???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் 0 அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் 0 உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி 0 சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் 0 பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் 0 ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் 0 ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு 0 காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு 0 திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் 0 காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது! 0 ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு! 0 உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் 0 மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி! 0 இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஸ்டாலின் பாராட்டு: நெகிழ்ந்துபோன சீனுராமசாமி!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   01 , 2016  03:01:59 IST


Andhimazhai Image

 

மிகுந்த நெகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி. உதயநிதி ஸ்டாலின் பார்க்கவேண்டும் என்று கேட்டதால் இயக்குநர்  சீனு ராமசாமி தன்  இயக்கத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பில் உருவான படமான ‘தர்மதுரை’ யின் டிவிடியை அனுப்பிவைத்தார். படத்தைப்பார்த்த உதயநிதி மகிழ்ந்துபோய் இதை அப்பாவையும் பார்க்கவைக்கிறேன் என்று சீனு ராமசாமியிடம் சொல்லியிருக்கிறார். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னதாக சீனுராமசாமிக்கு ஸ்டாலின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு. முகவரி கேட்டிருக்கிறார்கள். சரி. தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் அனுப்பப்போகிறார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்திருக்கிறார். ஆனால் வந்து சேர்ந்ததோ தர்மதுரை படத்துக்காக ஸ்டாலின் எழுதிய பாராட்டுக்கடிதம். இந்த தீபாவளிக்கு இதை விட சிறந்த பரிசு எதுவும் இருக்கமுடியாது. ’’சமூகத்துக்காக படம் எடுக்கிறேன். அரசியல்வாதிகள் என் படங்கள் பற்றிப்பேசுகையில் சிறந்த அங்கிகாரம் கிடைக்கிறது’’ என்கிற சீனுராமசாமி, ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி டிவிட்டரில்,’’ மண்பானை செய்துகொண்டிருப்பவனுக்கு வெள்ளிக்குடம் கிடைத்ததுபோல் இருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இயக்குநர் சீனு ராமசாமிக்கு  ஸ்டாலின் அனுப்பிய கடிதம்:

“பாசமிகு சகோதரர் திரு சீனு ராமசாமி,

 

தங்கள் இயக்கத்தில் உருவாக்கிய தர்மதுரை திரைப்படத்தை பார்த்தேன். விஜய்சேதுபதி - தமன்னா ஆகியோர் கதாநாயகன், கதாநாயகி பாத்திரங்களில் நடிக்க, கவிப்பேரரசு வைரமுத்துவின் கைவண்ணத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் பாடல்கள் இடம்பெற, ஆர்.கே. சுரேஷ் தயாரிக்க, தங்கள் அனுபவம் வாய்ந்த அருமையான இயக்கத்தில் உருவாக்கிய ‘தர்மதுரை’ 50 நாட்களுக்கு மேல் தமிழகத்தில் வெற்றி நடை போட்டு, இன்றைக்கும் பல்வேறு திரையரங்குகளில் மாற்றி திரையிடப்பட்டு, மக்கள் பேராதரவுடன் ஓடிக் கொண்டிருப்பது மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரியது.

 

திரையுலகில் நீண்ட அனுபவம் கொண்ட நீங்கள், இயக்குகின்ற படங்கள் எப்போதும் ஒரு சமூக நோக்கம் கொண்டதாகவே அமைந்திருக்கும் என்பதை போன்றே இந்த தர்மதுரையிலும் பல சமூக மாற்றங்களை வலியுறுத்துகின்ற வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

காதலில் தோற்றுப்போன ஒரு ஆணும், திருமண வாழ்வில் தோற்றுப்போய், விவாகரத்தான ஒரு பெண்ணும், புதிதாக இணைந்து வாழும் வாழ்க்கை முறையும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இப்படத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

 

மருத்துவக் கல்லூரி மாணவராக நடிக்கும் விஜய்சேதுபதி (தர்ம துரை), தனது கல்லூரி பேராசிரியர் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் நன்மதிப்புக் கொண்டவராக விளங்குகின்றனர். கல்லூரி பேராசிரியரான ராஜேஷைத் தேடி வரும் கிராமத்துக்காரர், கல்லூரிக்குள் நுழைந்ததும் முனியாண்டி என்ற பேராசிரியரைப் பார்க்க வேண்டுமென்று கூறிட, அந்த பெயரில் யாரும் இங்கு பேராசிரியராக இல்லையென மாணவர் சேதுபதி கூற, கிராமத்துக்காரர் ‘எல்லா பேராசிரியர்களையும் காட்டு. நான் அடையாளம் காட்டுகிறேன்’ என்று தர்மதுரையிடம் கூற, கல்லூரியில் ஒவ்வொருவராகப் பார்க்க, பேராசிரியர் ராஜேஷை பார்த்ததும் “வா முனியாண்டி” என கிராமத்துக்காரர் அழைத்தார். காமராஜர் என்ற பேராசிரியர் எப்படி முனியாண்டியாக இருந்து காமராஜராக மாறினார் என்ற விபரத்தை வெளிபடுத்துகிறார்.

