ஒரு மாதத்துக்கும் மேலாக இலங்கையில் நடந்துவந்த அமைதிப் போராட்டத்தை ஒரே நாளில் நேற்று வன்முறைக் களமானது.
பொருளாதார நெருக்கடி, விலையுயர்வு, உணவு- மருந்துத் தட்டுப்பாடு ஆகியவற்றால் பெரும் நெருக்கடி உருவாக, முதல் முறையாக அதை எதிர்கொள்ள முடியாத சிங்களவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் கொழும்புவில் உள்ள காலிமுகத் திடலில் குடில்களை அமைத்து இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
கோத்தபாயவே வீட்டுக்குப் போ என்பதுதான் அவர்களின் ஒரே முழக்கமாக இருந்துவருகிறது. ஒரு மாதமாகத் தொடரும் அந்தப் போராட்டக் களத்தில் இருப்பவர்கள், தேவையான உணவு, அத்தியாவசியப் பொருள்களை கூட்டாக தயார்செய்துகொண்டு புதிய வகைப் போராட்டமாக நிகழ்த்திக்காட்டி வருகின்றனர்.
இத்துடன், பிரதமர் பதவியில் நேற்றுவரை இருந்த மகிந்த ராஜபக்சேவின் அதிகாரபூர்வ இல்லமான அலறி மாளிகை முன்பாகவும், மைனா கோத்த கம எனும் முழக்கத்தை முன்வைத்து போராட்டம் நடந்துவருகிறது.
இந்த நிலையில், நேற்று மகிந்தவின் ஆதரவாளர்கள் நான்காயிரம் பேர்வரை அலறி மாளிகையில் திரண்டனர். போராட்டக்காரர்களைச் சமாளிப்பதற்காக, இராஜபக்சேக்களின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையிலிருந்தும் கொழும்புவின் பல பகுதிகள், பல சிங்களவர் பகுதிகளிலிருந்தும் பேருந்துகளில் ஆட்கள் அங்கு குவிந்துள்ளனர்.
முன்னதாக, கடந்த வெள்ளியன்று கடும் நெருக்கடி முற்றியநிலையில், தன் அண்ணன் மகிந்தவை பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும் என அமைச்சரவையில் அரசு அதிபர் கோத்தபாய இராஜபக்சே அதிகாரபூர்வமாகக் கேட்டுக்கொண்டார். கடந்த மாதம் நடைபெற்ற பதவிவிலகலைப் போலவே இதையும் சமாளித்துவிடலாம் என இதை மகிந்த தரப்பு பொருட்படுத்தவில்லை. ஆனால் நிலைமை நாளுக்கு நாள் மோசமானது.
இதனிடையே, கோத்தபாயவின் அழைப்பின்படி பிரதமர் பதவியை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதிபரும் பதவிவிலகவேண்டும் என முன்னர் கோரிவந்த அவர், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் பிரதமராகப் பதவியேற்றால், நாளை என்னையும் வீட்டுக்குப் போகச் சொல்லி போராட்டம் நடத்துவார்கள் என பகிரங்கமாகக் கூறினார்.
அது ஒரு புறம் இருக்க, நேற்று காலையில் தன் வீட்டுக்கு முன்பாக ஆதரவாளர்களைத் திரட்டிய மகிந்த இராஜபக்சே, அவர்களை உசிப்பிவிட்டபடி பேசினார். அதற்கு எண்ணெயை ஊற்றும்படியாக ஜான்ஸ்டன் பெர்னாண்டோ எனும் அமைச்சர் பேசினார். அவர்களின் பேச்சு முடிந்ததும், அலறி மாளிகை முன்பாகத் திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டக்காரர்களின் பகுதியை நோக்கி விரைந்தனர்.
முதலில், அலறி மாளிகைக்கு முன்பு இருந்த போராட்டக்காரர்களின் குடில்களை மகிந்தவின் ஆட்கள், பிய்த்து எறிந்தனர். அங்கிருந்தவர்களை தடிகளாலும் கம்பிகளாலும் தாக்கியது, அந்தக் கும்பல். இரத்தம் சொட்டச்சொட்ட போராட்டக்காரர்கள் தப்பிக்க ஓடினர்.
அடுத்தகட்டமாக, காலிமுகத் திடலில் கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது மகிந்த கட்சி ஆட்கள் தாக்குதலைத் தொடங்கினர். அங்கிருந்த குடில்கள் துவம்சம் செய்யப்பட்டன. அமைதிவழியிலான போராட்டக்களமாக - அனைத்துலக ஊடகங்களும் நேற்றுவரை நேரலை செய்துகொண்டிருந்த அந்தப் பகுதி, ஒரு மணி நேரத்தில் கலவரப் பகுதியாக மாறியது. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் போராட்டக் காரர்கள் நிலைகுலைந்தனர். ஆனால் அதே காட்சி நீடிக்கவில்லை.
