???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மோடிக்கு கிடைத்த பெரும் அடி: தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் 0 பாஜக செல்வாக்கை இழந்துள்ளது: நடிகர் ரஜினிகாந்த் 0 வெற்றிகரமான தோல்வி!: தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை கருத்து 0 மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்கிறோம்: பிரதமர் மோடி 0 இது நாட்டு மக்களின் வெற்றி: மம்தா பானர்ஜி கருத்து 0 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி உறுதி: ராகுல் காந்தி 0 மத்திய பிரதேசத்தில் இழுபறி நீடிப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்.! 0 அமோக வெற்றி பெற்ற சந்திரசேகர் ராவ்! 0 ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: மூன்று மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்! 0 5 மாநில சட்டசபை தேர்தல்: மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை 0 5 மாநில தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதி: லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு 0 மோடி ஆட்சி ஏமாற்றம் அளித்துவிட்டது: ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் 0 உர்ஜித் படேல் ராஜினாமா வங்கி துறைக்கு பெரும் இழப்பு: பிரதமர் மோடி 0 உர்ஜித் படேல் ராஜினாமா ஒரு எதிர்ப்பு போராட்டம்: ரகுராம் ராஜன் கருத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சீனிக்கொய்யா- சிறுகதை: மேலாண்மை பொன்னுசாமி

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   31 , 2017  03:48:38 IST

சோத்தாங்கைப் பக்கம் திரும்பினால், குருஞ்சாக்குளம், நொட்டாங்கைப் பக்கம் திரும்பினால்,  சின்னக்காளான் பட்டி.
 
எங்குட்டு போறது என்கிற திகைப்பு,
 
குருசாமிக்குள். புதுப்பட்டி ஊருக்குள்  தெருத்தெருவாக ரவுண்டடிக்கிற போதே யோசனை தலை நீட்டிவிட்டது.
 
சைக்கிளை நம்பிய பிழைப்பு, சைக்கிள் கன கச்சிதமாக இருந்தது. ரிக்ஷா டயர், ரிக்ஷா ரிம், ரிக்ஷா  கம்பிகள், நட்டுக்கு நட்டு எண்ணெய்ச் சொட்டு விட்டு, துடைத்துவைத்திருந்தான். பழைய சைக்கிள்தான், ஹாண்டில் பார், முக்கோணம்,பெடல், ப்ரிவில், மக்கார்டு எல்லாமே படு கச்சிதமாக  பளிச்சென்றிருந்தது, புதுசுபோல மின்னியது.
 
அகலக் கேரியல் மேல் ஒரு பெரிய மரப்பெட்டி, அது நிறைய கொய்யாப்பழம், அரைக்காய், முழுக்காய் என்று ஏகப்பச்சை நிறத்தில், ஒன்றிரண்டு மஞ்ச நிறப் பழங்கள்,பாதி மறைத்த கொய்யா  இலைகள்.
 
கொய்யாப்படி ஏவாரம், ஏறு வெயில், வைகாசி மாசத்து அக்கினி, தீயாய் வந்து சுடுகிறது. தலைமுடிக்குள்ளிருந்து வரி வரியாய் கசிந்து நெளிந்து வருகிற வியர்வைக்கோடுகள், எதையும் பொருட்படுத்தாமல் ஏவாரத்தில் குறியாயிருக்கிற குருசாமி, இடது கை  ஹாண்டில்பாரில் அழுந்த பிடித்து  கனத்தபாரத்தை தாங்கிகொண்டேஉருட்டுகிறான், வலது கை மரப்பெட்டியின் மேல் சைக்கிளின் மொத்தப் பாரமும் அவனது வலது தோள்பட்டையின் மேல் அழுத்துகிறது.
 
வெயிலைப் பிளந்து கொண்டு பாய்கிற அவனது குரல் “கொய்யா... கொய்யா...கொய்யா... சீனிக்கொய்யா...”
 
சற்றே குனிந்த நிலையிலேயே சைக்கிளை உருட்டுகிறான்.
 
