???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 35 - பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   16 , 2014  04:22:50 IST

 
 
"பாரிஸ் நகரத்தில் உள்ள எனது சகோதரனின் வீட்டுக்கு வரும் மேற்கத்திய இசைக் கலைஞர்கள் அனைவரும் ஒரு விஷயத்தைத் தவறாமல் குறிப்பிடுவார்கள்.  "இந்திய இசையா? அதனை நடனத்துடன் கேட்கும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கிறது!  அது திரும்பத் திரும்பக் கேட்கவைக்கிறது.  தனித்துவமானது.  "  - பிரபல சிதார் இசைமேதை பண்டிட் ரவிசங்கர்.
 
 
 
 
"அடிமைப்பெண்"படத்துக்கு இசை அமைப்பாளராக கே.வி. மகாதேவனை ஒப்பந்தம் செய்தபோது அவரை அழைத்த எம்.ஜி.ஆர். அவரிடம் "உங்களுக்கு எது தேவை என்றாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள்.  என்ன வசதிகள் வேண்டுமோ குறிப்பிடுங்கள்.  செலவைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.  ஆனால் "இசை மட்டும் பிரமாதமாக இருக்க வேண்டும்." என்றார்.
 
பொதுவாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான் நடிக்கும் படங்களின் பாடல்களுக்கே அவை சிறப்பாக அமையவேண்டும் என்பதில் தனிக் கவனம் செலுத்தி திருத்தங்களைச் சொல்வார்.   அப்படி இருக்கும் போது தனது சொந்தத் தயாரிப்பு என்றால் மட்டும் சும்மா விட்டுவிடுவாரா?
 
அவர் நினைத்தமாதிரி பாடல்கள் வரவேண்டும் என்று விரும்புவார்.  அவரது முதல் தயாரிப்பான நாடோடி மன்னன் படத்திலேயே முதலில் என்.பாலகிருஷ்ணன் பிறகு எஸ்.எம். சுப்பையா நாயுடு என்று இசையமைப்பாளரையே மாற்றம் செய்தவர்.  
 
அவ்வளவு ஏன்?  ஒருமுறை தான் அமைத்த டியூன்கள் ஒன்றையுமே நன்றாக இல்லை என்று அவர் நிராகரித்ததால் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் தனது ஹார்மோனியப் பெட்டியையே அவருக்கு அனுப்பிவைத்து "எனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதான்.  இனிமே நீங்களே     டியூன் கம்போஸ் பண்ணிக்குங்க" என்று அனுப்பிவைத்த கதையும் உண்டு.
 
அப்படிப்பட்டவர் "அடிமைப்பெண்" படத்தைப் பொறுத்தவரையில்  முழுச் சுதந்திரத்தைக் கொடுத்து முழுப் பொறுப்பையும் கே.வி. மகாதேவனிடம் ஒப்படைத்தது ஆச்சரியமான விஷயம் தான்.
 
"அடிமைப் பெண்" திரைப்படம் வெளியான மே மாதம் வெளியான "பொம்மை"  மாத இதழ் அந்தப் படத்துக்கான ஒரு சிறப்பு மலரையே வெளியிட்டிருந்தது.  
 
படத்தில் சம்பந்தப் பட்ட நடிகர்கள் முதல் தொழில் நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.
 
அதில் தனது அனுபவத்தை கே.வி. மகாதேவனும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
 
"கலைஞனுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தால் தான் அவனால் தன் திறமையைக் காட்டமுடியும்.  சில படத் தயாரிப்பாளர்கள் அனாவசியமானவற்றுக்குக் கூடத் தலையிடுவார்கள்.  ஆனால் "அடிமைப்பெண்"படத் தயாரிப்பாளரான எம்.ஜி.ஆர். எனக்கும் என்னுடன் உள்ள சக கலைஞர்களுக்கும் பின்னணி இசைக் குழுவினருக்கும் முழுச் சுதந்திரத்தையும் கொடுத்தார்.  எந்தக் கட்டத்திலும் அவர் தலையிடவே இல்லை.  திருத்தங்களையும் சொல்லவில்லை.  பின்னணி இசை அமைப்பிலும் அவர் எனக்கு பரிபூரண சுதந்திரத்தை அளித்திருந்தார். இதுதான் இந்தப் படத்தில் இசை மிகச் சிறப்பாக அமைந்ததற்கு காரணம்."
 
