???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

‘இங்கு ஒரே அமைதி...நீண்ட நேரம் மௌனமாயிருக்கிறேன்!’- முரசொலி கண்காட்சியில் நெகிழ வைக்கும் கருணாநிதி கையெழுத்து!

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   16 , 2017  03:57:36 IST


Andhimazhai Image
திமிறும் காளையை அடக்கும் இளைஞனின் பிரம்மாண்டமான சிலையுடன் வரவேற்கிறது முரசொலி பவளவிழாக் கண்காட்சி. கோடம்பாக்கத்தில் முரசொலி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சி அரங்கு, 75 ஆண்டுகளாகத் தான் கொண்ட கொள்கைக்காக ஒரு தனிமனிதர் தொடர்ந்து எழுத்தைப் பயன்படுத்தி வந்ததன் மாபெரும் சான்றாக நிற்கிறது. எழுத்தையும் பேச்சையும் வலிமையான ஆயுதங்களாக திராவிட இயக்கம் கொண்டிருந்தது.
அந்த இயக்கத்தின் வலிமையான எழுத்தாயுதங்களில் ஒன்று முரசொலி. இன்றும் பட்டை தீட்டப்பட்டக் கூர்வாளாக ஒளிரும் முரசொலி, திமுகவின் இதழாக இருந்தாலும் கூட அரசியல் நோக்கர்கள் எல்லோருக்குமே முக்கியமானதாக இருந்திருக்கிறது.
 
 
முரசொலி காட்சி அரங்கம் உள்ளே நுழைந்ததும் நம்மை வரவேற்பது பழங்கால ட்ரெடில் அச்சு எந்திரம். அதனுடன் சுவரில் முரசொலியின் முதல் இதழ் தொடங்கி இன்று வரையிலான இதழ்கள் ஒரு வரலாற்று ஆவணமாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. முக்கியமான அரசியல் நிகழ்வுகள் அந்த இதழில் எப்படிப் பதிவாகி இருக்கின்றன என்று பார்த்தால் திராவிட இயக்கத்தவரின் பார்வையைப் புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் இந்த அரங்கம் மிக முக்கியமானது. தமிழ்நாட்டை வடிவமைத்த அத்தனை நிகவுகளும் பதிவாகி இருக்கின்றன. இந்த அரங்கிற்காக ஏராளமான முரசொலி இதழ்களை தேர்வு செய்தவர்கள் அவற்றில் முக்கியமானவற்றை சுவரில் மேல்பகுதியில் பார்வைக்கு வைத்துள்ளனர். மீதியை சுவரின் கீழ்ப்பகுதியில் அழகாகக் காட்சிப்படுத்தி உள்ளனர். (இந்த அரங்கின் நுழைவாயில் முரசொலியின் முந்தைய அண்ணாசாலைக் கட்டம் போலவும் அரங்கின் வெளியேறும் வாயில் கோடம்பாக்கம் கட்டடம் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றைச் செய்தவர் கலை இயக்குநர் பிரேம்குமார்.
உள்ளே அரங்கை வடிவமைத்தவர் பந்தல் சிவா. புகைப்படங்களை அச்சிட்டவர் டிஜிட்டல் பாபு).
 
 
 
 
 
சேரன் என்ற பெயரில் 1942-ல் முரசொலியை துண்டறிக்கையாக வெளியிட்டார் கருணாநிதி. அதிலிருந்துதான் இன்று 75 ஆண்டுகள் ஆகின்றன. அந்த துண்டறிக்கை,  1948-ல் திருவாரூரில் வார இதழாகத் தொடங்கிய இதழ் முகப்பு,  பின்னர் சென்னையிலிருந்து வார இதழாகத் தொடங்கியபோதிருந்த முகப்பு, நாளிதழாக மாறியபோதிருந்த முகப்பு என அவ்விதழ் பெற்ற மாறுதல்களுடன் இந்த அரங்கைப் பார்க்கத் தொடங்கலாம். காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது வெளியான முரசொலியின்(4-2-1948) தலைப்புச் செய்தி  ‘உத்தமர் காந்தியின் உயிரைக் குடித்தவன் ஒரு ஊதாரி பார்ப்பான்’. அப்போது திருவாரூரில் இருந்து வெளியாகிறது இதழ். அவர் சுடப்பட்டபின் மூன்றாம் நாளில் இது அச்சுக்கு அனுப்பப்பட்டிருக்கவேண்டும். முரசொலியின் ஆண்டு மலர்கள், பொங்கல் இதழ்கள் ஒருபுறம் காட்சிப் படுத்தப்பட இன்னொரு புறம் எமர்ஜென்சியின் போது முரசொலியின் போராட்டம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கேயே இந்த எமெர்ஜென்சிப் போராட்டம் காணொலியாகவும் காண்பிக்கப்படுகிறது. சர்வாதிகாரம் ஒழிக என்று தனி ஆளாகக் கோபாலபுரம் வீட்டிலிருந்து திடீரெனத் துண்டறிக்கைகளை தயார் செய்து எடுத்துக்கொண்டு அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே பொதுமக்களுக்கு விநியோகிக்கிறார் கருணாநிதி. அந்தத் துண்டறிக்கையை அவசர அவசரமாக அடித்துக்கொடுப்பவர் திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு என்ற தகவலும் பதிவாகிறது. இந்தக் காலகட்டத்தில் முரசொலியின் தலைப்புகள்  ‘வெண்டைக்காய் உடலுக்கு நல்லது - ரஷ்யாவில் இருந்து திரும்பிய ஆதிலட்சுமி ஆராய்ச்சி’,  ‘விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்- வைத்தியம் வேதாந்தையா’ என்று தணிக்கையை நக்கலடிக்கும் விதத்தில் இருக்கின்றன.
 
