???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்! 0 கரூரில் கமல்ஹாசனை நோக்கி செருப்பு, முட்டை வீச்சு! 0 கோவில் கல்வெட்டில் தேனி எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்! 0 கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு! 0 மருத்துவ படிப்படிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 26ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு! 0 இந்தியாவில் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அந்த நாளில் இந்த சண்டாளர்கள் இல்லையோ….. அவாள் இன்றுதான் பூமியில் குதித்தனரோ

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   20 , 2013  03:18:18 IST

  

இது மதுரை மண்ணின் வரலாற்று அரசியல் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பரபரப்பான அரசியல் தொடர், காலத்தின் முன்னும் பின்னும் சென்று, முக்கியமான அரசியல் நிகழ்வுகளை இத்தொடரில் படம் பிடிக்கிறார் சஞ்சனா மீனாட்சி - See more at: http://andhimazhai.com/news/view/maduraikkaaraynga.html#sthash.bvG7bYG8.dpuf
அரசியல் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பரபரப்பான அரசியல் தொடர், காலத்தின் முன்னும் பின்னும் சென்று, முக்கியமான அரசியல் நிகழ்வுகளை இத்தொடரில் படம் பிடிக்கிறார் சஞ்சனா மீனாட்சி - See more at: http://andhimazhai.com/news/view/maduraikkaaraynga.html#sthash.bvG7bYG8.dpuf

 

 

இது மதுரை மண்ணின் வரலாற்று அரசியல் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பரபரப்பான அரசியல் தொடர், காலத்தின் முன்னும் பின்னும் சென்று, முக்கியமான அரசியல் நிகழ்வுகளை இத்தொடரில் படம் பிடிக்கிறார் சஞ்சனா மீனாட்சி

 

 

"மீனாட்சியின் ஆலயத்துக்குள் அரிசனங்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தார். ஆனால் எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு. இந்த நிலையில் ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ராஜாஜி, வைத்தியநாதஐயர், என்.எம்.ஆர். சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஆலயபிரவேசம் அமைதியாக நடைபெற  தேவரின் ஒத்துழைப்பும் உறுதி மொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், " என் சகோதரர்களான அரிஜனங்கள் அன்னை மீனாட்சிக்கோயிலில் ஆலயபிரவேசம் செய்கையில் அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் இன மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார்" என தமிழ்நாடு அரசில் இயக்குநராகப் பணியாற்றியவரும் தேசிய தலைவர்கள் குறித்து பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதியவருமான அ. பிச்சை குறிப்பிடுகிறார். இவர் முன்னாள் சபாநாயகர் செல்லபாண்டியனின் மூத்தமருமகன்.

 

அப்போது, மதுரையில் நிட்டிங் கம்பெனி போராட்டத்தால் தேவரை கைது செய்து சிறையில் அடைத்து வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனால் அரசு மீது தேவருக்கு கோபம் இருந்தது. என்றாலும் தனக்கும் ராஜாஜிக்கும் இடையேயான அரசியல் விரோதத்தை ஆலயப் பிரவேசத்தில் காட்டாமல் ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்திட தேவர் விரும்பினார் என்கிறார்கள்.

ஆலய பிரவேச முயற்சிக்கு அந்தணர்களிடையே கடும் எதிர்ப்பு இருந்தது. ஆலய அர்ச்சகர்களும், வேதம் ஓதும் 'அத்யயன பட்டர் ' என்ற பிரிவினரும் இந்தத் திடீர் முயற்சியைக் கடுமையான சொற்களால் (மட்டும்) எதிர்த்தனர். ஆலயப் பிரவேசத்துக்குப் பின் சுவாமிநாத பட்டர் தவிர மற்ற அர்ச்சகர்களும், கோயிலில் வேதம் ஓதும் அத்யயன பட்டர் பிரிவினரும் கோயிற்பணிகளில் நேரடியாகக் கலந்துகொள்ளாமல் வெளியேறினர். கோயில் நிர்வாகத்தின் மீது பல வழக்குகளைத் தொடுத்தனர். கோயிலில் பிராமணரல்லாத மற்றப் பணியாளர்கள் வழக்கம் போலத் தம் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர்.