தனது நாட்டிலுள்ள பெண்களையெல்லாம் கால் விலங்கிட்டு அடிமைகளாக்கிய செங்கோடனிடமிருந்து என்று தனது நாட்டுப் பெண்கள் விடுதலை அடைகிறார்களோ அன்று வரை தனது கால்களிலும் சங்கிலியால் தானே போட்டுக்கொண்டிருக்கும் விலங்குகளைக் களையமாட்டேன் என்று சபதம் பூணுகிறாள் தலை மறைவாக வாழும் அரசி மங்கம்மா.  
 
அவளது ஒரே வாரிசான மகன் செங்கோடனோ  எதிரிகளின் கைகளில் பச்சிளம் பாலகனாக சிக்கிக்கொள்ள அவனை சிறைச்சாலையில் நிமிர்ந்து நிற்கவே முடியாத ஒரு சிறு அறைக்குள் அடைத்து வெளியுலகம் தெரியாத ஒரு மிருகத்தைப் போல வளர்க்கிறான் செங்கோடன்.
 
அரசி மங்கம்மாவின் மெய்க்காப்பாளன் அவனை சிறையிலிருந்து விடுவித்து  தனது ஒரே பேத்தி ஜீவாவின் வசம் ஒப்படைக்கிறான்.  ஜீவாவினால் புது வாழ்வு பெற்ற வேங்கையன் தனது தாயின் சபதத்தை நிறைவேற்றி வைக்க சந்திக்கும் சவால்களும், அவற்றை அவன் எப்படி எதிர்கொண்டு தனது தாயின் லட்சியத்தை நிறைவேற்றுகிறான் என்பதுதான் கதை.
 
'அட்லாஸ் அகைன்ஸ்ட் தி சைக்ளோப்ஸ்" என்ற ஆங்கிலப் படத்திலிருந்து சில காட்சிகளையும், தி வெப்ட் ஆப மசிஸ்ட் என்ற படத்திலிருந்து சில சம்பவங்களையும் மூலமாக எடுத்துக்கொண்டு அடிமைப்பெண் படம் உருவானது.  ஆரம்பத்தில் கதாநாயகியாக சரோஜாதேவியையும், இரண்டாவது நாயகியாக கே.ஆர்.விஜயாவையும் ஒப்பந்தம் செய்து படத்தைத் துவக்கினார் எம்.ஜி.ஆர்.  ஆனால் சில பல காரணங்களால் இருவரும் படத்திலிருந்து விலகிக்கொள்ள ஜெயலலிதா இரட்டை வேடத்தில் நடிக்கும் விதமாக கதையை மாற்றி அமைத்து படம் உருவானது.
 
பாடல்களை கவிஞர் வாலி, ஆலங்குடி சோமு, புலமைப் பித்தன். அவினாசி மணி ஆகியோர் எழுதி இருந்தனர்.
 
முதல் முதலாக "அம்மா என்றால் அன்பு" என்ற கவிஞர் வாலியின் பாடலை கலைச்செல்வி ஜெயலலிதாவைச் சொந்தக் குரலில் பாடவைத்து அருமையாக அமைத்து முதல் பாடலிலேயே தனது முத்திரையைப் பதித்தார் கே.வி. மகாதேவன்.   மென்மையான குரலில் மயிலிறகால் மனதை வருடும் வண்ணம் இனிமையாக ஜெயலலிதா பாடியிருக்கிறார்.
 
அடுத்து இந்தப் பாடத்தின் மூலம் தான் தமிழில் ஒரு பின்னணிப் பாடகராக அறிமுகமானார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
 
அவருக்கு ஒன்றல்ல இரண்டு பாடல்கள்.  
 
"என்ன சார் இது? புதுசா இருக்கே?  எஸ்.பி.பி.  படத்துலே "ஆயிரம் நிலவே வா"  ஒரு பாட்டைத்தானே பாடி இருக்காரு.  நீங்க  இரண்டு பாடல்கள் என்று சொல்லுறீங்களே" என்று தோன்றுகிறதா?
 
