???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே 0 கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! 0 ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் 0 புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! 0 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் 0 நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 0 கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் - 18 பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2014  01:07:14 IST

 

"இசை என்பது கலையின் தூய்மையான வடிவமாகும். அதனால் தான் உண்மையான தீர்க்கதரிசனம்  பெற்ற கவிஞர்கள் உலகுக்கு தாங்கள் சொல்ல நினைப்பதை இசை வடிவிலேயே சொல்ல விரும்புகின்றனர்"  - ரவீந்திரநாத் தாகூர் .

 

 

 

"படிக்காத மேதை" -  நடிப்பில் புதிய பரிமாணத்தை காட்டிய நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் படம்.

 

 ஒரு இயக்குனராக அறிமுகமான ஏ. பீம்சிங்  இயக்கிய ஆரம்ப காலப் படங்கள் எதுவுமே சரியாக அமையவில்லை.

 

அம்மையப்பன், ராஜாராணி, நானே ராஜா, ஆகிய படங்கள் எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியைத் தான் தழுவின.  அதன் பிறகு துணிந்து சொந்தமாக புத்தா பிக்சர்ஸ் நிறுவனத்தைத் துவங்கி அவர் ரிஸ்க் எடுத்து தயாரித்த படம் "பதிபக்தி".  அதிலிருந்து அவருக்கு ஏறுமுகம் தான்.

 

அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளிவந்த "ப" வரிசைப் படங்களில் இரண்டாவது படம் தான் "படிக்காத மேதை".

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் "ரங்கன்" என்ற ஒரு கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட மனிதனாக நடித்த -  அல்ல - வாழ்ந்து காட்டிய படம்.  அவருடன் எஸ்.வி. ரங்காராவ், கண்ணாம்பா, சௌகார் ஜானகி, முத்துராமன், அசோகன், சந்தியா, ஈ.வி. சரோஜா ஆகியோரும் நடித்திருந்தனர்.

 

 

பீம்சிங்கும் கே.வி. மகாதேவனும் இணைந்த முதல் படம் இது. 

 

கண்ணதாசன், மருதகாசி ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தனர். மகாகவி சுப்ரமணிய பாரதியின் பாடலும் படத்தின் ஒரு முக்கிய திருப்புமுனைக் காட்சிக்கு பயன்படுத்தப் பட்டிருந்தது.

 

படத்தின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் மகாதேவனின் முழுத் திறமையும் தெரிந்தது.

 

இந்தப் படத்தில் இடம் பெற்ற மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை பத்து.

 

படம் வெளிவந்த அறுபதில் டி.எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும் மற்ற பாடகர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தனர்.  பெரும்பாலான தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவர்கள் இருவரையுமே பிரதானப் படுத்திக் கொண்டிருந்த நேரம் அது.

 

ஆனால் கே.வி, மகாதேவனோ "படிக்காத மேதை" படத்துக்காக அவர்கள் இருவரை மட்டும் அல்லாமல் எம்.எஸ். ராஜேஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, பி. லீலா, சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல். ராகவன் என்று பலரையும் பாடவைத்தார்.

 

கதாநாயகனின் குணாதிசயத்தை அப்படியே படம் பிடித்துக்காட்டும் பாடல்

"உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது.

உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது." என்ற பாடல்.

 

தனக்கு மற்றவர்களைப் போல கல்வி அறிவு இல்லையே என்று வருந்தும் கணவனை மனைவி தேற்றுவதாக அமைந்த பாடல் "படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு." -  சௌகார் ஜானகிக்கு எம்.எஸ். ராஜேஸ்வரியை இந்தப் பாடலுக்கு பின்னணி பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.

 

 

கண்ணதாசனின் வரிகளும், ராஜேஸ்வரியின் மழலை பொங்கும் குரலும் பாடலுக்கு தனி அழகைத் தருகின்றன.  கீரவாணி ராகத்தின் அடிப்படையில் இந்த பாடலை அருமையாக வடிவமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.

 

"ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா" - என்ற காதுகளை சுகமாக வருடும் பாடலை டி.எம்.எஸ். - சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இருவரையும் பாடவைத்து தாலாட்டு வகையில் அமைந்த இந்தப் பாடலை இரவில் கேட்கவேண்டும்.  அதிலும் "சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை" என்று துவங்கும் கடைசி சரண வரிகளின் போது நம் கண்கள் தானாகவே சொக்கத் தொடங்கி விடும்.  அவ்வளவு அருமையாக இந்த சரணம் அமைந்திருக்கிறது.  டி.எம். எஸ். ஸும் மிகவும் நயமாக பாடி இருக்கிறார்.

 

"ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும்"  - பி.லீலா. 

