???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிலதிபரை மணந்தார் நடிகை பிரியாமணி 0 நேர்மையான ஆளுநருக்கு இது இலக்கணமல்ல: ராமதாஸ் 0 எம்எல்ஏக்களை சந்திக்க தினகரன் புதுச்சேரி பயணம் 0 தமிழகத்தில் நீட் ஒரு கல்வி புரட்சி : தமிழிசை பெருமிதம் 0 அமைச்சர்கள் அனைவரும் சென்னை வர முதலமைச்சர் திடீர் உத்தரவு 0 ரயில்வே வாரியத் தலைவராக அஷ்வனி லோகனி நியமனம். 0 நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: நாளை கலந்தாய்வு. 0 ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் பலியான சம்பவம்: 6 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு. 0 சொத்துக்குவிப்பு வழக்கு : சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி. 0 நீட் துரோகத்தை தமிழகம் மன்னிக்காது: ஸ்டாலின் 0 சபாநாயகரை முதலமைச்சராக்க வேண்டும்: திவாகரன் யோசனை 0 தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: நளினி சிதம்பரம் 0 நீட் விலக்கு: 4-ஆம் தேதி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் 0 பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிடுங்கள்: ஸ்டாலின் கடிதம் 0 ஓபிஎஸ்ஸுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உனக்காகத்தானே எந்தன் உயிர் உள்ளது..- நா.முத்துக்குமார் நேர்காணல் பிப்ரவரி 2015

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   16 , 2016  05:39:27 IST

பரபரபரப்பான பாடலாசிரியராக இன்று தமிழ் திரைப்பட உலகில் எழுதிக்கொண்டிருப்பவர் கவிஞர் நா.முத்துக்குமார்.  இவருடைய சிறப்பம்சமாக சொல்லப்படுவது புதுமையான உவமைகள், உருவகங்களை அதிகம் பயன்படுத்தி பாடல்களை எழுதுவது. காதல் என்கிற உணர்வை எளிமையான சொற்களின் மூலம் பிரபஞ்ச அன்பாகக் கொண்டு செல்ல முயற்சி செய்வதை இவரது பெரும்பாலான காதல்பாடல்களில் காணலாம்.

 

சீமானின் வீரநடைதான் இவர் எழுதிய முதல் திரைப்படம். அதன் பின்னர் டும்டும்டும் படத்தில் இவர் எழுதிய நான்கு காதல்பாடல்களுமே இவருக்கு நல்ல கவனத்தை வாங்கித் தந்தன.

 

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ? என்ற இனிமையான பாடலில்

நிலம் நீர் காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும்
காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தைக் கடந்திடும் - என்று எழுதியிருப்பார்.

இதேபோல காதல்கொண்டேன் படத்தில் வரும் தேவதையைக் கண்டேன்! பாடலில்

ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்
காற்றிடம் கோபம் கிடையாது!

 

-என்று தனித்தியங்ககூடிய கவித்துவம் மிக்க வரிகளில் காதல் நினைவுகளை வடித்திருக்கிறார்.

கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனதுபோல

என் வாழ்வில் வந்தே போனாய் - இது தீபாவளி படத்தில் வரும் போகாதே போகாதே என்கிற உருக்கமான பாடலில் வரும் வரி. காதலை கடவுளாகப் பார்க்கிறார் முத்துக்குமார்.

 

“காற்றினில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கும் நடனம் முடிவதில்லை

-என்றொரு வரி மதராச பட்டணம் படத்தில் இடம்பெற்ற பூக்கள் பூக்கும் தருணம்  என்ற பாடலில் வரும். 

மலேசியாவில் இப்படத்தின் இயக்குநர் விஜய், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் ஆகியோருடன் ஒரு அடர்ந்த காட்டுக்குள் சென்றிருந்தோம். வானை எட்டும் உயரமான மரங்கள். ஒரு பறவையைக் கூட காணவில்லையே என்று நினைத்தபோது ஒரு பெரும் பறவை ஒன்று கிளையிலிருந்து எழுந்து பறந்து சென்று வானில் கலந்தது. அது அமர்ந்திருந்த கிளை கொஞ்ச நேரம் ஆடிக்கொண்டிருந்தது. அந்த கணத்தில் எழுதிய வரிதான் மேலே பார்த்தது. கிட்டதட்ட இந்த வரி தருவது ஒரு ஜென் உணர்வு” என்று அந்திமழையுடனான உரையாடலில் முத்துக்குமார் பகிர்ந்துகொண்டார்.

 

காதலில் உச்சகட்டம் காதலியின் நினைவோடு மரணம் அடைவது. அதைத்தான் கற்றது தமிழ் படத்தில் “உனக்காகத் தானே எந்தன் உயிர் உள்ளது’ பாட்டில் கவிஞரும் குறிப்பிடுகிறார்.

 

“மழைவாசம் வருகின்ற நேரமெல்லாம்

உன் வியர்வைதரும் வாசம் வருமல்லவா

உன் நினைவில் நான் உறங்கும் நேரம்

அன்பே மரணங்கள் வந்தாலும் வரமல்லவா?’

 

அதே படத்தில் உள்ள பறவையே எங்கு இருக்கிறாய் என்ற பாடலும் முக்கியமான காதல் பாடலே.  அதில்

 

‘ஏழைக்காதல் மலைகளில் தனில் தோன்றுகிற ஒரு நதியாகும்

மண்ணில் விழுந்தும் உடையாமல் என்றும் உருண்டோடும்’ என்ற வரிகள்.

