???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்! 0 கர்நாடக தேர்தல்: முதல்வர் சித்தராமையா வேட்புமனுத் தாக்கல் 0 நிர்மலாதேவி விவகாரத்தில் CBI விசாரணை தேவை: வைகோ 0 எஸ்வி.சேகரின் கருத்து, அருவருக்கத்தக்கது: கனிமொழி 0 எச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: மத்திய அரசு பரிசீலனை 0 சிவகார்த்திகேயன் படத்தில் இரண்டாவது காமெடியனாக களமிறங்கும் யோகி பாபு 0 குஜராத் கலவர வழக்கு: முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி விடுதலை! 0 அவதூறு கருத்துகள் பரப்பும் எச்.ராஜா மீது வழக்கு தொடரப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் 0 பேராசிாியை நிா்மலா தேவியை ஐந்து நாள் சி.பி.சி.ஐ.டி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0 கியூபாவின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு! 0 ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட விஜயகாந்த், தே.மு.தி.க.வினர் கைது! 0 பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்! 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு! 0 ஆறாவது ஐ.பி.எல் சதம் : கெத்து காட்டிய கெயில்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எம்ஜிஆரை விட அதிக உயரங்களைக் கடந்துசென்றாரா ஜெ.?

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   06 , 2016  05:16:06 IST


Andhimazhai Image

ஒரு பெண் தலைவராக தமிழின வரலாற்றில் மிகச்சிறந்த இடத்தை ஜெயலலிதா பெற்றிருக்கிறார். அவர் அடைந்த உயரம் ஆண் தலைவர்கள் பலரால் எட்டவே முடியாத உயரம்!

 

ஜெயலலிதா பதினாறு வயதில் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தில் நடிக்கும்போதே,  ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜெயலலிதாவுக்கும் அப்படத்தின் நாயகன் எம்ஜிஆருக்கும் இடையே முப்பத்தி ஐந்து வயது வித்தியாசம் இருந்தது. அதன் பின்னர் 28 படங்களில் அவர் எம்ஜிஆருடன் நடித்துவிட்டார். அது இல்லாமல் பிறமொழிப்படங்கள் சேர்த்து 120 படங்களில் அவர் நடித்திருந்தார். எம்ஜிஆருக்கு வெற்றிபெற அவருடைய திரைப்படப் புகழ் உதவியது. மிகவலுவான அவரது ரசிகர்மன்றங்கள் கட்சியின் அமைப்பு அலகுகளாக மாறி உதவி செய்தன. அதிமுக என்ற கட்சி 1972ல் தொடங்கப்பட்டபோது அக்கட்சி உறுப்பினர்கள் முக்கியமாக எம்ஜிஆர் ரசிகர்கள். தமிழ்ச்சமூகத்தின் மீது சினிமா எற்படுத்திய தாக்கத்தின் விளைவு அது. அத்துடன் நாயக வழிபாட்டுப் பழக்கத்தின் உச்சகட்ட விளைவாகத்தான் எம்ஜிஆர் அரசியலில் முதல்வர் என்ற பதவிக்கு வந்தார். ஆனால் 120 படங்களில் ஜெயலலிதா நடித்திருந்தபோதும் சினிமா உலகில் பெண்ணுக்கு இருக்கும் இடம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். நாயக பிம்பம் என்பது ஆணுக்கே உரியது. பெண் உப பாத்திரம்தான். 1971க்குப் பின்னர் ஜெயலலிதா படங்களில் நடிக்கவில்லை. அவர் நன்கு அறிமுகமானவரே தவிர வழிபாட்டுப் பிம்பமோ, ரசிகப்பட்டாளம் கொண்டவரோ அல்ல. எம்ஜிஆருக்குப் பின்னர் அந்த கட்சியை  வசப்படுத்தியதும், அதிமுக உறுப்பினர்களுக்கு ஒரு தலைமையைத் தந்ததும்தான் அவர் செய்தது. ஜானகியுடன் ஒப்பிடுகையில் ஜெயலலிதாவை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. எம்ஜிஆர் இருக்கும்போதே அவர் தமிழ்நாடு முழுக்க அரசியல் செயற்பாட்டாளராக பயணம் செய்து பெற்ற அனுபவம், மாநிலங்களவை எம்பியாக இருந்து பெற்ற தொடர்புகள் ஆகியவற்றைச் சொல்லலாம்.