 

"இன்ப மலர்கள் பூத்துக்குலுங்கும் சிங்காரத்தோட்டம்" -   பி. சுசீலா - எல், ஆர். ஈஸ்வரியின் குரல்களில் ஒலிக்கும் பாடல்.

 

"பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

கண்பார்வை போடுதே துடுப்பு"  - ஏ.எல். ராகவன்- ஜமுனாராணி.

 

"சீவி முடிச்சு சிங்காரிச்சு"  - டி.எம்.சௌந்தரராஜன்.

 

 

என்று இப்படி பல பாடகள் இருந்தாலும் கே.வி. மகாதேவன் மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டு ரசித்து ஒவ்வொரு வரியாக அனுபவித்து அமைத்த பாடல் என்றால் அது "எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நானென்றான்" - என்ற மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்தான்.

 

கண்ணனைத் தன் சேவகனாக வரித்து பாரதியார் அமைத்திருக்கும் பாடல் இது.

 

ஏற்கெனவே இந்தப் பாடலை  இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன் "கூலி மிகக் கேட்பார்" என்று துவங்கி அருமையாகப் பாடி தனது சொத்தாகவே மாற்றிக்கொண்டிருந்தார்.

 

"பெரியவரோட  (ஜி. ராமநாதன்)  பாட்டு இது. அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும்  நம்மாலே முடிஞ்ச அளவுக்கு பாட்டைக் கெடுக்காம கவனமா பண்ணனும்" என்று புகழேந்தியிடம் சொல்லிக்கொண்டே சிரத்தை எடுத்துக்கொண்டு மகாதேவன் இசை அமைத்து சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைத்தார். சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடல் இன்றளவும் உயிரோட்டத்துடன் அமைந்திருக்கிறது.

 

இன்று ஜி. ராமனாதனின் "கூலி மிகக் கேட்பார்" பாட்டு மறைந்துவிட்டது.

 

ஆனால் அவரைத் தன் குருவின் ஸ்தானத்தில் வைத்துக்கொண்டு மிகுந்த மரியாதையுடன் பக்தி சிரத்தையுடன் கே.வி. மகாதேவன் உருவாக்கிய "எங்கிருந்தோ வந்தான்"  பாடல் காலத்தை வென்று அமரத்துவம் எய்திய பாடலாக காற்றலைகளில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

 

*******************

“அகிலன்"  -  தமிழ் எழுத்தாளர்களில் இந்தப் பெயருக்கு ஒரு தனிச் சிறப்பும், மரியாதையும், பெருமையும் உண்டு.

 

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள "பெருங்கலூர் "   என்ற ஒரு  சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவர் அகிலன்.

 

அமரர் கல்கி அவர்களின் பெரும்புகழ் பெற்ற சரித்திர நாவலான "பொன்னியின் செல்வ"னின் தொடர்ச்சியாக அகிலன் எழுதிய நாவல்தான் "வேங்கையின் மைந்தன்".

ராஜேந்திர சோழனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இந்த நாவல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிவாஜி நாடக மன்றத்தால் மேடை நாடகமாக உருமாறி பெருவெற்றி பெற்றது.

 

 "சித்திரப்பாவை"  -  ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து மகத்தான வெற்றிபெற்ற நாவல்.  "ஞான பீடம்" - என்ற மிக உயர்ந்த இலக்கியத்துக்கான விருதை தமிழுக்குப் பெற்றுத்தந்த நாவலும் இதுதான்.

 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படமான "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" படத்தின் மூலக்கதை அகிலன் எழுதிய "கயல்விழி" என்ற நாவல்தான்.

 

இத்தனைச் சிறப்புகளுக்கெல்லாம் சொந்தக்காரரான அகிலனின் நாவலான "பாவை விளக்கு"க்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதினார் ஏ.பி. நாகராஜன்.

 

கே.சோமு அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் குமாரி கமலா, சௌகார் ஜானகி, எம்.என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர்.

 

படத்துக்கான அனைத்துப் பாடல்களையும்  - ஒரே ஒரு பாரதியார் பாடலைத் தவிர - கவிஞர் மருதகாசி எழுதி இருந்தார்.

 

ஏ.பி.நாகராஜன் - கே.சோமு - மருதகாசி கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம்.  இசை அமைப்பு  கே.வி. மகாதேவனைத்தவிர வேறு யாராக இருக்க முடியும்?

 

அருமையான பாடல்களை அற்புதமாக எழுதித் தள்ளியிருந்தார் மருதகாசி.

 

அவற்றுக்கு மகாதேவன் அமைத்திருந்த மெட்டுக்களோ?

 

பாடல்களுக்கான மெட்டுக்களா இல்லை மெட்டுக்களுக்கான பாடல்களா என்று கேட்போர் வியக்கும் அளவுக்கு மருதகாசியின் பாடல்வரிகளும் மகாதேவனின் இசையும் போட்டி போட்டுக்கொண்டு கனகச்சிதமாக வெகு சிறப்பாக  அமைந்த படம் இது.

