அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

'திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் -39 - பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   19 , 2015  18:49:41 IST

 
 
"இசை என்பது தேவதைகளின் பேச்சு மொழி என்றால் அது சரிதான்.  ஏனென்றால் பேச்சு வழக்கில் உள்ள எந்த வார்த்தைகளும் மனிதனை தெய்வத்தின் அருகில் கொண்டு சேர்ப்பதில்லை.  இசை ஒன்று தான் நம்மை எல்லை அற்ற பரம்பொருளின் அருகில் கொண்டு சேர்க்கிறது"  தாமஸ் கார்லி.
 
 
 
தேவரின் "நல்ல நேரம்" படத்தில் கே.வி.மகாதேவனின் இசையில் இடம் பெற்ற பாடல்களை கண்ணதாசன், புலமைப்பித்தன், அவிநாசிமணி ஆகியோர் எழுதி இருந்தனர்.
 
ஆனால் ரீ-மேக் படம் என்பதால் தேவர் அதிகம் இசைக்காக மெனக்கெடவில்லை.  டைட்டில் இசைக்கு "ஹாத்தி மேரே சாத்தி"  படத்தின் இசையே பயன்படுத்தப்பட்டது.
 
அதே நேரம் பாடல்களுக்கான இசையில் மகாதேவன் தன் தனித்தன்மையை காட்டி இருக்கிறார்.   
 
"ஆகட்டும்டா தம்பிராஜா. நடராஜா"  என்ற பாடல் அதன் மூலப் பாடலான "சல்சல் மேரே ஹாத்தி"  பாடலிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது.  "ஓடி ஓடி உழைக்கணும்" என்ற டி.எம்.எஸ். பாடலும் அதுபோலவே.  
 
"டிக் டிக் டிக் டிக்"  பாடலின் துவக்கம் ஹிந்திப் பாடலின் மெட்டில் இருந்தாலும் தொடரும் சரணங்கள் மகாதேவனின் இசையில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைந்திருக்கிறது.
 
எம்.ஜி.ஆருக்கும் சோகக் காட்சிகளுக்கும் உள்ள பொருத்தம் அனைவருக்கும் தெரிந்தது தான்.  நடிகர் திலகத்தைப் போல சோகரசத்தை அப்படியே பிழிந்துவிட மாட்டார்.  ஜஸ்ட் ஒரு கோடி காட்டிவிட்டு போய்விடுவார் எம்.ஜி.ஆர்.  அழும் காட்சிகளில் முகத்தை மூடிக்கொண்டுதான் அழுது நடிப்பார்.  "நல்ல நேரம்" படத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பில் இருக்கும் இந்தச் சிறு குறையை தனது பின்னணி இசையால் ஈடுகட்டி எம்.ஜி.ஆரின் நடிப்பை எடுபடவைத்தார் கே.வி.மகாதேவன் என்றால் அது மிகை அல்ல.  குறிப்பாக யானையை அடித்துவிட்டு சங்கிலியால் கட்டிப்போடவேண்டிய காட்சியில் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பு பார்ப்பவர் கண்களைக் கலங்க வைத்தது என்றால் அதற்கு அந்தக் காட்சியில் கே.வி. மகாதேவனின் இசையும் முக்கிய காரணம்.
 
"நல்ல நேரம்"  ஹிந்திப் படத்தைப் போலவே திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றிவாகை சூடியது.
 
அதே 1972-ஆம் வருடம் மகாதேவனின் இசையில் நடிகர் திலகத்தின் இணையற்ற நடிப்பில் வெளிவந்த மகத்தான வெற்றிப்படம் "வசந்த மாளிகை".
 
"பிரேம் நகர்" என்ற பெயரில் தெலுங்கில் நாகேஸ்வர ராவ் - வாணிஸ்ரீ நடித்து பெருவெற்றி பெற்ற படம் அதே தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு அவர்களால் தமிழில் "வசந்தமாளிகை"யாக வெளிவந்தது.   "வசந்த மாளிகை" படத்தின் சிறப்பம்சங்களைப் பற்றிச் சொல்வதென்றால் சொல்லிக்கொண்டே போகலாம்.
 
