???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இடதுசாரி எழுத்து : பீட்டர்ஸ்பர்க்கின் கோவில்பட்டிக் கிளை -உதயஷங்கர்

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2017  05:57:03 IST


Andhimazhai Image
கோவில்பட்டி 1970-80-களில் புரட்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அன்றாடம் ஊரின் தெருக்களில், காந்தி மைதானத்தில் முக்குக்கு முக்கு இருந்த டீக்கடைகளில் தோழர்கள், தொழிற்சங்கவாதிகள், எழுத்தாளர்கள், இளைஞர்கள், அறிவுஜீவிகள் கூடி நின்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள். தத்துவம் சார்ந்த வாதங்களும், இலக்கியம் சார்ந்த வாதங்களும், நடைமுறை அரசியல் சார்ந்த வாதங்களும் புழுதியில் சிந்திக் கொண்டேயிருந்தன. அந்த வாதங்களை கால்களில் அளைந்து கொண்டே மக்கள் அலைந்து திரிந்தார்கள். 
 
இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது. ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்.சோ.அழகிரிசாமி இருந்தார். எளிமையின் அர்த்தமாக இருந்த அந்தத்தோழர் கோவில்பட்டியின் அடையாளம். நாங்கள் புத்தம் புதிதாக இலக்கிய உலகத்திற்குள் நுழைந்த போது எங்களை இருகரம்    நீட்டி அரவணைத்தவர்கள் இடதுசாரி அமைப்பைச் சார்ந்த தோழர்களே. அநேகமாக தமிழகத்தின் எல்லாப்பகுதிகளிலும் இப்படித்தான் நிகழ்ந்திருக்கும். அரவணைத்த இரண்டு கரங்களில் ஒன்றில் மாக்சிம் கார்க்கியின் தாய் இருந்தது. மற்றொன்றில் நிகலொய் ஒஸ்திராவ்ஸ்கியின் வீரம் விளைந்தது இருந்தது. 
 
அன்று ஒரு புதிய உலகத்திற்குள் நுழைந்தோம். அது ஒரு கோடை இரவு. கரிசல் நகரமான கோவில்பட்டியின் வெயில் அன்று பெய்து தீர்த்திருந்தது. நாங்கள் எப்போதும் கூடிப்பேசும் காந்தி மைதானத்து  மண்ணிலிருந்து இன்னமும் ஆவி கிளம்பிக்கொண்டிருந்தது. அமைதியாக நாங்கள் உட்கார்ந்தோம். யாரோ தாய் நாவலைப் பற்றி பேச்செடுத்தார்கள். அப்போது தான் கவனித்தேன். எங்கள் வட்டத்துக்கு வெளிவட்டத்தில் அந்த மீசைக் கார முரட்டுத்தனமான எழுத்தாளன் தன்னுடைய சுருட்டைப் புகைத்தபடி உட்கார்ந்திருந்தார். எங்கள் இயல்பான தெனாவெட்டோடுதான் அவருடைய தாய் நாவலைப் பற்றிப் பேசினோம். அவர் மீசையைத் தடவிக்கொண்டே,“பார்த்தீங்களா தோழர்கள் எப்படிப் பேசுகிறார்கள்?” என்று சொல்லித் திரும்பிப் பார்த்துச் சிரித்தார். அவருடைய முதுகுக்குப் பின்னால் தன்னுடைய கீற்றுக்கண்களால் எங்களைப் பார்த்துச் சிரித்தபடி விளாடிமீர் இலியீச் லெனின் உட்கார்ந்திருந்தார். அவர் தன்னுடைய உறுதியான குரலில் எங்களிடம் “வீரம் விளைந்தது வாசித்தீர் களா தோழர்?” என்றார். இரண்டு பாவெல்களை எங்களால் மறக்கமுடியவில்லை. தாய் நாவலில் வரக்கூடிய பாவெல் புரட்சிக்குக் கட்டியம் கூறினான். வீரம் விளைந்தது நாவலில் வரக்கூடிய பாவெல் புரட்சியை நிலை நிறுத்தினான். நாங்கள் புரட்சியின் நாயகர்களான இரண்டு பாவெல்களை எங்களுக்குள் வரித்துக் கொண்டோம்.
 
