அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்’ பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு! 0 உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் கொரோனா மூன்றாவது அலை வரும்: நீதிமன்றம் கருத்து 0 சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி 0 திமுக அடக்கமுடியாத யானை - முதல்வர் ஸ்டாலின் 0 எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்! 0 உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து! 0 தி பேமிலி மேன் 2 தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் 0 யூடியூப் பார்த்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளை: போலீஸ் விசாரணையில் தகவல் 0 காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! 0 போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு; சப்-இன்ஸ்பெக்டர் கைது 0 தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு 0 காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 சோதனை சாவடியில் போலீஸ் தாக்கி வியாபாரி பலி! 0 ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 தமிழக எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் ரூ. 48 லட்சம் கொள்ளை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எம்.எஸ்.வி - தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   14 , 2015  13:47:28 IST


Andhimazhai Image
ஐம்பதுகளின் முற்பாதி வரை தமிழ்த் திரை இசையில் கர்நாடக சங்கீதத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது.  இசை நுணுக்கங்களை அறிந்த வல்லுனர்களால் மட்டுமே இசையின் நுணுக்கமான அழகுகளை உணர்ந்து ரசிக்க முடிந்தது.
 
பெரும்பாலான பாடல்கள் நாடக மேடையிலிருந்து வந்த ஜனரஞ்சகமான மெட்டுக்களை தன்னகத்தே கொண்டிருந்தன.  அதே சமயம் தமிழ் நாட்டில் ஹிந்திப் படங்கள் அதிகம் வெளியாகிக் கொண்டிருந்தன.  அந்தப் படப் பாடல்களின் மெட்டுக்களை தழுவி இசை அமைக்குமாறு இசை அமைப்பாளர்கள் நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.   ‘என்ன இருந்தாலும் வடக்கத்திக்காரன் வடக்கத்திக்காரந்தான்பா.‘ - என்று தமிழில் ஒரிஜினலான மெட்டுக்கள் புறக்கணிக்கப்பட்டன.
இப்படி இரவல் மெட்டுக்களில் சிக்கிக்கொண்டு தமிழ்த் திரை இசை தத்தளித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு விடிவெள்ளியாக சி. ஆர்.  சுப்பராமன் தோன்றினார்.
கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை என்று அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருந்த அந்த இசை மேதையினால் திரை இசை புத்துணர்ச்சி பெற்றது.
அவரது பாசறையில் பட்டைதீட்டப்பட்டு திரை வானில் ஒளிவீசும் வைரக் கற்களாகக் கிடைத்தவர்கள்தான் மெல்லிசை மன்னர்கள் என்று இன்றும் அழியாப்புகழுடன் கோலோச்சிக்கொண்டிருக்கும் இரட்டையர்களான திரு. எம்.எஸ். விஸ்வநாதன் - டி. கே. ராமமூர்த்தி.
இருவரில் இளையவர் விஸ்வநாதன்.  வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் டி. கே. ராமமூர்த்தி. இசைப் பாரம்பரியத்தில் வந்தவர்.
மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை என்ற புகழ் பெற்ற வயலின் ஜாம்பவானின் மகன் கிருஷ்ணசாமிப்பிள்ளை அவர்களின் மகன் தான் மலைக்கோட்டை கிருஷ்ணசாமி ராமமூர்த்தி என்ற டி. கே. ராமமூர்த்தி.
தந்தையும் பாட்டனாருமே புகழ்பெற்ற இசை மேதைகள் என்பதால் அவர்களிடமே கர்நாடக இசையையும் வயலின் இசையையும் கற்றுத் தேர்ந்தார் ராமமூர்த்தி. தந்தையுடன் இணைந்து பல மேடைக்கச்சேரிகளில் இளம் வயதிலேயே வாசிக்க ஆரம்பித்தார் ராமமூர்த்தி. 
பதினான்கு வயதில் எச். எம். வி. நிறுவனத்தில் இசை அமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சி. ஆர். சுப்பராமன் அவர்களின் இசைக்குழுவில் வயலின் வாசிப்பவராக தற்காலிக வேலையில் சேர்ந்தார் ராமமூர்த்தி.  அவரது வாசிப்பால் ஈர்க்கப்பட்ட சி.ஆர். சுப்பராமன், ஹெச்.எம்.வீ. மானேஜரிடம் ‘இந்தத் தம்பியோட சவுண்ட் நல்லா இருக்கு. இவன் நல்லா வருவான்‘ என்று சிபாரிசு செய்து அவனது வேலையை நிரந்தரமாக்கி தனக்கு உதவியாளராக வைத்துக்கொண்டார். 
இப்படி சி. ஆர். சுப்பராமனின் பாசறையில் தனது இசைத் திறமையை மேலும் மெருகேற்றிக் கொண்டிருந்தார் ராமமூர்த்தி.
 