முதல் முதலாக டூயட் பாடலில் ஸ்லோமோஷன் முறையைப் பயன்படுத்தி பாடல் காட்சி அமைக்கப்பட்ட படம் "வசந்த மாளிகை"தான்.
 
பொதுவாக நடிகை வாணிஸ்ரீ நடித்தால் அந்தப் படம் சுமாராகத்தான் போகும் என்பது தமிழ்ப் படவுலகில் எழுதப் படாத நம்பிக்கைகளில் ஒன்று.   அந்த நம்பிக்கையை தகர்த்து வாணிஸ்ரீ நடித்து தமிழில் வெள்ளிவிழாக் கொண்டாடிய படம் "வசந்த மாளிகை" தான்.
 
இலங்கையில்  ஒரு வருடத்துக்கும் மேல் வெற்றிகரமாக ஓடியபடம் "வசந்தமாளிகை"தான்.
 
தெலுங்குப் படத்துக்கு இசை அமைத்த கே.வி.மகாதேவனே தமிழுக்கும் இசை அமைத்தார்.
 
கண்ணதாசனின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் காலத்தை வென்று நிற்கின்றன.
 
"பாடல் வரிகள் எழுதப்பட்ட பிறகுதான் இசை அமைப்பது" என்ற மகாதேவனின் கொள்கை தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டிருப்பது பாடல்களைக் கேட்டாலே புரிந்துவிடும்.
 
விமானத்தில் கதாநாயகன் மதுவின் மயக்கத்தில் பாடும் பாடலோடுதான் படமே துவங்குகிறது.  
 
"ஓ மானிட ஜாதியே"  -  பாடல் வரிகள் எல்லாமே வசன நடையில் தான்.  ஆனால் இந்த வசனத்துக்கும் இசை அமைத்து பாடலாக்கி விட்டிருப்பது கே.வி.மகாதேவனுக்கு கை வந்த கலை.  இணைப்பிசை எதுவுமே இல்லாமல் ஆரம்பமுதல் இறுதிவரை ஒரே மூச்சில் பாடல் அமைந்திருப்பது.  டி.எம்.எஸ். அவர்களின் கம்பீரமும் ஆளுமையும் நிறைந்த குரல் வளம் மகாதேவனின் மெட்டுக்கு உறுதுணையாக நின்றது.
 
"ஏன். ஏன். ஏன்? " என்ற கேள்வியோடு தொடங்கும் பாடல் "ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்"  -  டி.எம்.சௌந்தரராஜனுடன் ஹம்மிங் பாடகியாகவே தமிழ் படவுலகில் வலம் வந்துகொண்டிருந்த வசந்தா இணைந்து பாடிய பாடல்.
 
"கலைமகள் கைப்பொருளே"  - பி. சுசீலாவின் குரலில் இனிமையும் சோகமும் பொங்கும் பாடல்.  பாடலும் இணைப்பிசையும் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகின்றன.
 
"குடிமகனே" - பாடல் - டி. எம்.எஸ். - எல்.ஆர். ஈஸ்வரியின் இணைவில் இன்னொரு வெற்றிப்பாடல்.
 
உயிரோடிருக்கும் காதலிக்காக வசந்த மாளிகை கட்டி தன் காதலை நாயகன் வெளிப்படுத்தியபிறகு இருவரும் இணைந்து பாடும் பாடல் "மயக்கமென்ன இந்த மௌனமென்ன?"  -  கண்ணதாசன் - கே.வி.மகாதேவன் - டி.எம். எஸ். - பி. சுசீலா - இவர்களில் யாருடைய திறம் பெரிது என்று புள்ளிகுத்த முடியாத அளவுக்கு கவிதை வரிகளும், இனிமையான மெட்டும், உணர்வு பூர்வமான குரல்வளமும் நிறைந்த பாடல் இது.
 
இணைப்பிசையில் மகாதேவன் காட்டி இருக்கும் வித்தியாசங்கள் (வெரைட்டி) குறிப்பிடத்தக்கவை.
 
இந்தப் பாடல் காட்சியில் தான் ஸ்லோமோஷன் முறை முதல் முதலாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானது.  
 
