???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் - 17 பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   04 , 2014  00:57:29 IST

 

"இசையைப் பற்றிய ஒரு உன்னதமான விஷயம் என்னவென்றால் அது உங்களைத் தாக்கும் போது உங்களுக்கு (அந்தத் தாக்குதலால்) வலியோ வேதனையோ இருக்காது என்பதுதான்."  -  பாப் மார்லே.

 

 

 

தொடர்ந்து மகாதேவனின் இசையில் வெளிவந்த படங்களின் பாடல்கள் கேட்பவரை முணுமுணுக்கச் செய்பவையாக அமைந்து விட்டன.

 

படங்கள் வெற்றியோ தோல்வியோ!

 

ஆனால் கே.வி. மகாதேவனின் இசை மட்டும் தோற்கவே இல்லை. 

 

அதுமட்டும் அல்ல.  படங்களின் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் தன் பணியை எந்த அளவுக்கு சிறப்பாகச் செய்யமுடியுமோ அந்த அளவுக்கு சிறப்பாக செய்யத் தவறியதில்லை அவர்.

 

அதனால் தான் தோல்வியடைந்த படங்களிலும் காலத்தை வென்று நிற்கும் வண்ணம் பாடல்களைத் தர அவரால் முடிந்தது.

 

"மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே"  - எம்.எஸ். ராஜேஸ்வரியின் மழலைக் குரலில் இப்படி ஒரு பாடல் "காவேரியின் கணவன்" படத்தில்.

படத்தின் பெயரைக்கூட நாம் மறந்தே போயிருப்போம்.  ஆனால் இந்தப் பாடல் மட்டும் நம் மனதை விட்டு இன்றளவும் அகலாமல் இருக்கிறது.

 

எஸ்.வி. சஹஸ்ரநாமம் அவர்களுடைய வெற்றிகரமான நாடகம் "நாலுவேலி நிலம்".

நாடகத்தின் மகத்தான வெற்றி அதனைத் திரைப்படமாக எடுக்கத் தூண்டியது. 

படமாகவும் எடுத்தார் அவர்.  ஆனால் படம் படுதோல்வியைச் சந்தித்தது.

 

ஆனால் படத்தில் மகாதேவனின் இசை அமைப்பில் இடம்பெற்ற திருச்சி லோகநாதன் - எல்.ஆர். ஈஸ்வரி பாடிய "ஊரார் உறங்கையிலே" என்ற பாடல் இன்றளவும் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. 

 

மருதகாசி எழுதி மகாதேவனின் இசை அமைப்பில் சீர்காழி கோவிந்தராஜன் - பி. சுசீலா இணைந்து பாடிய பாடல் "வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ?" -  இந்தப் பாடலின் ஆரம்பத்தில் ஒரு சிறு - அல்ல - சின்னஞ்சிறு ஹம்மிங்குடன்தான் சீர்காழி கோவிந்தராஜன் பாடலைத் தொடங்கி இருப்பார்.

அவரது கேள்விக்கு பதிலாக பி. சுசீலாவும் அதே பாணியில் தொடங்கி

"அன்புக்கணவனின் முன்னாலே மனைவி அழகாகச் சிந்தும் புன்சிரிப்பு." - என்று தொடர்வார். 

 

நெஞ்சை நிறைக்கும் இனிய மெட்டில்  அமைந்த இந்த டூயட் பாடல் காட்சியில் நடித்தவர்கள் பாலாஜியும், பண்டரிபாயும்.  பாடல் இடம் பெற்ற படம் "எங்கள் குல தேவி".

 

"சிவகாமி" - இது படத்தின் பெயர்.  கொலைவழக்கில் கைதாகி வெளியே வந்த பிறகு தனது இறுதிக்காலங்களில் எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த படங்களில் ஒன்று.  படம் என்னவோ படுதோல்விதான்.  ஆனால் இந்தப் படத்தில் கவி. கா.மு. ஷெரீப் அவர்கள் எழுதி கே.வி. மகாதேவன் இசை அமைத்து டி.எம். சௌந்தரராஜன் பாடிய "வானில் முழுமதியைக் கண்டேன். வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்." என்ற பாடல் அன்று தொடங்கி இன்று வரை அழியாமல் நிலைத்து நிற்கும் பாடல்.  பாகவதரின் படத்துக்கு கே.வி. மகாதேவன் இசை அமைக்கவில்லையே என்ற குறை நீங்குவதற்காக அமைந்த படம் என்ற அளவுக்குத் தான் இந்தப் படத்தைப் பற்றி சொல்ல முடிகிறது.