 

ஆலயப் பிரவேசம் நிகழ்ந்த நாள் முதல் கோயிலின் பிராமணப் பணியாளர்களும் சனாதனிகளும் 'மங்கள நிவாசம் ' பங்களாவிலே தொடர்ந்து கூடினர். அதையே மீனாட்சி அம்மன் கோயிலாகக் கருதி பூசை வழிபாடுகளை அங்கேயே நடத்தி வந்தனர். சில நாள்களுக்குள், ஆறுபாதி நடேச ஐயர் வீட்டின் முன் இருந்த காலி மனையில் (இப்போது தமிழ்ச் சங்கம் சாலையில் செந்தமிழ்க் கல்லூரியை அடுத்துக் கீழ்புறமாக உள்ள இடம்) ஒரு 'புதிய மீனாட்சியம்மன் கோயிலை 'ச் சிறியதாகக் கட்டினர். அங்கேயே வழிபாடுகளும் பூசைகளும் நடத்தினர்.

 

 1945 வரை இந்தக் கோயில் நீடித்திருந்தது. அதன்பின் பூசைகள் நிறுத்தப்பட்டு, மூடப்பட்டது. கோயிலின் மீது வழக்குத் தொடுத்திருந்த அர்ச்சகர்களும், வேதம் ஓதும் பட்டர்களும் தங்கள் முயற்சியில் தோற்று மீண்டும் கோயிற் பணிக்குத் திரும்பினார்கள்.

 

பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் மீனாட்சி அம்மன் கோயில் ஆலயப் பிரவேசம் குறித்தான ஒரு கட்டுரையில், "இந்நுழைவு நடந்த காலத்தில் அரிசன ஆலயப் பிரவேசத்தைக்   எதிர்த்து  பிராமணப் பெண்கள் இருவர் பாட்டுப் புத்தகங்களை வெளியிட்டனர். 1939இல் 'மதுரை பேச்சியம்மன் கோயில் ரஸ்தா லேட் பத்மனாபய்யரவர்கள் பாரி பாகீரதி அம்மாள் ' என்பவர் 'ஆலய எதிர்ப்பு கும்மி பாட்டுப் புஸ்தகம் ' என்ற பெயரில் இரண்டணா விலையில் 16 பக்கத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். 1940இல் 'மதுரை கமலத் தோப்புத் தெரு எஸ். தர்மாம்பாள் ' என்பவர் 'ஆலயப் பிரவேச கண்டனப் பாட்டுப் புஸ்தகம் ' என்ற பெயரில் இரண்டணா விலையில் 28 பக்கத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். 

1939இலும் 40இலும் வெளியிடப்பட்ட இந்த இரண்டு பாட்டுப் புத்தகங்களும் ஆறுபாதி நடேச ஐயர் தலைமையில் இயங்கிய, கே. ஆர். வெங்கட்ராமையரும் பங்குகொண்ட வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தின் ஆதரவுடனேயே வெளிவந்திருக்க வேண்டும்.

 

                இந்தப் பாட்டு புத்தகத்தில்...

 

"ஸேது ஹிமயமலை வரையில்  அங்கே

எத்தனையோ ராஜாக்கள் ஆண்டார்  அவாள்

ஆலயப் பிரவேசமென்ற அநீதிகளைக்

கனவிலும் நினையார் மனந் துணியார்

அந்த நாளில் இந்த சண்டாளர்கள் இல்லையோ

அவாள் இன்றுதான் பூமியில் குதித்தனரோ"

(எதிர்ப்புக் கும்மி)

 

                பாகீரதியம்மாள் புத்தகத்தில் (1939) இவ்வகையான கடுமை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

 

"ஆறுபேர் சண்டாளர்களை

அன்புடனே அழைத்துக்கொண்டு

ஒருவருக்கும் தெரியாமல்

உள் நுழைந்தார் திருடனைப்போல்."

 

இந்த வரிகள் 8.7.1939இல் நடந்த நிகழ்ச்சியைக் குறிக்கின்றன. இதே நிகழ்ச்சியை சம்பவத்துக்குக் காரணமான நபர்களின் பெயர்களுடன் 1940இல் வெளிவந்த தர்மாம்பாள் பாட்டு சொல்கிறது.