 
 
 
“பராசக்தி படத்துக்குக் கலைஞர் எழுதிய வசனங்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அதன் வசனபுத்தகம் விறுவிறுப்பாக விற்பனை ஆகிறது. ஆனால் அதிலிருந்து கிடைக்கும் வருமானம் அவருக்குக் கிடைப்பதில்லை . அதை தயாரிப்பாளரே பெற்றுக்கொள்கிறார். ஆனால் அடுத்து எழுதிய மனோகரா திரைப்படத்துக்கு வசனங்களை நூலாக வெளியிடும் உரிமையை கலைஞரே வைத்துக்கொள்கிறார். அதை நூலாக அச்சிட்டு வெளியிடுகிறார். நூல் விற்றுத்தீர்கிறது. ஆயிரக்கணக்கில் அச்சிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அச்சகத்தில் இருந்து வந்து, ப்ளாக் தேய்ந்துவிட்டது என்று முறையிடுகிறார்கள். கலைஞர் செம்பில் ப்ளாக் செய்யுங்கள் என்கிறார். அந்த காலகட்டத்தில் அது விற்றுக் கிடைத்த பெரும்பணத்தை முரசொலிக்காக திருப்பி விடுகிறார் அவர். ராயப்பேட்டையில் அலுவலகம் எடுத்து இதழ் நடத்துகிறார். முரசொலி விற்பனை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பின்னர் அண்ணாசாலையில் ஆயிரம் விளக்கு பகுதிக்கு அலுவலகம் மாறுகிறது. கலைஞர் 1957-ல் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார். அதற்கு முன்பாகவே அவருக்குச் சொந்த வீடு, கார், பத்திரிகை அலுவலகம் ஆகியவை இருக்கின்றன,” என்று விளக்கம் தருகிறார் இந்தக் காட்சி அரங்கை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த பொள்ளாச்சி மா.உமாபதி. இவருக்கு மு. கலைவாணன், வழக்கறிஞர் இரா. விஜயராகவன் ஆகிய இருவரும் உதவி புரிந்திருக்கிறார்கள். அனிமேஷன் கலையில் உ.தளபதியும், மு.க.பகலவனும் உதவியிருக்கிறார்கள்.
 
 
 
 
 
இதைத்தாண்டினால் திராவிட இயக்கப் பிற இதழ்கள் விரிவாகக் காட்சி அளிக்கின்றன. அண்ணாவும் பெரியாரும் இருபுறமும் எழுதிக்கொண்டிருக்கும் படங்கள்.. நடுவில் கருணாநிதி, ஸ்டாலின் எழுதிக்கொண்டிருக்கும் படங்கள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. அண்ணாவுக்கும் பெரியாருக்கும் கருணாநிதி எழுதிய இரங்கல் கவிதைகள் பெரிதாகக் காட்சிப்படுத்தப்பட்டு, உடன்பிறப்புகளை காலத்தைக் கடந்து அழைத்துச் செல்கின்றன.
 