 

ஆனால் இதுமட்டுமே போதாதே. அவருக்குக் கை கொடுத்தது அவருடைய அசாதாரண போராட்ட குணம். தன் மீதான தாக்குதல்களை தன் அரசியல் லாபத்துக்கான வழிகளாக மாற்றியது அவருடைய தந்திரம். 1991-ல் ராஜிவ் படுகொலையை அடுத்துவந்த தேர்தல் அதிமுகவை ஆட்சிக்கு வரச் செய்து, ஜெயலலிதாவுக்கு முதல்வர் பதவியை அளித்தது. ஆனால் முதல் ஐந்தாண்டுகளில் அவரது ஆட்சி என்பது பலவேறு ஏற்ற இறக்கங்களைக் கொண்டது என்பதால் 1996ல் மிக மோசமான தோல்வியைப் பெற்றார். ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்றார். மீண்டுவர முடியுமா என்ற நிலையில் அவரது சட்டப் போராட்டங்கள் தொடர்ந்தன. அவையெல்லாம் நேர்மையான போராட்டங்கள் என்று சொல்ல இயலாது. ஆனால் எந்த நிலையிலும் துவண்டுவிடாத ஒரு அரசியல் தலைவரின் போராட்டங்கள்.

 

அரசியலில் சிறப்பாக காய்களை நகர்த்தியதால்தான் இந்த மோசமான காலகட்டத்தை அவர் கடந்துவந்தார். 2001-ல் வென்றாலும் முதல்வராக தொடரமுடியாமல் விலகி, சில காலம் கழித்து மீண்டும் பதவிக்கு வந்தார். 2011ல் ஆட்சிக்கு வந்த பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் அந்த ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையால் சிறைக்குப் போகவேண்டிவந்தது. ஆட்சிக்காலத்திலேயே சிறைக்குப் போவது என்பது எவ்வளவு மோசமான அவமானம்? ஆனால் அதையும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து செரித்துக்கொண்டு வெளியே வந்தார். அந்த தண்டனைக்குப் பின்னரும் முதல்வர் பதவி நாற்காலியில் அமர்ந்தார். உடல் நலிவு ஏற்பட்ட நிலையிலும் உச்சநீதிமன்றத்தில்  சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் நிலையிலும் 2016 தேர்தலில் தமிழக மக்கள் அவருக்கு எப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து இரணடாவது முறையாக வாக்களித்து வெற்றிபெற வைத்தனர். எம்ஜிஆருக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றவர் என்கிற பெருமை அவருக்கு வந்தது. இது ஆணாதிக்க அரசியலில் சாதாரணமான விஷயமே இல்லை.

 

இந்த தொடர் தேர்தல் வெற்றிகள் எப்படி சாத்தியம் ஆயின? முழுக்க சினிமா புகழால் ஆனது என்று யாரும் சொல்லவே முடியாது. ஏனெனில் அவர் முதல்முறையாக முதல்வர் ஆனபோது சினிமாவில் நடிப்பதை நிறுத்தி பதினோரு ஆண்டுகள் ஆகியிருந்தன. 2016ல் அவர் தொடர்ச்சியாக இரண்டாம் முறை தேர்வு செய்யப்பட்டபோது அவர் படங்களையோ எம்ஜிஆர் படங்களையோ பார்த்திராத புதிய இளம்தலைமுறை வாக்களிக்க வந்திருந்தது. அரசியல் சொல்லாடலில் அவர் கவனமாக எம்ஜிஆர் என்ற பெயரை பத்தாண்டுகளுக்கு முன்பே தவிர்த்திருந்தார். அம்மா என்ற பெயர்தான் எங்கும் வியாபித்திருந்தது.