அந்த சமயத்தில் கோவையில் இயங்கிக்கொண்டிருந்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னைக்கு மாறியது.  கோவையில் இசை அமைப்பை எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார். தன்னோடு சேர்ந்து பணியாற்றிய ஒரு திறமைசாலியின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்று கருதிய அவர் சென்னையில் இசை அமைப்பை கவனித்துக்கொண்டிருந்த சி. ஆர். சுப்பராமனிடம் அந்த இளைஞனை சிபாரிசு கடிதம் கொடுத்து அனுப்பி வைத்தார்.  சுப்பையா நாயுடுவின்   சிபாரிசுக் கடிதத்துடன் வந்த வாலிபனை அன்போடு வரவேற்று தனதுஇசைக்குழுவில் சேர்த்துக்கொண்டார் சி. ஆர். சுப்பராமன்.  அந்த வாலிபர் தான் எம். எஸ். விஸ்வநாதன்.
 
மலையங்கத்து சுப்ரமணியம் விஸ்வநாதன் என்ற எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தியைப் போல இசைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவரல்ல.
கேரளத்தில்  பாலக்காடு மாவட்டத்தில் எடப்புள்ளி என்ற சிறு கிராமத்தில் சுப்பிரமணியம் - நாராயணிக் குட்டி அம்மாள் என்ற தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தான் எம்.எஸ். விஸ்வநாதன்.  நான்கு வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்தவர்.  வறுமையின் பிடியில் இருந்து விடுபடமுடியாமல் தத்தளித்த நாராயணி அம்மாள் ஆற்றில் மகனைத் தள்ளி கொன்றுவிட்டு தானுமே தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து அதற்காக முயற்சித்த போது அவரது தந்தை அவரைத் தடுத்து தன்னோடு அழைத்து வந்து ஆதரவுக் கரம் நீட்டினார்.
 
இளம் வயதில் சிறுவன் விஸ்வநாதன் பாலக்காட்டில் ஒரு திரை அரங்கத்தில் இடைவேளையில் சோடா, கலர், முறுக்கு ஆகியவற்றை விற்றுக்கொண்டிருந்தான்.    இசை மீது அவனுக்கு இருந்த ஈடுபாட்டை அறிந்து கொண்ட நீலகண்ட பாகவதர் என்ற இசை வல்லுநர் சிறுவன் விஸ்வநாதனை தனது சீடனாக ஏற்றுக்கொண்டு இசை கற்பிக்க ஆரம்பித்தார்.  அவரிடம் அடிப்படை  பயற்சியை ஆரம்பித்த சிறுவன் விஸ்வநாதன் தனது குருநாதரின் ஆதரவால் தனது முதல் மேடைக் கச்சேரியை திருவனந்தபுரத்தில் அரங்கேற்றியபோது அவனது வயது பதின்மூன்றேதான்.
சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசையோடு திரை உலகில் புகுந்த விஸ்வநாதனை திரை உலகம் அப்படி  ஒன்றும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கவில்லை.
அப்போது கோவை நகரம் தான் திரை உலகின் ஆரம்பவாசலாக இருந்தது.   பக்ஷி ராஜா, சென்ட்ரல் ஸ்டூடியோ என்று படப்பிடிப்புத் தளங்கள் கோவையை மையமாகக் கொண்டுதான் இயங்கி வந்தன.   ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான கண்ணகி படத்தில் சிறுவயது கோவலனாக நடிக்க வாய்ப்பு விஸ்வநாதனுக்கு கிடைத்தது.  ஆனால் கண்ணகியை விட உயரம் குறைவாக இருந்த காரணத்தால் அந்த வாய்ப்பு கை நழுவிப்போனது.  (ஆனால் படத்தில் டைட்டிலில் பாலகோவலன் என்று விஸ்வநாதனின் பெயர் இடம்பெற்றிருந்தது படத்தைப் பார்க்கும்போது நமக்கு தெரியவருகிறது.)
ஆனாலும் ஜூபிடர் நிறுவனத்தை விட்டு விலகாமல் அங்கு ஆபீஸ் பாயாக - டீ கொண்டுவந்து கொடுக்கும் பணியாளாக வேலைக்கு சேர்ந்தான் சிறுவன் விஸ்வநாதன்.    இசை அமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்களுடைய அன்பும் ஆதரவும் அவனுக்கு கிடைத்தது.   
ஒருமுறை “அபிமன்யு” படத்துக்காக ‘புது வசந்தமாமே வாழ்விலே‘ என்ற தீம் சாங்குக்கு மெட்டமைக்கும் பணியில் தனது குழுவினருடன் ஈடுபட்டிருந்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.  ஆனால் எதிர்பார்த்தபடி மெட்டு அமையவில்லை.
 