 
பார்வையாளர்கள் கூட்டமாக நின்று முரசொலி அலுவலகம் எரிவதுபோல் இருக்கும் காட்சியைப் பார்க்கின்றனர். 1991-ல் ராஜிவ் கொலை செய்யப்பட்ட போது, முரசொலி அலுவலகம் எரிக்கப்பட்ட காட்சி அது. Murasoli will take it  என்கிறது அப்போது வெளியிடப்பட்ட இதழ். இவ்விடத்தில் நாம் 1991-ல் திமுக அரசு கலைக்கப்பட்டபோது முரசொலியின் எதிர்வினையைக் காண்கிறோம். ஒரு விதத்தில் திருப்திதான் என்ற தலைப்பில் ‘ ஜனநாய நெறிமுறைகளைக் காப்பாற்றத் தவறியுள்ள சந்திரசேகர் அவர்கள் என்னுடைய தலைமையில் இருந்த ஆட்சியைக் கலைத்ததன் மூலம் தன்னுடைய ஆட்சியைத் தற்காலிகமாகக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இதற்கு நாங்கள் அவருக்குப்  பயன்பட்டிருக்கிறோம் என்பதில் எனக்கு ஒரு வகையில் திருப்திதான்’ என்று கருணாநிதியின் கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அவர்  அதில் 31-1-1991 என்று கையெழுத்திட்டிருக்கிறார்.
 
 
அதிலிருந்து ஒரு மாதம் ஏழு நாட்கள் கழித்து சந்திரசேகர் அரசும் கவிழ்ந்துவிடுகிறது. அப்போது கருணாநிதி இவ்வாறு எழுதுகிறார்: “ எய்தது இந்திரா காங்கிரஸ்! தூண்டில் இரை காட்டித் தூண்டியது அதிமுக!(1)
அம்பாகப் பாய்ந்தவர் சந்திரசேகர்!
அந்தோ - இதோ கூர்மழுங்கிச் சாய்ந்து கிடக்கிறார்!
அவர் வீழ்ச்சிக்காக மகிழ்ந்தது போதும்;
அவரைத் தூண்டிவிட்டு ஜனநாயகத்தைத் துடிக்கவிட்டோர் யார்? யார்யார்?
அவர்களை அடையாளம் காட்டுவதே அல்லும் பகலும் உனது அயராப் பணியாக அமையட்டும்!”
காங்கிரசுக்கும் திமுகவுக்குமான உறவின் நெரிசல்களை 2000 வரையிலான இதழ்களில் காணமுடியும். அதன் பின்னர் காங்கிரஸ் - திமுக உறவு வலுப்பட்ட பின் நல்லுறவு பேணப்படுகிறது. இன்றைய சூழலில் காங்கிரசுடன் உறவு தொடரும் நிலையிலும் முந்தைய உரசல் சூழலை மறைக்காமல் ஓரளவுக்காவது காட்சிப்படுத்தி இருக்கும் வரலாற்று நேர்மை பாராட்டத்தக்கதே.
 
 
நாவலர் நெடுஞ்செழியன் திமுகவின் பொதுச்செயலாளர் ஆனபோது அவரது கம்பீரமான படத்தை முதல்பக்கத்தில் தாங்கி 1950களில் வெளிவந்த முரசொலி வார இதழைக் காணமுடிந்தது. கையை உயர்த்தி ஏதோ ஒரு  கருத்தை எடுத்து வைக்கிறார் நாவலர். அவரது மேசையில் கோலி சோடா ஒன்று தயாராக இருக்கிறது!
 
 
கண்ணதாசன் மரணத்துக்குக் கருணாநிதி எழுதிய அஞ்சலி வந்த முரசொலி இதழும் உள்ளது. இனிய நண்பா ஏன் பிரிந்தாய்? என்ற தலைப்பில் எழுதிய கவிதையில், “ கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம் கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ! கல்லறைப்பெண்ணின் மடியினிலும் அப்படித்தான் தாவி விட்டாயோ, அமைதிப் பால் அருந்தித் தூங்கிவிட!’ என்கிறார்.
 
 
எம்ஜிஆர் கணக்குக் கேட்டு 1972-ல் பிரியும்போது அவரைக் கட்சியில் இருந்து நீக்கிவிட்டு கருணாநிதி பொதுக்குழுத் தீர்மானங்களை விளக்கி சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். முரசொலியின்(16-10-72) தலைப்புச் செய்தி  இவ்வாறு அலறுகிறது: ‘ கனியை வண்டு துளைத்துவிட்டது; இதயத்தை துளைக்குமுன்பு அதை எடுத்தெறிந்துவிட்டேன்! என் அண்ணனே என்னை மன்னித்துவிடு!’
 