 

இன்னும் சொல்லப்போனால் "பாவை விளக்கு" படத்துக்கு பலமே அதன் பாடல்கள் தான்.

பாடல்கள் தான் இந்தப் படத்தை ஓரளவுக்காவது தூக்கி நிறுத்தின.

 

அந்த வகையில் "பாவை விளக்கு" படத்தின் பாடல்கள் ஐம்பது வருடங்களைக் கடந்த பிறகும் உயிர்ப்புடன் காற்றலைகளில் நிலைத்து நிற்பது பிரமிக்க வைக்கும் சாதனைதான்.

 

படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கான அனைத்துப் பாடல்களையும் சி. எஸ். ஜெயராமனைப் பாடவைத்திருந்தார் கே.வி. மகாதேவன்.

 

தனது முதல் படமான "பராசக்தி"யில் தனக்குப் பாடிய சி.எஸ். ஜெயராமனின் குரலின் மீது நடிகர் திலகத்துக்கு ஒரு தனி மோகமே உண்டு.  ஆரம்பத்தில் "தூக்கு தூக்கி" படத்தில் தனக்காக டி.எம். சௌந்தரராஜனைப் பாடவைக்க முடிவெடுத்தபோது அவர் "ஜெயராம பிள்ளையை எனக்காக பாடவைக்காம வேற யாரையோ பாடவைக்கனும்னு சொல்லறீங்களே" என்று குறைப்பட்டுக்கொண்டது கூட உண்டு.

 

அப்படிப்பட்ட சி.எஸ். ஜெயராமனின் குரலில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே பிரபலமான பாடல்களாக அமைந்துவிட்டன.

 

குற்றாலத்தின் அழகையும், சிறப்புகளையும் தெரிந்துகொள்ள வேண்டுமா?   அதனைப் பார்த்து ரசிக்க இரண்டு கண்கள் போதாதாம்.  ஆயிரம் கண்கள் வேண்டுமாம்.  இல்லை இல்லை.  ஆயிரம் கண்களும் போதாதாம்! அப்படித்தான் மருதகாசி சொல்கிறார்.

 

"ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே

குற்றால அழகை நாம் காண்பதற்கு  வண்ணக்கிளியே" 

 

 

"மாண்ட்"  - ராகத்தில் கே.வி. மகாதேவன் பாடலை அமைத்திருக்கும் விதமோ ஆயிரம் முறைகள் கேட்டாலும் சலிக்கவே சலிக்காத பாடல்.

 

இந்தப் பாடல் ஏ.பி. நாகராஜனின் மனதில் ஒரு அழுத்தமான இடத்திப் பிடித்து விட்டது..  அதனால் தானோ என்னவோ பின்னாளில் தான் இயக்கிய "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் இந்தப் பாடலை அப்படியே நாதஸ்வரத்தில் வாசிக்கவைத்து பயன்படுத்திக்கொண்டுவிட்டார் அவர்.

 

அடுத்து "வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்" - என்ற பாடல்..

 

 வசன நடையில் ஆரம்பித்து ஒவ்வொரு வார்த்தைகளாக கூட்டிக்கொண்டே ஆரம்பிக்கும் பல்லவி.  ஒவ்வொருக்கு அடிக்கு பிறகும் பாடலாக உருமாறுகிறது.

 

பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்

தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்.

வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்.  - என்று என்று படிப்படியாக வார்த்தைகளைக் கூட்டிக்கொண்டே போகும்போது  மகாதேவனின் கற்பனைத் திறனும் இசை ஆளுமையும் பிரமிக்கவைக்கிறது.  சி.எஸ். ஜெயராமனுடன் ஹம்மிங்காக எல்.ஆர்.ஈஸ்வரி இணையும் பாடல் இது. சங்கராபரண ராகத்தை வெகு அற்புதமாக மகாதேவன் கையாண்டு பாடலை கொடுத்திருக்கிறார். 

 

"நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக்கண்ணே" -  சூலமங்கலம் ராஜலக்ஷ்மியின் குரலில் அருமையான ஒரு குழந்தையைக் கொஞ்சிச் சீராட்டும் பாடல். 

 

 

இப்படி இத்தனைப் பாடல்கள் இருந்தாலும் "பாவை விளக்கு" என்றதுமே நம் உதடுகள் தாமாகவே உச்சரிக்கும் பாடல் ஒன்று உண்டு என்றால் அது "காவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா தெய்வீகக் காதல் சின்னமா" பாடல்தான்.

 

காதலுக்கும் முகலாயர்களின் கட்டிடக்கலைக்கும் காலத்தால் அழிக்க முடியாத அற்புதச் சின்னமாக விளங்கும் தாஜ் மஹாலின் அழகை வருணிக்கும் பாடல். 