உண்மையில் அந்த "ஆயிரம் நிலவே வா" பாடலை முதலில் டி.எம். சௌந்தர ராஜனைத்தான் எம்.ஜி.ஆர். பாடவைப்பதாக இருந்தார்.
 
ஆனால் ஒலிப்பதிவு நேரத்தில் மதுரையில்  தனது மகளின் திருமணம் நெருக்கத்தில் இருந்ததால் "தன்னால் முடியாது" என்று மறுத்தார் டி.எம்.எஸ்.   ஆனால் அவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எம்.ஜி.ஆர். விடுவதாக இல்லை.  முடிவில் பிடிவாதமாக டி.எம்.எஸ். மதுரைக்குச் சென்றுவிட்டார்.  
 
அவருக்கு பதிலாக புதிய பாடகர் - இளம் பாடகர் - எஸ். பி. பி. படத்தில் நுழைந்தார்.
 
புலவர் புலமைப் பித்தன் எழுத தாய்மையைப் போற்றும் பாடல் ஒன்று தயாரானது
 
வீரத்திலே கவியெழுதி
விளக்கம் சொன்ன குலமகளே
உன் கருணை பொங்கும் ஆலயத்தில்
கவலை என்பதில்லையம்மா
 
கரை மோதும் நதியினிலே
அம்மா நான் விழுந்தாலும்
மலர்களிலே மாதர் குலம்
மனமிருந்தால் போதுமம்மா
 
பொன்னளந்து தந்தவளே
புகழ் சுமந்து தந்தவளே
என் உயிரை நான் கொடுத்து
உன் உயிரை அலங்கரிப்பேன் 
 
இந்தப் பாடலை கஜல் பாணியில் வெகு சிறப்பாக கே.வி.மகாதேவன் இசை அமைக்க மனதை வருடும் தனது மென்மையான குரலால் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாட பாடல் பதிவானது.   எம்.ஜி.ஆர் வந்தார்.  பாடலைக் கேட்டார்.  அப்படியே மகாதேவனைக் கட்டித் தழுவிக்கொண்டார்.  இளம் பாடகர் பாலுவை தட்டிக் கொடுத்துப் பாராட்டினார்.  அவருக்கு பாடல் வெகுவாகப் பிடித்துப் போனது.
 
ஆனால் மற்றவர்கள்?  
 
"பாட்டு நல்லாத்தான் இருக்கு.  ஆனால் எடுத்த எடுப்பிலேயே வீரத்தைப் பற்றி இல்லாம தாயோட பெருமையைச் சொல்லுற பாட்டா இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். " என்று ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.   அரைமனதாக அதை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொள்ள ஆலங்குடி சோமு எழுத "தாயில்லாமல் நானில்லை"  பாடல் தயாரானது. 
 
டி.எம்.எஸ். - அவர்களின் கம்பீரக்குரலில் அமைந்த இந்தப் பாடலுக்கு மகாதேவன் அமைத்த இசை முதல் பாடலுக்கு முற்றிலும் மாறுபட்டு அமைந்தது.  பாடல் அமைந்த வெற்றி நாடறிந்த ஒன்றுதானே!
 
"காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ"  - பி.சுசீலாவும், எஸ். ஜானகியும் இணைந்து பாடிய பாடல்.  அவினாசி மணி அவர்கள் எழுதிய பாடல் இன்றளவும் காலத்தை வென்று நிற்கும் காவியத் தலைவன் மக்கள் திலகம் அவர்களின் புகழைப் பாடிக்கொண்டே இருக்கிறது. 
 
இந்தப் பாடலில் இறுதியில் ஸ்வரங்களுக்கு பதிலாக ஹம்மிங்கில் பி.சுசீலாவையும், எஸ்.ஜானகியையும் மாற்றி மாற்றிப் பாடவைத்து இருவருக்கும் ஒரு போட்டியையே ஏற்படுத்தி விட்டார் கே.வி.மகாதேவன்.
 
