அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி!

Posted : சனிக்கிழமை,   ஜுன்   25 , 2022  11:47:10 IST


Andhimazhai Image
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுக்குள் பெரும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியில் மிகப்பெரிய பிளவு உருவாகியிருக்கிறது. அந்தக் கட்சியின் மொத்தமுள்ள 55 சட்டமன்ற உறுப்பினர்களில் 42 பேர் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனியாக விலகிநிற்கின்றனர். சிவசேனாவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும்கூட அதிருப்தியாளர் பக்கமே என்கின்றன, தகவல்கள். 
 
முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தன்னுடைய அரசு இல்லத்தை காலிசெய்துவிட்டு, சொந்த வீட்டுக்குக் குடிபெயர்ந்துவிட்டார். அந்த அளவுக்கு அங்கு ஆட்சியின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. 
 
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரும் உத்தவும் ஆட்சியைத் தக்கவைப்பது குறித்து நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். இன்றைக்குள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்குத் திரும்பவேண்டும் என சிவசேனா முக்கிய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் நேற்று கெடுவிதித்தார். 
 
இதற்கிடையே, ஏக்நாத் சிண்டேவுடன் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கலைத்துவிடலாம் என்கிற கணக்கில், 12 எம்.எல்.ஏ.களை மட்டும் கட்சித்தாவல் சட்டப்படி தகுதிநீக்கம் செய்யுமாறு, மகாராஷ்டிர சட்டப்பேரவைத் துணைத்தலைவருக்கு உத்தவ் தாக்கரே தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. 
 
அதற்குப் பதிலடி தந்துள்ள ஏக்நாத் ஷிண்டே, இந்த மிரட்டலை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ள வேண்டாம்; என்னுடன் இப்போதைக்கு 42 சிவசேனா எம்.எல்.ஏ.கள் இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். 
 
முன்னதாக, அவருடன் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பது பற்றி அவர் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை. ஊகத் தகவல்களே வெளியாகியிருந்தன. 
 
ஒரு வாரமாக நீடித்துவரும் இந்த அரசியல் பரபரப்பில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உத்தவ் தாக்கரே, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் காணொலிமூலம் பேசினார். அக்கட்சியின் தலைமையகமான சேனா பவனில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. உத்தவின் மகனும் சுற்றுலா துறை அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவும் இதில் கலந்துகொண்டார். 
 
இந்த விவகாரத்துக்கு உள்ளடியாகத் தொடர்ந்துவந்த பல பிரச்னைகள் காரணமாக இருந்தாலும், ஆதித்ய தாக்கரேவின் ஆதிக்கம் முக்கிய காரணம் என்கிறார்கள், மகாராஷ்டிர அரசியல் நோக்கர்கள். 
 
நேற்றைய கூட்டத்தில் உத்தவ் பேசுகையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு நான் எத்தனை உதவிகள் செய்திருப்பேன்; பால் தாக்கரேவின் இறப்புக்குப் பின்னர் இரண்டு முறை அவரை அமைச்சராக ஆக்கியிருக்கிறேன்; அவருடைய மகன் ஸ்ரீகாந்த்தை மக்களவை உறுப்பினராக்கி இருக்கிறேன்; ஆனால், ஷிண்டே இப்போது எங்களுக்கு எதிராகப் பேசுகிறார் எனப் பட்டியலிட்டார். 
 
எதிர்த் தரப்பிலோ, ஆதித்ய தாக்கரேவின் திடீர் அரசியல் வருகையும், வந்த கையோடு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டதும் சிவசேனாவுக்காக உழைத்த பலரையும் தாக்கரேக்கள் உதாசீனப்படுத்தியதும்தான் பிரச்னை என காட்டமாகச் சொல்கின்றனர்.  
 
குறிப்பாக, தலைமைக்கு அணுக்கமாகவும் இருந்து எதிராகப் போர்க்கொடி உயர்த்தி - குஜராத், அசாம் என பா.ஜ.க. ஆட்சிசெய்யும் மாநிலங்களுக்கு அதிருப்தியாளர்களை அள்ளிப்போட்டுக் கொண்டு சென்ற ஏக்நாத் ஷிண்டேவுக்கே, தாக்கரேகள் குடைச்சல் கொடுத்துள்ளனர். அதை ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் பதிலுக்கு குடைச்சல் கொடுக்கிறார் என்றும் கூறுகின்றனர். 
 
ஏக்நாத்துக்கு தரப்பட்டுள்ள நகர்ப்புற வளர்ச்சித் துறையை பொதுவாக முதலமைச்சர்தான் வைத்திருப்பார்; அந்தத் துறையையே அவருக்குத் தந்திருக்கிறோம் என சலுகைகாட்டியதைப் போல நேற்று கூறியிருக்கிறார், உத்தவ் தாக்கரே. ஆனால், அதில் தன்னை சுதந்திரமாகச் செயல்படவிடாமல் தாக்கரேக்களின் தலையீடு மட்டுமீறியதாக இருந்தது என்பது ஷிண்டே தரப்பில் கூறப்படும் பதில். 
 
உண்மையில் என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்பது இந்தச் சண்டையில் விரைவில் வெளிவரவும்கூடும். 
 
ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது... 
 
தாக்கரேக்களின் தலையீடு தாராளமாக இருந்ததே, தான்வளர்த்த கட்சியில் தான் வளரமுடியாமல் போவதா என ஏக்நாத் சிண்டேவை இந்த அளவுக்கு எகிறச்செய்திருக்கிறது! 
 
ஆட்சி எப்படியோ பறிபோய்விடும்; அ.தி.மு.க.வைப்போல இப்போது கட்சியை யார் கைப்பற்றுவது என்பதில் தாக்கரேக்களுக்கும் மறைந்த பால்தாக்கரேவின் உண்மையான சீடர்கள் தாங்களே என்பவர்களுக்குமான போட்டி தீவிரமாகியுள்ளது. 
 
கொசுறாக...
 
காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் ஏன் கடைசியாக திருணமூல் காங்கிரசின் தலைவர் மமதா பானர்ஜியும்கூட குற்றம்சாட்டியதைப் போல, தங்களுக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மறுக்கிறார், மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டீல். 
 
- இர.இரா.தமிழ்க்கனல் 
 

English Summary
Maharashtra political drama in high pitch Eknath shinde - Uddhav thackeray

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...