 

அப்புறம் அவர் இந்த சமூக ஊடக ஆதிக்கம் நிறைந்த காலகட்டத்தில் இளம் தலைமுறையை ஈர்க்க அல்லது அவர்களுடன் உரையாட ட்விட்டர் அல்லது முகநூல் என்று எந்த சமூக ஊடகத்தையும் நாடவே இல்லை. இன்று இந்தியாவில் சமூக ஊடகத்தில் இல்லாத எந்த அரசியல்வாதியும் இல்லை. அந்தப்பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காத ஒரே தலைவர் ஜெயலலிதா மட்டும்தான். ஒரு விதத்தில் அவர் கடந்த ஐந்தாண்டுகளில் எந்த ஊடகத்துடனும் உரையாடவே இல்லை. 2011-ல் தேர்தலில் வென்று முதல்வர் ஆனபிறகு ஊடகங்களை ஒருமுறை சந்தித்தார். அப்போது மாதாமாதம் சந்திக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவே இல்லை.

 

ஏனெனில் அவர் ஊடக உரையாடலை நம்பவே இல்லை. அவரது கருத்துகள் அறிக்கைகளாக வெளிவந்தன. மேலும்மேலும் அவரது கடந்த ஐந்தாண்டு ஆட்சியும் சரி; தற்போதைய ஆட்சியும் சரி ஊடகங்களிடம் இருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொண்டதாகவே இருந்தது. நேரடி உரையாடலுக்கு முதல்வரும் சரி, அமைச்சர்களும் தயாராகவே இல்லை. மிகவும் தாமதமாகத்தான் அதிமுக சார்பில் டிவி விவாதங்களில் பேச ஆட்களை நியமித்தார் ஜெயலலிதா.

 

கட்சிக்காரர்களிடம் பேசினாரா என்றால் அதுவும் பொதுக்குழுக்கூட்டங்களில், மாநாடு போன்ற நிகழ்ச்சிகளில் மட்டும் உரையாற்றியதுடன் சரி. மற்றபடிக்கு குறிப்பிட்ட கட்சிக்காரர்கள் மட்டுமே அவரைப்பார்த்து எப்போதாவது உரையாடினார்கள். அவரது உடல்நிலை நலிந்ததுவேறு அவரை நேரடித்தொடர்புகள் அற்றவராக ஆக்கியது. இருப்பினும் அவரது ’அம்மா ’ என்கிற பிம்பம் மட்டும் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருந்தது.

 

இறுதியாக அவர் சந்தித்த சட்டமன்றத் தேர்தலிலும் எந்த சிறிய அல்லது பெரிய கட்சியையும் பொருட்படுத்தி கூட்டணி வைக்கவே இல்லை. கிட்டத்தட்ட தனியாகவே அதிமுக நின்றது. கூட்டணி சேர விரும்புகிறவர்கள் இரட்டை இலையில் நிற்க வற்புறுத்தப்பட்டார்கள்.

 

அதிமுக தன் உச்சகட்ட செல்வாக்கை அடைந்தது என்றால் அது ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் மட்டும் என்றே சொல்லலாம். இந்திய அரசியலில் பொதுவாக மாநிலக் கட்சித்தலைவர்கள் சற்று அடங்கியே போகும் நிலையில் நிமிர்ந்து நின்றவர் அவர். தமிழகத்திலும் மிகப்பெரிய வாக்குவங்கி பெற்ற கட்சியாக அதிமுகவை மாற்றிக்காட்டினார்.

 

அரசியலில் எம்ஜிஆரை விட மிகப்பெரிய உயரங்களை அவர் எட்டினாரா என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் வந்துகொண்டே இருக்கும். அதற்குப் பதில் இவர்கள் இருவரின் காலமும் அரசியல் சூழலும் வெவ்வேறு என்பதே. புரட்சித் தலைவராக எம்ஜிஆர் உயர்ந்தார். அதற்கு மாற்றாக அம்மா என்றவிதத்தில் மக்களின் இதயங்களில் இடம்பிடித்தார் ஜெயலலிதா.  இரண்டும் வேறுபட்ட அணுகுமுறைகள்.  இருவருக்கும் ஒரே ஆள்தான் எதிர் முனையில் நின்றார் என்பதைத் தவிர ஒற்றுமைகள் எதுவும் இல்லை!

 

- நமது சிறப்புச் செய்தியாளர்

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...