 

இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் கே.வி. மகாதேவனின் திறமை -  அவரது இசை ஆளுமை எல்லாமே உலக அதிசயமான தாஜ் மகாலுக்கு நிகராக நம்மை பிரமிக்க வைக்கிறது.

 

பல்லவியை சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் அமைத்தவர்.. பல்லவி முடிந்தபிறகு வரும் சரணங்களுக்கு இடையிலான இணைப்பிசையிலும் தொடரும் சரண வரிகளிலும் அரேபிய இசைப் பிரயோகங்களை அற்புதமாக இணைத்திருக்கிறார்.  அதற்கு அவருக்கு கை கொடுத்த ராகம் "சரசாங்கி".

 

கர்நாடக இசையில் 27வது மேளகர்த்தா ராகமான சரசாங்கி ஒரு சம்பூரணமான சுத்த மத்யம ராகம்.

 

முழுக்க முழுக்க இந்த மேளகர்த்தா ராகத்தை அரேபிய இசைக்கான ராகமாகப் பயன்படுத்தி மகாதேவன் பாடலை அமைத்திருக்கும் விதமும், அதனை சி.எஸ். ஜெயராமனும், பி. சுசீலாவும் பாடியிருக்கும் விதமும் ..  வருணிக்க வார்த்தைகளே இல்லை.

 

அதுவும் "முகலாய சாம்ராஜ்ய கீதமே"  என்று சுசீலா ஆரம்பிக்கும் அழகும்,  சரணத்தின் கடைசி வரிகளில் "என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே என்னைச் சொந்தம் கொண்ட தெய்வமே" - என்றும், "கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவது உண்மைக்காதலே"  என்றும் பாடும் போது அவரது குரலில் வெளிப்படும் இனிமையும் உண்மையிலேயே காதுகளில் தேன் பாய்வது என்பார்களே அது இதைத்தானா என்று கேட்கத் தோன்றுகிறது.

 

கே.வி. மகாதேவனின் இசையில் சங்கராபரணமும், சரசாங்கியும் தான் எப்படி எல்லாம் மருதகாசியின் வரிகளுக்கு ஜீவன் தருகின்றன!

 

உண்மையிலேயே இது ஒரு காவியப்பாடல் தான்.

 

**************

அதே தீபாவளிக்கு மகாதேவனின் இசையில் வெளிவந்த இன்னொரு படம் தேவரின் "யானைப்பாகன்".  உதயகுமார், சரோஜாதேவி இணைந்து நடித்த படம்.

 

இந்தப் படத்தில் "பதினாறும் நிறைந்த" என்ற டி.எம். சௌந்தரராஜனின் தனிப்பாடல்.   இனிமையாக மனதின் ஆழத்தை ஊடுருவிச் செல்லும் வண்ணம் இந்தப் பாடலைக் கொடுத்திருந்தார் கே.வி. மகாதேவன். 

 

இதே படத்தில் "செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்" என்ற டி.எம்.எஸ். - பி. சுசீலாவின் டூயட் பாடல் அடிக்கடி சிலோன் வானொலியில் கேட்ட நினைவு.

 

ஆனால் "யானைப்பாகன்"  படம் வந்த வேகத்திலேயே சுருண்டு போனது சின்னப்பா தேவருக்கு மிகப் பெரிய அடிதான்.

 

ஆனால் அவர் மனம் தளரவில்லை. 

 

அடுத்த படத்துக்கான கதையையும் தயார் செய்துவிட்டு பாடல்களுக்கான காட்சிகளைச் சொல்லி கண்ணதாசனிடம் பாடல்களை எழுதி வாங்கிக்கொண்டு கே.வி. மகாதேவனை இசை அமைக்க வைத்து பாடல்களை தயார் செய்துகொண்டுவிட்டார்.

 

இனிமேல்தான் நடிக நடிகையரை ஒப்பந்தம் செய்தாக வேண்டும்!

 

யாரை ஹீரோவாகப் போட்டு படத்தை ஆரம்பிக்கலாம் என்று அவர் யோசித்துக் கொண்டிருந்த வேளை...

 

அவருக்கு அதிகம் வேலை வைக்காமல் கே.வி. மகாதேவனின் பாடல்களே தகுந்த கதாநாயகரை தானாகவே இழுத்து வந்து அவரிடம் சேர்த்து விட்டன. 

 

அது மட்டும் அல்ல..  அதுவரை லேசாக  விரிசல் விழுந்திருந்த ஒரு நட்பில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்து முன்பைவிட அழுத்தமான பிணைப்பாக உருமாற்றியதும் அந்தப் பாடல்களேதான்.

 

(இசைப் பயணம் தொடரும்..)

 

(பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)

 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 17click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...