உணவு இடைவேளைக்கு சென்று விட்டு திரும்பும் போது தனது ஹார்மோனியத்தில் இருந்து யாரோ ‘புது வசந்தமாமே வாழ்விலே‘ பாடலை அருமையான மெட்டோடு பாடிக்கொண்டிருப்பதை கேட்டு பரபரப்போடு அறைக்குள் வந்த சுப்பையா நாயுடு பிரமித்துப்போனார்.  காரணம் டீ கொண்டுவந்து கொடுத்துக்கொண்டிருந்த ஆபீஸ் பையன் விஸ்வநாதன் தான் அருமையான மெட்டை அமைத்துக்கொண்டிருந்தான்.  அவனை தட்டிக்கொடுத்து தனது உதவியாளனாக அன்று முதல் நியமித்துக்கொண்டார் சுப்பையா நாயுடு.
 
ஜூபிடர் நிறுவனம் கோவையில் மூடுவிழா செய்த போது தவித்துப்போன  விஸ்வநாதனை சென்னைக்கு சி.ஆர். சுப்பராமனின் பாசறைக்கு அனுப்பி வைத்தார் சுப்பையா நாயுடு.
ராமமூர்த்தி - விஸ்வநாதன் இருவருமே சுப்பராமனால் புடம்போடப்பட்டார்கள்.  இருவரும் அவரது முதன்மையான உதவியாளர்களாக உயர்ந்தார்கள். அந்த வேளையில் தான் எம்.ஜி. ஆர் அவர்கள் நடித்த ‘ஜெனோவா‘ என்ற படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு எம்.எஸ். விஸ்வநாதனுக்கு கிடைத்தது. சுப்பராமனை விட்டு அகலாமல் ஜெனோவா படத்துக்கு பணியாற்றிக்கொண்டிருந்தார் விஸ்வநாதன்.
 
அது  சி. ஆர். சுப்பராமன் சண்டிராணி, தேவதாஸ் ஆகிய படங்களுக்கு விறுவிறுப்பாகப் பணியாற்றிக்கொண்டிருந்த நேரம்.  அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாக சி. ஆர். சுப்பராமனின் அகால மரணம் திரை உலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சுப்பராமன் பாதியில் விட்டுச் சென்ற படங்களுக்கு பின்னணி இசைச் சேர்க்கை - அரைகுறையாக நின்ற பாடல்களை முழுமையாக இசை அமைத்துக்கொடுப்பது ஆகிய பொறுப்புகள் ராமமூர்த்தி- விஸ்வநாதன் ஆகிய இருவரிடமும்வந்து சேர்ந்தன. ஆரம்ப கால படங்களான சண்டிராணி, தேவதாஸ், மருமகள் ஆகிய படங்களைப் பார்த்தோமானால் டைட்டிலில் பின்னணி சங்கீதம் ராமமூர்த்தி-விஸ்வநாதன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.
 
அந்த நேரத்தில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் 
சொந்தமாகப் படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார்.  அவரது தயாரிப்பில் வெளிவந்த மணமகள் படத்திற்கு இசை அமைத்தவர் சி. ஆர். சுப்பராமன்.  
தனது அடுத்த தயாரிப்பான ‘பணம்‘ என்ற படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை சுப்பராமனின் பாசறையில் பயின்று முன்னுக்கு வரத் துடித்துக்கொண்டிருந்த ராமமூர்த்தி-விஸ்வநாதன்  ஆகிய இருவருக்கும் அளிக்க முன்வந்த கலைவாணர் படத்தின் டைட்டிலில் முதல் முதலாக விஸ்வநாதன்- ராமமூர்த்தி என்று கார்டு போடவைத்தார். 
‘நீ சின்னப்பையன்.  ராமமூர்த்தி பெரியவரு.  அனுபவசாலி.  அவர் உனக்குப் பின்னாலே இருந்து நீ விழுந்துடாம தாங்கிப் பிடிச்சுப்பாரு‘ - என்று விளக்கமும் அளித்தார் கலைவாணர்.
கலைவாணரின் ‘பணம்‘ தான் இரட்டையர்கள் இணைந்து இசை அமைத்த முதல் படம்.   1952 முதல் 1965 வரை இரட்டையர்கள் இசை அமைப்பில் வெளிவந்த பாடல்கள் காலத்தைக் கடந்து இன்றும் நிலைத்து நிற்கின்றன.
 
புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்ற தீராத வேட்கை உந்தித்தள்ள - அதே சமயம் - பழமையும் மாறாதபடி செய்யவேண்டும் - என்ற நோக்கத்துடன் அமைந்ததுதான் இந்த இசை இரட்டையர்களின் பாணி.  
எல்லாப் பாடலுக்கும் ஒரு ராகம் கண்டிப்பாக இருக்குமல்லவா?  அதனை அடிப்படையாக ஜீவன் கெட்டுவிடாமல் அதே சமயம் சற்று மாறுதலாக மேற்கத்திய இசைக் கலப்புடன் - முழுக்க முழுக்க க்ளாசிக்கலாக இல்லாமல் சற்று நீர்க்க லைட் க்ளாசிக்கலாக மெல்லிசையாகக் கொடுக்க ஆரம்பித்த இவர்களின் பாணி அமோக வரவேற்பைப் பெற்றது.
 
அதே சமயம் மெல்லிசை என்பதற்காக மொழியைக் கடித்துத் துப்ப விடவில்லை இவர்கள்.  ‘உணர்ச்சியோடு பாவம் மிளிரப் பாடவேண்டும்.  பாட்டின் ஒவ்வொரு சொல்லும் தெளிவாக இருக்கவேண்டும்‘ என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.
‘மெல்லிசை மன்னர்கள்‘ என்ற பட்டம் கவியரசு கண்ணதாசன் அவர்களால் வழங்கப்பட்டது.  பிறப்பு முதல் இறப்பு வரை தமிழ் கூறும் நல்லுலகத்தின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இவர்களது பாடல்கள் கண்டிப்பாகத் துணை வந்துகொண்டிருந்தன.
‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே‘ ​- (புதையல் - சி.எஸ். ஜெயராமன் - பி. சுசீலா)  
‘தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும்‘- (பெற்றமகனை விற்ற அன்னை - ஏ.எம். ராஜா - பி. சுசீலா)
‘காணவந்த காட்சி என்ன வெள்ளிநிலவே‘ - (பாக்கியலட்சுமி - பி.சுசீலா)
‘மயக்கமா கலக்கமா‘ ​ - (சுமைதாங்கி - பி.பி. ஸ்ரீனிவாஸ்)
‘என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்‘ (தங்கப் பதுமை - பி.சுசீலா)
இவர்கள் இசையில் மலர்ந்த தேன்துளிகளில் சில.
அறுபதுகள் முழுக்க முழுக்க இவர்கள் வசமே வந்தது.  தமிழ் திரை இசையின் பொற்காலப் பாடல்கள் இவர்கள் காலத்தைச் சேர்ந்ததாக அமைந்தது.  ஐம்பதுகளின் இறுதிவரை தமிழ் திரை இசையில் நிலவி வந்த ஹிந்தித் திரை இசையின் ஆதிக்கத்தை தகர்த்தெறிந்து புத்துயிர் ஊட்டிய பெருமை இந்த இரட்டையர்களுக்கு உண்டு.
ஆனால் - யார் கண்பட்டதோ?
1965-இல் இருவரும் தனித்தனியாகப் பிரிந்து தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.  ஆனால் அந்தப் பிரிவிலும் இருவரும் கண்ணியம் காத்தனர்.   ஒருவரைஒருவர் குற்றம் சொல்வதோ, ஒருவர் மற்றவர் மீது புழுதி வாரித் தூற்றவோ - இருவருமே செய்யவில்லை. பிரிந்தபிறகு டி.கே. ராமமூர்த்தி அவர்கள் இசையில் வெளிவந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.  அதே நேரம் அதிர்ஷ்ட தேவதையின் பார்வை எம்.எஸ். விஸ்வநாதன் பக்கம் விழுந்ததாலோ என்னவோ அவரது இசைஅமைப்பில் வந்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற, பாடல்கள் அனைவரது 
உதடுகளிலும் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தன.
 
