மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியை அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
ஒவ்வொரு சுற்றிலும் தலா 30 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு,ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெற்றது. தொடர்ந்து போட்டியில் வென்ற வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அனல்பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 6 சுற்றுகள் முடிவடைந்து இறுதி சுற்று தொடங்கியது. 6வது சுற்று முடிவில் 528 காளைகள் அவிழ்க்கப்பட்டன.
பின்னர் பரபரப்பான இறுதி சுற்று போட்டிகள் தொடங்கியது. ஜல்லிகட்டில் 624 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. ஜல்லிக்கட்டில் வீரர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இதில் 24 காளைகளை பிடித்து கார்த்திக் முதலிடமும், 19 காளைகளை பிடித்து முருகன் 2-வது இடமும், 12 காளைகளை பிடித்து பரத் 3 -வது இடம் பிடித்தனர்.
சிறந்த மாடுபிடி வீரரான 24 காளைகளை பிடித்த கார்த்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை பிடித்த முருகனுக்கு இரண்டு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 12 காளைகளை பிடித்து பரத்துக்கு பசுங்கன்று பரிசாக வழங்கப்பட்டது.
முதல் இடம் பிடித்து சிறந்த காளைக்கான பரிசு தேவசகாயம் என்பவருக்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. 2-ஆம் இடம் பிடித்து சிறந்த காளைக்காக பசுங்கன்று பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் வர்ணனையாளர்களுக்கு தங்கக்காசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.