???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநரைச் சந்தித்தார் முதல்வர் பழனிசாமி 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் எதிரொலி : மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அதிரடி மாற்றம் 0 தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட் கிளையில் மனு 0 கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற குமாரசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து 0 கர்நாடகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் குமாரசாமி 0 தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி 0 தூத்துக்குடியில் தொடரும் பதற்றம்: காவல்துறை வாகனம் தீ வைத்து எரிப்பு 0 துப்பாக்கி தோட்டாக்களால் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது: ராகுல்காந்தி பொளேர் 0 தூத்துக்குடி பெருந்துயரத்துக்கு யார் காரணம்? ப.சிதம்பரம் விளாசல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: தமிழக அரசு விளக்கமளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு 0 ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: விஜய் சேதுபதி கடும் கண்டனம் 0 தூத்துக்குடியில் தொடரும் பதற்றம்: இயல்பு வாழ்க்கை முடங்கியது 0 தூத்துக்குடியில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு 0 பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜோ டி குரூஸின் கருத்துரிமையை முடக்கிக் கொண்டே பெருமாள்முருகனின் கருத்துரிமையைக் காப்பாற்ற முடியாது!

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   29 , 2017  04:08:26 IST


Andhimazhai Image
 
-லீனா மணிமேகலை
 
 
ஆங்கிலேயர் காலத்தில் இருந்த தணிக்கை முறைகளின் நீட்சிதான் சுதந்திர இந்தியாவில் சென்சார்போர்டு என்ற வடிவில் தொடர்ந்தது. எண்பதுகளின் பிற்பகுதியில் தான் சென்சார் போர்டு எதையும் தணிக்கை செய்யக்கூடாது, படங்களில் எந்த வெட்டும் தரக்கூடாது என்று விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தார்கள்.  சென்சார் போர்டு செர்டிஃபிகேஷன் (Certification)) போர்டாக பெயர் பெற்று வெறும் சான்றிதழ் மட்டுமே தரக்கூடிய அமைப்பாக மாற்றப்பட்டது. சட்டம் கலைஞர்களுக்கு கருத்துரிமை வழங்குகிறது. அத்துடன்  பார்வையாளர்களுக்கு தணிக்கை இன்றி படங்கள் பார்க்கும் உரிமையையும் பாதுகாக்கிறது. அதனால்தான் எப்போதும் சென்ஸார் போர்டை எதிர்த்து நீதிமன்றம்செல்லும் போது இயக்குநர்களால் வெற்றி பெறமுடிகிறது. ஆனால் நடைமுறை? ஆட்சிகள் மாறும்போது பிராந்திய CBFC (Central Board of Film Certification; C என்றால் censor அல்ல கவனிக்கவும் ) அலுவலகங்களில் அரசியல் ரீதியில் நியமனங்கள் நடைபெறுகின்றன. இவர்களுக்கும் சினிமாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மத்திய CBFC தலைவர் பங்கஜ் நிஹ்லானி நேரடியாக தன்னை மோடியின் கையாள் என்று சொல்லிக்கொள்கிறார். நியமனம் செய்யப்பட்ட ஆட்கள் தங்கள் அரசியல் மாஸ்டர்களை  உற்சாகப் படுத்துவதற்காக செயல்படுகிறார்கள். இதில் யாருமே படைப்பாளியைப் புரிந்துக் கொண்டவர்கள் கிடையாது.
 
 
 இது ஏன் பூதாகரமாக வெடிக்கவில்லை என்றால் நமது திரைப்பட உலகம் வணிகப் படங்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் வெளியீட்டுக்கு நேரம் குறித்துவிட்டு தணிக்கைச் சான்றிதழ் பெறச் செல்லும்போது, பல இடங்களில் வெட்டச் சொன்னாலும் ஊழல் பேரங்களால் சரிக்கட்டப்படுகின்றன. வணிகப்படம் எடுத்தவர்கள் தணிக்கைச்சான்றிதழ் பெறுவதையே பெரிய சாதனையாக எண்ணி விளம்பரங்கள் கொடுப்பதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். சினிமாத்துறையில் நடக்கும் இந்தக் கோமாளித்தனத்தைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை. முதலில் அறுபது வெட்டுகள் கொடுப்பதும் பேரத்துக்குப் பிறகு அது நாற்பதாகக் குறைவதும் நடக்கிறது. இல்லையெனில் கபாலி போன்ற படத்துக்கு ‘யு’சான்றிதழ் வாங்க முடியுமா? அமெரிக்காவிலேயே அது யு/ஏதான்.
 
