???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு 0 ஹைதராபாத்தில் மீண்டும் ஆணவக்கொலை முயற்சி: பெண்ணின் தந்தை வெறிச்செயல்! 0 முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் 0 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் 0 பாங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு! 0 தென்னிந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 51.99 லட்சம்! 0 கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இடதுசாரி எழுத்து : மார்க்ஸின் ஆதர்ச எழுத்தாளர் – எஸ்.ராமகிருஷ்ணன்

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2017  05:47:25 IST


Andhimazhai Image
ருஷ்யப் புரட்சிக்குப் பிறகு புரட்சிகர இலக்கியங்கள் எனப்படும் இடதுசாரி இலக்கியங்கள் ரஷ்யாவில் அதிகம் எழுதப்பட்டன. ஆனாலும் உண்மையான இடதுசாரி சிந்தனையை முதன்மைப்படுத்திய எழுத்தாளர்கள் பலரும் ரஷ்யாவிற்கு வெளியேதானிருந்தார்கள். 
 
புரட்சிக்கு முன்பாக எழுதப்பட்ட ரஷ்ய இலக்கியங்களே உலகின் உன்னதப் படைப்புகளாகக் கொண்டாடப்படுகின்றன. புரட்சிக்குப் பிறகு ரஷ்ய இலக்கியம் பெரிய உச்சத்தைத் தொடவில்லை. மாறாக நேரடியான பிரச்சார எழுத்தை, இலக்கியவாதிகளின் மீதான ஒடுக்குமுறைகளை, கலாச்சாரத் தணிக்கையை உருவாக்கின.
 
தொழிலாளர் வர்க்கத்தின் குரல் ரஷ்ய இலக்கியங்களில் பதிவு செய்யப்படுவதற்கு முன்பாகப் பிரெஞ்சு இலக்கியங்களில் தான் எதிரொலித்தது. விக்டர் கியூகோவும், பால்சாக்கும், எமிலி ஜோலாவும், ஸ்டெந்தாலும், பிளாபெர்டும் பிரெஞ்சு சமூகத்தின் மனசாட்சியைக் கேள்வி கேட்டார்கள். 
 
வேசைகள், திருடர்கள், குற்றவாளிகள் எனச் சமூகத்தால் துரத்தப்பட்டவர்களின் துயரக்கதையை எழுதினார்கள். தொழிற்சாலை களில் பணியாற்றும் ஏழை எளிய மக்களின் அவலங்களைக் காட்சிப்படுத்தினார்கள். சேரிகளில், இருட்டறைகளில் வசித்து வந்த அடித்தட்டு மக்களின் அவலத்தை விக்டர் கியூகோ வெளிச்சமிட்டுக் காட்டினார். 
 
இன்னொரு பக்கம் மரண தண்டனைக்கு எதிராகவும், அரசு எதிர்ப்பு குரலை உயர்த்திப் பிடித்ததிலும் விக்டர் கியூகோ முதன்மையான படைப்பாளியாக விளங்கினார். ஆகவேதான் கார்ல் மார்க்ஸ் தனது ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவராக விக்டர் கியூகோவை குறிப்பிடுகிறார். 
 
பிரெஞ்சு இலக்கியத்தின் தாக்கம் காரணமாகவே ரஷ்ய இலக்கியத்தில் அடித்தட்டு மக்களைப்பற்றிய கவனம் உருவானது. கோகலும், டால்ஸ்டாயும், தஸ்தாயெவ்ஸ்கியும் செகாவும் வறுமையில் பீடித்தவர்களை, உழைப்பாளர்களை முதன்மைப்படுத்திய வாழ்க்கையைக் கதைகளாக எழுதத் துவங்கினார்கள். 
 
உலக இலக்கியத்தின் நாயகர்களாக இருந்தவர்கள் அரசர்கள், பிரபுக்கள் மற்றும் போர் வீரர்கள். சாகச நாயகர்கள். அவர்கள் மட்டும் கதாபாத்திரங்களில்லை. சாமானிய மனிதனும் ஒரு நாயகனே என்று முதன்மைப்படுத்தியதே பிரெஞ்சு இலக்கியங்களின் தனித்துவம். அங்கிருந்தே இடதுசாரி இலக்கியத்தின் ஆதாரங்கள் உருவாகின. 
 
சார்லஸ் டிக்கன்ஸ் இடதுசாரி எழுத்தாளரில்லை. ஆனால் அவரது படைப்புகள் யாவும் இடதுசாரி சிந்தனையைக் கொண்டவையே. குறிப்பாகக் குழந்தை தொழிலாளர்கள் பற்றி டிக்கன்ஸ் எழுதிய அளவிற்கு எவரும் எழுதியதில்லை. 
 