காதல் நதியாகி மண்ணில் விழுகிறது இங்கே..

 

ஒரு தலைக்காதலுக்கான படிமங்களையும் நிறைய எழுதியிருக்கிறார். உதாரணத்துக்கு 7ஜி ரெயின்போ காலனி படத்தில் ’கண்பேசும் வார்த்தைகள் தெரிவதில்லை’ பாடலைச் சொல்லலாம்.

காற்றில் இலைகள் பறந்த பின்னும்

கிளையின் தழும்புகள் அழிவதில்லை

காட்டிலே காணும் நிலவைக்

கண்டுகொள்ள யாருமில்லை

தூரத்தில் தெரியும் வெளிச்சம்

பாதைக்குச் சொந்தமில்லை

போன்ற வரிகளை உள்ளடக்கிய பாடல் அது.

 

‘’ஊட்டியில் உள்கிராமம் ஒன்றுக்கு பேருந்தில் தனியே சென்று, திரும்பி வர பேருந்து இல்லாமல் ஒரு  மலைப்பாதையில் தனியே நடந்தேன். அன்று பௌர்ணமி. சுற்றிலும் மலையும் காடும். அக்கணத்தில் எனக்குத் தோன்றியதுதான் காட்டில் காணும் நிலவைக் கண்டுகொள்ள யாருமில்லை என்ற வரி. சிவா மனசுல சக்திபடத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் பாடலைக் கேட்ட பின்னர் கவிஞர் வாலி என்னை தொலைபேசியில் அழைத்தார். இந்த வரிகளை எம்ஜிஆருக்கு எழுதியிருந்தால் உனக்கு ஒரு தனி வீடே வாங்கிக் கொடுத்திருப்பார் என்று நெஞ்சம் நிறைய வாழ்த்தினார். ” என்று நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

 

“ நான் எழுத வந்தபோது திரைப்பாடல்களில் பட்டியலிடும் போக்கு, அதிகப்படியான அலங்காரம், துணுக்குச் செய்திகளைப் பாடலாக்குவது ஆகிய போக்குகள் இருந்தன. அத்துடன் உலகமயமாக்கலின் காரணமாக ஆங்கிலச் சொற்கள் நிறைய இருந்தன. இந்நிலையில் வழக்கமான தளத்தில் பயணிக்காமல் உடல்சார்ந்த வர்ணனையைத் தாண்டி காதலை வேறொரு தளத்துக்குக் கொண்டுசெல்லும் வரிகளை எழுதுவதையே நான் விரும்பினேன். நான் விரும்பிய நவீன கவிஞர்களான நகுலன், சுந்தரராமசாமி, ஆத்மாநாம் மற்றும் பல ஆங்கிலக் கவிஞர்கள் படிமத்தை கூரிய வாள் போலப் பயன்படுத்துவார்கள். அதன் தொடர்ச்சியை என் பாடல்களில் செய்துபார்க்க விரும்பினேன். இதைத்தான் காதல் பாடல்களில் மட்டுமல்ல வேறு பாடல்களிலும் செய்து வருகிறேன்.”

 

“சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தில் இறுதிக்கட்டத்தில் காதலுக்காக நாயகன் விவசாயம் செய்வான்.  அப்போது காதலின் பெருமையைச்

சொல்லும் பாடல் பின்னணியில் ஒலிக்கும்.

 

‘ஆகாயம் இத்தனை நாள் மண் மீது வீழாமல் தூணாகத் தாங்குவது காதல்தான்
ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்க அழகான காரணமே காதல்தான்’

 

இந்த பாடல் ஒலிப்பதிவுக்கு வந்த எஸ்.பி.பி. சார் இந்த வரிகளைப் படித்து விட்டு மலேசியாவுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்த என்னிடம் தொலைபேசியில் பேசினார்.  ‘கடந்த 20 ஆண்டுகளில் இவ்வளவு அழகான வரிகளை நான் கண்டதில்லை. என் கண்ணெதிரே நீங்கள் இப்போது இருந்தால் கட்டிப்பிடித்தே கொலை செய்திருப்பேன்’ என்றார். மிக மிக நிறைவளித்த தருணம் அது.”

 

ஏராளமான காதல் கவிதைகளை எழுதியிருக்கும் முத்துக்குமாரின் மூன்று தம்பிகளும் காதல் திருமணங்கள் செய்தவர்கள். ஆனால் முத்துக்குமாருக்கு வீட்டில் பார்த்து செய்து வந்த திருமணமே.

 

“நிறைய பேர் தங்கள் காதலுக்கு என் பாட்டுதான் உதவி செய்ததாகக் கூறியிருக்கிறார்கள். எனக்கு வீட்டில் பார்த்து செய்த திருமணம்தான். நான் முன்பு ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.

காதல் கவிதை எழுதுபவர்கள் கவிதை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறார்கள்

அதை வாங்கிச் செல்லும் பாக்கியசாலிகளே

காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள்”( பெரிதாய் சிரிக்கிறார்)

 

‘’இயக்குநர் விஜய்  இயக்கும் இது என்ன மாயம் படத்தில்

 ‘இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்

ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்’

என்று எழுதி இருக்கிறேன். இருப்பதில் இருந்து இல்லாததைத்தேடுவது. இல்லாததில் இருந்து இருப்பதைத் தேடுவது. இதுதான் காதல்.” என்று முடிக்கிறார் முத்துக்குமார்.

(அந்திமழை 2015 பிப்ரவரி இதழில் வெளியானது)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...