???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 33 - பி ஜி எஸ் மணியன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   01 , 2014  00:49:55 IST

 

 

"இசை"  -  அழகான வடிவத்தில் சப்தங்கள் இணைத்து மனிதனின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் நுண்கலைகளில் ஒன்று"  -  (ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் இசைக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் சொற்பொருள் விளக்கம்)

 

 

தொடர்ந்து சேக்கிழார் பெரியபுராணத்தை அரங்கேற்றம் செய்யும் காட்சி.  அவரது காப்புச் செய்யுளான "உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் "  ஒரு விருத்தமாக மலர்கிறது.  டி.எம்.எஸ். - பாடும் இந்த விருத்தத்தை வலஜி ராகத்தில் அருமையாக அமைத்திருக்கிறார்.

 

படத்தில் ஒரு நிமிடத்துக்கு மட்டுமே இடம்பெறும் இந்தப் பாடல் காட்சிக்காக கே.வி.மகாதேவன் எடுத்துக்கொண்டிருக்கும் சிரத்தை பிரமிக்க வைக்கிறது.

 

திருக்குறிப்புத் தொண்டர் கதை..  "ஆத்து வெள்ளம் காத்திருக்கு" என்ற ஜனரஞ்சகப் பாடலுடன் துவங்குகிறது.  நாட்டுப்புற மெட்டில் அமைந்த பாடல் என்றாலும் கண்ணதாசனின் கருத்தாழமிக்க வரிகளும் அதற்கு மகாதேவன் அமைத்திருக்கும் இசையும் பாடலை வெற்றிப்பாடல்கள் வரிசையில் சேர்க்கத் தவறவில்லை.

 

"இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி" - சித்தர் பாடல் பாணியில் கவியரசர் எழுதிய பாடல்.  மிக எளிமையாக காவடிச் சிந்து பாணியில் இசை அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.  கஹரப்பிரியாவை இவ்வளவு எளிமைப் படுத்திக் கொடுக்கமுடியுமா என்ன என்று வியக்க வைக்கும் பாடல்.  இந்தப் பாடல் முழுக்க தந்தி வாத்தியங்கள் எதையும் (வயலின், வீணை, சிதார்) பயன்படுத்தாமல் வெறும் தாளவாத்தியங்களை மட்டுமே பயன்படுத்தி கே.வி.மகாதேவன் இசை அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். 

 

தொடரும் சுந்தரர் கதையில் "பித்தா பிறை சூடி" என்ற சுந்தரர் தேவாரம் ஒரு தொகையறாவாக ஆரம்பித்து "சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே" என்ற கண்ணதாசனின் பாடலாக மலருகிறது.  இரண்டுமே சிந்துபைரவி ராகத்தில் அமைந்திருக்கிறது.  கவிஞரின் அற்புத வரிகள் மகாதேவனின் இசையில் உயிர்பெற்று உலவும் விதம் அற்புதம்.

 

அடுத்து வரும் அப்பர் - சம்பந்தர் சம்பந்தப் பட்ட கதைகளில் இருவர் தேவாரங்களையும் அருமையாக அமைத்து கேட்பவர் காதுகளையும் மனங்களையும் கொள்ளைகொண்டு விட்டார் கே.வி.மகாதேவன்.

 

பொதுவாக சிறுவர்-சிறுமியர் பாடும் பாடல்கள் என்றால் பெண் பாடகிகளான எம்.எஸ். ராஜேஸ்வரி, எல்.ஆர். ஈஸ்வரி, பி.சுசீலா போன்ற பாடகியரே பாடுவதுதான் வழக்கமாக இருந்துவந்த நிலையில் திருஞான சம்பந்தராக நடித்த மாஸ்டர் பிரபாகருக்கு பின்னணியாக ஒரு பத்து வயது சிறுவனையே பாடவைத்தார் கே.வி.மகாதேவன்.

