???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எழுத்தாளனுக்கு தமிழ்நாட்டைத் தவிர்த்து வேறு எந்த ஊருக்குப் போனாலும் மதிப்பு இருக்கிறது!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   17 , 2018  03:07:38 IST


Andhimazhai Image
தமிழின் மூத்த படைப்பாளர் மா.அரங்கநாதன் நினைவு இலக்கிய விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை மியூசிக் அகாதமி சிற்றரங்கில் இனிதே நடந்தது. வலிவலம் ஆர்.எஸ்.வெங்கட்ராமன் இறை வணக்கப் பாடலுடன் தொடங்கிய இந்த விழாவில் இயக்குநர் அருண்மொழி, பக்ருதின் குழுவினர் சார்பில் மா.அரங்கநாதன் கதைகளைத் தழுவிய நாடகம் நிகழ்த்தப்பட்டது. விருது குறித்து கவிஞர் ராஜகோபாலன் அறிமுக உரையாற்றினார்.
 
 
பின்னர் எஸ். சண்முகம் மற்றும் கவிஞர் ரவி சுப்ரமணியன் இருவருக்கும் மா.அரங்கநாதன் விருது [தலா ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பணமும், மா.ரங்கநாதன் நினைவுச்  சிற்பமும் அடங்கிய] வழங்கப்பட்டது. தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.
 
 
இதைத் தொடர்ந்து விருது பெரும் விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் எஸ்.சண்முகம் குறித்து ஜமாலன் பேசினார். தமிழில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு தனித்துவமான கதைகளை எழுதியவர் மா.அரங்கநாதன் என்று தொடங்கிய ஜமாலன், புத்தக வாசிப்பில் சண்முகத்திற்கு இருக்கும் ஆர்வம், அவரது புத்தகச் சேகரிப்பு, விமர்சன ஆக்கங்கள், மொழிபெயர்ப்பு மற்றும் அவரது இலக்கிய வாழ்வு என எஸ்.சண்முகம் உடனான தனது முப்பது வருட கால நட்பை உரையில் வெளிப்படுத்தினார்.
 
 
ரவி சுப்ரமணியத்துடனான எண்பதுகளில் தொடங்கிய நட்பை நினைவு கூர்ந்து தன் பேச்சைத் தொடங்கிய ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், ரவி சுப்ரமணியத்துடனான முதல் சந்திப்பு, அதன் பிறகு அவரது இலக்கியம் குறித்தான பேச்சுகள், ரவி இல்லத்து உணவு உபசரிப்பு என சகலத்தையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். அந்த ருசியின் மணம்தான் எங்களது நட்பின் மனம் என்றார் கிருஷ்ணகுமார். ’’தகுதி வாய்ந்தவர்களுக்கு, தகுதி வாய்ந்தவர்களால் அளிக்கப்படும் இந்த விருது ஒரு முன்மாதிரியாகத் திகழப்போகும் ஒன்று. இது ஒரு மங்களகரமான விருது. படைப்பு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் உயர்ந்த மனிதர் ரவி சுப்ரமணியன். குடும்பங்கள் எழுதுபவரைக் கொண்டாடுவதில்லை. எழுத்து சோறு போடுகிற விஷயமாக இன்னும் தமிழில் மாறவில்லை. எழுத்தாளனுக்கு தமிழ்நாட்டைத் தவிர்த்து வேறு எந்த ஊருக்கு அல்லது தேசத்துக்குப் போனாலும் மதிப்பு இருக்கிறது. அங்கே எழுத்தாளனைக் கொண்டாடுகிறார்கள்’’ என நகைச்சுவை தெறிக்கும் பேச்சால் அரங்கைக் கட்டிப்போட்டார் பாரதி கிருஷ்ணகுமார். ரவியுடனான நட்பை Fragrance of Love என்று கூறி உணர்ச்சிவசப்பட்ட பாரதி கிருஷ்ணகுமார் ரவி சுப்ரமணியனின் ’பரண்’ என்னும் கவிதையை வாசித்து மிகுந்த நெகிழ்வுடனும் மகிழ்வுடனும் உரையை நிறைவு செய்தார்.    
 