தெருவின் இரு பக்கமும் பார்வை அலைபாய்கிறது, மனிதமுகம் தென்படாதா, ஆவல் மின்னும் கண் தட்டுபடாதா..என்ற தேட்டம் இவனுக்குள்.
 
“சீனிக்கொய்யா ... தேனா தித்திக்கும், நாட்டுக்கொய்யா...”
 
கத்திக் கத்தி தொண்டையெல்லாம் காந்துகிறது, நாவறட்சியில் எச்சில் பிசுபிசுக்கிறது.
 
வண்டிக்குப் பின்னாலேயே ஓடி வந்து நச்சரிக்கிற ஒரு
 
சிறுவன் “ ஓசிப்பழம் தாங்க.. ஓசிப்பழம் தாங்க ...”
 
“ஓசிப்பழம் தந்துட்டு, நா கஞ்சிகுடிக்க எங்க போக?”
 
“ஒண்ணே ஒண்ணு.”
 
“ஒண்ணுமில்லே, மண்ணுமில்லே ...ஏலேய் ...உங்க வீட்லே பழைய சாமான் செட்டு ...ஆகாதது,  போகாதது கெடந்தா எடுத்துட்டுவா...”
 
“எதுனாச்சும் சரியா..?”
 
“பழசுன்னு, எதுவந்தாலும் சரி.”
 
“ஓட்டமாய் ஓடிவந்தான், போன வேகத்தில் ஓடி வருகிற மூச்சிரைப்பு, தஸ்ஸு, புஸ்ஸென்று நெஞ்சு  ஏறி இறங்கி விம்முகிறது.
 
“இந்தாங்க ...பழசு..”
 
பார்த்தான் குருசாமி, வடைச்சட்டி, ஒரே ஒரு கைப்பிடி மட்டும் இல்லாமலிருந்தது “ அவுக ஆத்தா  பாத்தா வௌக்கமாத்தாலே சாத்துவா.. வடை சுடுற சட்டியைகொண்ணாந்துட்டான்..” என்று  உள்ளுக்குள் முணு முணுத்த குருசாமிக்குள் இரு மனசு.
 
“வாங்கிப்போடு” என்கிற ஏவார மனசு, உங்க அம்மா வைவா ... வீட்டுல கொண்டு போய் வைச்சிரு   என்று திருப்பித்தரச் சொல்கிற மனித மனசு.
 
கீழ்க்கண்ணால் அவனைப் பார்க்கிற குருசாமி, அவனையே அவனுக்குள் நோக்குகிற அவன். ஒரு  கணம் தடுமாற்ற நேரம், ''ஞாய அநியாயம் பார்த்தா ... வவுத்து பாடுகழியாது. வாங்கிப்போட்டு ஏவாரத்தைப்பாரு ”  என்றொரு உள் குரல்.
 
வடைச்சட்டியை நொட்டாங்கையால் வாங்கி, அப்படியும் இப்படியுமாக திருப்பிப் பார்த்தான், நல்ல இரும்பு,துருவில்லாதது, எண்ணெய்பிசுக்கு அடைஅடையாக அப்பிஇருந்தது. கைக் கணிதத்தில்  எடை பார்த்தான், ரெண்டு கிலோ தேறும். நியாயமாக ஒரு கிலோ பழம் தரலாம்.
 
“என்னலே.., வடைச்சட்டி ஓட்டையாயிருக்கு”
 
“ஓட்டை ஒம்ம கண்ணுலதான், வடைச்சட்டி நல்ல சட்டி, எங்க ஆத்தா நாளு நாளைக்கு முன்னாடி கூட பனியாரம் சுட்டாளே..”
 
“பனியாரம் நல்லாயிருந்துச்சாடா..?”
 
“இனூ..ச்சுக் கெடந்துச்சு, சோளப் பனியாரம் சுடச்சுட நாலு தின்னேன்.”
 
“எனக்கு ஒண்ணாச்சும் தந்தியாடா.”
 
“நீரு வந்துருந்தா ...தந்துருப்பேன்..”
 
