???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு 0 ஒன்றுமே செய்யவில்லையா?- சுப.வீரபாண்டியன் 0 நினைப்பும் நிஜமும்! - மாலன் 0 தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா 0 கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று 0 ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் 0 எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி! 0 சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது 0 'தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்துவதால் ஆபத்துகள்தான் அதிகம்' 0 செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வு! 0 சரோஜ்கான் - நடன ராணி! 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திரை இசைத் திலகம்” கே.வி. மகாதேவன் -29 பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   03 , 2014  02:44:18 IST

 

"எல்லா இடங்களிலும் மனிதர்களாகிய நாம்  மனத்தாலும் ஆன்மாவாலும் ஒன்றாகவே இருக்கிறோம்.  நம்மை ஒரே விதமான உணர்வில் ஆழ்த்துவது இசை ஒன்றுதான்.  அதுதான் நம்மை எல்லாம் ஒருங்கிணைக்கிறது."  -  ஜான் டென்வர்.  

 

 

எம்.ஜி.ஆர். அதிர்ந்து நிற்கும் அளவுக்கு சின்னப்பா தேவர் சொன்னது இதுதான்:

 

"முருகா.  இந்தப் பாட்டுக்கான சீன்  ஒரு கனவு சீன்.  அம்முவுக்கு (ஜெயலலிதா) மட்டும் தான் டான்ஸ்.  நீங்க முருகக் கடவுளா  கையிலே வேலை வச்சுக்கிட்டு நிக்கணும்.  அவ்வளவுதான்."

 

ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் பேரியக்கத்தொடு தொடர்பு கொண்டிருந்த வேளையில் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்துக்கொண்டு இருந்தவர்தான் எம்.ஜி.ஆர்.

 

ஆனால் பெரியாரோடும், அறிஞர் அண்ணாவோடும் ஏற்பட்ட நட்பின் காரணமாக திராவிட முன்னேற்றக்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டபிறகு கடவுள் மறுப்புக் கொள்கை அதன் கொள்கைக் கோட்பாடுகளில் ஒன்று என்று ஆனபிறகு  தன் படங்களில் கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளையோ வேடங்களையோ ஏற்பதைத் தவிர்த்துவந்தார் அவர்.

 

அப்படிப்பட்டவர் முருகன் வேடத்தில் தோன்றுவது என்றால்..

 

கட்சி ஏற்றுக்கொள்ளுமா?

 

ஏற்கெனவே திருப்பதிக்கு சென்று வந்த காரணத்தால் சிவாஜிகணேசனுக்கு ஏற்பட்ட அவமானங்களின் காரணமாக அவர் தி.மு.கவை விட்டே வெளியேறினாரே!

 

அதுவும் இப்போது கட்சியில் தனக்கு பெரிய முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.  அடுத்த வருடம் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியின் வேட்பாளராக தன்னை நிறுத்தும் முடிவில் பேரறிஞர் அண்ணா இருக்கிறார்.  

 

இந்த சமயத்தில் இப்படி ஒரு வேடமா?  ஒரு காட்சியில் தான் என்றாலும்  தான் எப்படி கடவுள் வேடத்தில் தோன்ற முடியும்?

 

தன் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

 

தயங்கினார் எம்.ஜி.ஆர்.  

 

தேவரிடமும் தன் நிலைமையை வெளிப்படுத்தினார்.

 

ஆனால் தேவர் விடுவதாக இல்லை.

 

"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.  சும்மா நடியுங்க.  ஜனங்க கண்டிப்பா ஏத்துக்குவாங்க" - என்று ஒரே போடாக போட்டு அவரை முருகன் வேடத்தில்  தோன்றவும் வைத்துவிட்டார் தேவர்.

 

அந்தப் படம்தான் "தனிப் பிறவி".

 

"எதிர் பாராமல் நடந்ததடி.  முகம் கண்ணுக்குள் தெரிந்ததடி"  - என்ற பி.சுசீலாவின் பாடலுக்கு கே.வி. மகாதேவன் அமைத்த மெட்டும் கவிஞரின் வரிகளும் அந்தப் பாடல் காட்சியில் முருகனாக எம்.ஜி.ஆர். தோன்றிய காட்சியும்  பாடலுக்கு ஒரு தனி மதிப்பைக் கொடுத்துவிட்டன. 

 

எம்.ஜி.ஆர். நினைத்து பயந்ததற்கு நேர்மாறாக அவரது ரசிகர்கள் அந்தப் பாடல் காட்சியை வெகுவாக ஆரவாரத்துடன் வரவேற்று ரசிக்கவே செய்தார்கள்.