மிகயீல் ஷொலகோவின் அவன் விதி, பரீஸ் வசீலியேவின் அதிகாலையின் அமைதியில், பரீஸ் பொலயோவின் உண்மை மனிதனின் கதை, மண் கட்டியை காற்று அடித்துக் கொண்டு போகாது,  சக்கரவர்த்தி மகாபீட்டர், என்று தோழர்கள் கொடுத்த புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தோம். அப்போது கோவில்பட்டிக்குப் புதிதாக வந்து இணைந்துகொண்ட எழுத்தாளர் ஜோதி விநாயகம், இன்னொரு ருஷ்யாவைக் காட்டினார். அதுவரை புரட்சியின் கனல் வீசிக்கொண்டிருந்தது காந்தி மைதானம். துப்பாக்கி முழக்கங்களும், போர்ப்பாடல்களும், வெற்றி முழக்கங்களும், யுத்த வியூகங்களுமாய் நாளும் ஒரு நாவலைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்த எங்களுடைய இறுகிய முகங்கள் சட்டென்று பூ மலர்ந்தமாதிரி மர்மமான புன்னகையுடன் விரிந்தன.
 
இப்போது காந்தி மைதானத்தில் பனி பொழிந்து கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று வீசியது. உடல் நடுக்கியது. என்ன குளிர்! என்று சொல்லியபடியே செய்யது பீடியைச் சுண்ட இழுத்தார் கவிஞர் கிருஷி. நாங்கள் உடம்பைக் குறுக்கிக் கொண்டோம். எங்களிடமிருந்து சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்தவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. நீண்ட தாடியும் மெலிந்த உடலும், ஏறிய நெற்றியும் தாஸ்தயேவ்ஸ்கியின் சாடையைக் காட்டியது. லேசாக இருமினார். அப்படியே பனி பொழிந்து கொண்டிருக்கும் வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதிரி இருந்தது. தூரத்தில் ஒரு பெண். வெண்ணிற இரவுகளில் வந்த நாஸ்தென்கா தான் அது. தலையில் கைக்குட்டையைக் கட்டியிருந்தாள். தாஸ்தயேவ்ஸ்கியின் அருகில் வந்து உட்கார்ந்தாள். நாங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். இப்போது தாஸ்தயேவ்ஸ்கி நாஸ்தென்காவைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சை விட்டார். எழுந்து அங்கும் இங்கும் நான்கடிகள் நடந்தார். அப்படியே சில கணங்கள் நின்றார். போய்விடப் போவதைப்போல திரும்பிச் சில தப்படிகள் நடந்தார். பின்னர் யாரும் எதிர்பாராதவண்ணம் நாஸ்தென்காவின் முன்னால் போய் மண்டியிட்டார். நாஸ்தென்காவின் வலது கையைப் பிடித்தபடி பேச ஆரம்பித்தார். அவர் பேசப்பேச அந்தக்குரல் என்னுடைய குரலாக மாறியது. வெண்ணிற இரவுகளின் கனவுலக வாசியாக நானே மாறியிருந்தேன். ஆனால் என்னுடைய நாஸ்தென்கா..? இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன். நாஸ்தென்கா!
 