“தருவீயாடா..? ஒம்பங்குல உள்ளதைத் தருவியா..?”
 
“வீட்டு பனியாரந்தானே..  தருவேன், சத்தியமா”
 
மரப்பெட்டிக்கு இரு புறத்திலும் அகலவாயுடன் பெரிய பெரிய பை தொங்கியது, பின் பக்கத்திலும்  ஒரு பை, பெட்டிக்கு குறுக்காக கிடந்த தராசைப் பார்த்தான். அவனதுகவனத்தை திசை திருப்பத்தான் வாயை நீட்டினான்.
 
எடை போடும்.. எம்புட்டு இருக்கு.. கொய்யா எம்புட்டு தருவீரு.?  என்ற கேள்விகளை அவன் எழுப்பாமலிருக்க இந்த வாய்ப்பேச்சின் நீட்டிப்பு..
 
முக்கால் கிலோ பழம் தந்தான், காயும் பழமுமாக இருந்தன. “காய் என்னத்துக்கு”
 
“நாளைக்கு வச்சிருந்தா ...பழுத்துரும்.”
 
“பழம் இம்புட்டுத்தானா?”
 
“ஒனக்காகத்தான் இம்புட்டு, மத்த யாருக்குமாயிருந்தா..ரெண்டு பழம் கொறையும்.”
 
” எனக்கு மட்டும் என்ன சலுகை.?”
 
“பனியாரம் தரேன்னு சொன்ன, நல்லமனசு ஒனக்கு இருக்குல்லே? ”
 
மேல் சட்டையை கழற்றி, அதில் கொய்யாப்பழம் வாங்கியிருந்தவனின் கண்ணில் சந்தோஷ வெளிச்சம் ஒரு பழத்தை எடுத்து கடிக்க ஆவல் பறக்கிற முகம், ரெண்டுகையாலும் சட்டையை பிடித்தால் தான் கொய்யாப்பழத்தை கீழே போடாமல் பாதுகாக்கமுடியும்.
 
“சட்டையை கூட்டிப்புடிச்சா...ஒத்தக் கையாலே புடிச்சிக்கிடலாம்டா”
 
அதே மாதிரி செய்தான், அணில் கடித்து, கன்றிப்போயிருந்த ஒரு பழத்தை எடுத்து இனாமாகத் தந்த குருசாமி.
 
“துன்னுடா... வவுத்துப்பாட்டுக்காக செய்ற பாவத்தையெல்லாம் கழிக்கணும்லே ? ”
 
சட்டியை பழைய இரும்புக்கடையில் போட்டால் அறுபது ரூபாய் கிடைக்கும். இவன் தந்த கொய்யாப்பழம் பதினைந்து ரூபாய் பெறும், மனசு கிடந்துஉறுத்துகிறது.உறுத்துகிற மனசை கடித்து குதறியது, வயிறு.
 
வடைச்சட்டியை கீழே குப்புறப்போட்டு ...ஓங்கி ஒரு மிதி, நடுவில் நெளிவு, வடைச்சட்டியை திருப்பிக்கொடு என்று யாராவது சொந்த பந்தம் வந்துவிட்டால் ? அதுக்குத்தான்இந்த சப்பளிப்பு.
 
சப்பளித்த சட்டியை சுற்றிலும் எண்ணெய் அடைச்
 
சிதறல்கள்.. தூக்கி பைக்குள் போட்டுக்கொண்டான்.
 
பச்சைமண்ணு, சின்னப்பய ...பூப்பந்து மாதிரி அந்தப் புள்ளைய ஏமாத்தி ... ஒரு பொழப்பா..? த்தூ...
 
அவனையே காறித்துப்புகிற அவன்.
 
வாய்க்கு வந்தது வயிறு.
 
 
 
கொய்யா... கொய்யா..சீனிக்கொய்யா...வேணுமா...ஆகாத பழசுக்கு அருமையான கொய்யா...
 
வெயிலை கீறிப் பிளக்கிற அவன் கத்தும் குரல்.. இன்னும் ரெண்டு தெருக்கள்.
 