 
 நான் முதல்முதலில் என்னுடைய ‘பறை’ படத்தை CBFC க்கு எடுத்துச் சென்றேன். அதற்கு முன்னால் நான் எந்த சான்றிதழும் வாங்கியது கிடையாது. ஏன் போனேன் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதற்கு முன்பெல்லாம் திரைப்பட விழாக்களில், பிலிம் சொசைட்டிகளில் படம் திரையிடுவதற்கு எந்த சென்சாரும் வேண்டியிருந்ததில்லை. ஆனால் பாஜக முதல்முதலில் ஆட்சிக்கு வந்த காலத்தில் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளும் படங்களுக்கும்சென்ஸார் தேவை என்று அறிமுகப்படுத்தப்பட்டது.திரைப்பட விழாக்கள் என்பவை படைப்புசுதந்தரத்துக்கானவை, அங்கும் தணிக்கையா என்று 300க்கும் மேற்பட்ட சுதந்தரப் படைப்பாளிகள் ஒன்று சேர்ந்துப் போராடி, இந்த விதியை விலக்க வைத்தார்கள். ஆனால் இன்றும் தணிக்கைச்சான்றிதழ் இல்லாவிட்டால் இந்த தேசத்தின் அதிக பட்ச அங்கீகாரங்களான இந்தியன் பனோரமாவுக்கும், தேசியவிருதுக்கும் படம் அனுப்ப முடியாது. இந்தியன் பனோரமாவில் தேர்வானால் தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் படம் பாதுகாக்கப்படும். அவற்றை அரசுத் தொலைக்காட்சி (Doordharshan) வாங்கிக்கொண்டு ஒளிபரப்பும். இதெல்லாம் திரைப்படக் கலைஞர்களுக்கு பொருளாதார ரீதியில் மிகமுக்கியமான அம்சங்கள். இணையம் பலப்படும்வரை இந்தியன் பனோரமா தான் தேர்வான படங்களை வெளிநாடுகளில் நடக்கும் விழாக்களுக்கு அனுப்பிவைப்பார்கள். ஆனால் பனோரமா தேர்வுக்கும் தணிக்கைச் சான்றிதழ் அவசியம் என்பது தான் அதில் சிக்கல்.  இன்றுவரை 35எம்எம் பிரிண்டை வெளிநாட்டுக்கு அனுப்பவேண்டும் என்றால் சென்ஸார் சான்றிதழ் இல்லாமல் அனுப்பமுடியாது என்ற அபத்தமான விதி உள்ளது. இப்போதைய ‘வீமியோ’ காலத்தில் கூட இந்த விதிகளில் எந்தவிதப் பரீசீலனைகளும் வரவில்லை. இன்றும் நமது நாட்டுக்குள் உங்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என்றால் தணிக்கைச் சான்றிதழ் இல்லாமல் விண்ணப்பிக்கக் கூட முடியாது என்ற வெட்கக்கேடான நிலைமையை சகித்துக் கொண்டு ‘ஈரானில்‘ தணிக்கை என்று உச்சு கொட்டுவதற்கு நமக்கென்ன தகுதியிருக்கிறது?
 
 
இதுவரைக்கும் தேசிய விருது தேர்வுக்கு என்னுடைய ஒரு படத்தையும் அனுப்பியதில்லை. என்னுடைய Goddesses படம் மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் சர்வதேசப் பிரிவில் தங்கப்பதக்கம் வாங்கியது. அந்தப்படத்தைக்கூட தேசிய விருதுக்கு நான் அனுப்பிவைக்க வில்லை. ஏனெனில் அதற்குச்  ‘சான்றிதழ் இழவை’ வாங்க வேண்டும்.
 
