???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி 0 தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 0 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி 0 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு 0 உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 0 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: மத்திய அரசு உத்தரவு 0 கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை 0 நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை 0 சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து ஹோட்டலில் தங்கிய இளைஞர் கைது 0 வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு! 0 இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் 0 வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

‘'திரை இசைத் திலகம்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   16 , 2015  00:00:55 IST

 
"வீணா வாத்தியம் ஒன்றை வைத்துக்கொண்டு ஸ்வரசுத்தியோடு கலந்து வாசித்து ஆனந்த மயமாக இருக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் யோகம் பண்ணவேண்டாம். தபஸ் பண்ணவேண்டாம்.    மோட்சத்தை அடைந்துவிடலாம்.  தபஸ் பண்ணுவதாக இருந்தால் இந்திரிய நிக்ரஹம் பண்ணவேண்டும்.  அப்படிப்பட்ட கஷ்டம் இதில் இல்லை.   சங்கீதக்கலை சுலபமாக மோட்சம் வரைக்கும் கொண்டுபோய் விட்டுவிடுகிறது."  - காஞ்சி காமகோடி பீட பரமாச்சாரிய ஸ்வாமிகள்.
 
 
 
 

"சிகரத்தை அடைந்தவர்கள் அங்கேயே நின்று விடமுடியாது.  கீழே இறங்கி வந்துவிடுவார்கள்" என்று பேரறிஞர் பெர்னார்ட்ஷா கூறி இருக்கிறார்.

 

எந்த ஒரு வெற்றியும் நிலையானது அல்ல என்ற கருத்தில் சொல்லப்பட்ட வாசகம் இது.

 

ஆனால் அந்த வெற்றி தேடித்தந்த புகழ் என்பது அந்த சாதனையாளரின் மறைவுக்கு பின்னும் நிலைத்து நின்றுவிடுவதால் அவர்கள் சிகரத்திலேயே நிற்கிறார்கள்.

 

உண்மையான உழைப்பு, உள்ளார்ந்த ஈடுபாடு இவற்றால் கிடைக்கும் வெற்றி அப்படிப்பட்ட நீடித்த புகழை அந்த சாதனையாளருக்கு கொடுத்து விடுகிறது.

 

கே.வி. மகாதேவனின் விஷயத்தில் நடந்தது இதுதான்.

 

தான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை திரும்பிப்பார்க்கும் போது எந்த ஒரு மனிதனுக்கும் தனது சாதனையை நினைத்து ஒரு பெருமிதமும், ஏன் லேசான கர்வமும் கூட ஏற்படுவது இயற்கையான ஒன்று. அதில் தவறே கிடையாது.

 

ஆனால்..  அந்த அளவு கூட கர்வமோ, வெற்றிப் பெருமிதமோ ஒருவருக்கு ஏற்படவில்லை என்றால் அவர் நிச்சயமாக ஒரு அபூர்வ மனிதர் தான்.

அப்படிப்பட்ட அபூர்வ மனிதராக கே.வி. மகாதேவன் இருந்தார் என்பது உண்மையிலேயே வியக்க வைக்கும் ஒன்று.

 

"எனக்கு கொடுத்த வேலையைத்தான் நான் செய்தேன்.  அதை ஜனங்கள் ஏற்றுக்கொண்டு பாராட்டுகிறார்கள் என்றால் அவங்க என் மேல வச்சிருக்கிற அபிமானத்தை தான் அது காட்டறது."  என்று புகழ் தந்த போதை தலைக்கு ஏறாதபடி தன்னடக்கத்தால் அதைக் கட்டிப்போடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல.

 

அதனைச் சாதித்துக் காட்டி இருப்பது தான் திரை இசைத் திலகத்தின் சாதனைகளுக்கெல்லாம் மேலான சாதனை.

 

 பட்டுவேட்டி, சில்க் ஜிப்பா, பட்டையான விபூதிக்கு நடுவில் வைத்த குங்குமப்பொட்டு, தங்க பிரேமிட்ட கண்ணாடி, கூடவே உதடுகளில் நிரந்தரமாக குடிகொண்டிருக்கும் புன்னகை - எதிரியைக் கூட புன்சிரிப்பு மாறாத முகத்தோடு எதிர்கொள்ளும் தன்மை - இவை தான் கே.வி. மகாதேவன்.