வடக்குத் தெருவில் ஒரு பாழடைந்த காரை வீடு. வாழ்ந்து கெட்ட வீடு. இடிந்து கிடக்குற  கருங்கற்களும், சுண்ணாம்புக் கரையும், வீட்டில் வாழ்ந்தவர்கள் உத்யோகம், தொழில் காரணமாக சென்னை போய்
 
செட்டிலாகி விட்டனர். ஆகாத பொருளை விட்டுச் செல்வதைப்போல அந்த வீட்டுப்பெரியவர். கறுத்ததோல் தெரியாத அளவுக்கு சுருக்கங்கள்.ஒல்லியான எலும்புக்கூட்டுக்குமூச்சு வந்து போனது.
 
“ஏய் ஏவாரி, இங்க வாப்பா...”
 
“சாகமாட்டாத கெழடு, சும்மா கெடையும், என்னை எதுக்குக் கூப்பிடுதீரு,”
 
“வவுத்துல ஒண்ணுமில்லே, வாய்க்கும் ஒண்ணுமில்லே, கொய்யாப்பழம் கொடுப்பா.”
 
“ஓசியா வா?”
 
“சமுத்திரம் வத்துனாலும் வத்திரும், சம்சாரி பிச்சைகேட்டு கையேந்தமாட்டான்”
 
“பேச்சைப்பாரய்யா...”
 
“ நாங்க போடுற பிச்சையிலே தான், நாடே தின்னுக்கிட்டிருக்குடா.”
 
“எனக்கு பிச்சை போடப்போறீரா.” 
 
“ கையேந்துனா ... போடத்தான் செய்வேன். அதான் எங்க பரம்பரை கொணம்.”
 
“கொய்யா எம்புட்டு வேண்டும். ?”
 
“தெனம், தெனம், அரைக்கிலோ குடுத்துட்டுப்போ...”
 
“துட்டு..? ”
 
“ மோட்டார் பம்ப் ஷெட் மாட்டி முப்பது வருஷமாச்சு, இருந்த அடையாளத்துக்கு இருக்கட்டுமேன்னு இதைவுட்டு வைச்சேன். ஆளுமில்லே, தேளுமில்லே, யாருகிட்டே இதோடபெருமையை  காட்டிச்சொல்ல ?”
 
“எதைச்சொல்றீரு..”
 
“அந்தத் தொழுவத்துல மாடுமில்லே, மண்ணுமில்லே, ஒரு கூனை கெடக்கும்., அதைத் தூக்கிட்டு வா.”
 
“ கூனைன்னா... தகரம் தானே...?”
 
“நெளிச்சிராதேடா... சப்பளிச்சிராதேடா... சம்சாரித்தனத்தோட பழைய அடையாளம்.  கண்காட்சியிலே வைக்கிறதுக்கு படிச்ச அறிவாளிக லட்சக்கணக்குலே ரூவா குடுத்துவாங்குவங்க ...பாத்துக்க...”
 
“ஏன் ? கூனை கெடைக்காதா? ”
 
“மதுரையிலே, கோயம்புத்தூர்லே, மெட்ராஸ்லே கூடப் போய்த்தேடிப்பாரு...” 
 
‘’கெடைக்குதான்னு பாக்கேன்.”
 
 “கெடைக்காது, அரிதான சாமாண்டா...இந்தக் கூனை...”
 
துருவேறி, துருவேறி அதுவே நிறமாகியிருக்கிற கூனை, ஆதி காலத்து தாழி மாதிரியான தோற்றம். கிணற்றுத் தண்ணீர் அள்ளுகிற அகல வாய்ப்பக்கம் குறுகான வளைவில்கனத்த கம்பிகள், தனி  இரும்பு, கனத்த குறுக்கான வளைவில் கனத்த கம்பிகள், தனி இரும்பு, கனத்த கம்பியின் உச்சிமண்டையில் ஒரு கனத்த வளையம், அதுவும் தனிஇரும்பு, தகரமும் கனத்த தகரம், வருஷக் கணக்கான  தண்ணீர் இறைத்த கூனை, வலுத்த கூனை.
 