 
பின்னர் விருதுகள் அளித்து சிறப்புரை ஆற்றிய தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் நீதித்துறை சார்ந்தவர்கள் தமிழுக்கு ஆற்றியிருக்கும் பணிகள் பற்றி ஒரு ஆழமானதொரு உரையை வழங்கினார். நீதியரசர் மஹாதேவன் தனது தந்தையார் மா.அரங்கநாதன் பெயரால் உருவாக்கியிருக்கும் இந்த விருது சாகித்ய அகாதமி விருதுக்கு நிகராக தமிழில் மதிக்கப்படும் காலம் வெகுவிரைவில் வரும் என்று ஆரூடம் கூறினார். சிறந்த படைப்பாளிகளை தேர்ந்தெடுத்து விருதளித்து கௌரவிக்கும் பணியைத் தொடங்கியிருக்கும் நீதியரசர் மஹாதேவனுக்கு நன்றி கூறி உரையை முடித்தார்.
 
 
மா. அரங்கநாதன் குறித்த சிறப்பானதொரு நினைவுரையை எழுத்தாளர் சோ.தர்மன் ஆற்றினார்.  பின்னர் ரவி சுப்ரமணியன் தனது ஏற்புரையை வழங்கினார். தனது பள்ளி ஆசிரியர்கள், இளமைக்காலம், இலக்கிய வாசிப்பு தந்த ருசி, தனது குடும்ப நினைவுகள், சென்னைக்கு இடம்பெயர்ந்த வாழ்க்கை, ஆவணப்பட இயக்குநராக தன் பயணம், இலக்கிய நண்பர்கள் என அனைவரையும் நன்றியுடனும் நெகிழ்ச்சியுடனும் நினைவு கூர்ந்தார் ரவி சுப்ரமணியன். சிறியதோர் உரை என்றாலும் செறிவானதொரு உரையைத் தந்தார் விமர்சகர் எஸ்.சண்முகம். மா.அரங்கநாதன் கதைகளின் இரு வேறு கலாச்சார நிலைகள், அதன் முரண்பாடுகள், வைதீக மரபுக்கு மாற்றாக அரங்கநாதன் எழுதிக்காட்டிய அவைதீக மரபின் தத்துவ சாரம் வெளிப்பட்ட கதைகள், ஜேம்ஸ் டீனும் செண்பகராமன் புதூரும், காடன் மலை, மைலாப்பூர், கேணி, உவரி என தமிழ் மரபின் ஆழமான தத்துவ அறவியல் பேசும் அரங்கநாதன் கதைகளை பேச்சில் விதந்தோதினார். தனது ஆசிரியர் தமிழவனுக்கும், இலக்கிய நண்பர்களுக்கும் பேச்சில் நன்றி கூறி தனது உரையை முடித்தார் எஸ். சண்முகம்.
 
 
விழாவைச் சிறப்புறத் தொகுத்து வழங்கினார் கவிஞர் அகர முதல்வன். விழாவின் தமிழின் மூத்த படைப்பாளிகள், பதிப்பாளர்கள், நீதிபதிகள் வைத்தியநாதன், பி.என்.பிரகாஷ், சுப்பராயன், புஷ்பா சத்தியநாராயணன், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ், சத்ய மூர்த்தி, இறையன்பு ஐ.ஏ.எஸ், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
 
 
விழாவின் நன்றியுரையை மா.அரங்கநாதனின் மைலாப்பூர் சிறுகதையை முன்வைத்துப் பேசி அதன் நுட்பங்களை வியந்து, தமிழின் மூத்த படைப்பாளி மா.அரங்கநாதனின் சிறுகதை சாதனைகளை தமிழ்கூறும் நல்லுலகம் உணர வேண்டும் என முத்தாய்ப்பாகக் கூறி அனைவருக்கும் நெகிழ்ச்சி கலந்த நன்றியுரையாற்றி முடித்தார் ஆர்.தேவராஜன்.
 
 
- சரோ லாமா -


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...