பாடல்கள்- பின்னணி இசை என்று அனைத்திலும் தன்னிகரற்ற திறமையை எம்.எஸ்.வி. அவர்கள் வெளிப்படுத்த ஆரம்பித்து அனைத்து தரப்பினரையும் தன்வசம் இழுத்துக்கொண்டார். பிரிந்த பிறகு விஸ்வநாதன் இசையில் வெளிவந்த முதல் படம் ‘மக்கள் திலகம்‘ எம்.ஜி. ஆர் நடிப்பில் வெளிவந்த ‘கலங்கரை விளக்கம்‘. தொடர்ந்து ‘அன்பே வா, பறக்கும் பாவை என்று எம்.எஸ்.வி.யின் பயணம் வெற்றிப்பாதையில் தொடர ஆரம்பித்தது. இவரது இசையில் வெளிவந்த உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற ‘பால் போலவே வான் மீதிலே‘ - என்று துவங்கும் பாடல் அதனைப் பாடிய பி.சுசீலாவுக்கு தேசிய விருதை வாங்கிக்கொடுத்தது.
இதே போல ‘சவாலே சமாளி’ படத்தில் இடம்பெற்ற 
‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு‘ - பாடலும் பி.சுசீலாவை மீண்டும் தேசிய விருதைப் பெறவைத்தது. 
‘ராமன் என்பது கங்கை நதி‘ - என்ற கண்ணதாசனின் பாடலுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையும் பாடிய டி.எம். 
சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ் ஆகிய மூவரின் குரலும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஒரு பாடலாக தேசிய விருதைப் பெற்றது.  இடம்பெற்ற படம் ‘குழந்தைக்காக‘.  பாடல் வரிகளா, வரிகளுக்கு பொருந்தும் இசையா, பாடியவர்கள் பாடிய விதமா மூன்றிலும் எது சிறந்தது என்று பட்டிமன்றமே வைக்கலாம்.
 
திருமண விழாக்களா?  ஒரு ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி‘ - பாடல் இல்லாமல் நடைபெறவே பெறாது. (படம் - நெஞ்சிருக்கும் வரை - பாடியவர் : டி.எம். சௌந்தரராஜன்.)
 
‘நாம் ஒருவரை ஒருவர் சிந்திப்போம் என காதல் தேவதை 
சொன்னாள்‘ - என்ற குமரிக்கோட்டம் படத்தில் இடம்பெற்ற டி.எம்.எஸ். - எல்.ஆர். ஈஸ்வரி பாடிய பாடலின் ஆரம்பமே கேட்பவரை விஸ்வநாதன் வசப்படுத்திவிடும்.
 
விஸ்வநாதன் அளவுக்கு இல்லாவிட்டாலும் டி.கே. ராமமூர்த்தி அவர்கள் தனித்து இசை அமைத்த படங்களின் பாடல்களும் அனைத்துதரப்பு மக்களையும் சென்றடையத் தவறவில்லை. ‘நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல‘ (படம் : தேன்மழை - பி.சுசீலா)  ‘வசந்த காலம் வருமோ‘ - (மறக்க முடியுமா - பி.சுசீலா - கே.ஜே. யேசுதாஸ் - இந்தப் பாடல் முழுக்க வெறும் ஹம்மிங்கிலேயே மனசை அள்ளிவிடுவார் யேசுதாஸ். )
‘அம்மனோ சாமியோ‘ - என்ற ‘நான்‘ படத்தில் இடம்பெற்ற சீர்காழி கோவிந்தராஜன் - எல்.ஆர். ஈஸ்வரி பாடிய ஜனரஞ்சகப் பாடலை பெரியவர் ராமமூர்த்தி அவர்கள் அமைத்திருக்கும் விதம் அலாதி. ‘காதலன் வந்தான் கண்வழி சென்றான்‘ (மூன்றெழுத்து - பாடியவர் பி. சுசீலா - எஸ்.சி. பொன்னுசாமி.   இந்தப் பாடல் ஒரு அருமையான மெலடி. ‘சங்கமம்‘ படத்துக்கு இசை அமைக்கும் போது ராமமூர்த்தி ஒரு புதுமையைச் செய்தார்.  அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் சிந்துபைரவி ராகத்திலேயே அமைத்தார் அவர்.
‘தன்னந்தனியாக நான் வந்தபோது‘ (டி.எம்.எஸ். - பி. சுசீலா) ‘ஒருபாட்டுக்கு பலராகம்‘ (டி.எம்.எஸ். - எல்.ஆர். ஈஸ்வரி)‘கண்ணனிடம் கேட்டிருந்தேன் பிள்ளை ஒன்று வேண்டும்‘ (பி.சுசீலா) 
இன்று கேட்டாலும் இரட்டையர்கள் சேர்ந்தும் தனித்தும் இசை அமைத்த பாடல்களும் காதுகளை வருடத் தவறுவதே இல்லை.  கேட்கும் நெஞ்சங்களும் அவற்றை மறப்பதே இல்லை.                   - --
 
-பி.ஜி.எஸ். மணியன் ( அந்திமழை - இசை அமைப்பாளர்கள் பற்றிய சிறப்பிதழில் எழுதிய கட்டுரை)
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...