???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை 0 விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி 0 5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்! 0 இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை 0 நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை 0 கால்வாய் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 விமான போக்குவரத்து தொடங்கியது: முதல் நாளில் 630 விமானங்கள் ரத்து 0 தொழிலாளர் நல சட்டத்தில் சீர்திருத்தம் மட்டுமே செய்யப்படுகிறது: நிதி ஆயோக் துணைத்தலைவர் 0 தமிழகத்தில் 17,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு: மேலும் 805 பேர் பாதிப்பு 0 தமிழகம்-புதுவையில் ரம்ஜான் கொண்டாட்டம்: சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகை! 0 வைரஸ் எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்ததாக கூறுவது கட்டுக்கதை: உகான் வைராலஜி நிறுவனம் 0 தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடரும் அமைச்சர் பி.தங்கமணி தகவல் 0 உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும்: முதலமைச்சர் ரம்ஜான் வாழ்த்து! 0 ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியது 0 ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆண்கள் காதலிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்!

Posted : சனிக்கிழமை,   மார்ச்   10 , 2018  01:15:21 IST


Andhimazhai Image

ஸ்வினி தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வயது 19. எல்லா நாளையும் போல நேற்றும் சாதாரணமாகக் கடந்து போகும் என்றுதான் அவர் நினைத்திருப்பார். ஆனால் அப்படி நிகழவில்லை. கல்லூரி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த அவர் காதலனால் கொலை செய்யப்பட்டார். காரணம் காதல். காதலன் பெயர் அழகேசன். சென்னையை உலுக்கிய இந்தப் படுகொலை கடும் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.

 

காதல் என்ற பெயரால் கொல்லப்பட்ட அஸ்வினி முதல் பெண் இல்லை. பல ஆண்டுகளாக தொடரும் துயரம் இது. மென்பொறியாளர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொல்லப்பட்டார். சென்னை ஆதம்பாக்கத்தில் இந்துஜா என்னும் பெண் பொறியியல் பட்டதாரி ஆகாஷ் என்னும் ஒருதலைக் காதலனால் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்டார். மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி சித்ராதேவியை ஒருதலையாகக் காதலித்த செந்தில் பெட்ரோல் ஊற்றி எரித்தார். இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.. இதெல்லாம் முடிகிற வரிசை இல்லை. பெண்களுக்கெதிரான வன்முறைகள் தினம் தினம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

 

அஸ்வினியின் தந்தை மோகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அஸ்வினி சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் தனலட்சுமிநகர் ஆறாவது  தெருவில் தனது தாய் சங்கரியுடன் வசித்து வந்தார். இவரது வீட்டின் அருகே அழகேசன்(24) என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னை மாநகராட்சி  வார்டில் சுகாதாரத்துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். உபரித் தொழிலாக வீடு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்து வருகிறார். அஸ்வினியின் வீட்டிற்கும் அழகேசன்தான் தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்தார். அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அஸ்வினிக்கும் அழகேசனுக்கும் காதல் வந்தது. இதைக் காதல் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. பதின்பருவ வயசுக்கோளாறு என்றும் ஒதுக்கிவிட முடியாது. ஆனால் இருவரும் பழகினார்கள். செல்போன் அவர்கள் காதலை பேச்சூட்டி வளர்த்தது.

 

காதல் விவகாரம் அஸ்வினியின் அம்மாவுக்குத் தெரிய வந்தது. அவர் தன் மகளை அடித்து உதைத்தார். அந்த வயதின் நிறை குறைகளையோ உடல் என்னும் மாய வசீகரம் ஏற்படுத்தும் தடுமாற்றங்களையோ அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். மெத்தப் படித்தவர்களே இந்த விஷயத்தில் ஏதிலியாய் கையைப் பிசைந்து திகைக்கையில் அஸ்வினியின் அம்மா என்ன செய்வார்? வழக்கமாக எல்லா பெற்றோர் செய்யும் அதே செயலைத்தான் அவரும் செய்தார். கண்டிப்பு. அடி உதை. இடமாற்றம். ஆனால் இதன்பிறகும் அஸ்வினி அழகேசனுடன் பேசுவதை நிறுத்தவில்லை.

 

அஸ்வினி பிளஸ்-2 முடித்து கே.கே.நகரில் உள்ள தனியார் கலைக்கல்லூரி ஒன்றில் சேர்ந்தார். கல்லூரி சென்ற பிறகு படிப்படியாக தனது காதலனிடம் பேசுவதையும், சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அஸ்வினியை வழிமறித்து ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என்று கேட்டு அழகேசன் தகராறில் ஈடுபட்டுள்ளார். நமது காதலை எனது தாய் மற்றும் உறவினர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இதனால் நாம் இருவரும் பிரிந்து விடுவோம் என்று அஸ்வினி கூறியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அழகேசன் தனது காதலியை அடித்து உதைத்து காதலை தொடரும் படி வற்புறுத்தியுள்ளார்.

