![]() |
கூரையைப் பிய்த்துக்கொண்டு வந்து விழுந்த 9.8 கோடி!Posted : வியாழக்கிழமை, நவம்பர் 19 , 2020 04:43:37 IST
![]() “கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்” என்றொரு சொலவடை உண்டு. அதற்கேற்ப இந்தோனேஷியாவில் ஒருவரது வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு வந்து விழுந்த விண்கல், அந்த நபரை கோடிஸ்வரராக மாற்றியிருக்கிறது.
சுமத்ராவை சேர்ந்த 33 வயது இளைஞர் ஜோஷ்வா ஹட்டகலுங். சவப்பெட்டி தயாரிப்பாளர். கடந்த ஆகஸ்ட் மாதம் இவரது வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு பயங்கர சத்தத்துடன் விண்கல் ஒன்று விழுந்திருக்கிறது. அதிர்வில் பதறிபான ஜோஷ்வா, அருகில் சென்று அது என்னவென்று பார்த்திருக்கிறார். தொட்டு பார்த்தபோது அந்த கல் சூடாக இருந்திருக்கிறது.
இதுகுறித்து ஜோஷ்வா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், அவரது வீட்டில் விழுந்தது 4.5 பில்லியன் வருடங்கள் பழமையான அரிய வகை விண்கல் என இப்போது தெரியவந்திருக்கிறது. இதன் மதிப்பு ஒரு கிராமுக்கு 63,000 ரூபாய்.
தற்போது அந்த விண்கல்லை, அமெரிக்காவை சேர்ந்த அரிய பொருட்கள் சேகரிப்பாளர் ஒருவருக்கு ஜோஷ்வா விற்றிருக்கிறார். அந்த நபரோ அதனை இன்னொருவருக்கு விற்க, விண்கல் இப்போது அரிஸோனா பல்கலைக்கழகத்தின் விண்கல் ஆய்வு மையத்தில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
விண்கல்லை ஜோஷ்வா என்ன விலைக்கு விற்றார் என உறுதியாக சொல்லவில்லை என்றாலும், குறைந்தபட்சம் 9.8 கோடிக்கு அவர் அதனை விற்றிருக்கலாம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது அவர் தொழிலில் முப்பது ஆண்டுகளில் கிடைக்கும் வருமானத்துக்கு இணையான தொகை என்பது கூடுதல் சுவாரஸ்யம். 30 ஆண்டுகளுக்கான தொகையை ஒரேநாளில் சம்பாதித்துவிட்டதால், தொழிலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்திருக்கும் ஜோஷ்வா, தனது கிராமத்தில் புதிய தேவாலயம் அமைக்கவுள்ளார்.
|
|