கோவில்பட்டியின் மற்றுமொரு இலக்கியச் சந்திப்பு மையமாக கதிரேசன் கோவில் மலை இருந்தது. ஒரு அந்திப்பொழுதில் சூரியனின் கதிர்கள் சாய்ந்து விழுந்து கொண்டிருந்த வேளை மலையின் மடியெங்கும் விரிந்து பரந்திருந்த கோரைப்புற்கள் காற்றில் ஆடின. ஆடிக்கொண்டிருந்த அந்தப்புல்வெளி எப்போது ருஷ்யாவின் ஸ்தெப்பிப் புல்வெளியாக மாறியது? உங்களுக்குத் தெரியுமா? அன்று நாங்கள் சிங்கிஸ் ஐத்மாத்தவின் ஜமீலாவை வாசித்திருந்தோம். எங்களுக்கு முன்னால் விரிந்திருந்த அந்த ஸ்தெப்பிப் புல்வெளியில் தானியாரின் குதிரை வண்டி ஓடிக்கொண்டிருந்தது. அந்த வண்டியின் பின்னால் ஜமீலாவின் வண்டியும் ஓடியது. காற்றின் கீதத்தில் காதல் கனிந்திருந்தது. ஜமீலாவின் வண்டியில் அவளையே பார்த்துக் கொண்டு அவளுடைய மைத்துனனான கிச்சினே பாலா நின்று கொண்டிருந்தான். அவனுடைய அண்ணனின் மனைவியான ஜமீலா போர்முனையில் காயம்பட்டுத் திரும்பிவந்த யாருமற்ற அநாதையான தானியாரைக் காதலிக்கிறாள். அவனால் நம்பவே முடியவில்லை. முரடனான, அழகற்ற தானியாரின் மீது ஜமீலா காதல் கொள்வதற்கு எது காரணமாக இருக்கும்? கிச்சினே பாலா யோசிக்கிறான். தானியாரும் ஜமீலாவைக் காதலிக்கிறான். ஸ்தெப்பியின் புல்பரப்பில் தானியாரின் பாடல் துடிக்கிறது. அதைக் கேட்ட பிறகே ஜமீலா தானியாரின் வண்டியில் ஏறி மலைக்கு அப்பால் போய்க் கொண்டிருக்கிறாள். கிச்சினே பாலா வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறான். காதலின் உன்னதம் பொங்கும் அந்த ஸ்தெப்பிப் புல்வெளியில் நான் கிச்சினே பாலா... இல்லையில்லை தானியார்..என்னுடைய ஜமீலா.. போய்க்கொண்டிருக்கிறாள். ஆனாலும் நான் அமைதியாக இருக்கிறேன்...சிங்கிஸ் ஐத்மாத்தவ் என்னுடைய தவிப்பைப் பார்த்துச் சிரிக்கிறார்.
 
கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அலாதியான தனிமையில் தனியே உட்கார்ந்திருந்தது. ஓவியம் போல அசையாமல் இருக்கும் வேப்பமரங்களில் எப்போதாவது வந்து உட்காரும் ஒன்றிரண்டு காகம். அதுவும் அசையாமல் இருந்திருந்து பார்த்து விட்டு தான் உயிரோடு இருப்பதைத் தானே உறுதிப்படுத்திக் கொள்வதைப் போல கா..கா..கா.. என்று கரைந்து விட்டுப் பறந்து போய் விடும். ஒரு அதிகாலை நான் ரயில்வே ஸ்டேஷனின் தவத்தைக் கலைக்காமல் அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். ரயில் வருவதற்கு வெகுநேரம் இருந்தது. நீண்ட அங்கியும், பணக்காரத்தோற்றமும், நீளமான தாடியும் கொண்ட தளர்ந்த வயதான லியோ டால்ஸ்டாய் சற்று தூரத்தில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தார். அவர் முகம் துயருற்றிருந்தது. அவருடைய முடிவை அவரே பார்க்கப்போவது போல விரக்தியுடன்                  கைகளை நெட்டி முறித்தார். அங்கியின் பையிலிருந்து காகிதத்தை எடுத்து ஏதோ எழுதினார். அவர் எழுதியதை மீண்டும் பைக்குள் வைத்து விட்டு நிமிர்ந்து பார்க்கும்போது பிளாட்பாரத்தில் அன்னாகரீனா நடந்து வந்து கொண்டிருந்தாள். இன்னும் சற்று நேரத்தில் வரப்போகிற ரயிலின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்யப்போகிறாள். 
 