பல்லவி முடிந்ததும் வரும் முதல் சரணத்துக்கு கொடுத்திருக்கும் இணைப்பிசைக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கோரஸ் பாடகியரைப் பயன்படுத்தி இரண்டாவது சரணத்துக்கு இணைப்பிசையை அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.  மூன்றாவது சரணத்துக்கோ  பல்லவை முடிந்ததும் வரும் இணைப்பிசையில் கொஞ்சம், அடுத்த சரணம் முடிந்ததும் வரும் இணைப்பிசையில் கொஞ்சம் என்று எடுத்துக்கொண்டு இரண்டையும் கலந்து கொடுத்திருக்கும் இணைப்பிசை புருவங்களை உயர்த்த வைக்கிறது.
 
"வசந்த மாளிகை" படப் பாடல்களில் இந்த டூயட் பாடலுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அது நடிகர் திலகத்துடன் சம்பந்தப் பட்டது.
 
"வசந்த மாளிகை" படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் நடிகர் திலகத்தின் ஆருயிர் அன்னையான ராஜாமணி அம்மாள் காலமாகிவிட்டார்.   தாயின் மரணத்தால் படிப்பிடிப்பு தடைப் பட்டிருந்த நேரம்.
 
ராஜாமணி அம்மாள் மறைந்த ஐந்தாவது நாள் நடிகர் திலகத்திடம் இருந்து வசந்த மாளிகை படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு.  "வீட்டில் இருந்தா அம்மாவோட நினைப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு.  நாளைக்கே ஷூட்டிங் வச்சுக்கலாம்.  நான் வரேன்".  
 
அவசர அவசரமாக படப்பிடிப்பு குழுவினர் ஒன்று சேர மறுநாள் காலையில் தனது வழக்கப்படி குறித்த நேரத்தில் நடிகர் திலகமும் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தார்.
 
தனது தாயார் மறைந்த சோகத்தை சற்றுக்கூட வெளிக்காட்டிக்கொள்ளாமல் நடிகர் திலகம் நடிக்க வந்த அன்று படமாக்கப்பட்ட காட்சி இந்த "மயக்கமென்ன" டூயட் பாடல் காட்சிதான்.
 
பாடல் காட்சியை இன்று பார்த்தாலும் கூட அந்த மாபெரும் கலைஞனின் ஈடுபாடு நம்மை பிரமிக்க வைக்கும்.    தனது சொந்த சோகத்தின் வெளிப்பாடு கடுகத்தனை அளவுகூட தெரியாத வண்ணம் அற்புதமாக இந்தப் பாடல் காட்சியில் நடித்திருப்பார் சிவாஜி.
 
காதலியின் சுயகௌரவ உணர்வு - காதலை பிரிக்கிறது.  
 
பிரிந்த பிறகு சோக உணர்வுக்காக பாடல் ..  "இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்" - பாடல்.   
 
இந்தப் பாடலிலும் - ஏன் - வசந்த மாளிகை படப் பாடல்கள் அனைத்திலுமே கே.வி. மகாதேவன் கொடுத்திருக்கும் வித்தியாசமான இசை இன்றளவும் பாடல்களை வெற்றிப் பாடல்களாக்கி காற்றலைகளில் உலவ விட்டிருக்கின்றன.
 
இந்தப் பாடலில் கடைசி சரணம் எழுதும் வேளையில் கண்ணதாசன் இப்படி எழுதினார்:
 
'கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி"  - என்று மூன்று வரிகளை எழுதியவர் நான்காவது வரிக்காக யோசித்துக்கொண்டிருந்த போது - அனைவருக்கும் நிறைவான வரி வரவே இல்லை.
 
அப்போது கே.வி.மகாதேவனின் மூச்சுக்காற்றாக விளங்கிய உதவியாளர் புகழேந்தி "கடவுளை தண்டிக்க என்ன வழி"  என்று சொல்லிவிட்டு "இது நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் கவிஞரே" என்று தயக்கத்துடன் கூறியதும் அவரை அப்படியே கட்டித் தழுவிக்கொண்டார் கவியரசர்.
 