ஒலிப்பதிவு நேரத்தில் வந்திருந்த எம்.ஜி.ஆர். சுசீலாவையும், ஜானகியையும் பார்த்து "இந்தப் பாட்டுலே உங்க ரெண்டு பேருக்கும் ஒரு போட்டியே இருக்கு.  யார் ஜெயிக்கறீங்கன்னு பாக்கணும்" என்று உற்சாகப் படுத்திப் பாடவைத்தார்.  
 
ஒருவரை ஒருவர் மிஞ்சும் விதமாக இருவரும் பாடியதில் இருவருக்குமே வெற்றிதான்.
கேட்கும் நம் செவிகளுக்கோ சிறப்பான ஒரு பாடல் திகட்டாத தேனிசை விருந்தாக கிடைத்திருக்கிறது.  பாடலுக்கு மகாதேவன் அமைத்திருக்கும் இணைப்பிசையும், சரணங்களில் அமைத்திருக்கும் வாத்திய இசைக் கோர்வைகளும் மெய்சிலிர்க்க வைக்கின்றன.  இந்தப் பாடலுக்கு அருமையான நடனத்தை அமைத்தவர் நடன இயக்குனர் தங்கப்பன் மாஸ்டர். 
 
இடைவேளைக்குப் பிறகு கதை ராஜஸ்தான் பாலைவனப் பகுதிகளிலும் ஜெய்ப்பூர் அரண்மனையிலும் பயணிக்கிறது.
 
கதையின் ஓட்டத்துக்கேற்ப தனது இசையையும் விரிவு படுத்திக் கொண்டிருக்கிறார் கே.வி.மகாதேவன்.
 
"அடிமைப்பெண்" கதையில் சில பகுதிகள் அராபியப் பாணியில் இருப்பதால் கொஞ்சம் அராபிய இசை,  ரஷ்யாவில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் "உஸ்பெக்" பகுதி இசையையும் இணைத்து இசை அமைத்திருக்கிறேன்." என்று கே.வி.மகாதேவன் கூறியிருக்கிறார்.
 
பொதுவாக அவரது இசையைப் பற்றி அவரது பாடல்கள் தான் பேசுமே தவிர அவர் அதிகம் பேசியதில்லை.  ஆனால் அடிமைப்பெண் படத்துக்காக தான் எவ்வளவு உழைத்திருக்கிறோம் என்பதை தன் ரசிகர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்றால் எந்த அளவுக்கு அவரது வாழ்வில் மறக்கமுடியாத ஒரு இடத்தை இந்தப் படம் பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
 
" "ஏமாற்றாதே ஏமாற்றாதே""  - வழக்கத்துக்கு மாறாக ஏராளமான இசைக் கருவிகளை உபயோகப்படுத்தி கே.வி. மகாதேவன் இசை அமைத்திருக்கும் அற்புதமான பாடல் இது.  ட்ரம்பெட்டும், வயலின்களும் சரணங்களின் இணைப்பிசையில் விறுவிறுப்பாக கையாளப்பட்டிருக்கும் திறமை வாயடைக்க வைக்கிறது.  
 
"இந்தப் பாட்டிற்கேற்ப ஜெயலலிதா தன் உடலிலேயே சிறு முரசுகளைக் கட்டியபடி ஜெயலலிதா புதுமையாக ஆடியிருக்கிறார்.  இசைக்கும் நடனத்துக்கும் இந்தப் பாட்டில் போட்டியே ஏற்படுத்தப் பட்டிருக்கிறது." என்று கூறுகிறார் கே.வி.மகாதேவன்.
 
டி.எம்.எஸ். அவர்களின் குரல் வளமும், கவிஞர் வாலியின் கருத்தாழமிக்க வரிகளும், மகாதேவனின் இசையும், சோப்ரா மாஸ்டரின் நடன அமைப்பும் பாடல் காட்சியை பெருவெற்றி பெறவைத்திருக்கின்றது.
 