குடும்ப வாழ்விலும் சரி,  இப்படிப்பட்ட மனப்போக்கு அவருக்கு இருந்த காரணத்தால் ஒரு நிறைவான வாழ்வு வாழக் கொடுத்து வைத்தவராக இருந்தார் அவர்.

லக்ஷ்மி என்ற மாதரசியைக் கைபிடித்தார் அவர்.  இருவரும் கருத்தொருமித்த தம்பதிகளாகவே வாழ்ந்துவந்தனர். 

 

ஆனால் எப்படியோ அவரது மனம் இன்னொரு பெண்ணிடமும் காதல் வயப்பட்டது.  அவரை இரண்டாவதாக மணமும் புரிந்துகொண்டார் அவர்.  அவர்தான் திருமதி. லீலா மகாதேவன் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். 

 

அந்த நாளைய சென்னை வானொலி நிலைய நாடகங்களைக் கேட்டு ரசித்து வந்தவர்களுக்கு லீலா மகாதேவனின் கணீரென்ற குரல் மறக்கவே மறக்காது.  திரைப்படங்களுக்கும் பின்னணிக்குரல் கொடுத்து வந்தார் அவர்.  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய சிவந்த மண் படத்தில் நடிகர் திலகத்தின் தாயாராக நடித்த சாந்தகுமாரி உச்ச கட்ட காட்சியில் "திவான்" என்று ஆக்ரோஷம் கொப்பளிக்க வில்லன் எம்.என். நம்பியாரிடம் பேசுவாரே.. அந்த கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர் லீலா மகாதேவன் தான்.   கே.வி.மகாதேவனைக் கரம் பிடித்து இரண்டாவது மனைவியாக அவரது வீட்டுக்குள் நுழைந்தார் அவர்.  இரண்டு மனைவியரோடும் ஒரே வீட்டில் கருத்தொருமித்தே வாழ்ந்து வந்தார் கே.வி.மகாதேவன்.

 

 திருமதி. லீலா மகாதேவன் அவர்கள் காஞ்சிப் பெரியவரிடம் ஆழ்ந்த உண்மையான ஈடுபாடு கொண்டவர்.   லீலா-மகாதேவன் தம்பதியினருக்கு பிறந்த ஒரே மகன் இருபத்தொரு வயதில் ஒரு சமயம் வீட்டை விட்டு காணாமல் போனதும், கவிஞர் வாலி அவர்களை அழைத்துக்கொண்டு திருமதி லீலா மகாதேவன் காஞ்சிப் பெரியவரைச் சந்தித்து மனமுருகி வேண்டியதும், பெரியவரின் அருளால் காணாமல் போனமகன் தானாகவே வீடு திரும்பியதும்  -  கவிஞர் வாலி அவர்களின் "நினைவு நாடாக்களில்" படித்துத் தெரிந்துகொண்ட மனதை நெகிழ வைக்கும் சம்பவம்.

 

பின்னாளில் வயது முதிர்ந்துகொண்டிருக்கும் போது திருமதி. லீலா மகாதேவன் அவர்களை எண்பதுகளின் இறுதியில் புற்றுநோய் தாக்கியது.  நோய் முற்றியநிலையில் காதல் கணவரை தவிக்க விட்டுவிட்டு காலமானார் அவர்.

 

கே.வி.மகாதேவனிடம் இருந்த சிறப்பான குணங்களில் முக்கியமானது அவரது பரந்த மனமும், உதவும் மனப்பான்மையும் தான்.

 

அவரது சொந்த ஊரான கிருஷ்ணன் கோவிலிலிருந்து யார் அவரைச் சந்திக்க வந்தாலும் சரி.  "சிரிச்ச முகத்தோடு வரவேற்று ஓரஞ்சாரம் பார்க்காமல் வேண்டிய உதவிகளைச் செய்து அனுப்புவார்" என்று சொல்கிறார் -  ஆரம்பத்தில் அத்தியாயத்தில் சென்னைக்கு போவதற்காக கே.வி.மகாதேவனுக்கு பதினாறு ரூபாய் தந்து வழியனுப்பி வைத்தாரே அந்த  நாராயணி அம்மாளின் சொந்த தம்பியும், கே.வி.மகாதேவனின் ஒன்று விட்ட சகோதரருமான திரு. அனந்த கிருஷ்ண அய்யரின் மூத்த மகனான திரு. வீரமணி அவர்கள்.