 

பிரபல பாடகர் திருச்சி லோகநாதன் அவர்களின் மகனான திரு. டி.எல். மகராஜன் தான் மாஸ்டர் மகராஜன் என்ற பெயருடன் பின்னணிப் பாடகராக பத்து வயதில் அறிமுகமான முதல் படம் இதுதான்.

 

"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி"  என்று பத்து வயது மகராஜன் தேவாரம் இசைக்கும் போது அந்த வெண்கலக் குரலில் தான் எத்தனை பாவங்கள் மிளிருகின்றன.  பீம்ப்ளாஸ் ராகத்தில் அந்த சிறுவயதில்தான் எத்தனை அழகாகச் சங்கதிகள்  வெளிப்படப் பாடியிருக்கிறார்!  

விருத்தமாக மகராஜன் பாடியதும் அப்பர் தேவாரமான "மாசில் வீணையும்" அதே பீம்ப்லாஸில் பாடலாக டி.எம். எஸ். பாடுகிறார்.  

 

இப்படி தேவாரப் பண்களை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கவேண்டும் என்றால் அதற்கு எத்தனை தைரியம் வேண்டும்?  அந்த தைரியம் இயக்குனர் ஏ.பி.நாகராஜனுக்கு இருந்தது.  அதற்கு காரணம் இசைக்கு கே.வி. மகாதேவன் இருக்கிறார் என்ற எண்ணமாகத் தான் இருக்கவேண்டும்.

 

"எதையும் கொடுக்கறபடி கொடுத்தா ரசிகர்கள் நிச்சயமா ஏற்றுக் கொள்வார்கள்" என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கே.வி.மகாதேவனுக்கும் இருந்ததால் தான் "திருவருட்செல்வர்" படத்தில் இடம்பெற்ற தேவாரப் பதிகங்கள் பாமர மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெகுவாக ரசிக்கப் பட்டன.

 

மூடியிருக்கும் ஆலயக் கதவைத் திறக்க அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடும் காட்சி.

 

"பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கனோ" - என்ற அப்பர் தேவாரம் உதய கால ராகமான பௌளியில் டி.எம்.எஸ். விருத்தமாகப் பாட தொடர்வது "தாழ் திறவாய் ஆலய மணிக்கதவே தாழ் திறவாய்" என்ற கண்ணதாசனின் பாடல்.  பிலஹரியில் இந்தப் பாடலை சிறப்பாக அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.  

 

 

இறுதியில் திறந்த கதவம் மூடுவதற்கு சம்பந்தர் பாடும் தேவாரப் பதிகம் "சதுரம் மறைதான் துதி செய்து வணங்கும்"  மாஸ்டர் மகராஜனின் குரலில் காபி ராகத்தில் ஒலிக்கிறது.

 

இப்படி அருமையான முறையில் தேவாரப் பதிகங்களை அமைத்து அவற்றை சாமானிய ரசிகர்களும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.

 

"ஆதிசிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே"  - பி. சுசீலா இனிய குரலில் பாடும் அருமையான பாடல்.  சிந்துபைரவி ராகத்தில் அருமையாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் மகாதேவன்.முடிவில் டி.எம்.எஸ். அவர்களும் சேர்ந்துகொள்கிறார்.

 

பாம்பு தீண்டி உயிரிழந்த பாலகனை மீட்க திருநாவுக்கரசர் பாடும் பாடலாக "நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே"  பாடல்.  புன்னாகவராளியில் பாடலும் இணைப்பிசையும் கேட்கும் நாகமே மயங்கும் போது நாம் மட்டும் மயங்காமல் இருக்கமுடியுமா என்ன?

 

 

இறுதியில் வரும் சிவசக்தி நடனத்துக்கான இசையும் நடனமும் நம்மை கயிலாயத்துக்கே அழைத்துச் சென்று விட்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை.  (இந்த நடனக்காட்சியில் ஆடியவர்கள் குமாரி வித்யா மூர்த்தி மற்றும் எஸ்.ஆர். ராஜு.  இந்த வித்யா மூர்த்தி வேறு யாருமல்ல.  பின்னாளில் பிரபலமான நடிகை ஸ்ரீவித்யாதான். இந்தப் படத்தின் மூலம் தான் அவர் திரைப்படவுலகில் காலெடுத்துவைத்தார்).