குருசாமியின் பார்வை, வியாபாரி பார்வைதான், அப்படியே நெளித்து சப்பளைத்து போட்டாலும்  பழைய இரும்புக்கடையில் ஐந்நூறு ரூபாய் தருவார்.
 
 கெழடு சொல்கிறமாதிரி, ஞாபகார்த்தமாக வைத்திருக்க யாரும் கேட்டால் ரெண்டாயிரம்,  மூவாயிரம் சொல்லலாம்,ராஜ வேட்டைதான்.
 
இவனது அய்யாவின் தலைமுறையிலேயே உபயோகத்தில் இல்லை, இவனது அய்யாப்பா அய்யனார் காலத்தில் தான் பம்ப்ஷெட்டும், கரண்டும் வந்தது, அப்போதுடெஸ்மோ மோட்டார்ஸ் பேமஸ், என்று அய்யனார் தாத்தா சொல்லுவார்.
 
அப்போதுதான் கூனை அரிதாகத்துவங்கியது, குருசாமியின் மகன் ஏழாப்பு  படிக்கிறான், அவன்  பெயர் தாழைச்சாமி. அவனிடம் போய் கூனை என்று கேட்டால்முழிப்பான். “பழங்காலத்து நீர்ப்பாசன விவசாய கருவிகளில் முக்கியமனது கூனை” என்று வாத்தியார் பாடம்  நடத்தினால்,“கூனைன்னா எப்படியிருக்கும் சார்,” என்று தாழைச்சாமி கேட்டால்,வாத்தியார்  முழிப்பார்.
 
குருசாமிக்குள் ஒரு விளக்கின் கண் விழிப்பு வெளிச்சப்பரவல், கூனையை கொண்டு போய் காட்டி  அரிதான அதன் பெருமையை சொல்லி, ரெண்டாயிரத்துக்கு வவுச்சர்போட வைத்து விட  வேண்டியதுதான், பள்ளித்தலைமையாசிரியரை.
 
ஏவாரி குருசாமி மனசுக்குள் வலை பின்னிவிட்டான்.
 
ஸ்டாண்ட் போட்டால் வண்டி நிற்காது என்பதால், சைக்கிளை சுவரில்
 
சாத்தியிருந்தான். அதன் பக்கத்தில் கனத்த கூனையின் பாரம் தாளாமல் முக்கித்தக்கி இறக்கினான்.
 
“தெனம் அரைக்கிலோ கொய்யா...பத்து நாளைக்குத் தந்துரவா.?”
 
“ஏய் ...கூனைடா... இப்ப பழசுக்கு ஒடைச்சுப் போட்டாலும் ஆயிரத்துக்கு முதலாயிரும்.”
 
“ஆயிரம்னா கிட்டத்துலேயே இருக்கு ? பழசுக்குத்தான் போடனும், முந்நூறுக்குப் போறதே  பெரும்பாடு.”
 
“என்னதான் சொல்லுதே ?”
 
“சரிசரி.. வளவளன்னு என்ன பேச்சு ...? பதினைஞ்சு நாளைக்கு தாரேன். அதுவே முந்நூறு ரூவாயிரும்.”
 
“ஞாயமான வெலை கொடுத்தீன்னா.. இன்னும் ஏவாரம் கெடைக்கும்டா, மம்பட்டிக, கொழுக்கம்பி,  இரும்புலே செய்ஞ்ச கமயை வண்டி,.. உருளைக்கம்பின்னு நெறையசாமான்க கெடைக்கும், நீயே  வாங்கிட்டுப் போகலாம். ஞாயம் தப்பிபேசுனா...வேற ஏவாரியை தேடிருவேன் நானும்.”
 
“சரி சரி ... நானும் புள்ளை குட்டிக்காரன், நீரும் எங்க அய்யாப்பா அய்யனார் நாடார் மாதிரி யிருக்கீரூ. இருபதுநாள் கொய்யா குடுத்துருதேன், இந்த கூனைக்கு”
 
“அய்யனார் நாடான் மகனா..நீ ”
 
“இல்லே, பேரன்...”
 