 

"ஆர். எஸ். நாயுடும் வைத்யநாதரும் அக்ரமங்கள் செய்தார்கள்

அக்ரமமாய்ப் பஞ்சமரை ஆலயத்தில் புகுத்திவிட்டார்" (கண்டனப்பாட்டு)

 

பாகீரதியம்மாள் புத்தகத்தில் ஒரு பாட்டு 'அரிசனங்கள் ஆலயத்துக்குள் புகுந்தவுடன் அங்கிருந்து வெளியேறிவிட்ட மீனாட்சியம்மனை மதுரை நகர்த் தெருக்களில் தேடுவதாக ' அமைந்திருக்கிறது.

 அத்துடன் அன்றைய முதலமைச்சர் ராஜாஜி முயற்சியில் அரிசன ஆலயப் பிரவேச நிகழ்ச்சிக்கு ஆதரவாக வெளியிட்ட அவசர சட்டத்தினையும், அவரையும் கண்டித்து பாகீரதியம்மாள் பாடுகிறார்.

என் தாயைப் பறையர் கையில் ஒப்புவித்துப்

பவிஷுடன் மார்தட்டுகிறார் பிரதம மந்திரி (எ.கு)

 

 என்று அவரைக் கண்டிப்பதோடு, 'பக்க பக்க மெம்பர்களுக்கு காசு கொடுத்து ' இந்தச் சட்டத்தை நிறைவேற்றியதாகவும் குற்றஞ்சாட்டுகிறது. பாகீரதியம்மாளின் மற்றொரு பாடல் 'மங்கள பங்களாவுக்குப் போவோம் வாருங்கள் ' என்று கோயிற் பிராமணர்களும், வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தாரும் மங்கள நிவாசம் பங்களாவிலே கூடி ஆலோசனையும் பூசைகளும் நடத்தியதைக் குறிப்பிடுகிறது.

 

அரிசனங்கள் ஆலயத்துள் நுழைந்த பிறகு 'மங்கள நிவாசம் ' பங்களாவில் கூடி எடுக்கப்பட்ட முடிவினைப் பாகீரதியம்மாள் பாடல் தெரிவிக்கிறது.

"ஆலயமொன்று இயற்றி

ஆடவர் ஸ்திரீ பாலருக்கு

ஆகமவித்தை பயிற்சி

அரும் உபன்யாஸம் இயற்றி

வித்வத் கோஷ்டிகளுடன்கூட

வேகமுடன் தெரிசித்து

பக்தியுடன் ஸத்காலேட்சபம்

செய்துதான் வசிப்போம்" (எ.கு.) என்கிறது... என எழுதியுள்ளார்.. என்கிறார் பேராசிரியர் தொ.பரமசிவம்.

 

மீனாட்சி அம்மன் கோயில் ஆலய பிரவேசத்தில் வைத்தியநாதய்யர் அழைத்துச் சென்றவர்களில் சுதந்திரத்துக்கு பின்னர் காமராசர் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த க.கக்கனும் ஒருவர். அவர் ஆலயப் பிரவேசம் குறித்துக் கூறுகையில்..

 

''மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசத்துக்குப் பெரியவர்கள் பலர் எதிர்ப்பாக இருந்தார்கள். மதுரையின் வீதிதோறும் கூட்டம் போட்டு, அரிஜன ஆலயப் பிரவேசத்தைப் பற்றிக் கண்டித்துப் பேசினார்கள். ”அரிஜனங்கள் ஆலயத்துக்குள் நுழைந்துவிட்டால் இந்து மத தர்மமே சீர்குலைந்து போய்விடும்; அதனால் அவர்களை ஆலயப் பிரவேசம் செய்ய அனுமதிக்கக்கூடாது; அதுவும், வைத்தியநாதய்யர் போன்ற ஒரு ஜாதி இந்துவின் தலைமையில் அந்தக் காரியம் நடக்க அனுமதிக்கவே கூடாது” என்றெல்லாம் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

எங்களுக்கெல்லாம் உள்ளூர சிறிது தயக்கமாகவே இருந்தது. ஆலயப் பிரவேச தினத்தன்று எங்கே பெரிய சச்சரவும், தகராறும் ஏற்பட்டுவிடுமோ என்று நினைத் துக்கொண்டிருந்தோம். ஆனால் வைத்தியநாதய்யரோ, அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப் படாமல், அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். குறிப்பிட்ட தினத்தன்று ஆலயப் பிரவேசம் நடந்து முடிந்தது.