 
செங்கடலுக்கு தணிக்கை சான்றிதழைத் தயாரிப்பாளர் பெயரில் வாங்கினோம். ஆனால் தயாரிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கவே இல்லை என்பதை சமீபத்தில் தான் தெரிந்துக்கொண்டேன்.
 
 
படத்திற்கு  CBFC வெட்டுகள் தர நேரும்போது, அதை மறுக்க மறுபரீசலனை கமிட்டிக்கு எடுத்து செல்ல வேண்டும். அதற்கான செலவுகளுக்கு நாம் தான் பணம் கட்டவேண்டும். அங்கிருந்து மத்திய டிரிபியூனல் போகலாம். அங்கேயும் வழக்கறிஞருக்கு நாம்தான் பணம்கொடுத்து வாதாட வேண்டும். ஆனந்த் பட்வர்த்தன் போன்றவர்கள் ஒவ்வொரு படத்துக்கும் இப்படித்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ட்ரிபியூனலில் ஜெயிக்கவில்லை என்றால் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போட்டு வாதாடவேண்டும்.
 
 
செங்கடல் படத்துக்கு முதலில் இங்கே தடைகொடுத்து விட்டார்கள். எங்கேயும் திரையிட முடியாது. நான் இங்கே மறுபரிசீலனைக் குழுவுக்கெல்லாம் போகவில்லை. அதற்கே 25000 ரூபாய் செலவாகிற மாதிரி இருந்ததால், நேரடியாக ட்ரிபியூனலுக்கே சென்று வழக்காடினேன். ட்ரிபியூனலில் சென்ஸார் போர்டின் தடையை ரத்து செய்து வழிகாட்டுதல்கள் கொடுத்தார்கள். அதை எடுத்துக்கொண்டு திரும்ப சென்னைக்கு வந்து, டிரிபியூனல் கொடுத்த விதிகள்படி அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவுக்கு போட்டுக் காண்பித்துதான் சான்றிதழ் வாங்கினேன். இது படம் எடுப்பதை விட அதிக பொறுமையையும் சக்தியையும் உறிஞ்சும் வேலை.
 
 
 
சென்ஸார் போர்ட் போல செயல்படும் CBFCயைக் குப்பையில் தூக்கிப்போட வேண்டிய காலம் வந்துவிட்டது. சுதந்தரமான ஓர் அமைப்பு, அரசால் கட்டுப்படுத்த முடியாத ஓர் அமைப்பைச் சான்றிதழ் வழங்கும் பொருட்டு அமைத்துக் கொள்ளலாம்.  இந்த  சான்றிதழ் விவகாரத்திலும் ஒரு சிக்கல் உள்ளது.
 
 
செங்கடலுக்கு ‘ ஏ‘ கொடுத்தார்கள். ஏனெனில் அந்தப் படத்தில் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற வாழும் தலைவர்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன என்று காரணம் சொன்னார்கள்.  நான் இதையும் எதிர்த்து உச்சநீதி மன்றம் போகலாம். அதற்கெல்லாம் எனக்கு சக்தி இல்லை என்பதால் விட்டுவிட்டேன். ‘ஏ‘ சான்றிதழ் இருக்கும் படங்களை பனோரமாவுக்குத் தேர்வானாலும் தூர்தர்ஷனில் வாங்க மாட்டார்கள். தூர்தர்ஷன் கொடுக்கும் பணம், அதற்கு  இருக்கும் பார்வையாளர் எண்ணிக்கை எல்லாவற்றையும் இழக்கவேண்டியிருக்கும். தியேட்டர்களும் வினியோகத்திற்கு எடுக்க மாட்டார்கள். நம்ம நாட்டைப் பொறுத்தவரை ஒரு படைப்பாளிக்கு,  ‘ஏ’ சான்றிதழ் ‘கொலைத் தண்டனைக்கு‘ சமமானது தான்.
 