“ஆமா நாட்டு அய்யனார் நாடான் தானே ? அவன் எனக்கு வேண்டியவண்டா,... எங்க பண்ணையில விசுவாசமா மம்பட்டி வேலைபார்த்தவண்டா.. அவன் பேரனா நீ..?அப்ப..கூனையை தூக்கிட்டுப்போ, குடுக்குறத  குடுத்துட்டு போ...”
 
நட்புக்கும், உறவுக்கும் அவர் தருகிற மரியாதையும், பெருந்தன்மையும், இவனை புல்லரிக்க வைத்தது.ஒரு மந்திரச்சொல் மாதிரி அய்யனார் நாடான், என்ற வார்த்தைஎன்ன மாதிரியான மாற்றத்தை  ஏற்படுத்திவிட்டது.. இவன் நெஞ்சுருகிப்போகிறான். நெகிழ்கிற மனசை அதட்டி எச்சரித்து, இறுக வைக்கிறது, ஏவாரி மனசு.
 
புதுப்பட்டியின் மிச்சத்தெருவையும் சுற்றி முடித்தான், தகர டப்பாக்களும், பூச்சி கொல்லி மருந்துக் குப்பிகளும், ஓட்டை உடைசல், பழைய இரும்பு சாமான்களும் விழுந்தன, பணத்தை நீட்டி அரைக்கிலோ கொய்யா கேட்ட வாத்தியாருக்கு மனசில்லாத மனசுடன் எடைபோட்டு நீட்டினான்.
 
வாங்கும் விலை கிலோ இருபது ரூபாய். சுமந்து அலைந்து வேனலாய் கொதிக்கிற வெயிலில் வெந்து பணத்துக்கு விற்றால்...கிலோ நாற்பதுதான்.
 
பணத்துக்கு விற்பதைவிட, பழைய ஓட்டை உடைசல்
 
சாமான்களுக்கு கொய்யா விற்றால்தான் கூடுதலாக நாலு சில்லறைகள் பார்க்கலாம், குருசாமி  பழசுகளையே தேடினான். புதுபட்டியில் இன்றைக்கு நல்ல வேட்டை. அதிலும் கூனை,..பெரீய்ய்ய...  ஏவாரம். விராலுக்கு வேட்டியை விரித்தால், விலாங்கு மீன் விழுந்த மாதிரி,
 
ஒரு நாயக்கமார் பெண்மணியிடம் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு “புண்ணியம் தாயீ...” என்று  நன்றிசொல்லி விட்டு,சைக்கிளில் பெடலை மிதித்து ஏறினான், மரப்பெட்டிக்கு பின்னால் மாட்டியி ருக்கிற இரும்புக் கொக்கியில் கூனை தொங்குகிறது.
 
பழைய திகைப்பு மறுபடியும் வழி மறிக்கிறது,
 
சோற்றாங்கைப்பக்கமா, நொட்டாங்கைபக்கமா, குருஞ்சாக் குளமா, சின்னக்காளான் பட்டியா? நொட்டாங்கைப்பக்கம் என்றால் பிரச்சனை யொன்றுமில்லை,வண்டியைத்திருப்பி...தெருக்களை  சுற்றி நாலைந்து பழசுகளுடன் திரும்பினான்.
 
குருஞ்சாக்குளம் போகாமல் நாலு நாளாக தப்பித்தாகிவிட்டது.
 
அன்றைக்கு குருஞ்சாக்குளம் ஊரில் தெருத்தெருவாக ரவுண்டடித்தான்  குருசாமி. வியாபாரம்  மும்முரம். நிறைய பழசுகள் விழுந்தது, பெரிய பெரிய சம்சாரிகள், தாராளமாக பழசுகளை  போட்டனர் கஞ்சத் தனம் பார்க்காமல், கசராமல்,சொன்ன விலைக்கு சிரித்தமுகத்துடன் வாங்கிக்கொள்வார்கள்.
 