 

அதே போல தனது இசையில் பாடினால் தான் என்று இல்லை.  மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் ஒரு பாடகரோ பாடகியோ பாடிய பாடலைக் கேட்டு அது சிறப்பாக அமைந்திருந்தால் சம்பந்தப் பட்டவரை மனம் திறந்து பாராட்டவும் தயங்காதவர் அவர்.

 

மெல்லிசை மன்னர்கள் இசையமைத்து "பாச மலர்" படத்தில் இடம் பெற்ற  எல்.ஆர். ஈஸ்வரி பாடிய  "வாராய் என் தோழி வாராயோ" பாடலைக் கேட்டவர் அதன் பிறகு தனது இசையில் ஈஸ்வரி பாடவந்தபோது அவரது தோளைத் தட்டிக்கொடுத்து "ராஜா.  தம்பி விசுவோட இசையிலே நீ பாடியிருக்கியே "வாராய் என் தோழி வாராயோ"  பாட்டு, அந்தப் பாட்டு உன் வருங்காலத்தை பிரகாசமா வைக்கப் போறது பாரேன்" என்று வாஞ்சையோடு பாராட்டினார் கே.வி.மகாதேவன்.

 

பாடல்களுக்கு இசையமைக்கும்போது ஒரு கொள்கையைக் கடைப்பிடித்தார் அவர்.   மோகனம், கல்யாணி  ஆகிய மங்களகரமான ராகங்களைச் சோகப் பாடல்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் அவர்.

 

என்றாலும் "என்னோட குரலில் அவருக்கு இருந்த ஒரு பிடிமானத்தின் காரணத்தாலே "ஆட வந்த தெய்வம்" படத்துக்கு மியூசிக் போட்டபோது "நிலையாக என் நெஞ்சில் ஒளிவீசும் தெய்வம்" https://www.youtube.com/watch?v=H9DPAxAv8Qw என்ற சோகமான சிச்சுவேஷனுக்கான  பாட்டை மோகனத்துலே போட்டார்.  எனக்கு தெரிஞ்சு அவர் மோகனத்துலே போட்ட ஒரே சோகப் பாட்டு அதுதான்" என்று தனது நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார் பி. சுசீலா.

 

மேற்கு மாம்பலத்தில் இருந்த வீட்டை விற்றுவிட்டு அமைந்த கரையில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு கடைசி காலத்தை அமைந்தகரை வீட்டில் தான் கழித்தார் அவர்.

 

தனது வாரிசுகளுக்கு நல்ல கல்வி, உத்தியோகம் என்று அமைத்துக் கொடுத்து அவர்கள் அனைவரையும் நல்லபடியாக வாழ வைத்தார் அவர்.

 

வயதான காரணத்தால் மூப்பும் பக்கவாதமும் அவரைத் தாக்கிய போதும் கூட மனதளவில் நிறைவான மனிதராக அவர் இருந்தார்.

 

அவரது சதாபிஷேக வைபவத்தின் போது திரை உலகமே திரண்டு வந்து அவரை நமஸ்கரித்து அவரது ஆசிகளைப் பெற்றது என்பது குறிப்படத்தக்க ஒரு விஷயம்.

 

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உடல்நிலை சற்று தேறியது.  அந்த நேரத்தில் "தூர்தர்ஷனில்"  அவரது நேர்காணல் இடம் பெற்றது.  டி.கே. புகழேந்தி அவர்கள் தான் அவரது சார்பாகப் பேசிக்கொண்டிருந்தார்.  மலங்க மலங்க விழித்துக்கொண்டு புகழேந்தியையும் பேட்டியாளரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்த கே.வி. மகாதேவனிடம் நேர்காணல் நடத்தியவர் "மெட்டுக்குப் பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா எது முக்கியம் என்று நினைக்கிறீர்கள்" என்ற கேள்வியை வைத்தபோது தனது சக்தியை எல்லாம் திரட்டிக்கொண்டு அழுத்தம் திருத்தமாக "பாட்டுக்குத்தான் மெட்டு" என்று கூறினாரே பார்க்கலாம்.  அந்த வேகம் என்னை நிஜமாகவே பிரமிக்க வைத்தது! 

