???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு 0 ஒன்றுமே செய்யவில்லையா?- சுப.வீரபாண்டியன் 0 நினைப்பும் நிஜமும்! - மாலன் 0 தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா 0 கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று 0 ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் 0 எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி! 0 சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது 0 'தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்துவதால் ஆபத்துகள்தான் அதிகம்' 0 செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வு! 0 சரோஜ்கான் - நடன ராணி! 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திரை இசைத் திலகம்” கே.வி. மகாதேவன் -28 பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   29 , 2014  00:59:29 IST

அபரிமிதமான இசையால் நான் நிரம்பிவிட்டால் மற்ற எந்தத் தேவைகளுமே எனக்கு நிலையில்லாதவைதான் என்று நினைக்கிறேன்.  இசையால் நான் நிறைந்துவிட்டால் எனது வாழ்க்கை சுலபமாகவே கழிந்துவிடும்  - ஜார்ஜ் எலியட்.

 

"பாட்டும் நானே பாவமும் நானே"  பாடலுக்காக கே.வி. மகாதேவன் தேர்ந்தெடுத்த ராகம் "கௌரி மனோகரி" .

 

இந்த ராகம் அந்தப் பாடலுக்கும் காட்சி அமைப்புக்கும் எப்படிப் பொருந்தி வந்திருக்கிறது என்று பார்த்தால் வியப்புத் தான் மேலிடுகிறது.

 

அதனைப் பார்ப்பதற்கு முன்னால் "கௌரி மனோகரி" ராகத்தைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

 

கெளரிமனோகரி ஒரு மேளகர்த்தா ராகம்.  மேளகர்த்தா ராகம் என்றால்..?

 

நமது முன்னோர்கள் ராகங்களை மேளகர்த்தா ராகங்கள் என்றும் ஜன்ய ராகங்கள் என்றும் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

 

மேளகர்த்தா ராகங்கள் என்றால் ஸ, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு ஸ்வரங்களும் ஆரோகணம், அவரோகணம் இரண்டிலுமே முழுமையாக இடம் பெற்றிருக்கும் ராகங்கள்.  இப்படி மேளகர்த்தா ராகங்கள் 72.  

 

இந்த எழுபத்திரண்டு ராகங்களிலிருந்து பிறந்தவைதான் ஜன்ய ராகங்கள்.  

 

இப்படிப்பட்ட எழுபத்திரண்டு ராகங்களையும் வகைக்கு ஆறு என்று 12 வகைகளாகத் தொகுத்துக் கொடுத்திருக்கின்றனர்.  அந்த வகைகளுக்கு சக்கரங்கள் என்று பெயர்.

 

இந்து சக்கரம், நேத்திரச் சக்கரம், அக்னிச் சக்கரம், வேதச் சக்கரம் என்று ஆரம்பித்து 12 சக்கரங்களில் வகைக்கு ஆறு ராகங்களாகப் பிரித்து வைத்திருக்கின்றனர்.

 

இவற்றில் நமது பாடலுக்குரிய மேளகர்த்தா ராகமான கெளரிமனோகரி நான்காவது சக்கரமான வேத சக்கரத்தில் இடம் பெறும் ராகம்.

 

இது சொல்லமுடியாத சந்தோஷத்தையும், மனநிறைவையும் தரும் ராகம்.  எல்லாக் காலங்களிலும் பாடக்கூடிய ராகம்.

 

கௌரிமனோஹரி என்றால்  இறைவனின் மனத்தைக் கொள்ளை கொண்டவள் என்று பொருள்.  அது மட்டும் அல்ல இந்த ராகமும் கேட்பவர் மனதை கொள்ளைகொள்ளக் கூடியது என்றும் பொருள் கொள்ளலாம்.

 

விறகு வெட்டியாக வரும் பரமன் இரவு வேளையில் ஹேமநாத பாகவதர் தங்கியிருக்கும் மாளிகையின் திண்ணைப் புறத்தில் பாடுவதாக காட்சி.வேதங்கள் நான்கு.  அந்த நான்கிலும் இசையோடு சம்பந்தப்பட்ட வேதம்  சாம வேதம்.  அந்த சாமவேதத்துக்கு அதிபதி பரமன். 

