இலங்கையில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் மக்கள் எழுச்சியை அடுத்து, அரசு அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக கோத்தாபய இராஜபக்சே அறிவித்தார். ஆனால் அதில் உறுதி பேணப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
அன்றைய நாள் மாலையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களில் பெரும்பாலானவர்கள் அதிபரும் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கேவும் பதவிவிலகியாக வேண்டும் என வலியுறுத்தினர். அந்தத் தகவலை மறுநாள் அதிபர் கோத்தாபயவுக்கு சபாநாயகர் அபேவர்த்தன தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, தான் வரும் 13ஆம் தேதியன்று அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக கோத்தாபய தெரிவித்தார் என்று தகவல் வெளியானது. அபேவர்த்தனவும் இதை உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் இன்று காலையில் பிரதமர் இரணிலின் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், அதிபர் கோத்தாபய தான் உறுதியளித்தபடி புதனன்று பதவிவிலகுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, அதிபர் செயலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், அவருடைய தகவல் எதுவாக இருந்தாலும் சபாநாயகர் அலுவலகம் வாயிலாக மட்டுமே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கோத்தா பயவின் முடிவில் ஏதாவது மாற்றம் இருக்கலாமோ என ஐயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.