 

அப்போதுதான் ராஜேஷ் சொல்கின்றார்… சாப்பாட்டுக்கே வழி இல்லாத தாயின் பிள்ளையாக இருந்தபோது, காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். பள்ளிக்கு சென்றால் ஒருவேளையாவது தன் பிள்ளைக்கு உணவு கிடைக்கும் என்று சேர்க்கப்பட்ட நான் படித்து டாக்டர் ஆனதும் முனியாண்டியாக இருந்த என் பெயரை, தான் படித்து டாக்டராக காரணமாக இருந்த காமராஜரின் பெயரை தனக்கு வைத்துக் கொண்ட காரணத்தையும் விளக்குகிறார்.

 

அடுத்த நாள் சில மாணவர்கள், பேராசிரியர் கல்லூரிக்குள் சென்று கொண்டிருக்கும் போது ‘முனியாண்டி, முனியாண்டி’ என்று அவரை அழைக்க பேராசிரியர் மீது பாசம் கொண்ட தர்மதுரைக்கும், மற்ற மாணவர்களுக்கும் மோதலாகி, காவல்நிலையம் வரை சென்று வழக்குப் பதிவாகி, தர்மதுரை படிப்பையே தொடர முடியாத நிலை வருகிறது என்பதை அறிந்த பேராசிரியர், வழக்கு தொடுத்த மாணவனின் தந்தையிடம் எடுத்துச் சொல்லி, வழக்கை திரும்ப பெறச் செய்யும் காட்சியெல்லாம் நெஞ்சை நெகிழ வைக்கிறது.

 

பேராசிரியர் அறிவுரைப்படி கிராமத்து டாக்டராகப் பணியாற்றும் தர்மதுரை, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து சிறு எழுத்தாளராக விளங்கும் கிராமத்து ஏழைப் பெண்ணாகிய அன்புச்செல்வியைத் திருமணம் செய்ய விரும்பி, விருப்பத்தை தெரிவிக்க, டாக்டருக்கும் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஏழைப் பெண்ணுக்கும் எப்படி பொருந்தும் என்று அன்புச்செல்வியும், அவரது தந்தையும் கேட்க, அவையெல்லாம் திருமணத்துக்குத் தடையில்லை என்று தர்மதுரையும் அவரது தாயாரும் கூறி, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர், தர்மதுரையின் சகோதரர்கள் அன்புச்செல்வியின் வீட்டுக்குச் சென்று வரதட்சணை தந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும் என்று கூறி, அதனால் ஏற்பட்ட தகராறில் அன்புச்செல்வி தற்கொலை செய்து கொள்கிறார். தன் தற்கொலைக்கு தர்மதுரையோ, வேறு யாருமே காரணமல்ல என்று கூறி, கடிதமும் எழுதி வைத்து அவர்களையும் காப்பாற்றுகின்ற காட்சி பார்ப்பவரைக் கலங்க வைக்கிறது.

தர்மதுரையாக வரும் சேதுபதி கிராமத்தில் அனைவராலும் பாராட்டும்படியான டாக்டராக விளங்குவதை அறிந்த, முன்னாள் பேராசிரியர் ராஜேஷ் தர்மதுரையை பார்க்க வந்து, நல்ல டாக்டராக விளங்குகின்ற உங்களைப் பற்றி கேள்விப்பட்டுத்தான் வந்தேன். என்னிடம் தர்மதுரை என்ற மாணவர் படித்தார். அவராகத்தான் நீங்கள் இருப்பீர்களோ என்று வந்தேன் என்று கூறும் பேராசிரியர், கண் பார்வையற்ற நிலையில் இருக்கிறார். தர்மதுரை பதில் ஏதும் பேசாமல் குனிந்து பேராசிரியரின் கால்களைத் தொட்டு, அதன் மூலம் பதில் தருகின்ற அந்தக் காட்சியும் இதயத்தைத் தொடுகிறது.

 

கதை, திரைக்கதை, பாடல், நடிப்பு, இசை, இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ள சிறப்பான படம்.

 

கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகளில், யுவன் சங்கர் ராஜா இசையிலான பாடல், ‘ஆண்டிப்பட்டி கணவாய் காத்து

ஆளைத் தூக்குதே’ என்ற பாடலும் இசையும் இதயத்தில் இன்னிசை ராகம் பாடிக் கொண்டே இருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்று அற்புதமான ‘தர்மதுரை’ படத்தை உருவாக்கியவர் சீனு ராமசாமி. வாழ்க – வளர்க - வெல்க! சீனு ராமசாமியின் திரைப்பட பணிகள்! தருக! மென்மேலும் சமூக சீர்திருத்தப் படங்கள்!”

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...