அந்த வரியே பாடலின் சரணத்துக்கான இறுதி வரியானது.
 
படத்தின் உச்சகட்ட காட்சிக்கான பாடல் "யாருக்காக"  - இன்றளவும் பல திரைப்படங்களில் காமெடிக்காக கையாளப்பட்ட கொடுமையைச் சந்தித்திருக்கும் பாடல்.   
 
உச்ச கட்ட காட்சிக்கான விறுவிறுப்பை பாடலிலும் இணைப்பிசையிலும் வயலின்களைப் பயன்படுத்தி கே.வி.மகாதேவன் ஏற்படுத்தி இருக்கும் அற்புத லாகவம் படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்தது.  
 
தொடர்ந்து வந்த 1973-ஆம் ஆண்டு முதல் மகாதேவனின் இசையில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.
 
ஆனால் வெளிவந்த படங்களில் அவரது இசையும் பாடல்களும் படத்தின் வெற்றிக்கு உதவியாக இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
 
அவற்றில் குறிப்பிடத்தக்க படம் :  எங்கள் தங்க ராஜா.
 
தெலுங்கிலிருந்து தமிழுக்கு ரீ-மேக் செய்யப்பட்ட படம்.  நடிகர் திலகம் சிவாஜிகணேசன், மஞ்சுளா, சௌகார் ஜானகி ஆகியோர் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வி. பி. ராஜேந்திர பிரசாத் தயாரித்து இயக்கிய படம்.
 
தெலுங்கு தமிழ் இரண்டுக்குமே கே.வி.மகாதேவன் இசைதான்.
 
தெலுங்கில் அமைத்த அதே மெட்டுக்களை கையாண்டிருந்தாலும் கவியரசரின் வரிகளும், மகாதேவனின் இசையும் பாடல்களை வெற்றிப் பாடல்களாக்கி விட்டன.
 
"சாமியிலும் சாமி இது" -  கதாநாயகனை கிண்டல் செய்து நாயகி பாடும் பாடல்.  பி.சுசீலாவின் குரலில் படம் வந்த புதிதில் வானொலிகளில் அடிக்கடி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த பாடல்.
 
"கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா"  -  விறுவிறுப்பான உற்சாகத் துள்ளல் வெளிப்படும் டூயட் பாடல்.
 
"கற்பாம் மானமாம்"  -  பாடல் வரிகளில் தெறிக்கும் ஆவேசத்துக்காக அகில இந்திய வானொலியால் தடை செய்யப்பட்ட பாடல்.  
 
இன்றளவும் உயிர்ப்புடன் விளங்கிக்கொண்டிருக்கும் பாடல் என்றால் அது டி.எம்.எஸ். - பி.சுசீலாவின் குரல்கள் இணையும் "இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை"  - பாடல்தான்.
 
ஆனால் பாடலின் இணைப்பிசை வரிகளுக்கு சம்பந்தம் இல்லாமல் தனித்து நிற்பது போன்ற பிரமை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
இரவல் மெட்டு என்றால் இப்படித்தான் சில சங்கடங்களும் ஏற்படுமல்லவா.?
 
அடுத்து மகாதேவனின் இசையில் மக்கள் திலகம் இரட்டை வேடங்களில் நடித்த "பட்டிக்காட்டு பொன்னையா" படம் வெளிவந்தது.
 
கிராமியக் கதைக்கு இசை அமைப்பதில் தனக்கிருந்த தனித் திறமையைக் கே.வி. மகாதேவன் வெளிப்படுத்தினார் என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை.
 
தமிழில் படுதோல்வி கண்ட ஒரு படம் ஹிந்தியில் வெற்றிகண்டு மறுபடி தமிழுக்கு அதே தயாரிப்பாளரால் "ரீ-மேக்" செய்யப்பட்டு வெற்றிகண்ட படத்தின் கதையாக "நல்ல நேரம்" படத்தைப் பற்றிப் பார்த்தோம்.
 
அதே நேரம்.. தமிழிலும் ஹிந்தியிலும் வெள்ளிவிழாக் கண்ட ஒரு படத்தை மீண்டும் தமிழில் ரீ-மேக் செய்து அது படுதோல்வி கண்ட கதையும் இருக்கிறது.
 