ரஷ்ய இலக்கியங்கள் பண்ணை அடிமை முறைக்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகள் குறித்தும், பெண்விடுதலை குறித்தும், மத அரசு அதிகாரங்களை எதிர்த்தும் தனது குரலை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளன. உண்மையில் இந்த இலக்கியச் செயல்பாடுகளே புரட்சிக்காக விதையை மக்கள் மனதில் விதைத்தன. 
 
புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட லெனின் அரசும், ஸ்டாலின் அரசும் இலக்கியத்தை அரசு நிறுவனமாகக் கருதியதோடு. அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இலக்கியம் வளைந்து கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியது. குறிப்பாக ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் தண்டிக்கப்பட்ட, கொலை செய்யப்பட்ட, நாடு கடத்தப்பட்ட எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிக அதிகம். 
 
அரசும் அதிகாரமும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து அவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவிவிடும் போது மக்கள் தங்கள் உரிமைகளை மீட்கக் குரல் கொடுக்கிறார்கள். அந்தக் குரலை பிரதிபலிப்பதே உண்மையான இடதுசாரி இலக்கியம். 
இடதுசாரி எழுத்தாளர்கள் உலகெங்கும் இதையே மேற்கொண்டிருக்கிறார்கள். சுரண்டல் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக, பன்னாட்டு நிறுவனங்களின் மோசடிகளுக்கு எதிராக, மத, இன வெறிகளுக்கு எதிராக, வரலாற்றில் ஒடுக்கபட்ட மக்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதே இடதுசாரி இலக்கியம்.உலகெங்கும் சமத்துவச் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் இடதுசாரி எழுத்தாளர்கள் ஒன்று போலவே செயல்படுகிறார்கள். 
 
முதலாளித்துவத்தின் அடையாளமாகக் கருதப்படும் அமெரிக்காவிலும் தீவிரமான இடதுசாரி எண்ணம் கொண்ட படைப்பாளிகள் இருந்தார்கள். புரட்சியின் அடையாளமாகக் கருதப்படும் ரஷ்யாவிலும் பிற்போக்கு வாதிகள் இருந்தார்கள் என்பதே உண்மை. 
 
கம்யூனிஸ்ட் அரசாங்கமாகச் சீனா இருந்த போதும் அங்கிருந்து வெளியான முக்கியப் படைப்புகளில் பெரும்பான்மை கம்யூனிச எதிர்ப்பையே முதன்மைப்படுத்தின. குறிப்பாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒநாய் குலச்சின்னம் நாவல் சீனாவின் கலாச்சாரப் புரட்சியைக் கண்டித்து எழுதப்பட்டதே. 
 
சீனப் படைப்பாளிகளில் பலரும் தேசத் தைவிட்டு வெளியேறி அமெரிக்காவிலும். பிரான்சிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வசித்த படியே எழுதுகிறார்கள். அவர்களில் இடதுசாரி எழுத்தாளர்கள் என எவரையும் அடையாளப்படுத்த முடியாது. 
 
நோபல் பரிசு பெற்ற மோயான் போன்றவர்களின் படைப்புகள் கூட இடதுசாரி இலக்கியமாகக் கருதப்படுவதில்லை. மாறாகச் சீனப் பண்பாட்டு மாற்றங்களை, தொழில்மயமாவதன் நெருக்கடிகளை, உலகமயமாக்கலின் விளைவுகளைப் பேசுகின்றன என்றே சொல்ல முடிகிறது. 
 
லூசுன் சீனாவின் முதன்மையான முற்போக்கு இலக்கியவாதி. போர்க்குரல் என்ற லூசுன் சிறு கதைத் தொகுப்பினை கே.கணேஷ் மொழியாக்கம் செய்திருக்கிறார் லூசுன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தவரில்லை. ஆனால் புரட்சிகரச் சிந்தனைகளுடன் எழுதியவர். அவரை மாவோ அட்டையில்லாத கம்யூனிஸ்ட் உறுப்பினர் என்று கூறினார். 
 
லூசுன் சிறுகதைத்தொகுப்பில் பைத்தியக்காரனின் குறிப்புகள் என்றொரு சிறுகதை உள்ளது. உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இக்கதை கொண்டாடப்படுகிறது. எட்கர் ஆலன்போ வின் சிறு கதைகளில் காணப்படுவது போன்ற இருண்மையில் உழலும் மனிதர்களே லூசுன் கதைகளிலும் இடம்பெறுகிறார்கள். 
 
