![]() |
ஊடகங்களிலும் பெண் வெறுப்பா?Posted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 03 , 2019 02:06:34 IST
![]()
“தினமும் 20 கிலோமீட்டர் நடக்கிறோம். நான் உட்பட என்னோடு நடக்கும் அனைத்து பெண்களுக்கும் கால் வெடித்து ரத்தம் வருகிறது. இது எட்டாவது நாள். எங்கள் குழு வடலூரிலிருந்து கிளம்பி தற்போது மாமண்டூரில் வந்தடைந்துள்ளது,” என்கிறார் வாசுகி, ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவர்.
பெண்களின் உரிமையை மீட்க வேண்டும், வன்முறை இல்லாத தமிழகம், போதைக்கு அடிமையாகாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மாதர் சங்கம் சார்பில் மாபெரும் மகளிர் பேரணி தொடங்கி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய இந்த பேரணி. டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திரளான பெண்கள் கூட்டம் கொட்டும் மழையிலும் தனது நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். இதை தலைமையேற்று நடத்திவரும் வாசுகியிடம் நடைபயணத்தின் எட்டாவது நாள் அன்று தொடர்பு கொண்டு பேசினோம்.
“போதைக்கு எதிராக வன்முறைக்கு எதிராக தொடர்சியாக நாங்கள் இயக்கம் நடத்தி வருகிறோம். 2015 இல் நாங்கள் 100 டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தினோம். அதற்கு பெண்களை அணி திரட்டபோகும்போதுதான் குடியின் கோர வடிவத்தை பார்க்க முடிந்தது. எல்லா குடும்பத்திலும் சராசரியாக ஒருவராவது குடிக்கு அடிமையானவராக இருக்கிறார்கள்.
அதனைத்தொடர்ந்து குடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை வைத்து சிறப்பு மாநாடுகள் நடத்தினோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் குழந்தைகளின் கல்விக்கு சிலர் உதவ முன்வந்தார்கள். அதை பெற்றுக்கொடுத்தோம். வேலை வாய்ப்பு, மனநல ஆலோசனை, வங்கியில் கடன் பெற்று தருதல் போன்ற விஷயங்களை செய்துகொடுத்தோம். மக்கள் போராட்டங்கள் மூலம் 30 முதல் 40 மதுபான கடைகளை நாங்கள் மூடி இருக்கிறோம்.
இதுபோன்ற பல்வேறு விஷயங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க நினைத்தோம். அதன் செயல்வடிவமே இந்த பேரணி. ஒரு வகையில் நம்மை நாம் வருத்திகொள்வதே போராட்டம்தான். காந்தி உப்பு சத்யாகிரகத்திற்கு பின்னால் ’எங்கள் நாடு நாங்கள் ஏன் வரி கொடுக்க வேண்டும்’ என்ற அரசியல் நோக்கம் இருந்தது.
எங்கள் பயணம் தாம்பரம் சென்றடைந்ததும் அங்கு பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். பத்தாவது நாளில் கோட்டை நோக்கி முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம். காவல்துறையினர் தடுப்பார்கள். பார்த்துகொள்ளலாம்,’’ என்றார் அவர்.
“ஆணாதிக்கத்தின் வெற்றியே பெண்ணை கொண்டு பெண்களுக்கு எதிரான சிந்தனைகளை பரப்புவதாக இருக்கிறது. இந்த சிந்தனைக்கு எதிரான பெண்கள்தான் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டுள்ளனர். ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கி இருக்கும் பெண்களை மீட்கவும் அவர்களை அரசியல் படுத்தவதுதான் இந்த நடை பயணத்தின் நோக்கம்.
இந்த பேரணியின் கோஷமே வன்முறை அல்லாத, போதைக்கு அடிமையாகாத தமிழகத்தை உருவாக்குவோம் என்பதுதான். வன்முறை என்பது வெறும் பாலியல் வன்புணர்வு என்று எடுத்துகொள்ளக்கூடாது வார்த்தைகளால் காயப்படுத்துவதுபோன்று எல்லாம் இதனுள் அடங்கும். பாலியல் வன்கொடுமைகளை செய்வது ஆண்களாக இருந்தாலும். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்களிலும் ஆண்கள் இருக்கிறார்கள் என்பதும் நிதர்சனம். அந்த ஆண்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண்கள் இயக்கத்தையும், பெண் உரிமைக்காக போராடுபவர்களை தவறாக சித்தரிப்பதன் மூலம் உரிமையின் குரலை ஒடுக்கிவிட நினைக்கிறார்கள். பெண் உரிமைக்காக போராடும் பெண்கள் குடும்பத்தின் மீது அன்பற்றவர்களாக இருப்பார்கள் என்ற கண்ணோட்டத்தை ஒரு வகையில் ஊடக சித்தரிப்பு ஏற்படுத்தி இருக்கிறது. மகளிர் தினத்தன்று ‘ மதுக்கடையில் நிற்கும் பெண்ணை அட்டைப்பட கட்டுரையாக வெளியிட்டதும் ஒரு நாளிதழ்தான்’’ என்று கூறுகிறார் அவர்.
நிர்பயா, ஆசிபா, ரோஜா, பிரியங்கா ரெட்டி இப்படி பெண்களை பாலியல் வன்கொடுமைகள் செய்து கொடூரமாக கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இன்னும் பல நடைபயணங்கள் தேவைப்படுகின்றன.
|
|