 

மொத்தத்தில் கே.வி.மகாதேவன் - ஏ.பி. நாகாராஜன் கூட்டணி மீண்டும் வெற்றிக் கூட்டணி என்பதை நிரூபித்தது.   இந்தப் படத்தின் மூலம் தான் "அருட்செல்வர்" என்ற சிறப்புப் பட்டம் ஏ.பி.நாகராஜன் அவர்களுக்கு கிடைத்தது.

 

தொடர்ந்து தனது அடுத்த பக்திப் படத்தை தயாரித்தார் ஏ.பி.நாகராஜன். 

 

சைவ நாயன்மார்கள் சிலரின் கதைகளை தயாரித்தவர் இப்போது வைணவ ஆழ்வார்கள் சிலரது வரலாற்றை மையப்படுத்தி "திருமால் பெருமை" என்ற பெயரில் வண்ணத்திரைக் காவியமாக்கினார்.

 

நாயன்மார்களை தன் நடிப்புத் திறமையால் கண்முன் கொண்டுவந்து நிறுத்திய நடிகர் திலகம் இம்முறை பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார்,  தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆகியவர்களாகவே மாறிவிட்டார்.

 

கே.வி. மகாதேவன் வழக்கம் போலவே முத்தான முதல் தரமான பாடல்களை அமைத்துக் கொடுத்தார்.

 

"மலர்களிலே பல நிறம் கண்டேன்"  -  கண்ணதாசனின் வரிகள் மகாதேவன் இசையில் சௌந்தரராஜனின் குரலோடு கலக்கும் போது  அன்றாடம் மாலைதொடுத்து கைங்கரியம் புரியும் பெரியாழ்வார் இப்படித்தான் பாடி இருந்திருப்பாரோ என்று நினைக்க வைக்கிறது.  

 

ஆனால் முந்தைய படத்தில் கதாபாதிரங்களுக்கேற்ற நட்சத்திரங்களை சரியாகத் தேர்வு செய்த ஏ.பி.நாகராஜன் இந்தப் படத்தில் அதில் கோட்டை விட்டுவிட்டாரோ என்று எண்ணத் தோன்றும் வண்ணம் இருந்தது.  ஆண்டாளாக கே.ஆர். விஜயா என்ன தான் திறமை வாய்ந்த நடிகை என்றாலும் அவரது உடற்பருமனும் பொருந்தாத ஆடை அலங்காரமும் நடிகர் திலகத்துக்கு மகளாக அவரை ரசிகர்களை எற்றுக்கொள்ள வைக்கவில்லை என்பது ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய ஒரு கசப்பான உண்மை.  ஆகவே படம் முந்தைய படங்களைப் போல எதிர் பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் தோல்விப்படமாகவில்லை.

 

"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாய்"  -  பீம்ப்ளாசில் இந்த ஆண்டாள் பாசுரத்தை பி.சுசீலாவின் குரலில் இனிமையாக அமைத்திருந்தார் கே.வி.மகாதேவன்.  

 

"ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா"  - மாஸ்டர் மகராஜன் -  டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா ஆகியோரின் இணைவில் கேட்கத் திகட்டாத ஒரு அருமையான பாடல்.  காபி ராகம் மகாதேவனுக்கு கைகொடுத்தது

 

"காக்கை சிறகினிலே நந்தலாலா"  - பாரதியார் பாடல் சூலமங்கலம் ராஜலக்ஷ்மியின் நயமான குரலில் ஒரு அருமையான மெலடியாக உருவெடுத்தது.   