 

தெய்வாதீனமாக எவ்விதமான குழப்பமும் ஏற்படவில்லை. ஆலயப் பிரவேசம் முடிந்து அனைவரும் திரும்பி வந்துகொண்டிருந்தோம். அப்போது, வழியில் நின்றிருந்த ஒரு பெரியவர் வைத்தியநாதய்யரைப் பார்த்து, ”நீர்தான் அரிஜனாகிவிட்டீரே! உமக்குப் பூணூல் எதற்கு?” என்று சத்தம் போட்டுக் கோபமாகக் கூறினார். ஐயர் அவர்கள் ஒன்றுமே பேசாமல் சிரித்துக்கொண்டார்.

 

அந்தக் காலத்திலேயே வைத்தியநாதய்யர் வீட்டுக்குள் அரிஜனங்கள் சர்வ சுதந்திரமாகப் போய் வரமுடியும். வீட்டுச் சமையலறை வரையில் கூட சென்று ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வருவார்கள்.

 

அவரைப் போல்தான் அவரது மனைவியும் அரிஜன மக்களின் நன்மைக்காக உழைத்தவர். அய்யரிடம் பண உதவியும், மற்ற உதவிகளும் பெற்றுப் படித்த அரிஜன மக்களில் பலர் இன்று பெரிய பெரிய நிலையில் இருக்கிறார்கள். நான் பொதுப் பணியில் ஈடுபட்டு, பிற்பாடு அரசியல் உலகத்துக்கு வருவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவரே வைத்தியநாதய்யர் அவர்கள்தான். அரிஜன சேவையை விட வைத்தியநாதய்யருக்குப் பிடித்த பொதுச் சேவை வேறு எதுவும் இல்லை. அதனால்தான் அவரை ‘அரிஜனங்களின் தந்தை’ என்று போற்றுகிறார்கள். அவர் மறைந்த பிறகு, அவரது இறுதிச் சடங்குக்கு நான் சென்றிருந்தேன். ஒரு தந்தைக்கு ஒரு மகன் செய்யக்கூடிய இறுதிச் சடங்குகள் அனைத்தையும் செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டியது" என்கிறார் கக்கன்.

 

3.2.1946-ல் மீனாட்சி அம்மன் கோயிலுக்குக் ஏராளமான தாழ்த்தப் பட்ட மக்களுடன் காந்தி சென்றார். கோயிலில் அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, "மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி" என்கிற முழுப் பெயரில் அம்மனுக்கு அர்ச்சனை நடைபெற்றது. தம்மைச் சுற்றி மக்கள் வெள்ளம் சூழ்ந்திருந்த போதிலும், பக்தி வெள்ளத்தில் திளைத்தவராகக் காந்தி காணப்பட்டார். கோயிலில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில், " பல ஆண்டுகளாக எனக்கு இருந்த விருப்பம் இன்று நிறைவேறியதில் மகிழ்கிறேன்" என இந்தியில் காந்தி எழுதினார். 

 

மகாத்மா காந்தி, இச்சம்பவத்தால் மனம் மகிழ்ந்து, 22-7-1939 ஹரிஜன இதழில் பின்வருமாறு எழுதினார்..

