மகாராஷ்டிர முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும் துணைமுதலமைச்சராக முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிசும் பதவியேற்றுக்கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு 7.30 மணியளவில் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழ்வு தொடங்குவதற்கு முன்னரே ஷிண்டே, பட்னவிஸ், மற்ற முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.க., அதிருப்தி சிவசேனா கட்சியினர் அங்கு வந்து அமர்ந்திருந்தனர்.
ஆளுநர் வந்ததும் இருவரும் மேடைக்கு அழைக்கப்பட்டனர். முதலில் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைக்க, அவர், பால்தாக்கரேவின் பெயரைச் சொல்லி பதவிப் பிரமாண உறுதிமொழியை எடுத்துக்கொண்டார். அவருடைய ஆதரவாளர்கள் அந்த அரங்கிலும் வாழ்த்து கோசமிட்டனர்.
அடுத்ததாக, பட்னவிஸ் துணைமுதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். பா.ஜ.க.வினரின் கோசம் முன்னைவிட வலுவாக ஒலித்தது.
பதவியேற்றுக்கொண்ட இருவருக்கும் ஆளுநர் பகத்சிங் கோசியாரி கைகொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி குறுகிய நேரத்தில் நிறைவுபெற்றது.