 

அந்தப் பரமன் பாடுவதாக அமைந்த பாடல் நான்காவது சக்கரமான வேத சக்கரத்தில் இடம் பெறும் சிறப்பான ராகமான கௌரி மனோகரியில் அமைந்திருப்பது எவ்வளவு பொருத்தமான ஒன்று!

 

காலங்களை கடந்த பரமன் பாடும் ராகம் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ராகமான கௌரி மனோகரியில் அமைவது இன்னும் சிறப்பான ஒன்று.

 

பிரயோகங்களுக்கும் சஞ்சாரங்களுக்கும் அதிகமாக இடம் கொடுக்கக் கூடிய ராகம்.    சங்கீதத்தில் "சௌக்கியம்" என்ற ஒரு அம்சம் உண்டு.  அந்த சௌக்கிய பாவம் பூரணமாக நிரம்பப் பெற்ற ராகம் கௌரி மனோஹரி. 

 

மன உளைச்சலையும், பதற்றத்தையும் குறைத்து அமைதியையும் சாந்தியையும் கொடுக்கவல்ல ராகம் கௌரி மனோஹரி.

 

இன்னொரு முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் கோயில்களில் ஓதுவார்கள் தேவாரம் இசைக்கும் போது காம்போதிக்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தக்கூடிய ராகம் இந்த கௌரி மனோஹரிதான்.

 

இப்படிப்பட்ட சிறப்பான அம்சங்கள் கொண்ட விசேஷமான ராகத்தை அதன் முழு சொரூபமும் வெளிப்படும் வண்ணம் கையாண்டு "பாட்டும் நானே பாவமும் நானே" பாடலை அற்புதமாக கே.வி. மகாதேவன் அமைத்ததைப் போல வேறு எந்த இசையமைப்பாளர்களும் கையாண்டதில்லை.

 

அந்த அளவுக்கு இந்த ராகத்தின் முத்திரையை அழுத்தம் திருத்தமாக பாடலில் பதித்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.  அவர் கையாண்டிருக்கும் பிரயோகங்கள் இந்தப் பாடலை கௌரிமனோஹரி ராகத்துக்கு ஒரு கலைக் களஞ்சியமாக பிற்கால இசை அமைப்பாளர்கள் கையாள்வதற்கு ஒரு கையேடாக மாற்றி இருக்கின்றன.

 

டி.எம். சௌந்தரராஜன் அதியற்புதமாகப் பாடியிருக்கும் பாடல் இது.

 

ஆரம்பத்தில் 45 நொடிகளுக்குள் வரும் ஆலாபனையில் ராகத்தின் சொரூபத்தை முழுவதுமாகக் கொண்டுவந்து "பாட்டும் நானே" என்று டி.எம்.எஸ். தொடங்கும் போது ஹேமநாத பாகவதராக வரும் டி.எஸ். பாலையா மட்டுமா -  பாடலைக் கேட்கும் நாமுமல்லவா நிமிர்ந்து உட்காருகிறோம்!

 

ஆறு நிமிடம் இருபத்தைந்து நொடிகளுக்குள் ஒரு அற்புதமான கச்சேரி கேட்ட நிறைவை ஏற்படுத்தும் பாடல் இது.

 

அசையும் பொருள் நிற்கவும் நிற்கும் பொருள் அசையவும் செய்யும் இசையைக் கொடுக்க கே.வி. மகாதேவனால் மட்டும்தான் முடியும் என்று சொல்லவைக்கும் பாடல்.

 

பாடலில் வரும் மிருதங்கத்தின் சொற்கட்டுக் கோர்வைகள் பாடலின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.

 

இறுதியில் வரும் ஸ்வரக்கோர்வைகளும் அவற்றை வீணை, குழலில் வெளிப்படுத்தும் விதமும் - கொன்னக்கோல் சொற்கட்டுகளும் பிரமிக்க வைக்கின்றன.