அன்னாவை என் லட்சியக்காதலியாகக் கொண்டிருந்த என்னால் அதற்கு மேல் அங்கிருக்கப்பிடிக்கவில்லை. இவான் துர்கனேவின் ஆஸ்யாவும், முதல் காதலும், ஆச்சரியமளித்தன. அவருடைய  தந்தையரும் தனயரும் வாசித்து விட்டு நாங்கள் கொண்டிருந்த கம்பீரமான துர்கனேவ் மூன்று காதல் கதைகளில் தன்னுடைய மெல்லுணர்வுகளை எல்லாம் கொட்டித்தீர்த்திருந்தார். நாங்களும் முணுமுணுத்தோம். காதல் ஒரு வசீகரமான மர்மம்.
 
வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் ஒரு விட்டேத்தியான மனநிலை இருந்தது. அப்போது தான் நான் தான் உங்கள் கதாநாயகன் என்று சொல்லிக்கொண்டு லெர்மென் தேவ் வந்தார். நம் காலத்து நாயகன் நாவலை நாங்கள் நம்முடைய சமூகச்சூழலோடு ஒப்பிட்டோம்.   செகாவின் ஆறாவது வார்டில் பைத்தியக்காரத்தனத்துக்கு சற்றும் குறைவில்லாமல் நம்முடைய சமூகம் இருந்ததைக் கண்டோம். அலெக்சாண்டர் குப்ரின் மாணிக்கக் கங்கணம் என்ற மகத்தான காதல் கதையை எழுதினார்.
 
ருஷ்யா கோவில்பட்டியில் இருந்தது. பீட்டர்ஸ்பர்க்கின் பனிபொழியும் தெருக்களில் நடந்து திரிந்தோம். லெனின்கிராட் மைதானத்தில் அமர்ந்து உலக அரசியலைப் பற்றி விவாதித்தோம். ருஷ்ய, சோவியத் இலக்கியங்களில் வந்த நடாஷாவையும், ஆஸ்யாவையும், அன்னாவையும், ஜமீலாவையும், நாய்க்காரச் சீமாட்டியையும், காதலித்துக்கொண்டிருந்தோம்.  சோவியத் புத்தகங்கள் இல்லாத வீடுகளே இல்லை. குழந்தைகள் பத்திரிகை, சினிமா பத்திரிகை, அறிவியல் பத்திரிகை என்று பத்திரிகைகள் வீடுகளுக்கு வந்து கொண்டிருந்தது. வாசிப்பின் வழியே எங்களுக்கான ஒரு உலகைப் படைத்துக் கொண்டோம்.
 
இந்த ஆண்டும் வெயில் கொளுத்துகிறது. ஆவி பறக்கிறது. ஆனால் பனி பொழியவில்லை. பீட்டர்ஸ்பர்க் நகரமாக மாறுகிற மாயாஜாலம் நடக்கவில்லை. இப்போதும் கதிரேசன் கோவில் மலை இருக்கிறது. கீழே ஸ்தெப்பிப்புல்வெளி இல்லை. காற்றில் நிறைந்து வரும் காதலின் கீதம் இல்லை. காங்கிரிட் காடுகள் முளைத்து புகை விடுகின்றன. இப்போதும் தோழர்கள் இருக்கிறார்கள். புரட்சி பற்றிய கனவின் சுவடு கூட அவர்களிடம் இல்லை. ஆனால் புஷ்கினும், டால்ஸ்டாயும், தாஸ்தயேவ்ஸ்கியும், செகாவும், கார்க்கியும், லெர்மன் தேவும், குப்ரினும், ஷொலகோவும்,, அலக்சி டால்ஸ்டாயும், சிங்கிஸ் ஐத்மாத்தவும், வசீலியும், அமானுஷ்யமாய் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒரு இளம் வாசகன் அவர்களுடைய படைப்புகளை வாசிக்கும்போது அருகில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த இளம் வாசகனின் முகத்தில் தெரியும் உணர்ச்சி மாற்றங்களைக் கண்டு புன்னகை பூக்கிறார்கள். காலத்தால் அழியாத தங்களுடைய படைப்புகளின் மீதான நம்பிக்கையோடு சற்று கர்வத்துடன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.
 
 
[ அந்திமழை ஜூலை -2017 ;  இடதுசாரி எழுத்துக்கள் சிறப்பிதழில் வெளியான கட்டுரை. ]


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...