 
 
மேலத்தெரு, பெரிய சம்சாரி வீடு, தொழு நிறைய பசுமாடுகள், ஏழெட்டு பம்ப்ஷெட் கிணறு உள்ள பெரிய விவசாயக்குடும்பம். வீட்டின் சோற்றாங்கைப் பக்கம் தொழுவம்அதன் வாசலில்.
 
சாக்குப்பையில் நிறைய பழசு இருந்தது, ரெங்கராஜுலு நின்றான். இளவட்டம், சும்மாகிடக்கிற  சரக்குகளை துட்டாக்குவமே என்ற நினைப்பில் ரெங்கராஜுலு.
 
அந்நேரம் குருசாமி சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்தான், “யோவ், ஏவாரி, பழசுவாங்குறியா? ”
 
“எந்தொழிலே அதுதானே, என்ன இருக்கு ? ”
 
“வாழைத்தோப்பு பம்ப்செட் மோட்டார் ரிப்பேருக்காக வாங்குன வயரு, தேவையில்லாம மூலையில கெடக்குது”
 
“கவர்மெண்ட் வயரில்லேயே. ? திருட்டு கேஸ்லே மாட்டணும்.”
 
“இல்லேப்பா... எலெக்டிரிக்கல் கடையில வாங்குனதுப்பா..”
 
“என்ன வயறு..?”
 
“இந்தா பாரு...”
 
சாக்குக்குள் விரித்து பார்த்தான். ஆறேழுகிலோ வயர், அலுமினிய வயரா.., இரும்பு வயரா, உள்ளங்கைக்குள் விரல் இடுக்குக்குள்ளிருக்கிற காந்தத் துண்டால் தெரியாதமாதிரி டெஸ்ட் பண்ணினான். அம்புட்டும் அலுமினிய வயர் கம்பி...தாறுமாறான பின்னல், மர உருளையில் முறையாக சுற்றப்படாமல் சாக்குக்குள் பொருளாக விரிந்துபரந்து கிடந்தது.
 
“என்ன வெலைப்பா...? ”
 
“அலுமினிய வயர் கம்பியாயிருந்தா கிலோ நூறு ரூவாய்க்குமேலே போகும், இது இரும்பு வயர்க் கம்பியாயிருக்கு,கிலோ இருபதுரூவா.”
 
“நல்லாபாரப்பா...”
 
“இத்தனைவருஷ ஏவார அனுபவம். பாத்த பார்வையிலேயே கம்பி இரும்பா, அலுமினியமான்னு  கண்டு பிடிச்சிருவேனே...”
 
“சந்தேகமே வரவில்லை, ரெங்கராஜுலுவுக்கு, பரந்த மனசின் நம்பிக்கையோடு “எடைபோடப்பா..”  என்றான் மனிதருக்கு மனிதர் நம்பாமல் என்ன செய்ய?
 
குருசாமிக்குள் கள்ள மனசு, திருட்டுக்குணம், லாபத்துக்காக யாதும் செய்யலாமென்கிற நியாயம், வயிற்றுப்பாடு என்கிற காரணம் இவனுக்குள் கையும் மனசும்நடுங்கிற்று, எடைபோட்டான் எட்டுகிலோ தேறியது, இருநூறு ரூபாய் தந்தான். நீட்டிய கையில் நடுக்கம், விரலில் நடுக்கம்,  மனசில் பதற்றம்.
 
அவர்கள் கண்டுபிடிப்பதற்குள், தப்பித்தோடுகிற பரபரப்பு அவனுக்கு. அவசர அவசரமாக புறப்பட்டுவிட்டான்,வயர்க்கம்பியில் மட்டும், அறுநூறு ரூபாய் லாபம், பெரும் லாபம், கனத்த வேட்டை, மனசு கிடந்து குதூகலித்தது,விசிலடிக்கிற மகிழ்ச்சி, சந்தோஷப்பூரிப்பு, சிரித்து சிரித்துகுதிக்க வேண்டும்,என்ற மனத்துள்ளல்.
 
