேன். மனிதர்கள் உறங்கலாம் மனிதம் உறங்கவில்லை என்று எனக்குப் புரிந்தது. இதைப்போல நிறையச் சம்பவங்களைச் சொல்லலாம். இன்றும் அப்படித்தான். என் அம்மாவை 14 ஆண்டுகள் பார்க்காமல் இருந்தது ஒரு விஷயமாகச் சொல்லலாம். நான் படித்த பவுத்த புத்தகங்களைச் சொல்லலாம்.
[அந்திமழை பிப்ரவரி 2018 இதழில் வெளியான நேர்காணல். பௌத்தம், கமல்ஹாசன், சவரக்கத்தி, கால்களுக்கு க்ளோஸ்-அப் ஷாட், திரைப்பட ஆளுமையைக் கட்டமைத்த இயக்குநர்கள் என மீதி நேர்காணல் நாளை...]
|
|