கடந்த 6 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மாநில வாரியாக மூடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறைக்கான இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: “கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் தற்போது வரை 5,00,506 நிறுவனங்கள் மூடப்பட்டன. அதே காலகட்டத்தில் 7,17,049 புதிய நிறுவனங்கள் 2013-ஆம் ஆண்டைய நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் 1 முதலான காலகட்டத்தில் 22,557 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் 1,09,098 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த 6 ஆண்டுகளில் 2017-18ஆம் நிதியாண்டில் அதிக அளவாக 2,36,262 நிறுவனங்கள் மூடப்பட்டன. 2018-19இல் 1,43,233 நிறுவனங்கள் மூடப்பட்டன. 2016-17இல் 12,808 நிறுவனங்களும், 2019-20இல் 70,972 நிறுவனங்களும் கடந்த நிதியாண்டில் 14,674 நிறுவனங்களும் மூடப்பட்டன.
அரசுக்கு கிடைத்த தகவல்படி கடந்த நிதியாண்டில் 1,55,377 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டன. 2019-20இல் இந்த எண்ணிக்கை 1,22,721ஆக இருந்தது. 2016-17இல் 97,840 நிறுவனங்களும், 2017-18-இல் 1,08,075 நிறுவனங்களும், 2018-19இல் 1,23,938 நிறுவனங்களும் புதிதாகத் தொடங்கப்பட்டன என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.