???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

துப்புரவுத் தொழிலாளர்கள் மரணத்தில் தமிழகம் முதலிடம் - கடந்த மூன்று ஆண்டுகளில் 88 பேர் பலி

Posted : புதன்கிழமை,   ஜுலை   10 , 2019  06:42:51 IST


Andhimazhai Image
துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்களின் மரணத்தில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். 
 
துப்புரவுத் தொழிலாளர்கள் மரணம் குறித்து நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் மக்களவை உறுப்பினர்களான அசாதுதீன் ஓவைசி மற்றும் சையது இம்தியாஸ் ஜலீல் ஆகியோர் கேள்வியெழுப்பினர்.
 
இதற்கு பதிலளித்து உரையாற்றிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, "இந்தியாவின் 15 மாநிலங்கள் அளித்துள்ள தரவுகளின்படி கடந்த 1993-ஆண்டு முதல் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட 620 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 144 இறப்புகள் பதிவாகியிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 88 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்துக்கு அடுத்தபடியாக குஜராத்தில் 131 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்த நிலைகளில் கர்நாடகம், உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
 
கழிவுநீர் கால்வாய், மலக்குழிகளை சுத்தம் செய்யவைக்கப்பட்டதால் விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, பலியான 445 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்பட்டிருக்கிறது. 58 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பகுதியளவு இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் மரணத்தால் பாதிக்கப்பட்ட 117 குடும்பங்களுக்கு இன்னும் இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.
 
கையால் மலம் அள்ளும் இழிவை, மிக மோசமான துப்புரவுப் பணிகளில் சக மனிதர்களை ஈடுபடுத்தும் அவலத்தை தடை செய்யும் வகையிலான 'மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் தடை மற்றும் அவர்களுக்கான புனர்வாழ்வு சட்டம்' கடந்த 2013-ஆம் ஆண்டே கொண்டுவரப்பட்டது. எனினும் துப்புரவுத் தொழிலாளர்களின் மரணம் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. எனவே குறித்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுமா? என்று உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதால் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படாது என்றார்.
 
இதேபோல் மற்றொரு எம்.பி-யின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, துப்புரவுத் தொழிலாளர்களின் மரணங்கள் தொடர்பில் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் தடை மற்றும் அவர்களுக்கான புனர்வாழ்வு சட்டத்தின் கீழ் இதுவரை யாரும் தண்டனை பெறவில்லை என்று கூறியிருக்கிறார். அவரின் இந்த பதில் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 15 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்கள் வழங்கிய தரவுகளின் அடிப்படையில்தான் துப்புரவுத் தொழிலாளர்களின் மரணம் கணக்கிடப்பட்டிருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் முழுமையான தரவுகள் எடுக்கப்பட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்குமெனவும் அதிர்ச்சிகரமான தகவல் கூறப்படுகிறது.
 
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எழுத்தாளர் சரவண ராஜா, "துப்புரவுத் தொழிலாளர்கள் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்ட நிதி அமைப்புக்கு கடந்த ஆண்டு 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ஒரு ரூபாய் கூட ஓதுக்கப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.
 
துப்புரவுத் தொழிலாளர்களின் மரணத்தில் தமிழகம் முதலிடம் இருப்பது குறித்து புகைப்படங்கள் மூலம் அவர்களது வாழ்வை ஆவணப்படுத்தி வரும் பழனிக்குமாரிடம் பேசியபோது, "மலக்குழி, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யவைக்கப்படுவதால் ஏற்படும் துப்புரவுத் தொழிலாளர்களின் மரணம் பெரும்பாலும் எல்லா பகுதிகளிலும் ஒரேமாதிரிதான் நடந்துகொண்டிருக்கின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்படும் விதத்தில் தமிழகம் அதிக மரணங்கள் நிகழும் இடமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சமீபத்தில் குறிப்பாக கோவை பகுதியில் அதிகளவில் துப்புரவுத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களை சக மனிதர்களாககூட கருதாமல் இதனை பொதுச் சமூகம் கடந்துக்கொண்டிருக்கிறது. 
 
களத்தில் நான் சந்தித்த எண்ணற்ற குடும்பங்களுக்கு இழப்பீடோ, புனர்வாழ்வுக்கான வசதிகளோ கிடைக்கவில்லை. அப்படியே பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அரசு வேலை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தால், மீண்டும் அவர்களுக்கு துப்புரவுத் பணிகள் சார்ந்த ஒரு வேலைதான் வழங்கப்படுகிறது. மலக்குழியிலும், கழிவுநீர் தொட்டியிலும் மரணிக்கும் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை ஒரேமாதிரியான சுழற்சியில்தான் உருண்டுகொண்டிருக்கிறது. துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதால் உயிரிழந்த ஒரு தொழிலாளியின் குடும்பம், குழந்தைகள் மீண்டும் அதேபோன்ற பணிகளை செய்வதுதான் அந்த சுழற்சியில் நடந்துக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அந்த வேலையைத்தான் செய்ய வேண்டுமென்கிற சக மனிதர்களின் சாதிய கண்ணோட்டமும், அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசும் இதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது" என்று கூறினார்.

English Summary
Manual scavenging death high in tamilnadu

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...