சமூகவலைதளங்களின் வருகை ஆண் பெண் உறவை எளிதாகியிருந்தாலும், காதலுக்கு நம்பிக்கை முக்கியம் என்பதை கலகலப்பாகவும் கிளுகிளுப்பாகவும் சொல்லும் திரைப்படமே ‘லவ் டுடே’ திரைப்படம்.
சமூகவலைதளம் மூலம் காதலர்களாகின்றனர் நாயகன் உத்தமன் பிரதீப்பும் (பிரதீப் ரங்கநாதன்) நாயகி நிகிதாவும் (இவானா). இருவரும் ஒருவரையொருவர் புரிந்து வைத்திருப்பதாக நம்புகின்றனர். இதனைத் தொடர்ந்து, அவர்களின் காதல் நாயகியின் தந்தைக்கு( சத்யராஜ்) தெரிய வருகிறது. காதலை ஏற்றுக்கொள்ளும் அவரோ, கோரிக்கை ஒன்று வைக்கிறார். அதாவது, ஒரே ஒரு நாள், இருவரின் செல்போனையும் மாற்றிக்கொள்ள வேண்டும். சிறிய யோசனைக்குப் பின் காதலர்கள் ஒப்புக்கொண்டு தங்களின் செல்போன்களை மாற்றிக்கொள்கிறார்கள்.
இதன்பின், நாயகன் தன் காதலியின் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்திகளைத் திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைகின்றார். அதே அதிர்ச்சி நாயகிக்கும் காத்திருக்கிறது. இதுவரை, ஒருவரைப் பற்றி ஒருவர் புரிந்து வைத்திருந்த விஷயங்கள் அனைத்தும் பொய் என தெரிய வர, அடுத்து என்ன நிகழ்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
காதலுக்கு நம்பிக்கை முக்கியம் என்பதை, இன்றைய இளைஞர்களின் வாழ்க்கைச்சூழலோடு இணைத்து, காமெடிக்கு பஞ்சமில்லாத திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். அவரே இந்த படத்தின் நாயகன்.
காதலர்களுக்குள் உண்டாகும் மனப்போராட்டங்கள், தவிப்பு, சகிப்புத்தன்மை என படம் விரிகிறது. முதல்பாதி முழுக்க வயிறு குலுங்க வைக்கும் காமெடிகள். அதிலும் சத்யராஜ் மற்றும் பிரதீப் சந்திக்கும் காட்சிகளுக்கு தியேட்டரில் அப்படியொரு விசில் சத்தம். இரண்டாம் பாதியில் சிறிய தடுமாற்றங்கள் இருந்தாலும், அவை பெரிய குறையாகத் தெரியவில்லை.
அம்மாவை சமாளிக்கும் குணம், ரகசியங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம், யாரையும் நம்பமுடியாத கையறு நிலை போன்ற காட்சிகளில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அட்டகாசமான நடிப்பை கொடுத்துள்ளார். நாயகி இவானாவின் நடிப்பு யதார்த்தம். சத்யராஜ், நாயகனின் அம்மாவாக நடித்த ராதிகா சரத்குமார், யோகி பாபு, நாயகனின் நண்பர்கள் என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திப் படத்தின் வெற்றிக்கு பலமாக அமைந்துள்ளனர்.
யுவன்ஷங்கர் ராஜாவின் பாடல்கள் ஓரளவு ரசிக்க வைத்தாலும், பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்.
இன்றைய நவீன யுகத்தில் வேவுபார்ப்பது, சந்தேகப்படுவது உறவுகளுக்குள் என்ன மாதிரியான விரிசலை ஏற்படுத்தும் என்பதை படம் அழுத்தமாக பேசுகிறது. தலைப்புக்கு ஏற்ற கதை என்பதால் இளைஞர்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக ‘லவ் டுடே’ இருக்கும்.