தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கியதில் இருந்தே முதலமைச்சரின் சிறப்பான நடவடிக்கையில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பொதுமக்களின் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக ஞயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கை பொதுமக்கள் நேர்த்தியாக கடைப்பிடிக்கிறார்கள் என்பது வெறிச்சோடிய சாலைகளும், ஸ்தம்பித்துபோன நிலையிலும் இருந்தே தெரிகிறது.
3-வது அலையில் இருந்து தப்பிக்க முதலமைச்சரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ஊரடங்கு வெற்றி ஒரு சான்றாக இருந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் அளவு குறைந்து கொண்டிருக்கிறது. சென்னையில் 9 ஆயிரம் அளவுக்கு உயர்ந்த தொற்றின் அளவு இன்றைக்கு 6 ஆயிரம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவின் பெருநகரங்களில் தொற்றின் அளவு குறைந்து வருவது பெரும் ஆறுதலாக இருக்கிறது. கொரோனா தொற்றின் அளவு குறைந்துவரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பது தேவை இல்லாததாக ஆகிவிடும். அந்தவகையில் தொற்று குறைந்தால் முழு ஊரடங்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் அளவு சராசரியாக நாள் ஒன்றுக்கு 30 ஆயிரமாக இருந்தபோதும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. தடுப்பூசி முதல் தவணைக் கூட போட்டுக்கொள்ளாதவர்கள், இணைநோயுடன் உள்ள முதியவர்கள் தான் 95 சதவீதம் கொரோனாவில் இறந்துள்ளனர்' எனக் கூறினார்.