 

அழகேசனுக்கு இந்த மாற்றம் பிடிக்கவில்லை. அவர் அஸ்வினியைப் பிரிய விரும்பவில்லை. இதனால் கட்டாய தாலி கட்டும் திட்டத்தை முன்னெடுத்தார். கடந்த பிப்ரவரி 16ம் தேதி அஸ்வினி வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு அழகேசன் வீட்டிற்குள் புகுந்து வலுக்கட்டாயமாக தாலி கட்டியுள்ளார்.  இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அஸ்வினி, அவரை மீறி எல்லாம் நடந்து விடுவது குறித்து அழுது புலம்பினார். ஆனால் எதிர்பாராவிதமாக  அந்த நேரத்தில் அஸ்வினியின் அம்மா வீட்டிற்கு வந்ததால் அழகேசன் வீட்டில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

 

பின்னர் விஷயம் காவல் நிலையம் சென்றது. பலவித அறிவுரைகள். பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தாலியை கழட்டிக் காதலன் முகத்தில் வீசினார் அஸ்வினி. தன் அம்மாவுடன் சென்றார். போலீசார் அழகேசனை கடுமையாக எச்சரித்து இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். போலீஸைப் பொறுத்தவரை விஷயம் அதோடு முடிந்தது. ஆனால் அழகேசனின் மனதில் ஒரு வன்மம் வெறித்தாண்டவம் ஆடுவதற்கான விஷ விதை அன்றே ஊன்றப்பட்டுவிட்டது.

 

அதன்பிறகு அஸ்வினியை ஜாபர்கான்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு  அவரது அம்மா அனுப்பி வைத்துவிட்டார். மாதக்கணக்கில் கல்லூரிக்கும் அனுப்பவில்லை. அஸ்வினியைப் பார்க்க முடியாத மூர்க்கத்தில் இருந்த அழகேசன் அஸ்வினி படிக்கும் கல்லூரி மற்றும் அவரது வீட்டைச் சுற்றிவந்தார். தினமும் கல்லூரி முன்பு காலை மற்றும் மாலை நேரங்களில் அழகேசன் காதலிக்காகக் காத்திருந்தார். தேடினார். ஆனால் அஸ்வினி கிடைக்கவில்லை. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அஸ்வினி தனது உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்லத் தொடங்கினார். இது அழகேசனுக்கு தெரியவந்தது. கடந்த இரண்டு நாட்களாக அவரை சந்தித்து பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் அஸ்வினி அவரிடம் பேசவில்லை. அப்போது அஸ்வினியிடம் நீ எனக்கு கிடைக்கவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இந்த மிரட்டல் பலமுறை அழகேசன் விடுத்ததுதான் என்பதால் அஸ்வினி இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

மார்ச் 9. உலக பெண்கள் தினத்துக்கு அடுத்த நாள். கல்லூரியைவிட்டு தோழிகளுடன் வெளியே வந்த அஸ்வினியை டாஸ்மாக் போதையுடன் அழகேசன் வழிமறித்தார். அலட்சியம் செய்த அஸ்வினி அழகேசனைக் கடந்து பேருந்து நிலையத்துக்குப் போனார். போதையின் தீவிரத்தில் ஆத்திரம் முறுக்கேறிய அழகேசன் கத்தியால் அஸ்வினியின் கழுத்தறுத்தார். ரத்தம் பீறிட்டது. சக மாணவ மாணவிகள் அஸ்வினியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். காதலின் பெயரால் அவர் கொல்லப்பட்டார். அழகேசன் பொதுமக்களால் தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஒரு சாதாரண இளம்பருவத்து காதல் கதை இப்படித்தான் தமிழகத்தின் தலைப்புச் செய்தியானது.

 

இந்தத் துயரக் கதையை நாம் கவிஞர் குட்டி ரேவதியின் சொற்களோடு நிறைவு செய்யலாம். ‘’இந்தச் சமூகத்திற்கு காதலிக்கத் தெரியவில்லை. ஒரு வேளை காதலைச் சொல்லிக் கொடுக்கும் முன்னுதாரண பெற்றோர்கள் நம் சமூகத்தில் இல்லாமல் இருக்கலாம். காதலின் நயம் சொல்லும் திரைப்படங்கள் நம்மிடமில்லை. இன்னொரு பெண்ணையும் சக மனிதராகச் சுட்டிக்காட்டி வளர்க்கும் நல்ல பெற்றோர்கள் இல்லை. காதல் என்பது சமனற்ற சமன்பாடுகளை கற்றுக்கொடுக்கும் ஆதிக்க வெறியாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. நம் சமூகம் காதலிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக யஷ்வந்த்துகள், அழகேசன்கள் உள்ளிட்ட பெரும்பாலான ஆண்கள் காதலிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.’’  click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...