விஜயா நிறுவனத்தின் சார்பாக தமிழில் தயாரிக்கப் பட்டு பெருவெற்றி கண்ட படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த 'எங்க வீட்டுப் பிள்ளை".  வசூலில் மாபெரும் சரித்திரம் படைத்த படம் அது.  இதே படம் ஹிந்தியில் "ராம் அவுர் ஷ்யாம்" என்ற பெயரில் வெளிவந்து பெருவெற்றி பெற்றது.
 
ஆனால் இதே படத்தை விஜயா அதிபர் நாகிரெட்டி அவர்களின் அனுமதி பெறாமல் ஹிந்தியில் இரட்டை வேடத்தில் ஆண் கதாபாத்திரம் நடித்த வேடத்தை அப்படியே கதாநாயகியாக மாற்றி "உல்டா" செய்து "சீதா அவுர் கீதா" என்ற பெயரில் ஹேமமாலினி, தர்மேந்திரா, சஞ்சீவ்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியிட்டு வெற்றி கண்டனர்.
 
நாகிரெட்டி அவர்கள் தயாரிப்பாளரின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அவர்களோ "சீதா அவுர் கீதா" படத்தின் தமிழ் தெலுங்கு ரீ-மேக் உரிமையை விட்டுக்கொடுத்து சமரசம் செய்து கொண்டனர்.
 
அப்போது தமிழ் தெலுங்கில் பிரபலமாக இருந்த நடிகை வாணிஸ்ரீயை இரட்டை வேடத்தில் நடிக்கவைத்து "எங்க வீட்டுப் பிள்ளை"  "வாணி ராணி"யாக மறு அவதாரம் எடுத்தது..
 
ஆரம்பத்தின் படத்தை இயக்கிய சாணக்கியா அவர்கள் அகால மரணம் அடைந்துவிட படத்தை முடித்துக் கொடுக்க வந்தார் சி.வி. ராஜேந்திரன்.
 
சென்னை மாநகரில் 50வது நாள், 100வது நாள், வெள்ளிவிழா என்றெல்லாம் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் படங்களுக்கு போஸ்டர் ஒட்டிப் பார்த்திருக்கிறோம்.  எனக்குத் தெரிந்து முதல் முதலாக "வெற்றிகரமான பத்தாவது நாள்" என்று சுவரொட்டிகளில் விளம்பரம் செய்து படத்தை ஓட்டுவதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்த முதல் படம் "வாணிராணி" தான்.
 
கண்ணதாசனின் பாடல்களே வசனம் போல இருந்தது.
 
"பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவினில் வண்டு பல்லாண்டு பாடுது. யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ" இந்த வசன வரிகளுக்கு இசையமைத்துப் பாடல் என்று சொல்லியிருக்கிறார்கள்" - என்று தினமணிகதிர் பத்திரிகையில் சாவி அவர்கள் கிண்டலாக விமர்சனம் செய்திருந்தார்.
 
என்றாலும் மேலே குறிப்பிட்ட இந்தப் பாடலும், "முல்லைப் பூப் பல்லாக்கு போவதெங்கே" என்ற பாடலும் -  இன்றளவும் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது ஒளிபரப்பப் பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.  கே.வி.மகாதேவனின் இசையில் இந்த இரண்டு பாடல்கள் மட்டும்தான் சற்று தேறின.
 
ஆகக்கூடி 1974-இல் கே.வி.மகாதேவனின் இசையில் தமிழில் வெளிவந்த ஒரே படம் "வாணி ராணி" தான்.    அதுவும் படுதோல்வி.  அடுத்து வந்த "உறவுக்கு கை கொடுப்போம்" படமும் இதே நிலைதான்.
 
இப்படி தொடர் தோல்விகளால் சரிந்துவிடாமல் இருக்க  அவருக்கு கை கொடுக்க வந்தது மக்கள் திலகத்தின் அடுத்த படம்.
 
அதுதான்  'பல்லாண்டு வாழ்க"..
 
(இசைப் பயணம் தொடரும்..)
 
 

(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் -36

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் -37

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் -38

 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...