1881ம் ஆண்டில் சீனாவில் பிறந்த லூசுன் சிறு வயதிலே தந்தையை இழந்தவர். வறுமையான சூழல் அவரை முடக்கியது. படிப்பதில் ஆர்வமான அவர் மருத்துவம் படிக்க உதவித் தொகை பெற்று ஜப்பான் சென்றார். மருத்துவம் படித்த நாட்களில் தீவிர இலக்கிய ஆர்வம்கொண்டு பைரன், ஷெல்லி, புஷ்கின் எனத் தேடி அலைந்து தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தார். மருத்துவத்தைவிடவும் இலக்கியமே அவரை அதிகம் ஆட்கொண்டது. 
 
ஒரு மருத்துவராக நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்வதை விடவும் சிந்தனையாளராக, எழுத்தாளராக இந்தச் சமூகத்திற்குச் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்று உணர்ந்த லூசுன் எழுத்தாளராக உருமாறினார். 
 
இடதுசாரி எழுத்துகள் லத்தீன் அமெரிக்காவில் தான் விஸ்வரூபம் கொண்டன. காரணம் அங்கிருந்த அரசியல் சூழ்நிலை. குறிப்பாகப் பாப்லோ நெருதா, காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஜார்ஜ் அமேதோ போன்ற எழுத்தாளர்கள் தன்னை இடதுசாரிப் படைப்பாளியாக அறிவித்துக் கொண்டார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் பிரதிபலித்தார்கள். 
 
லத்தீன் அமெரிக்காவின் முக்கியக் கவிஞர் எர்னெஸ்ட்டோ கார்டினல். இவர் சொமோஸாவின்  சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நடந்த கிளர்ச்சியில் பங்கு பெற்றார். அதன் தோல்வியின் பின்பு அமெரிக்கா சென்று கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்தார். பாதிரியாகப் பணியாற்றிய போதும் புரட்சிகரச் சிந்தனைகளுடன் கவிதைகளை எழுதியவர் எர்னெஸ்டோ கார்டினல். இவரே நிகாரகுவாவின் முக்கிய இடதுசாரிக் கவிஞர். 
 
அமெரிக்கக் கருப்பின மக்களின் மகத்தான கவியாகக் கருதப்படுகிறவர் லாங்ஸ்டன் ஹ்யூஸ். ஹ்யூஸின் கவிதைகள் ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் பங்களிப்பை அடையாளப்படுத்துவன. இனவெறிக்கு எதிரான மிகக் காத்திரமான இலக்கியக் குரலாக லாங்ஸ்டன் ஹ்யூஸ் கருதப்படுகிறார். இவர் தன்னை ஒரு இடதுசாரியாகவே எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்கிறார். 
 
மக்கார்த்தி யுகத்தின்போது இவர் இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்பு கொண்டதற்காக லாங்ஸ்டன் ஹ்யூஸ் விசாரணை செய்யப்பட்டார். ஹ்யூஸின் கவிதைகள் 10 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஐந்து புனைகதைத் தொகுப்புகள், ஒரு நாடகம், மூன்று வரலாற்று நூல்கள், சிறுவர் நூல்கள் என்பன உட்பட 36 நூல்கள் எழுதியிருக்கிறார் . 
 
பால் எலுவர்ட், தனது கவிதைகளில் போர் எதிர்ப்பு நிலைப்பாட்டைத் தெளிவாக்கியுள்ளார். பெய்ஸ் அகமது பெய்ஸ், தர்வீஸ், நஸீம் ஹிக்மத் போன்ற கவிஞர்கள் தனது கவிதைகளின் வழியே இடதுசாரி சார்புநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
 
ஐம்பத்து மூன்று நாடகங்களை எழுதிய பெர்தோல்ட் பிரெக்ட் ஜெர்மனியின் மிக முக்கிய இடதுசாரி எழுத்தாளராக அறியப்பட்டவர். பிரெக்ட்டின் நாடகங்கள் மக்களை எவ்வளவு கவர்ந்தனவோ அந்த அளவுக்கு நாஜிகளின் வெறுப்பைச் சம்பாதித்தன. ஆகவே பிரெக்ட்டால் ஜெர்மனியில் வாழ முடியவில்லை. புலம் பெயர்ந்து சுவீடனில் வாழ்ந்த பிரெக்ட் கடைசி நாட்களில் இறுதியில் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தார். அரசியல் தன்மை கொண்ட படைப்புகளை உலகுக்கு வழங்கியவர் இடதுசாரி இலக்கியப் பரப்பில் பிரெக்ட்டின் கவிதைகளுக்கு  முக்கிய இடமிருக்கிறது. 
 
