???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மு.க.ஸ்டாலின் 2.0

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   01 , 2018  00:32:23 IST


Andhimazhai Image
ளபதி என்ற நிலையில் இருந்து தலைவராக உயர்ந்துவிட்ட மு.க.ஸ்டாலின் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நிலவும் குழப்பமான சூழலில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி வருகிறார். சட்டமன்றத்தில் 89 உறுப்பினர்கள் என்ற அசுரபலம், அதிமுகவில் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட  வெற்றிடம் ஆகிய பின்னணியில் அவர் உற்று நோக்கப்படுகிறார். இதற்கிடையே மு.கருணாநிதியின் உடல்நிலையும் மிக மோசமாக இருப்பதால் திமுகவில் அவர் செயல் தலைவர் என்ற பதவிக்கும் உயர்ந்தார். கட்சிக்குள் ஏற்பட்ட இந்த மாறுதல் எளிதாக நடைபெற்றுள்ளது. தலைமையின் மாறுதலால் புதிய அணுகுமுறை என்றெல்லாம் கட்சிக்குள் பேச்சு இல்லை. ஏனெனில் சில ஆண்டுகளாகவே ஸ்டாலின்தான் கட்சியின் பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். பொதுத்தேர்தலுக்கு முன்னதாக அவர் மேற்கொண்ட நமக்கு நாமே பயணமும் அவருக்கு மக்களிடமும்  கட்சியினரிடமும் ஒரு நல்ல பிம்பத்தையே ஏற்படுத்தி இருந்தது. “கட்சிக்குள் சின்னதாக ஒரு சந்தேகம் இருந்தது. ஊடகங்களில் அச்சந்தேகம் உலவியது. அவர் கழகத்தின் அடிப்படைக் கொள்கையான திராவிடத்தை எப்படி முன்னெடுப்பார்? அதில் உறுதியாக இருப்பாரா என்பதே அது. ஆனால் ஜல்லிக்கட்டுப் போராட்ட காலத்தில் அவர் திராவிடக் கட்சிகளின் காலம் முடிவடைந்துவிட்டது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதற்கு உடனடியாக திராவிடக் கட்சிகளை உங்களால் தொடக்கூட முடியாது என்று சூளுரைத்தபோதே எங்களுக்கு அந்தச் சந்தேகம் போய்விட்டது. இன்று அகில இந்திய அளவில் பாஜகவை எதிர்த்து நிற்கும் முகங்களில் ஒன்றாக ஸ்டாலினும் இருக்கிறார். கலைஞரின் வைரவிழாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக்கட்சிகள், பிற மாநிலக்கட்சிகளை அவர் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்த கூட்டத்தின் மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வலுவான எதிர்வேட்பாளரைத் தேர்வு செய்யத் தோள் கொடுத்தார். திமுக பல ஆண்டுகளாகவே தேசிய அளவிலும் முக்கியப் பங்காற்றும் கட்சி என்கிற வழமையையை அவரும் தொடர்கிறார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியையே அளித்தது,” என்கிறார் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர்.
 
சமீபத்தில் அவர் செய்திருக்கும் சில விஷயங்கள் அவரைத் திரும்பிப்பார்க்க வைத்தன. ஒன்று அவர்  செல்லும் இடமெல்லாம் வானாளாவிய கட் அவுட்கள் வேண்டாம். கட்சிக் கொடிகளை மட்டும் கட்டுங்கள் என்றது. இரண்டாவது, புத்தகங்கள் மட்டும் தாருங்கள் போதும் என்று பிறந்தநாளில் அறிவித்தது. அப்புறம் தமிழக அரசியலின் முக்கிய சாபக்கேடுகளில் ஒன்றான தலைவர்களின் காலில் டமால் என விழுவதை ஒழித்தது. “தளபதி கூட்டங்களில் அவர் காலில் விழுவதும் சிலரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்போதெல்லாம் யாராவது கூடவே இருந்து யாரும் காலில் விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அவர் பிறந்த நாள் விழாவின் போதும்கூட தொடர்ச்சியாக யாரும் காலில் விழவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது,” என்று ஒரு தகவலைப் பகிர்ந்துகொள்கிறார் திமுக தொண்டர் ஒருவர். ஆனால் இவையெல்லாம் தொடர வேண்டுமென்றால் அவர் உறுதியாக இருக்கவேண்டும்!
 
பொதுவாகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஸ்டாலின் இணக்கம் காட்டமாட்டார் என்பது ஒரு அரசியல் கருத்து. அது தவறு என்பதை அவரே நிரூபித்தார். காவிரி பொய்த்ததைத் தொடர்ந்து விவசாயிகளுக்காக இந்த ஆண்டு அவர் நடத்திக் காட்டிய பொது அடைப்பு முக்கிய நிகழ்வு. இதில் காங்கிரஸ் மட்டுமல்லாமல் வேறு அணியில் இருந்த இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகளும் வந்து கலந்துகொண்டன. அந்த அடைப்பு வெற்றி பெற்றது. அத்துடன் இந்த நிகழ்வை வெறுமனே அரசியல் கூட்டணி என்று சொல்லிவிடாதீர்கள் என்ற செய்தியையும் திமுக அப்போது வெளிப்படுத்தியது.
 
 “பொதுவாக அரசியல்வாதிகள் கலந்துகொள்ளும் கூட்டம் என்றால் சற்று நேரம் பிந்தித்தான் ஆரம்பிப்போம். ஆனால் தளபதி, எதுவும் சரியான நேரத்தில் தொடங்கவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். நாங்களே சற்று தாமதமாகப் போனால் எங்களுக்கு முன்பே தங்கி இருக்கும் இடத்தில் இருந்து வெளியே வந்துவிடுவார். கூட்டமே வராவிட்டாலும் கூட அங்குபோய் அமர்ந்திருப்பார். ஒன்பது மணிக்கு சந்திப்பு என்றால் 8.55க்கே தயாராக இருப்பார். சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது விடிகாலையில் தனியாகவே நடந்து சந்தைகள் கடைத்தெருக்களில் வாக்குக் கேட்டு, பொதுமக்களை ஆச்சரியப்படுத்தினார். தனியாக நடந்துவரும் அரசியல் தலைவர் இப்போதைக்கு யாரும் இல்லை என்பதால் இந்த ஆச்சரியம்!” என்கிறார் தஞ்சையைச் சேர்ந்த அரசியல் புள்ளி.
 
சட்டமன்றக் கூட்டங்களைப் பொறுத்தவரை எடப்பாடி அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டை கிழியும் அளவுக்கு பிரச்னையில் திமுக இறங்கியதை பெரிதாக யாரும் ரசிக்கவில்லை. அன்றைக்கு  பிரச்சனையில் இறங்கிய திமுக உறுப்பினர்கள் சார்பில் மு.க.ஸ்டாலின் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். பிறகு சமீபத்தில் அந்த உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் தீர்மானத்தை சபாநாயகரிடம் அந்த உறுப்பினர்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட பின்னர் ஆளுங்கட்சி கைவிட்டது! ஓரளவுக்கு மாண்பைக் காப்பாற்றிக் கொள்ள இந்த நடவடிக்கை உதவினாலும் இந்த அளவுக்கு விட்டிருக்கக்கூடாது என்பது ஒரு  முக்கியமான விஷயமே. மற்றபடி இப்போதைக்கு மு.க.ஸ்டாலின் சபையை விட்டு வெளியேறி சாலை மறியல் செய்வது, அவையிலிருந்து வெளிநடப்பு செய்வது என்று எதிர்ப்புகளைக் காட்டிவருகிறார். வெளிநடப்பு செய்தாலும் வீட்டுக்குச் சென்றுவிடாமல் மறுபடியும் சென்று அவையில் கலந்துகொண்டு, அவை முடியும்வரை உள்ளே ஸ்டாலின் இருப்பது முதிர்ச்சியான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. அவைக்கே வராத எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்திருக்கும் நமக்கு இது முக்கியமான அம்சம்தானே? இன்னொரு முக்கியமான விஷயம், எதிர்க்கட்சித் தலைவராக சரியான ஒருவரைக் கடைசியாக தமிழகம் கண்டது எம்ஜிஆர் காலத்தில் மட்டுமே. அதன் பின்னர் ஜெ., கருணாநிதி  காலங்களில் எதிர்க்கட்சித் தலைவர்களாக அவர்கள் பதவியில் இருந்த காலங்களில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டார்கள் என்று சொல்லமுடியாது. அவர்கள் சபையையே புறக்கணித்தனர் என்று சொல்லலாம்.
 
தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளிலும் எதிர்க்கட்சியாக திமுக பங்காற்றுகையில் அவற்றில் முன்னிலை வகிக்கவும் அவர் தயங்குவது இல்லை. ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூரில் நடத்திய போராட்டம், நெடுவாசல் போராட்டம், விவசாயிகள் போராட்டம் போன்ற பொதுப்பட்ட      பிரச்சனைகள் மட்டுமில்லாமல் தனி மனிதர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்படும்போதும் ஆறுதல் சொல்ல அவரே செல்கிறார். அரியலூரில் நந்தினி வல்லுறவுக்காளாகி கொல்லப்பட்டது, சென்னையில் மூன்று வயதுக் குழந்தை கொல்லப்பட்ட துக்க சம்பவம், ஐஐடியில் ஆய்வு மாணவர் தாக்கப்பட்டது போன்ற நிகழ்வுகளுக்காக அவரே நேரில் சென்றது எல்லாம் முக்கியமான முன்னெடுப்புகள்!
 
ஊடகங்களைக் கையாளுவதில் சற்றுக் குறைபாடுகள் அவரிடம் இருக்கின்றன. கேள்விகளுக்கு, என்னிடம் கேட்காதீர்கள்... போன்ற பதில்களை கலைஞரிடம் இருந்து பொதுவாக எதிர்பார்க்க முடியாது. எதையாவது சொல்லி கவன ஈர்ப்பு பெறுவார் அவர். ஆனால் ஸ்டாலினிடம் சுவையான பதில்கள், கவன ஈர்ப்புப் பதில்களைப் பெற முடியாது. ஆனால் தந்தையிடம் இருந்து ஸ்டாலின் மாறுபடுவது ஒரு விஷயத்தில். கருணாநிதி, அவ்வப்போது எதாவது  சர்ச்சைக்குரிய விஷயத்தைக் கருத்தாகக் கூறி அல்லது பேசி, பின்னர் அதை சமாளிக்க முற்படுவார். ஆனால் ஸ்டாலின் இதுவரை அதுபோன்ற பிரச்சனைக்குரிய கருத்துக்கள் எதையும் கூறுவதில்லை. இதுவே ஒரு ஆரோக்கியமான விஷயம்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
 
 
நீண்ட நெடு நாட்களாகதான் வைத்திருந்த இளைஞரணிச் செயலாளர் பதவியை வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு விட்டுக்கொடுத்தது, மாணவரணிச் செயலாளர் பதவிக்கு புகழேந்தியை மாற்றி சிவி.எம்.பி. எழிலரசனை நியமித்தது என்று மாறுதல்களையும் அவர் கொண்டுவந்திருக்கிறார். தகவல்தொழில்நுட்ப அணிக்கு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நியமித்திருக்கிறார்.
 
தமிழகம் முழுக்க மாணவ மாணவியருக்காக நீட் எதிர்ப்புப் பொதுக்கூட்டங்களை திமுக நடத்தியிருப்பதும், அதே போல் வறட்சிக்காலத்தில் கோவில் குளங்களைத் தூர்வார திமுகவினரை ஸ்டாலின் களத்தில் இறக்கியிருப்பதும் கூட பொதுநல நோக்கில் கட்சிச் சார்பின்றி நோக்கப்படுகின்றன.
 
இப்போதைக்கு செயல் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் மு.க. ஸ்டாலின் பாஸ் மார்க்கே பெறுகிறார்! ஆனாலும் அடுத்த தேர்தலில் கட்சியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்ல,  கட்சிக்காரர்களைத் தாண்டி பொதுமக்களின் ஆதரவும் வேண்டும்! அத்துடன் கட்சிக்காரர்களிடமே எளிதில் அணுகக் கூடியவராக இன்னும் கொஞ்சம் மாறவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது!
 
 
- முத்துமாறன்.
 
[அந்திமழை ஜூலை 2017 இதழில் வெளியான கட்டுரை.]


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...