 

இப்படி காட்சியோடு நூறு சதவிகிதம் பொருந்திப் போகும் அளவுக்கு ஒரு பாடலுக்கான ராகத்தை யோசித்துத் தேர்ந்தெடுத்தாரா அல்லது அந்த ராகமே வந்து தன்னைப் பயன்படுத்திக்கொள்ளத் தூண்டியதா என்று வியக்கும் வண்ணம் அமைந்த பாடல்.

 

அதனால் தான் படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளை நெருங்கிய போதிலும் இன்றளவும் பொலிவு குன்றாமல் காற்றலைகளில் வளம் வந்துகொண்டிருக்கிறது இந்தப் பாடல்.

 

"பாப்"போ, வெஸ்டேர்ன்னோ, சினிமாப் பாட்டோ எதுவா இருந்தாலும் நிலைச்சு நிக்கறதுதான் கிளாசிகல்.  கர்நாடக சங்கீதம் மட்டும்தான் கிளாசிகல்ன்னு சொல்லறது தப்பு" - என்று திரு. வாமனன் அவர்களுக்கு "சினிமா எக்ஸ்பிரஸ்" பத்திரிகைக்காக அளித்த நேர்காணலில் சொல்கிறார் பிரபல இசை மேதை டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா.  

 

அந்த வகையில் ஒரு "ஒரு நாள் போதுமா"வும், "பாட்டும் நானே"யும் கண்டிப்பாக க்ளாசிகல்ஸ் தான் என்பதில் சந்தேகமே இல்லை.

 

இறுதியில் மீண்டும் அம்மை அப்பனோடு முருகனைக் காண வரும் அவ்வை பாடுவதாக ஒரு விருத்தம்.  "வாசி வாசி என்று வாசித்த தமிழின்று" என்று துவங்கும் இந்த விருத்தத்தை நீலாம்பரி ராகத்தைப் பயன்படுத்தி அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.  சரியாக ஒரு நிமிடம் ஐந்து நொடிக்குள் இந்த நீலாம்பரி என்னமாய் நம்மைச் சொக்கவைக்கிறது!   தொடர்ந்து "ஒன்றானவன் உருவில் இரண்டானவன்" என்று கே.பி. சுந்தராம்பாள் பாடும் பாடலை சிந்துபைரவியில் ஆரம்பித்து "ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்" என்று தொடங்கும்போது "ஆனந்த பைரவியில்" தொடர்ந்து பாடலைச் சிகரத்தில் ஏற்றி உச்சத்துக்குக் கொண்டுவந்து நிறுத்தி பாடலை மட்டுமல்ல - திருவிளையாடல் படத்தையே முடித்து வைக்கிறார் கே.வி. மகாதேவன்.

 

படம் தொடங்குவதும் மகாதேவனின் இசையில்.  முடிவதும் அவரது இசையோடுதான் என்பது இன்னுமொரு வியக்க வைக்கும் பொருத்தம்.

 

"பலேட் ஆப்   தி சோல்ஜெர்"  (Ballade of the soldier)  என்ற ரஷியக் கதையை தழுவி கவிஞர் கண்ணதாசன் கதை வசனம் பாடல்கள் எழுதி வெளிவந்த படம் "தாயே உனக்காக". 

 

ஒரு ராணுவ வீரனுக்கும் அவனது தாய்க்கும் இடையேயான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டு வெளிவந்த படம்.

 

காக்கும் கரங்களில் அறிமுகமான இளம் நடிகர் சிவகுமார் முழுமையான கதாநாயகனாக நடித்த படம்.  அவருக்கு ஜோடி புஷ்பலதா.

 

அப்போதுதான் படவுலகில் நுழைந்திருந்த சிவகுமாரை ஊக்குவிப்பதற்காகவோ என்னவோ அப்போது முன்னணியில் இருந்த பிரபல நட்சத்திரங்களான நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், முத்துராமன், நாகேஷ், பத்மினி, தேவிகா, ஜெயலலிதா, விஜயகுமாரி ஆகியவர்கள் அனைவருமே சின்னச் சின்ன வேடங்களில் தோன்றி கௌரவ நடிகர்களாக நடித்த படம் இது.