“இவ்வளவு விரைவில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. தீண்டாமையை எதிர்த்து நடைபெற்று வரும் பிரசாரத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்ததும் ஒரு பெரிய முயற்சியே. ஆனால் அங்கு அது மகாராஜாவின் விருப்பத்தைப் பொருத்து நடந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசமோ பொதுமக்கள் கருத்தின் விளைவாக நிகழ்ந்த ஒன்றாகும். இவ்விஷயத்தில் பொதுமக்கள் கருத்தை உருவாக்க அயராது பாடுபட்ட வைத்தியநாத அய்யர் மற்றும் அவரது சக ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

 மதுரை ஆலய பிரவேசம் அரசியல் காரணங்களுக்காக நடந்தது எனச் சொல்பவர்களும் உண்டு. "மதுரைக்கோயில் அரிசன ஆலயப் பிரவேசம், 1939" என்ற கட்டுரையில் பேராசிரியர் தொ. பரமசிவன் எழுதும் போது, "காந்தியடிகள் எரவாடா சிறையில் காலவரையற்ற உண்ணா நோன்பைத் தொடங்கியதன் விளைவாக டாக்டர் அம்பேத்கர் காங்கிரஸ் இயக்கத்தோடு 'புனா ஒப்பந்தத்தை ' 1932 செப்டம்பர் 24இல் செய்துகொண்டார்.  ஆயினும் அவருக்கு நிறைவு ஏற்படவில்லை.     இந்தச் சூழ்நிலையில் தாழ்த்தப்பட்டோரைக் காங்கிரஸ் இயக் கத்துக்குள் தக்கவைக்க வேண்டிய நெருக்கடி அதற்கு உருவாயிற்று. இந்த நெருக்கடி தமிழ்நாட்டில் கடுமையாக இருந்தது. ஏனென்றால் முதலமைச்சர் ராஜாஜியின் வேட்பாளரான சுப்பையாவை எதிர்த்துத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காமராசர் வெற்றி பெற்றிருந்தார். வெளியிலே தெரியாதபடி கட்சிக்குள் ஒரு நெருக்கடி உருவாகியிருந்தது.

மதுரை வைத்தியநாதையர் காங்கிரஸ் கட்சிக்குள் ராஜாஜியின் ஆதரவாளர் ஆவார். எனவே உள்கட்சி நெருக்கடி, தாழ்த்தப்பட்டோர் ஆதரவைப் பெறுவது என்ற இரண்டு நோக்கங்களோடு இவர் மதுரைக் கோயிலில் 'அரிசன ஆலயப் பிரவேசம் ' நடத்திக் காட்டினார். ராஜாஜியும் அரிசன ஆலயப் பிரவேசத்தை முறைப்படுத்தும் அவசர சட்டத்தை வெளியிட்டு, வைத்தியநாதையரின் முயற்சியினை வெற்றியாக்கிவிட்டார்'' எனக் குறிப்பிடுகிறார் தொ. பரமசிவம்.

 

தந்தை பெரியார் ஆலய பிரவேசம் குறித்து 30-10-1932 குடிஅரசு இதழில் எழுதிய தலையங்கத்தில்.. "இவ்வாலயப் பிரவேச விஷயத்தில் நமக்கு இவ்வளவு அக்கறை இருப்பதற்குக் காரணம் எல்லோரும் கோயில்களில் சென்று வணங்க வேண்டும், அங்கு தெய்வமிருக்கிறது, அல்லது கடவுளிருக்கிறது என்னும் நோக்கத்துடன் நாம் கோயில் பிரவேசத்தை ஆதரிக்கவில்லை. கோயில்களும் தேசத்தின் பொதுச்சொத்து என்ற முறையில் வணங்குவதற்கோ, அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ, அல்லது சும்மாவோ, அவைகளுக்குள் நுழையக் கூடிய உரிமை தேசமக்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்னும் எண்ணத்துடனேயே நாம் கோயில் பிரவேசத்தை முழுமனதுடன் ஆதரிக்கின்றோம். இதற்காகச் சட்டஞ்செய்யப்படும் முயற்சியையும் வரவேற் கிறோம்" என எழுதியிருந்தார். இந்தக் கருத்து தலித் ஆலய பிரவேசத்தை விரும்பும் அனைவருக்கும் உடன்பாடான கருத்தாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

 

சஞ்சனா மீனாட்சி மதுரையை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர், தமிழின் முக்கியமான செய்தித்தாள்கள், வார இதழ்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவர் எழுதும் இத்தொடர் வாரந்தோறும் புதன் அன்று வெளிவரும்

 

                                                                                               

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...