 
முதல் உலக நாடுகளில் இங்கிருப்பது போன்ற சிஸ்டம் இல்லை. உதாரணத்திற்கு ஒரு படத்தில் கடுமையான சொற்பிரயோகம் இருக்குமெனில் அதை வெட்டமாட்டார்கள். இதில்  Strong Language பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று டிஸ்கிளைமர் போடுவார்கள். அவ்வளவுதான். ஒரு நேர்மையான படைப்பாளியால் தன் படத்தில் வெட்டுவிழுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீங்கள் ஒரு நாவல் எழுதுகிறீர்கள். பதிப்பாளர் அதில் ஒன்றுக்குப் பாதியாக வெட்டிவிட்டுத்தான் பதிப்பிப்பேன் என்றால் ஏற்றுக்கொள்ளமுடியுமா? அதேதான். ஆனால் இந்த தார்மீகக் கோபமே இங்கிருக்கும் படைப்பாளிகளுக்கு இல்லையே!
 
 
சமீபத்தில் ‘Lipstick Under My Burka” என்று ஒரு படத்துக்கு CBFC தடைகொடுத்தபோது, நீதிபதி, ‘ ஏன் இப்படி நடந்துக்கிறீங்க.. உங்கள் வேலை A, U, U/A என தரம்பிரித்து சான்றிதழ் தருவது தானே.. ஏன் இப்படி தலைவலி கொடுக்கிறீங்கன்னு” வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்.
 
 
இதுவரை நாம் விவாதித்தது  சட்டத்துக்கு உட்பட்ட தணிக்கை. இதை எதிர்த்துப் போராட நமக்கு வழிகள் உள்ளன. நம் படைப்புரிமைகளுக்கு சாதகமாக சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. உச்சநீதிமன்றம் வரை போகலாம். ஆனால் இதற்கு வெளியே ‘கும்பல்’ தலையிட்டுச் செய்யும் தணிக்கை என்று ஒன்று இருக்கிறது. இதில் யாரை எதிர்க்கிறோம் என்றே தெரியாமல் போராட வேண்டியிருக்கிறது. சிவசேனா போன்ற அமைப்புகளுக்கு இதுவே முழுநேர வேலை என்றாலும் இடதுசாரி அமைப்புகளும் விதிவிலக்கல்ல. ஸ்டாலினியவாதிகளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? தணிக்கையை ஜனநாயக அச்சுறுத்தலாக இடதுசாரிகள் பார்க்கத் தவறுகிறார்கள். தமது கருத்தியல் சார்பு, பொது எதிரி என்றால் மட்டுமே தணிக்கைக்கு எதிராக கூச்சல் போடுகிறார்கள். யாராக இருந்தாலும், நாம் நம்பும் கருத்துக்கு உவப்பில்லாதவர்களாக இருந்தாலும், அவர்களின் வெளிப்பாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டும்.  ஜோ டி குரூஸின் கருத்துரிமையை முடக்கிக் கொண்டே பெருமாள்முருகனின் கருத்துரிமையைக் காப்பாற்ற முடியாது. ஆனால் அவரவர் கொள்கைக்கு ஆதரவாக இல்லாதவர்களைக் கைவிட்டுவிடும் போக்குதான் இங்கு நிலவுகிறது. கருத்தியல்களுக்கு அப்பால் அனைத்து தரப்பு படைப்பாளிகளின் படைப்புரிமைக்கும் குரல் கொடுக்க வேண்டும். அதுதான் உண்மையான படைப்புச்  சுதந்தரத்திற்கான ஆதரவு. மற்றது பாசிசத் தன்மையன்றி வேறில்லை.  விஸ்வரூபம் படத்தில் பிரச்சினை என்றாலும், டேம் 999 படத்தில் பிரச்சினை என்றாலும் விமர்சனங்கள் மூலம் அணுகுவது தான் நியாயம். 
 