 

"சலஸி காபி"  என்று ஒரு அபூரவமான ராகம்.  இந்த ராகத்தை இதுவரை வேறு எந்த இசையமைப்பாளரும் கையாண்டு திரைப்பாடலைக் கொடுத்ததில்லை.  கே.வி.மகாதேவன் ஒருவரைத் தவிர என்ற அபூர்வமான தகவல் எனக்குக் கிடைத்தது.  அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று முத்தான பாடல்களை இந்த ராகத்தில் அமைத்து அனைத்தையும் இன்று வரை நம் செவிகளில் செந்தேனாய் இனிக்கவைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.

 

வானம்பாடியில் "கங்கைக்கரைத் தோட்டம்",  "எங்க வீட்டுப் பெண்" படத்தில் "சிரிப்பு பாதி அழுகை பாதி" (பாடியவர் பி.பி. ஸ்ரீனிவாஸ்)  இப்போது திருமால் பெருமையில் இந்த "காக்கை சிறகினிலே நந்தலாலா" ... இப்படி முத்தான மூன்று பாடல்களை இந்த அரிதான ராகத்தில் அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.

 

தொடர்ந்து "கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி"  - பி.சுசீலா- குழுவினர் குரலில் ஒரு நடனப்பாடல்.  

 

"கரை ஏறி மீன் விளையாடும் காவிரி நாடு"  -  பத்மினி - ராஜசுலோச்சனாவின் நடனப் பாடலுக்கான பாடல்.  பி.சுசீலா -  சூலமங்கலம் ராஜலக்ஷ்மியின் குரல்களில்.  

 

"பச்சை மாமலைபோல் மேனி"  - என்று ஹிந்தோளத்தில் தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரம்.  டி.எம்.எஸ். ஸின்  கம்பீரக்குரலை இப்படியும் மென்மையாகக் கையாளமுடியுமா என்று  வியக்கவைக்கும் வண்ணம் பாடவைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன். 

 

இறுதியில் வரும் தசாவதார ராகமாலிகைப் பாடலான "திருமால் பெருமைக்கு நிகரேது"  மத்யாமவதியில் துவங்கி ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒவ்வொரு ராகம் என்ற முறையில் தன்யாசி, மோகனம், கானடா,  சாரங்கா, கமாஸ், சாவேரி, சாரமதி, சுருட்டி, பேகடா என்று சரணத்துக்கு சரணம் ராகங்கள் மாறி இறுதியில் மீண்டும் மத்யமாவதியிலேயே பாடலை முடித்து அதகளப் படுத்தியிருக்கிறார் கே.வி.மகாதேவன்.  

 

இப்படிப் புராணப் படங்களா - கே.வி.மகாதேவன் இருந்தால் வெற்றி நிச்சயம் என்று எண்ணத் தோன்றும் வகையில் பாடல்கள் அமைந்தன.

 

அதே சமயம் ஒரு சாதாரணக் குடும்பப் படம் கே.வி.மகாதேவனின் இசையில் வெளியாகி பெருவெற்றி பெற்று 175நாட்களைக் கடந்து ஓடி வெள்ளிவிழாக் கொண்டாடி வெற்றி வாகை சூடியது.

 

"பணமா பாசமா"  -  கே.எஸ். கோபாலகிருஷ்ணன்  நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களை மனதில் வைத்து உருவாக்கிய கதையில்  "ஜெமினி கணேசனுக்கு மாமியாராக தான் நடித்தால் கண்டிப்பாக எடுபடாது என்று சாவித்திரி மறுத்துவிட்டு தனக்கு பதில் எஸ். வரலட்சுமியை சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். 

 

இசைக்கு கே.வி.மகாதேவனைச் சேர்த்துக்கொண்டு களமிறங்கிய கே.எஸ்.ஜி. அவர்களே எதிர்பார்க்காத வகையில் மகத்தான சாதனை புரிந்து வசூலை வாரிக்குவித்தது அந்தப் படம்.