அடுத்து புலவர் புலமைப் பித்தனின் முதல் பாடல்.  (வீரத்திலே கவி எழுதி பாடல் படத்தில் இடம் பெறாமல் போனதால் அவரது முதல் பாடல் என்ற பெருமை இந்தப் பாடலுக்குத்தான்.)  இன்றளவும் அடிமைப் பெண் என்ற பெயர் சொன்னாலே போதும் உதடுகள் உச்சரிக்கும் பாடலாக அமைந்து விட்ட "ஆயிரம் நிலவே வா  ஓராயிரம் நிலவே வா" என்ற எஸ். பி. பால சுப்ரமணியத்தின் முதல் பாடல்.  இசையரசி பி.சுசீலாவுடன் இணைந்து அவர் பாடிய அற்புதமான டூயட்.  "பீம்ப்ளாஸ்" மனதை அள்ளுகிறது.  பாடல் வரிகளையும், சூழலையும் உணர்ந்து இசையமைப்பதில் கே.வி.மகாதேவனின்  நிகரில்லாத திறமைக்கு முத்தான எடுத்துக்காட்டு. 
 
"உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது"  படத்தின் உச்ச கட்ட காட்சிக்கு முன்னால் வரும் கவிஞர் வாலியின் பாடல்.  டி.எம்.எஸ். - வாலி- மகாதேவன் மூவரும் எம்.ஜி.ஆர். அவர்களின் படத்தில் இணைந்தால் கண்டிப்பாக பாடல் வெற்றிப் பாடலாக அமையும் என்பதை நிரூபித்த பாடல். 
 
இப்படி அனைத்துப் பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றன.  
 
அதே ஆண்டில் வெளிவந்த கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் "சுபதினம்"  படத்தில் "ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம்" என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடிய வாலியின் பாடல் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.  
 
இதே படத்தில் இடம் பெற்ற "புத்தம் புதுமேனி" என்ற பாலமுரளிகிருஷ்ணா - பி.சுசீலாவின் டூயட் பாடல் இனிமையாக அமைந்தாலும் கே.வி.மகாதேவனுக்கு ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்திய பாடல்.  இந்தப் பாடலுக்கான மெட்டு அவரது நண்பராக இருந்த இசையமைப்பாளர் டி.ஜி. லிங்கப்பா அவர்களுடைய மெட்டு.  தெரிந்து நடந்ததா தெரியாமல் நடந்ததா என்பது வேறு விஷயம்.  ஆனால் மாமேதையான மகாதேவனுக்கு ஒரு சிறு களங்கத்தை ஏற்படுத்திய நிகழ்வு.  
 
ஜெயசங்கர் - கே.ஆர்.விஜயா இணைந்து நடித்த பி. மாதவன் இயக்கிய படம் "பெண்ணே நீ வாழ்க" -  பஹாடியில் ஒரு அருமையான இருகுரலிசை பாடல்.  "பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன்சிரிப்பு" என்ற வாலியின் பாடலை டி.எம்.எஸ். - சுசீலா பாடினார்கள்.  மகாதேவனின் இசையில் நினைவில் நிற்கும் பாடல் இது ஒன்றுதான். 
 
****
"காதல் வாகனம்" - படத்தின் தோல்விக்குப் பிறகு வடபழனி முருகன் சன்னதியில் அந்த முருகனைத் துணையாகச் சேர்த்துக்கொண்டு தமிழ் நாட்டிலுள்ள முருகன் தலங்கள் அனைத்தையும் படத்தில் காட்டி தனது முதல் பக்திப் படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார் சின்னப்பா தேவர்.
 
பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன், மருதகாசி.  இசை - வழக்கம் போல கே.வி. மகாதேவன் தான்.  
 
பாடல்களும் இசையும் படத்தை தூக்கி நிறுத்திய தூண்களில் ஒன்றாக அமைந்துவிட சேவற்கொடியோனின் பெருமைக்கு ஒரு வெற்றிக்கொடி நாட்ட வந்தான்.....
 
தேவரின் "துணைவன்"..

 

 

(இசைப் பயணம் தொடரும்..)

 

 

(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)

 

 

 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 24

 திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 25

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 26

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 27

 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 28

 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 29

 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 30

 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 31

 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 32

    திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 33

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 34

 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...