 

இந்த இடத்தில் திரு. டி.கே. புகழேந்தி அவர்களைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.  சுயமரியாதை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர் அவர்.  இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அவர் ஒரு தீவிர பிராமண எதிர்ப்பாளர்.  அப்படிப்பட்டவர் சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக கே.வி.மகாதேவனின் நிழலாகவே இருந்துவந்தார் என்றால்.. அந்த அளவுக்கு அவரை ஈர்க்கும் அளவுக்கு கே.வி. மகாதேவனின் குணம் இருந்திருக்கிறது.

 

"எனது மகள் பிருந்தாவை அழைத்துக்கொண்டு வயதான நிலையில் இருந்தபோது பெரியவரைப் பார்க்கப் போனேன்.  பேசக்கூட முடியாத நிலையில் இருந்த அவர் சிரமப்பட்டு என் மகளை  -  அப்போ அவ டான்ஸ் கத்துக்கிட்டு இருந்தா - வாழ்த்தினார்.  ரொம்ப சிரமப் படுத்த வேண்டாம் என்று அதிகம் எதுவும் பேசாமல் வந்துவிட்டேன்" - என்று என்னிடம் தனது நினைவைப் பகிர்ந்துகொண்டார் நடிகர் சிவகுமார்.

 

மூப்பும், முதுமையும் ஆக்கிரமிக்க ஞாபக மறதியும் சேர்ந்து ஆக்கிரமிக்க ஒவ்வொரு நாளையும் சிரமப்பட்டே கடந்துவந்தார் கே.வி. மகாதேவன்.

 

வருடம் 2001 - ஜூன் மாதம் 21ஆம் தேதி.  தனது எண்பத்து நான்காவது வயதில் அந்த சங்கீதச் சிங்கம் நிரந்தரமாக ஒய்வு பெற்று உலக பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு விட்டது.

 

காலனால் அவரது உயிரை மட்டும்தான் பறித்துக்கொள்ள முடிந்தது.  நெருப்பால் அவரது உடலை மட்டும்தான் சுட்டெரிக்க முடிந்தது.

 

ஆனால்.. இசைத்தமிழில் அவர் செய்த அரும்பெரும் சாதனைகளை இன்றளவும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றனவே அவர் இசை அமைத்த பல்லாயிரக்கணக்கான பாடல்கள்.  அவை என்றும் அவரது புகழை பாடிக்கொண்டே இருக்கும்.  அதற்கெல்லாம் ஒரு நாள் போதுமா?

 

போதாது.  ஒரு யுகம் வேண்டுமே!

 

--முற்றும் –

 

"திரை இசைத் திலகம்" கே.வி.மகாதேவனின் இசை என்னை ஆக்கிரமித்தது எப்போது?  சரியாகப் புள்ளிகுத்தத் தெரியவில்லை.  என்றாலும் எனக்கு தெரிந்து அவரது இசை எனக்குள் ஊடுருவ ஆரம்பித்தபோது.. இசை அமைப்பாளர் இவர்தான் என்றெல்லாம் தெரியாது.

 

அப்போது டி.எம்.எஸ். - சுசீலா உச்சத்தில் இருந்த காலம்.  பாடல்களை வானொலியில் கேட்கும்போதெல்லாம் கூட இசை அமைப்பாளர் யார் என்றெல்லாம் பார்க்கமாட்டோம்.  எம்.ஜி.ஆர். பாட்டு, சிவாஜி பாட்டு என்ற அளவில் தான் எங்கள் ரசனை இருந்தது. 

 

வளர வளர இசை அறிவும் கூட வளர ஆரம்பித்தது அதுவும் நான் அறியாமல்.

 

வீட்டில் என் அப்பா ஜி.என்.பி. அவர்களின் பரம ரசிகர்.  அவர் மூலம் கர்நாடக இசையில் சற்று கூடுதலாக ஆர்வம் ஏற்பட்டது.  அந்த ஆர்வமும் அப்போது உள்ளடங்கியே இருந்த காலகட்டம். 

 

அந்த வேளையில் தான் கே.வி.மகாதேவனின் இசை எனக்குள் ஒரு தாக்கத்தை - சிறு அதிர்வை உண்டுபண்ணியது. 

 

"தாயே உனக்காக" - படத்தில் அவர் அமைத்த "ஏசுநாதர் பேசினால் என்ன பேசுவார்"  பாடல்தான் கே.வி.மகாதேவன் என்ற மாமேதையின் மீது எனக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது.