 

*********************

டுத்து வந்த 1960 தன் பங்குக்கு மகாதேவனுக்கு பெயரையும் புகழையும் கொடுக்கத் தவறவில்லை.

 

"கிராமத்துச் சூழலில் அமைந்த படமா? கூப்பிடு கே.வி. மகாதேவனை." என்று சொல்கிற அளவுக்கு நாட்டுப்புற சந்தங்களில் பின்னி எடுத்தார் கே.வி. மகாதேவன்.

 

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"  - என்று ஒரு படம்.

 

எம்.கே. தியாகராஜ பாகவதர் சிறைக்குச் சென்றபிறகு அவருக்கு பதிலாக கர்நாடகாவிலிருந்து "ஹொன்னப்ப பாகவதர்" என்பவரை தயாரிப்பாளர்கள் கொண்டுவந்தார்கள்.  ஆனால் பாகவதரின் இடத்தில் வேறு யாரையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.  ஆகவே ஹொன்னப்ப பாகவதரால் அவ்வளவாகப் பிரகாசிக்க முடியவில்லை.  அவர் சொந்தமாகத் தயாரித்த படம் இது.

 

இந்தப் படத்தில் கவியரசு கண்ணதாசனின் ஒரு பாடல் கே.வி. மகாதேவனின் இசையில் ஏ. எல். ராகவன் - எஸ்.சி. கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து பாடிய ஒரு பாடல் இப்படி தொடங்குகிறது.

 

"காய் காய் அவரைக்காய்.

கவலைகள் எல்லாம் எட்டிக்காய்.

கஷ்டப்பாடு பட்டு கடுமையாய் உழைக்கும் கலையே உன்னை வாட்டி வதைப்பவரைக்  .. காய் காய்

 

அத்திக்காய் நம் பொருட்களை எல்லாம்

அள்ளிக் குவிக்குது ஒரு கூட்டம்.

இத்திக்காய் அதில் கால்வாசி

இல்லாமல் செய்யுது மறுகூட்டம்

 

காய் காய் அவரைக் காய்."

 

பின்னாளில் பலே பாண்டியாவில் இடம் பெற்ற அத்திக்காய் காய் காய்..  பாடலுக்கு முன்னோடியாக அமைந்த கவியரசரின் பாடல் வரிகள் இவை.

 

"எங்க வீட்டுப்பெண்" என்ற படத்தில் இடம் பெற்ற பாடல் " தெய்வம்  மலரோடு வைத்த மனம் நறுமணம். அன்பு மனதோடு வைத்தமணம் திருமணம்." என்று துவங்கும் ஒரு அருமையான டூயட் பாடல்.  டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா இணைந்து பாடிய இந்தப் பாடலின் முகப்பிசை, இணைப்பிசை எல்லாமே அருமை.  பாடலுக்கான கே.வி. மகாதேவனின் மெட்டோ மலரைப் போலவே மென்மையாக அமைந்த ஒரு பாடல் இது. 

 

"வீரக்கனல்"- ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி, பி.எஸ். வீரப்பா ஆகியோர்  நடித்த சரித்திரக் கதை அம்சம் கொண்ட படம்.  இந்தப் படத்தில் பாடல்கள் மகாதேவனின் பெயர் சொல்லும் பாடல்களாக அமைந்திருந்தன.

 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே அதுபோல கண்ணதாசன் எழுதி மகாதேவன் இசை அமைத்து பி. சுசீலா பாடிய "பூ முடிப்பதும் பொட்டு வைப்பதும் யாருக்காக" என்ற பாடலில் வரும் உற்சாகத் துள்ளல் அருமையான

தெம்மாங்கு மெட்டு.  

 

மாடர்ன் தியேட்டர்சில் கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்த அடுத்த படம் "கைதி கண்ணாயிரம்".

 

படத்தின் பெயரைச் சொன்னதுமே சட்டென்று நம் உதடுகள் "கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும். வஞ்சகரின் உலகம் வலைவிரிக்கும்" என்று முணுக்கத் தொடங்கிவிடுமே. 

 

"கைதி நம்பர் 911" என்ற ஹிந்திப் படத்தின் தழுவல்தான் இந்தப் படம்.

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரத்திடம் ஒரு பழக்கம்.  மக்களுக்கு பழக்கமில்லாத புதிய டியூன்களில் பாடல்களைப் போட்டுவிட்டு அவை மக்களை நல்லபடியாகச் சென்றடைய வேண்டுமே என்று படபடப்புடன் நகத்தைக் கடித்துக்கொண்டு காத்திருப்பது என்பது அவருக்குப் பிடிக்காத ஒன்று.  ஆகவே ஏற்கெனவே பிரபலமான டியூன்களிலேயே பாடல்களை அமைக்க அவர் விரும்புவார்.  (அதற்காக புதிய மெட்டுக்களை விரும்பாதவர் என்று அர்த்தம் அல்ல. எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத்தான்.)

