![]() |
லால் சிங் சத்தா: திரைவிமர்சனம்!Posted : சனிக்கிழமை, ஆகஸ்ட் 13 , 2022 10:36:42 IST
![]()
வயதிற்கேற்ற முதிர்ச்சி இல்லாத ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தை பேசுவதே லால் சிங் சத்தா திரைப்படம்.
பஞ்சாப் மாநிலத்தில் லால் என்ற பட்டப்பெயர் கொண்ட ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவன் சிறுவன் லால் சிங் சத்தா (அமீர் கான்). அவனால், செயற்கை கால் உதவியுடன் தான் நடக்க முடியும் என்பதால், சக மாணவர்களாலேயே ஏளனத்துக்கு உள்ளாகிறான். அவன் மீது கருணை கொண்டு அரவணைக்கிறாள் பள்ளித் தோழியான ரூபா (கரீனா கபூர்). எப்போதும் அவளுடனே இருக்கும் லாலுவை, சக மாணவர்கள் தாக்க வரும் போது, அவனைக் காப்பாற்றுகிறாள். இவர்களிடமிருந்து தப்பிக்க நினைக்கும் லாலுவுக்கு கால்கள் சரியாகி ஓட ஆரம்பிக்கிறான். அந்த ஓட்டம் அவனது வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. அம்மா மட்டுமே இடம்பெற்றிருந்த லாலுவின் வாழ்க்கையில் ரூபா, பாலு, முஹம்மது என விரல் விட்டு எண்ணக் கூடிய மனிதர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் எல்லோரும் லாலுவின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பது தான் படத்தின் மீதிக் கதை.
ஒட்டுமொத்த கதையும் ஒரே ரயில் பயணத்தில் சொல்லி முடிக்கப்படுகிறது. அமீரின் வாழ்க்கைப் பயணத்துடன், அவசர நிலை காலம், இந்திரா காந்தி படுகொலை, சீக்கியர் படுகொலை, பாபர் மசூதி இடிப்பு, கார்கில் போர், அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்போதைய அரசியல் நிகழ்வுகளும் கதையின் போக்கில் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது.
முதல் பாதியில் அசத்திய இயக்குநர் இரண்டாம் பாதியில் ஏனோ கவனம் ஈர்க்கவில்லை. அமீர்கானின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. மிஸ்டர் பீன், சாப்ளின் நடிப்பை அமீரிடம் பார்க்க முடிகிறது. பெரிய நடிகையாக வரும் வேண்டும் என நினைத்து, அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் எதிர்கொள்ளும் கரீனா கபூரின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. சிறிது நேரம் வந்தாலும் நாக சைதன்யாவின் வெகுளித்தனமான நடிப்பு மனதில் நிற்கும் படி இருக்கிறது.
தமிழ் டப்பிங்கில் உள்ள சில குறைகளைத் தவிர்க்க முயன்றிருக்கலாம். ஒட்டுமொத்தத்தில் லால் சிங் சத்தா சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
|
|