சமகால இடதுசாரி எழுத்தாளர்களில் முக்கியமானவர் எடுவர்டோ கலியானோ (Eduardo Galeano ) இவர் உருகுவேயைச்  சேர்ந்தவர், பத்திரிகையாளராகத் துவங்கி முக்கிய வரலாற்றுஆசிரியராகவும் நாவலாசிரியராகவும் அறியப்பட்டார். இவரது Mirrors: Stories of Almost Everyone முக்கியமான நூல். கலியானோவின் எழுத்து, நேரடியான அரசியல் ஈடுபாடும் இடதுசாரிக் கருத்தியலும் கொண்டது. 
 
கவிஞர் ரவிக்குமார் எடுவர்டோ கலியானோவின் முக்கியக் கட்டுரைகளை மொழியாக்கம் செய்து வரலாறு என்னும் கதை என்ற சிறு நூலாக வெளியிட்டுள்ளார், மனித குல வரலாற்றின் முக்கியமான, அறியப்படாத செய்திகளை, மறைக்கப்பட்ட வரலாற்றை, அறிவியல் உண்மைகளை, ஆளுமைகளை முதன்மைப்படுத்தி எட்வர்டோ கலியானோ எழுதிய  ‘சில்ரன் ஆஃப் தி டேஸ்: எக் காலண்டர் இன் ஹ்யூமன் ஹிஸ்டரி’ இன்னொரு முக்கியப் படைப்பாகும். 
 
பத்திரிகையாளராகப் பணியாற்றிய கலியானோ உருகுவே நாட்டிலும் நடந்த ராணுவப் புரட்சியின் போது கைது செய்யப்பட்டார். விடுதலையாகி நாட்டை விட்டு வெளியேறி பதிப்பக எடிட்டராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். இவரது லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்தநாளங்கள் நூல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. ராஜன் மொழிபெயர்த்துள்ளார். லத்தீன் அமெரிக்காவின் வரலாற்றை அதன் சமூகம் ,பண்பாடு, அரசியல் பொருளாதார நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் ஊடாக இந்நூல் விவரிக்கிறது. 
 
ஜோனா ரஸ்கின் எடுத்த நேர்காணலில் கலியானோ இவ்வாறு கூறுகிறார்.  “நேர்மையாக எழுதுவது என்பது மிக முக்கியமானது. நாம் பேசும் வார்த்தைகளை வைத்துதான் ஒருவரை மற்றவர் அறிந்து வைத்திருக்கிறோம். நான் ஒரு  சொல்லை உங்களுக்குத் தரும்போது என்னையே தருகிறேன்”. 
 
இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லும் போது ” இயற்கைக்கு எதிராக இழைக்கப்படும் எந்தவொரு குற்றமும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றமே. உலகமானது இன்று துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டிருக்கும் ஓரிடத்தில் தட்டுத் தடுமாறிச் செல்லும் குருடனைப் போலவேயிருக்கிறது ” என்கிறார். 
 
செக் எழுத்தாளரான மிலன் குந்தேரா சில காலம் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டார். ஆனாலும் இவரது படைப்புகளை இடதுசாரி படைப்புகள் எனக் கூறமுடியாது. இத்தாலியில் பசோலினி, செசார் பவேஸ், ஆல்பெர்ட்டோ மொராவியோ ஜியோனி ரோடரி, டான் கமிலோ,   ரோசனா ரோசன்டா ஆகியோர் நேரடியாகக் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் பங்கேற்றுச் செயல்பட்ட எழுத்தாளர்கள் ஆவார். 
 
ரோசா லக்ஸம்பர்க், டெரி ஈகில்டன், லுகாக்ஸ், அண்டோனியோ கிராம்ஷி , அல்தூசர், போன்ற முக்கிய இடதுசாரி சிந்தனையாளர்களும் ரஷ்யாவிற்கு வெளியே உருவானவர்களே. 
டால்ஸ்டாயும், தஸ்தாயெவ்ஸ்கியும், துர்கனேவும், ஆன்டன் செகாவும் கோலோச்சிய ரஷ்ய இலக்கிய உலகில் இன்றைய இலக்கியம் முக்கியமானதாகக் கொண்டாடப்படவில்லை. அதைவிடவும் குறிப்பிடத்தக்க இடதுசாரி எழுத்தாளர் எவரும் இன்று ரஷ்யாவில் உருவாகவில்லை என்பதே வரலாறு காட்டும் நிஜம்.
 
 
[ அந்திமழை ஜூலை -2017  இடதுசாரி எழுத்துக்கள் சிறப்பிதழில் வெளியான கட்டுரை. ]


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...