 

அந்த வகையில் ஹிந்திப் படத்தில் லதா மங்கேஷ்கர் குரலில் இடம் பெற்ற "மீடி மீடி பாட்டின்" என்ற பாடல்தான் தமிழில் பி. சுசீலாவின் தேன்குரலில் "கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கியது".

 

பி. சுசீலாவின் தேன்குரலில் பாடலில் தெறிக்கும் வர்ண ஜாலங்கள் பாடிய சுசீலாவுக்கும், பாடலை எழுதிய மருதகாசிக்கும், இசை அமைத்த மகாதேவனுக்கும் நிலைத்த புகழைச் சேர்த்துவிட்டன.  படமும் வெற்றி பெற்றது.

.

"ஆடவந்த தெய்வம்" - டி.ஆர். மகாலிங்கத்தின் சொந்தப் படம். 

 

இந்தப் படத்தில் கே.வி. மகாதேவனின் இசை அமைப்பில் இடம் பெற்ற பாடல்கள் அத்தனையும் தேன்சொட்டுக்கள்.

 

"சங்கம் முழங்க வரும்" என்ற ஒரு பாடல்.  வழக்கமாக உச்சஸ்தாயியில் கணீர் என்று தெறிக்கும் மகாலிங்கத்தின் குரலை இந்தப் பாடலில் மத்யமஸ்தாயியில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் கே.வி. மகாதேவன்.  அவருக்கு இணையாக சுசீலாவையும் அருமையாகப் பாடவைத்திருக்கிறார். 

 

"சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே.  மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே."  -  மகாலிங்கம் - சுசீலாவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலில் உற்சாகச் சாரல்கள் தெறிக்கின்றன.

 

"நிலையாக என் நெஞ்சில்" - என்று சுசீலாவின் குரலில் சோகரசம் ததும்ப இன்னொரு பாடல்.  

 

என்றாலும் படத்துக்கு "தீம் சாங்" என்பார்களே அதுபோல திரும்பத் திரும்ப ஒலிக்கும் ஒரு அற்புதமான பாடல்.

 

"கோடி கோடி இன்பம் தரவே  தேடி வந்த செல்வம்.

கொஞ்சும் சதங்கை கலீர் கலீரென ஆட வந்த தெய்வம்" - என்ற பாடல்தான்.

 

படத்துக்கு "தீம் சாங்" என்பார்களே அதுபோல ஒருமுறைக்கு இருமுறையாய் இடம்பெறும் பாடல் இது.

 

டி.ஆர். மகாலிங்கத்தின் குரலில் ஒரு முறையும், பி. லீலா - பி. சுசீலாவின் குரலில் இன்னொரு முறையும் இடம் பெறும்  பாடல் இது.  

 

காஷ்மீர் பிரதேசத்தின் நாட்டுப்புற மெட்டில்  இருந்து பிறந்த ராகம் தான் "பஹாடி".  அமைதி, ஆற்றல், சோகம், கோபம் ஆகிய ஒன்றுக்கொன்று முரணான உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தக் கூடிய ராகம் இது.  இந்த ராகத்தை வெகு அருமையாக இந்தப் பாடலில் கையாண்டிருக்கிறார் கே.வி. மகாதேவன்.   பாடல்தான் எவ்வளவு மென்மையாகத், தன்மையாக மறுபடி மறுபடி கேட்கத்தூண்டும் வண்ணம் அமைந்திருக்கிறது!

 

அறுபதாம் ஆண்டின் இறுதியில் மகாதேவனுக்கு மகத்தான புகழைச் சேர்க்க வந்த படங்கள் இரண்டு.

 

இரண்டுமே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் தான்.

 

ஒன்று ஏ.பி. நாகராஜனின் திரைக்கதை வசனத்தில் கே. சோமுவின் இயக்கத்தில் வெளிவந்த "பாவை விளக்கு"

 

அடுத்தது ஏ. பீம்சிங் அவர்கள் இயக்கத்தில் கே.எஸ். கோபால கிருஷ்ணனின் கதை வசனத்தில் வெளிவந்த "படிக்காத மேதை".

 

காலத்தால் அழிக்க முடியாத காவியப் பாடல்களால் நம் மனதை நிறைத்த இந்தப் படங்களின் பாடல்களைப் பற்றி அடுத்த இடுகையில் பார்ப்போம்.

 

(இசைப் பயணம் தொடரும்..)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...