சிறிது நேரத்தில் நிலவரம் தலைகீழாக மாறத் தொடங்கியது. அதே இடத்தில் தாக்கவந்த மகிந்த ஆட்களை போராட்டக்காரர்கள் புரட்டி எடுக்கத் தொடங்கினார்கள்.
குறிப்பாக, அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து வந்திருந்த மகிந்தவின் ஆதரவாளர்களை, அருகிலுள்ள பேர வாவி (நீர்நிலை)-க்குள் அவர்கள் தூக்கிவீசினர். இராஜபக்சேக்களின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட - இலங்கை சுயதொழில் சம்மேளனத் தலைவர் மகிந்த ககந்தகம என்பவர், கம்பீரமான தோற்றத்தில் ஆவேசமாக போராட்டக்காரர்களுடன் சண்டையிட்டார். வாவியில் தூக்கி எறியப்பட்ட அவரை, போராட்டக்காரர்கள் ஆடையை உருவி ஓடவிட்ட அளவுக்கு மகிந்த தரப்பு ஆவேசத்தை எதிர்கொண்டது.
அலறிமாளிகைக்கு அருகில் சென்ற போராட்டக்காரர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில்தான் தாக்குதலாளிகள் வந்தனர் என, அனைத்து வாகனங்களையும் அடித்துநொறுக்கினர். மகிந்தவின் பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொரல்லாவின் காரையும் உடைத்துநொறுக்கினர்.
வெளி மாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு ஆட்களை அழைத்துவந்த ஆளும் கட்சிப் பிரமுகர்களை வாகனங்களுடன் சேர்த்து தாக்கினர். அதையடுத்து நடந்தது இன்னுமொரு உச்சம்... கொழும்புவிலிருந்து வரும் வாகனங்களை மற்ற பிரதேசங்களைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் வழியில் நிறுத்தி, தாக்குதலுடன் தொடர்புடைய வாகனம் என உறுதியானால், கண்மூடித்தனமாக அவற்றைத் தாக்கி சேதப்படுத்தினர். அப்படி சென்றுவந்த பேருந்துகளின் தகவல்களை அறிந்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர் என்றும் தினக்குரல் ஊடகம் தெரிவிக்கிறது.
அமைச்சர்களான இரமேஷ் பத்திரணே, உரோகித அபேகுணர்த்தனே, பந்துல குணவர்த்தனே, சன்ன ஜயசுமணே, கோகிலா குணவர்த்தனே, பவித்ரா வன்னியராச்சி, பிரசன்ன ரணதுங்க, காமினி லொக்குகே, சனத் நிசாந்த, ஜான்ஸ்டன் பெர்னாண்டோ, திஸ்ஸ குட்டி ஆராச்சி ஆகியொரின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். தீவைப்பும் இடம்பெற்றதாக இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதைத்தவிர, வடமத்திய மாகாண முதலமைச்சர் மகிபால ஹேரத், அவரின் மகனும் அமைச்சருமான கனக ஹேரத் ஆகியோரின் வீடுகளும் மொறட்டுவை நகரசபைத் தலைவர் சமன் லால் பெர்னாண்டோவின் வீடும் தாக்குதலுக்கு உள்ளாகின.
மகிந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிலம் லன்சா, அனுருத்த ஆகியோரின் வீடுகளும் தீவைத்து எரிக்கப்பட்டன.
எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதைப் போல, போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சித் தரப்பினர் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த நிலையில், நேற்று மதியம் பிரதமர் பதவியிலிருந்த மகிந்த இராஜபக்சே போட்ட டுவீட் முறுகல் நிலைக்குக் கொண்டுசென்றது.
“நாட்டில் உணர்ச்சிவயம் மேலோங்கியிருக்கும் நிலையில் பொதுமக்கள் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். உணர்ச்சிமயம் வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.” என்கிறபடி இருந்த அவரின் டுவீட்டும் பெரும் வன்முறைக்கு வலுவான ஆதரவை வழங்கியது என்கின்றனர், இலங்கை சமகால நடப்பு ஆய்வாளர்கள்.
தமிழீழப் போராட்டத்தில் உயிரிழந்த போராளிகளின் நினைவுத்தூபியை யாழ் பல்கலைக்கழகத்தில் தரைமட்டம் ஆக்கிய இராஜபக்சேக்களின் ஆட்சியில், அவர்களின் தாய் - தந்தையரின் நினைவுத் தூபி அவர்களின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையிலேயே அவரின் சிங்களவர்களாலேயே தாக்கி அழிக்கப்பட்டிருப்பது பல தரப்பினராலும் இன்று குறிப்பிடப்படுவதாக அமைந்துவிட்டது.
- இர. இரா. தமிழ்க்கனல்