 

வளர வளர அவரது இசையின் மீது ஈடுபாடும் வந்தது.  மற்ற இசை அமைப்பாளர்களின் இசையில் இருந்து அவரது இசை எப்படி மாறுபட்டு இருக்கிறது.  அவரது தனித்துவமான பாணி என்ன என்றெல்லாம் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.

 

அந்த மகத்தான இசை மேதையின் இசையில் விளைந்த பாடல்களை இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகப் படுத்தவேண்டும் என்ற எண்ணமே இந்தத் தொடருக்கு மூலமான வித்து.

 

கிட்டத்தட்ட மூன்று வருட உழைப்பின் பலன் அந்திமழையின் மூலமாக வாசக நண்பர்களைச் சென்றடைய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி அவரது இசைப் பயணத்தை இந்தத் தொடரின் மூலம் பகிர்ந்துகொள்ள ஊக்கமும் உற்சாகமும் - ஏன் தைரியமும் கொடுத்து என்னை எழுதத் தூண்டிய "அந்திமழை" திரு. அசோகன் அவர்களுக்கு நான் எவ்வளவு நன்றி கூறினாலும் அது போதாததாகவே இருக்கும்.

 

நான் தொடர் எழுதவேண்டும் என்று தீர்மானித்து அவரே  முதல் அத்தியாயத்துக்கான நாளையும் "ஏப்ரல் 13" தமிழ்ப் புத்தாண்டு அன்று ஆரம்பித்துவிடுங்க சார். " என்று குறித்தே விட்டார்.

 

"நான் இன்னும் தயாராகவே இல்லையே அசோகன்" என்று சொன்னபோது "அதெல்லாம் ஆரம்பிச்சுடுங்க சார்.  அப்புறம் தானாகவே வந்துடும்" என்று சொல்லி நீச்சல் தெரியாத ஒருவனை ஆற்றில் பிடித்து தள்ளுவதுபோல என்னை எழுதவும் வைத்துவிட்டார்.

 

இதனை நானா எழுதினேன்?  இல்லவே இல்லை.   வாசக அன்பர்களாகிய நீங்கள் கொடுத்த பேராதரவும், பாராட்டுதல்களும் எனக்குள் புது உத்வேகத்தைக் கிளப்பி எழுதவைத்தன என்பதுதான் நிஜம்.

 

இந்தத் தருணத்தில் குறிப்பாக எனக்கு இந்த இசைப் பயணத்தில் வழிகாட்டி துணை நின்ற நல்ல உள்ளங்களுக்கு நான் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன்.

 

நடிகர் திரு. சிவகுமார் -  கே.வி.மகாதேவனைப் பற்றிய தனது அபிப்பிராயத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டதோடு அல்லாமல் முதல் அத்தியாயத்தை படித்து விட்டு "நன்றாக வந்திருக்கிறது.  அவரோடு இணைந்து பணியாற்றிய கலைஞர்களையும் தொடர்புகொண்டு எழுதுங்கள்" என்று வழிகாட்டிய அந்த அன்பு நெஞ்சத்துக்கு நான் பெரிதும் கடமைப் பட்டவன்.

 

எனது சிற்றப்பா திரு. வீரமணி அவர்கள் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் எனக்காக அவர் செய்த உதவி மறக்கமுடியாத ஒன்றாகும்.

 

கே.வி.மகாதேவனின் குருநாதர் பூதப்பாண்டி அருணாச்சலக் கவிராயர் அவர்களைப் பற்றிய தகவல்களை எனக்காக சிரமப்பட்டு தேடி அலைந்து அருணாச்சலக் கவிராயரின் மகனைச் சந்தித்து தகவல்களைத் திரட்டி தபாலில் அனுப்பி... என்று பலவிதங்களிலும் உதவிய அந்த அன்பு உள்ளத்துக்கு நன்றி.

 

ராகங்களைப் பற்றிய சந்தேகங்களை நிவர்த்திசெய்து எனக்கு பெருமளவில் உதவியவர் எனது மகள் திருமதி. லலிதா விஸ்வநாதன். 