 

பாடல்களில் படத்தின் பெயர் சொன்னாலே முன்னணியில் வந்து நிற்கும் பாடலாக "எலந்தப் பயம்"  பாடல் அமைந்தது.  புன்னாகவராளி"யில் இப்படி ஒரு டப்பாங்குத்துப் பாடலா என்று வியக்கும் வண்ணம் பட்டி தொட்டி எங்கும் "எலந்தப்பய" வாசனை.   இந்த ஒரு பாடலுக்காகவே இசைத்தட்டு விற்பனையில் மகத்தான சாதனை புரிந்தது பணமா பாசமா.   

 

சினிமா டிக்கெட்டுகளை கருப்பு மார்க்கெட்டில் விற்றது உண்டு.  ஆனால் பாடல் ஒலிநாடாக்களை யாராவது "ப்ளாக்கில்"  விற்றது பற்றிக் கேள்விப் பட்டதுண்டா.?  அந்த சாதனையைப் புரிந்தது பணமா பாசமா பாடல் ஒலிநாடாக்கள் விற்பனையில் தான்.  ஐந்து ரூபாய் மதிப்புள்ள ஒலிநாடாக்கள் முப்பது ரூபாய்க்கு விற்பனையானது. 

 

"எலந்தப்- பயம்" பாடலைத் தவிர அருமையான  பாடல்களாக  "மாறியது நெஞ்சம்" என்ற சுசீலாவின் பாடலும்  "மெல்ல மெல்ல மெல்ல" என்ற டி.எம்.எஸ். - சுசீலாவின் டூயட் பாடலும் மனத்தைக் கவரத் தவறவில்லை. 

 

அதே போல ஏ.எல். ராகவன் -ஜமுனா ராணியின் இணைவில் "அலேக்"  பாடலும் இருந்தது.  என்றாலும் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இன்றுவரை முன்னணியில் நிற்பது எல்.ஆர். ஈஸ்வரியின் "எலந்தப்பயம்" பாடல்தான்.

 

ஆனால் இந்தப் பாடலின் வெற்றி மகாதேவனையும் புகழேந்தியையும் பெருமை கொள்ளவைக்கவில்லை.  "அன்று நாங்கள் கொடுத்த "ஸ்லோ பாய்சன்"  இன்று திரை இசை உலகையே ஆக்கிரமித்துவிட்டிருக்கிறதே" என்று பின்னாளில் குங்குமம் பத்திரிகைப் பேட்டி ஒன்றில் மனவேதனையோடு இருவரும் குறிப்பிட்டிருந்தார்கள்.

 

எது எப்படி இருந்தாலும் "நீங்க அடுத்த படத்தை எடுத்துக் கொடுக்குற வரைக்கும் நாங்க "பணமா பாசமா"வையே எடுக்காம போட்டுக்கிட்டிருப்போம்"  என்று திரையரங்க உரிமையாளர்கள் இயக்குனர் கே.எஸ்.ஜி. அவர்களிடம் சொல்லும் அளவுக்கு அதன் வெற்றி இருந்தது என்றால் அதற்கு கே.வி. மகாதேவனின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத ஒன்று.

 

தொடர்ந்து ஏ.பி. நாகராஜன் - கே. வி. மகாதேவன் - கண்ணதாசன் - நடிகர் திலகம் ஆகியோரின் கூட்டணி தங்களது அடுத்த வெற்றிக்குத் தயாரானது.

 

இம்முறை புராணக் கதை அல்ல.   "ஆனந்தவிகடனில்" கலைமணி என்ற பெயரில் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதி பெருவெற்றி பெற்ற மகத்தான ஒரு நாவலைப் படமாக்குவது என்று முனைந்து அதற்கான உரிமையை எஸ்.எஸ்.வாசன் அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு இசையும் நடனமும் கலந்த ஒரு மகத்தான இசைக்காவியமாக  உருவாக்க ஆரம்பித்தார்கள்.

 

படம் : "தில்லானா மோகனாம்பாள்."

 

 

(இசைப் பயணம் தொடரும்..)

 

 

(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)

 

 

 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 24

 திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 25

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 26

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 27

 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 28

 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 29

 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 30

 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 31

 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 32

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...