 
இந்த தலைப்புக்கு மேலே சின்னதாய் இரு மேற்கோள்கள் உள்ளன. அதைப் படித்தால் இந்த தலைப்பு நன்றாகப் புரியும். “ என் மடியில் ஒரு கனி விழுந்தது அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன்; அதுதான் எம்ஜிஆர் என்றாய் நீ! நீ மறைந்தபோது உன் இதயத்தை நான் கேட்டேன். அந்தக் கனியோடு உன் இதயத்தை எனக்குத்தந்தாய்!”
தன் உரையில் இவற்றைச் சொல்லிவிட்டு கண்கலங்கி அதற்கு மேல் பேசமுடியாமல் கருணாநிதி முடித்துக் கொண்டதாக அச்செய்தி முடிவடைகிறது!
 
 
 
 
முரசொலி ஆசிரியர் செல்வம் சட்டசபைக் கூண்டில் ஏற்றப்பட்ட நிகழ்வு முரசொலி வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியப் பத்திரிகை வரலாற்றிலும் முக்கிய நிகழ்வு என்பதால் அந்த நிகழ்வைத் தாங்கிய இதழின் காட்சிப்படுத்தல் கவனம் பெறுகிறது. திமுக நடத்திய போராட்டங்கள், உலக, இந்திய மற்றும் தமிழக அரசியலில் அதன் நிலைப்பாடுகள் அனைத்தும் இங்கே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. முரசொலியில் பல்வேறு ஓவியர்கள் வரைந்த கார்ட்டூன்களுடன் கருணாநிதியே களமிறங்கி வரைந்த கார்ட்டூன்களும் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன. ஓவியங்களுக்கும் கேலிச்சித்திரங்களுக்கும் ஆரம்பகாலத்தில் இருந்து முரசொலி முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறது என்பது இங்கிருக்கும் காட்சிகளில் புரிகிறது.
 
 
முரசொலியின் வரலாற்றை அனிமேஷன் முறைப்படி படமாக்கி பயாஸ்கோப் மூலம் பார்வையாளர்கள் காட்சிக்கு வைத்துள்ளனர். அதேபோல் இன்னொரு காணொலிக் காட்சி தலைவர்கள் வாழ்த்துகளுடன் முரசொலியின் பயணத்தை விளக்குகிறது. தனி அறையில் அதைக் காண்பதற்கும் உடன் பிறப்புகள் காத்திருக்கிறார்கள்.
 
 
 
 
இந்தக் காட்சி அரங்குக்கான வேலைகள் தொடங்கியதில் இருந்து முடிவடையும் வரை தினந்தோறும் வந்து பார்வையிட்டு திருத்தங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார் மு.க.ஸ்டாலின்! ஒவ்வொருமுறையும் மூத்த தலைவர்களை அழைத்து வந்து கருத்துக்களை கேட்டு இந்தக் கண்காட்சியை உருவாக்க ஊக்கம் அளித்திருக்கிறார்!
 
 
 
 
இந்த அரங்கில் நீண்ட வரிசை இருப்பது கருணாநிதியின் முரசொலி அலுவலக அறைபோல் வடிவமைக்கப்பட்டு அதில் அவர் எழுதிக்கொண்டிருப்பது போல் வைக்கப்பட்டிருக்கும் சிலைதான்! (இந்த தத்ரூபமான சிலை, காளையை அடக்கும் சிலை, முரசொலி எரியும் காட்சி ஆகியவற்றை வடிவமைத்தவர் கலை இயக்குநர் எஸ்.டி. செல்வம்). அவர் முன் நின்று செல்ஃபிகள், படங்கள் எடுத்து உடன்பிறப்புகள் மகிழ்கிறார்கள்! கையில் பேனாவுடன் அமர்ந்திருக்கும் கருணாநிதி என்ன எழுதிக்கொண்டிருக்கிறார் என எட்டிப்பார்த்தோம்!   ஒரு நிமிடம் திகைத்துப்போனோம்! அவர் எந்த சூழ்நிலையிலோ எழுதிய உருக்க மான வரிகளை அவர் கையெழுத்தில் தேடிப்பிடித்து வைத்திருக்கும் அரங்க அமைப்பாளர்களின் கடும் உழைப்பைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!இன்றைய கருணாநிதியின் நிலையுடன் இவ்வரிகளை ஒப்பிட்டுப்பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை:
 
 “உடன்பிறப்பே,
 
 இங்கே எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது. ஒரே அமைதி; நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்கிறேன். நீண்ட நேரம் மௌனமாயிருக்கிறேன். பேச்சின்றி.. விவாதமின்றி... ஓசையின்றி... அசைவின்றித் தொடரும் வாழ்க்கை! ஓய்வு உடலுக்கு நல்லது. உள்ளத்துக்கும் நல்லது. அது நம்மைச் சிந்திக்க வைக்கிறது!”
 
-நமது செய்தியாளர்
 

English Summary
Murasoli 75 years

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...