தமிழ் தேசிய, ஈழ ஆதரவாளர்களிடமும் கருத்துரிமை எதிர்ப்பு மனநிலைதான் உள்ளது. அவதூறுகளைப்பரப்பி ஆளை இல்லாமல் ஆக்க முயற்சி செய்கிறார்கள். பிரசன்ன விதானகேயின் ‘வித் யூ வித்தவுட் யூ’ ((With You, Without You)  சிங்களப் படம் வெளிவந்தபோது, சிங்கள முன்னாள் ராணுவவீரன் தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்வதாக எப்படி படம் எடுக்கலாம் என்று இரண்டு ‘திரை இயக்குநர்கள்’ சீமானும், வ. கௌதமனும் தான் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஒரு கும்பல் தியேட்டர்களுக்கு தொலைபேசி அச்சுறுத்தல்களைக் கொடுத்து படத்தை ஒரே நாளில் தூக்கவைத்தார்கள். என்னுடைய  வெள்ளை வேன் கதைகள் (White Van Stories) ) படத்துக்கும் இதேதான் நிலை. பெண்ணியப் போலிகள் பொய் அறிக்கைகளை வெளியிட்டு படத்திற்கெதிரான வதந்திகளை பரப்பினார்கள். பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திரையிடல்களை ரத்து செய்யவைத்தார்கள். இங்கிருக்கும் கருத்துக் குண்டர்களின் கைகளில் உண்மையிலேயே அதிகாரம் இருந்தால் என்ன செய்வார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.
 
சேனல் ஃபோரில் வெளியான வெள்ளைக்காரனின் ஆவணப்படம் என்றால் அதைக்கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பார்கள்.  அதே சேனல் ஃபோர் வெளியிடும் ஒரு தமிழ்ப் பெண்ணின் படைப்பை முடக்குவார்கள். இவர்கள் இன்னும் யாருக்கு அடிமையாக இருக்கிறார்கள்? தமிழ் தேசியம் பேசுகிறவர்கள், முற்போக்கு இயக்கவாதிகள், இடது சாரிகள், பெண்ணியர்கள் என்று எல்லோருக்குள்ளும் ஒளிந்திருக்கும் சென்சார் ஆபீசர்களைக் களையாமல் இங்கு வீரியமான படங்கள் வரவே முடியாது. இன்றுவரை யூதர்கள் படுகொலை பற்றி படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். கடைசிப்போரில் லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த துயரம் பற்றி எத்தனைப்  படங்கள் வந்திருக்கவேண்டும்? ஆனால் என்ன வந்திருக்கிறது? இதற்கான மொத்த பாராட்டுமே தமிழ்த் தேசியவாதிகளையே சாரும்.
 
 
வேடிக்கை என்னவென்றால் இவர்கள் இந்தப் படங்களைப் பார்க்கவே மாட்டார்கள். பார்க்காமலேயே எதிர்ப்பார்கள்.  அப்படியே கும்பலாகச் செயல்பட்டு அந்த படங்களைத் திரையிடவிடாமல், அதைப் பற்றி எழுதவிடாமல் தடுத்து சத்தமே இல்லாமல் அழித்துவிடுவார்கள்.! எப்போதுமே ஒரு படைப்பாளியை, தன்னை தன் படைப்பை பாதுகாக்க வேண்டிய பதட்டத்திலேயே வைத்திருக்க விரும்பும் சமூகம் என்ன மாதிரியான சமூகம்? வானத்திலிருந்து எந்தப் படைப்பாளியும் குதிக்க முடியாது. இந்த சமூகத்திலிருந்து தான் வரமுடியும். சுதந்திரமான படைப்பாளிகளைப் பாதுகாப்பதும் சமூகத்தின் பொறுப்பும் தான். ஒவ்வொரு படைப்பாளியுடனும் அவரின் கருத்து சுதந்திரத்திற்காக, வெளிப்பாட்டுரிமைக்காக, கொள்கைச் சார்பு பார்க்காமல் நிற்கவேண்டும். அதுவே ஒரு சமூகத்தின் படைப்பியக்கத்துக்கு முக்கியமான விசை. 
 
 
(அந்திமழை 2017 ஏப்ரல் இதழில் வெளியான பத்தி)


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...