குருஞ்சாக்குளத்தில் கண்டுபிடித்துவிட மாட்டார்களா? அது அலுமினிய வயர்க்கம்பியாயிற்றே என்று வீட்டுக்காரர்கள் சொல்லிவிட்டால் ? இவனது கள்ளத் தனம்அம்பலமாகிவிட்டால்?
 
ஒருநாள் விட்டு ஒரு நாள் வியாபாரத்திற்காக குருஞ்சாக்குளத்திற்குள் நுழைகிற வழக்கமுள்ள குருசாமி ரெண்டு நாள் தவிர்த்து விட்டான். இன்றைக்கும் போகாவிட்டால்...இவனைத்தேடிக்கொண்டு  ஊருக்கு ஆட்கள் வந்து விட்டால் ?
 
ஊர் பூராவும் இவனது புரட்டும் திருட்டும் அம்பலமாகிவிடுமே ... கவலைப்பட்டு குன்னிக்                        குறுகிப்போய் நிக்கணுமே...
 
என்ன ஆனாலும் சரி ... நேருக்கு நேர் போய் விடுவோம் குருஞ்சாக்குளம், நோக்கி சைக்கிள்  மிதித்தான். உள்ளங்கால் வியர்த்தது, உள் மனசுக்குள் நடுக்க வியர்வை, பதற்றப்பதைப்பு.
 
“இந்தா வந்துட்டான்... புடிச்சு மரத்துல கட்டுங்கடா..”
 
“செருப்பாலே அடிங்கடா..”
 
“ வௌக்கமாத்தால சாத்துங்கடா.”
 
“ சாணிப்பாலை கரைச்சு மூஞ்சியிலே ஊத்துங்க ”
 
இப்படியெல்லாம் நடக்குமோ என்ற அச்ச நடுக்கம் ஊருக்குள் நுழைகிற சைக்கிள், தெருவில்  சுற்றுகிற சைக்கிள் விழுகிற பழசுகள், எடைபோட்டுத்தருகிற கொய்யா.
 
தொழுவத்தை நெருங்கினான், ரெங்கராஜுலு நிற்கிறான் “என்னய்யா...? ” நடுங்கியதிர்கிற குரல், குற்ற உணார்ச்சியின் உறுத்தல்,
 
“என்னப்பா, அன்னிக்கு அலுமினிய வயர்க்கம்பி இருந்துசாம்லே? நீ இரும்புக் கம்பின்னு நெனைச்சுட்டீ யாம்லே..? இம்புட்டுதானா ஏவார அனுபவம்.”
 
“அலுமினிய கம்பியா”
 
“நீ இரும்பு கம்பின்னு நெனைச்சு வாங்குன, அப்படித்தானே வித்துருப்பே..? எங்க துட்டு போச்சு,  ஒனக்கு வெவரம் பத்தல.. ஒன்னோட வெவரக்குறைவாலே எங்க துட்டுநட்டம்.”
 
இவர்கள் ஏமாந்துவிடவில்லை. மன்னிக்கிறார்கள் எனது களவாணித் தனத்தை அறியாமை  என்கிறார்கள், நல்லவர்கள் கண்ணுக்கு நல்லவர்களாகவே அனைவரும்....நானுமா.?
 
இவனது உயிர் கிடந்து மருகித் தவித்தது. நெஞ்சுருகிப்போய் நெகிழ்ந்து நின்றான். அவன்
 
மனசுக்குள் கையெடுத்துக் கும்பிட்டான்.
 
எப்படியோ தன்னை தேற்றிக்கொண்டு, சைக்கிளை உருட்டினான், இதயமும்,வயிறும் கூடவே  வந்தது, நல்ல குருசாமியும், ஏவார குருசாமியும் சேர்ந்தே சைக்கிளைஉருட்டினர்.
 
லௌகீக வாழ்வின் அவசியம் அவனது வியாபாரிக் குரலை உயர்த்தியது.
 
“கொய்யா... கொய்யா... சீனிக்கொய்யா...”
 
 
 
(அந்திமழை, ஆகஸ்ட் 2014 இதழில் வெளியான சிறுகதை)


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...