 

கே.வி. மகாதேவனின் இனிமையான இசையில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்களில் அனைத்துமே என்று இல்லாவிட்டாலும் சில பாடல்கள் அனைவரது செவிகளையும் இனிமையாக ஆக்கிரமிக்கத் தவறவில்லை.

 

குறிப்பாக சீர்காழி கோவிந்தராஜன் பாடிய "கருநீல மலைமேலே தாயிருந்தாள்.  காஷ்மீரப் பனிமலையில் மகன் இருந்தான்." என்ற அசரீரிப் பாடல் ஒரு அற்புதமான அமைப்பு.  

 

"அமைதிப் புறாவே அமைதிப் புறாவே அழைக்கின்றேன் உன்னை" - பி.சுசீலாவின் இனிமை பொங்கும் குளுமைக் குரலில் ஒரு அருமையான மெலடி.   

 

மேற்கத்திய இசையில் கே.வி.மகாதேவனின் ஞானத்தைப் பறைசாற்றும் அற்புதமான பாடல் தான் "ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்" பாடல். 

 

பாங்கோஸ், வயலின், பியானோ, கிட்டார் ஆகிய நான்கே நான்கு வாத்தியங்களை கையாண்டு இந்தப் பாடலைக் கே.வி.மகாதேவன் அமைத்திருக்கும் விதம் பிரமிக்க வைக்கிறது.

 

அதிலும் சரணகளுக்கு இடையே வரும் இணைப்பிசையில் தாள வாத்தியங்களே இல்லாமல் வயலினின் வீச்சு முடியும் இடத்தில் பியானோ எழுப்பும் இசை இருக்கிறதே.. அந்த டியூன் கண்டிப்பாக குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.

 

"ஹார்ப்" என்னும் இசைக்கருவியில் வெளிப்படுத்தக்கூடிய அந்த டியூனை பியானோவில் கொண்டுவருவது என்பது சிரம சாத்தியமான ஒன்று.  பியானோவில் அதைக் கையாள்வதை "ஹார்ப் ஸ்டைல்" என்பார்கள்.  வெஸ்டர்ன் க்ளாசிக்கல் வகையில் பீத்தோவன், மொசார்ட்  ஆகியவர்களின் இசையில் அவ்வப்போது ஒலிக்கும்.  இந்த வகை டியூனை அதிகமாகக் கையாண்டவர் சைகொவ்ஸ்கி.  அவரது பாடல்களில் அதிகமாக இந்த "ஹார்ப் ஸ்டைல்" பிரயோகம் இடம் பெறும்.  இந்த ஸ்டைல் கம்போசருக்கும், இசைப்பவருக்கும் தனி மரியாதை மேற்கத்திய இசை உலகில் கொடுக்கப்படும். 

 

இந்த மெட்டை கே.வி. மகாதேவன் அமைக்க அதை அனாயாசமாக வாசித்த அவரது குழுவில் பியானோ வாசிப்பாளராக இருந்த திவாகரின் திறமை குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.  (இந்த திவாகர்தான் தேவர் பிலிம்சின் "கொங்கு நாட்டு தங்கம்" படத்துக்கு இசை அமைத்தவர் என்பது திரு ஆரூர்தாஸ் அவர்களின் கட்டுரையிலிருந்து கிடைத்த கூடுதல் தகவல்).

 

ஹம்மிங் பாடகியாக மட்டுமே படவுலகில் வலம் வந்த பி.எஸ். வசந்தா பாடிய அபூர்வமான சில பாடல்களில் இன்றளவும் அவரது பெயர் சொல்லும் பாடலாக அமைந்த பாடல் இது.

 

சின்னப்பாதேவரின் சாதனைப் படம் ஒன்று உண்டு என்றால் அது "முகராசி".