 

"வீட்டுக்கு வந்தாலே ப்ளாக் அண்ட் வொயிட் காலத்துக்கு வந்துட்ட மாதிரி இருக்கு" என்று என்னை கலாய்த்தாலும் பழைய பாடல்களை எல்லாம் கேட்டு அவற்றில் ராகங்கள் அமைந்த விதங்களை எல்லாம் என்னோடு கூட அலசி தனது இசை அறிவை பயன்படுத்தி எந்த அளவுக்கு உதவ முடியுமோ அந்த அளவுக்கு உதவிய அந்த அன்பு உள்ளத்துக்கும்,  பி.எஸ்.ஜி. பப்ளிக் பள்ளியில் இசைத்துறையில் பணியாற்றிய அன்பு நண்பர் திரு. நாராயணசுவாமி அவர்களுக்கும் நான் நன்றி கூறியே ஆகவேண்டும்.

 

அதே போல மேற்கத்திய இசையில் உள்ள நுணுக்கங்களை எனக்கு புரியவைத்து இந்தத் தொடர் சிறப்பாக அமைய பேருதவி புரிந்த பியானோ இசைக்கலைஞரும் எனது இனிய நண்பருமான திரு. மாக்ஸ் பாண்டியன் அவர்களுக்கும் எனது நன்றி.

 

நேரில் சென்று சந்திக்காமல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோதும் "மாமாவைப் பற்றிய தொடரா .. கண்டிப்பா உதவறேன்" என்று ஈடுபாட்டோடு  அவரைப் பற்றிய தகவல்களை என்னோடு பகிர்ந்து கொண்டதோடு அல்லாமல் ஏற்கெனவே தெரிந்த தகவல்களையும் நான் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்த பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களுக்கும்,  பி.சுசீலா, டி.எல். மகராஜன்  ஆகியவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

 

பி.சுசீலா அவர்களது மலரும் நினைவுகளை எனக்காக அவ்வப்போது தொலைபேசியில் என்னிடம் தொடர்பு கொண்டு பகிர்ந்தளித்த திரு.ஸ்ரீராம் அவர்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றிகளை இந்தத் தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

அவரது குடும்ப வாழ்வு சம்பந்தமாக தகவல்களைக் கொடுத்து இந்தத் தொடர் சிறப்பாக அமைய பேருதவி புரிந்த கே.வி.மகாதேவனின் நெருங்கிய உறவினர் திருமதி. லக்ஷ்மி சுப்ரமணியம் அவர்களுக்கு எனது ஸ்பெஷலான நன்றிகள்.  கே.வி. மகாதேவனின் முதல் மனைவியின் வாரிசுகள் யாரும் இப்போது உயிரோடு இல்லாத நிலையில் திருமதி லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்கள் கொடுத்த தகவல்கள் எனக்கு பேருதவி புரிந்தன.

 

கலைத்துறையில் அவரது வாரிசுகள் யாரும் கால் பதிக்கவில்லையோ என்று கேட்பவர்களுக்கு பதிலாக அவரது முதல் மனைவியின் மகனான காலம் சென்ற திரு. கண்ணன் மகாதேவன் அவர்கள் சில படங்களில் நடித்திருக்கிறார் - குறிப்பாக நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த "கந்தசாமி" படத்தில் திரு. கண்ணன் மகாதேவன் அவர்கள் நடித்திருக்கிறார் என்ற தகவலையும் தந்தவர் திருமதி லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்கள் தான்.

 

தனது தந்தையைப் பற்றிய தொடரில் இருந்த நெருடல்கலான விஷயங்களை பெரிது படுத்தாமல் அதே சமயம் கண்ணியமாகச் சுட்டிகாட்டி தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவிய  திருமதி. லீலா -  மகாதேவன் தம்பதியினரின் அன்பு மகன் திரு. நாகராஜன் மகாதேவன் அவர்களுக்கு எனது சிறப்பான நன்றிகள்.

 

அனைத்துக்கும் மேலாக நெடிய இந்தப் பயணத்தில் என்னோடு துணை நின்று ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து உதவிய வாசக நெஞ்சங்களுக்கும், ஏற்கெனவே எழுத்தில் உச்சம் தொட்ட திரு. கலாப்ரியா,  திரு. ராஜேஷ் குமார் போன்ற பரந்த மனம் கொண்ட எழுத்தாளர்களுக்கும் எனது ஸ்பெஷல் நன்றிகள்.

 

மீண்டும் சந்திப்போம்..

 

அன்புடன்..

 

மணியன்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...