 

சாதனைப் படமா எந்த விதத்தில் என்று புருவத்தை உயர்த்துபவர்களுக்காக சொல்கிறேன்.

 

வெறும் பன்னிரண்டே நாட்களில் ஒரு படத்தை முழுமையாக முடித்து( அதுவும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை கதாநாயகனாக நடிக்க வைத்து) ரிலீஸ் செய்து வெற்றிப்படமாகக் கொடுக்க ஒருவரால் முடியும் என்றால் அது மகத்தான சாதனை தானே!

 

எம்.ஜி.ஆருக்கு அப்போது அரசியல் பணிகள் வேறு.  அப்படி இருக்க இரவுபகலாக பத்தே நாட்களில் படப்பிடிப்பை முடித்து பதினோராவது நாள் டப்பிங், பின்னணி இசைச் சேர்க்கை என்று முடித்துவிட்டு பன்னிரண்டாவது நாளில் படத்தை வெளியிட்டு விட்டார் தேவர்.

 

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா, ஜெமினி கணேசன் என்று பிரபல நட்சத்திரங்கள் நடிக்க வெளிவந்த முகராசி படத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது "இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தமிழ்ப் படம் - அதுவும் எம்.ஜி.ஆர். படம்  - வெளிவந்ததே இல்லை" என்று குறிப்பிடுகிறார் கலைச்செல்வி ஜெயலலிதா.

 

"பிட்டிலஸ் த்ரீ" என்ற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

 

பன்னிரண்டே நாட்களில் வெளியான இந்தப் படத்துக்கு இசை அமைப்பது என்பது மிகப்பெரிய சாதனை.  அந்தச் சாதனையைச் சத்தமே இல்லாமல் நிகழ்த்திக்காட்டியவர் கே.வி. மகாதேவன்.

 

பாடல்களில்

 

"தண்ணீர் என்னும் கண்ணாடி" என்ற கதாநாயகியின் அறிமுகப் பாடலைப் பாடியவர் பி.சுசீலா என்று சொன்னாலே போதும்.  பாடலின் தரத்தைப் பற்றி கூடுதலாகச் சொல்லவேண்டியதே இல்லை.    

 

"எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்"  - டி.எம்.எஸ். - பி.சுசீலாவின் இணைவில் இன்றளவும் நிலைத்து நிற்கும் டூயட்.

 

"உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு"  - டி.எம்.எஸ். பாடும் ஒரு கருத்துப் பாடல். 

 

என்று காலத்தை வென்று நிற்கும் பாடல்களைக் கொடுத்து ஒரு விறுவிறுப்பான படத்துக்கு ஏற்றவகையில் பரபரப்பான பின்னணி இசையையும் கொடுத்து படத்தின் வெற்றிக்கு துணை நின்றார் கே.வி.மகாதேவன்.

 

படமும் வெற்றி பெற்றது.  அந்த சந்தோஷத்தில் எம்.ஜி.ஆரை வைத்து தனது அடுத்த படத்தை ஆரம்பித்தார் தேவர்.

 

இசை.. கே.வி.மகாதேவன் அல்லாமல் வேறு யார்?

 

அருமையான பாடலை கண்ணதாசன் எழுத கே.வி.மகாதேவன் இசை அமைத்து பி.சுசீலா பாட அந்தப் பாடலின் அமைப்பில் மனதைப் பறிகொடுத்த சின்னப்பா தேவர் அந்தப் பாடல் காட்சியை வித்தியாசமாகப் படமாக்க வேண்டும் என்று நினைத்தார்.

 

எம்.ஜி.ஆரை அதுவரை ரசிகர்கள் காணாத வேடத்தில் திரையில் காண்பிக்க வேண்டும் என்று நினைத்தார் அவர்.

 

அந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். எப்படித் தோன்றவேண்டும் என்று தீர்மானித்தவர் அந்த முடிவை எம்.ஜி.ஆரிடம் சொன்னதும்...

 

அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர்.

 

(இசைப் பயணம் தொடரும்..)

 

 

(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)

 

 

 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 24

 திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 25

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 26

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 27click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...