 

தனிப் பிறவி - படத்துக்கு கே.வி.மகாதேவனின் இசையில் பாடல்கள் அனைத்துமே ஹிட் பாடல்களாயின.

 

"உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே"  - இன்றளவும் மே தினக் கொண்டாட்டங்களில் தவறாமல் ஒலிபெருக்கிகள் மூலமாகவும், தொலைக் காட்சி சானல்கள் மூலமாவும் நம் காதுகளையும், கண்களையும் நிறைக்கின்றனவே.  பாடலைப் பாடியவர் டி.எம். சௌந்தரராஜன். 

 

"சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா" - பி. சுசீலாவின் தேன்குரலில் ஒரு இனிமை பொங்கும் பாடல். 

 

"ஒரே முறைதான் உன்னோடு பேசிப்பார்த்தேன்"  -  டி.எம்.எஸ். - பி.சுசீலா.  பாடலின் இணைப்பிசையில் கிட்டாரும் வயலினும் முக்கிய பங்கு வகித்து நம் கால்களைத் தாளமிட வைக்கின்றன. 

 

"நேரம் நல்ல நேரம்",    "கன்னத்தில் என்னடி காயம்" - ஆகிய டூயட் பாடல்களும் இனிமை ரகத்தை சேர்ந்தவை.

 

ஆனால்.. பாடல்கள் வெற்றி பெற்ற அளவுக்கு தனிப்பிறவி பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை.  சுமாரான ஓட்டத்தையே சந்தித்தது.

 

*******

 

ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான ஆர்.ஆர். சந்திரன் தயாரித்து இயக்கிய படம்தான் "மகாகவி காளிதாஸ்".

 

நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சௌகார் ஜானகி, கே.பி. சுந்தராம்பாள். முத்துராமன், ஜி. சகுந்தலா, எல். விஜயலட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்துக்கான பாடல்களை கவியரசரும், கு. மா. பாலசுப்பிரமணியமும் எழுதினர்.  கே. வி. மகாதேவனின் இசை பாடல்கள் அனைத்தையுமே பெருவெற்றிபெற வைத்தது.

 

"கல்லாய் வந்தவன் கடவுளம்மா" - டி.எம்.எஸ். பாடும் பாடலின் சரணங்களின் கடைசி வரிக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இசை அமைத்து பாடலின் ஜீவன் கெடாத வகையில் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.   

 

இன்றளவும் படத்தின் பெயர் சொன்னால் போதும் உடனே நினைவுக்கு வரும் பாடல் "யார் தருவார் இந்த அரியாசனம்"  -  மூடனாக இருந்த காளிதாசன் தேவியின் அருளால் கவிபாடும் வன்மை பெற்றதும் அதை நினைந்து நெக்குருகி பாடும் பாடல்.  டி.எம். சௌந்தரராஜனின் குரலில் தொனிக்கும் பெருமிதமும், கம்பீரமும் பாடலுக்கு தனி உயர்வைக் கொடுத்துவிடுகிறது.  கே.வி. மகாதேவனின் மெட்டமைப்பில் அடாணா ராகம்தான் மன உணர்வுகளை எப்படி எல்லாம் தூண்டி விடுகிறது!

 

இன்றைக்கும் கூட  "அடாணா" ராகத்தில் இடம்பெற்ற ஒரு சினிமாப் பாடலைச் சொல்லும்படி யாரிடமாவது கேட்டோமானால் அவர் பளிச்சென்று சொல்லும் பாட்டு இந்த "யார் தருவார் இந்த அரியாசனம்" பாடலாகத்தான் இருக்கும்.  அந்த அளவுக்கு இந்த ராகத்தை அழுத்தம்திருத்தமாகக் கையாண்டிருக்கிறார் கே.வி. மகாதேவன்.

 

"மலரும் வான் நிலவும்"  - கு. மா. பாலசுப்ரமணித்தின் இந்தப் பாடல் படத்தில் இரண்டு முறை வருகிறது.  டி.எம்.எஸ் - மற்றும் குழுவினரின் குரலில் ஒருமுறையும், பி.சுசீலாவின் குரலில் ஒருமுறையும்.

 

இரண்டிலும் தான் எத்தனை மாறுபாடு.  டி.எம். எஸ். பாடும்போது இயற்கை அழகை வியக்கும் ஒரு கவிஞனின் மனநிலை கண்முன் வந்து நிற்கிறது.      பி.சுசீலாவின் குரலில் ஒலிக்கும்போது சரண வரிகளே வேறுபடுவதால் தலைவனை விட்டுப் பிரிந்திருக்கும் தலைவியின் தாபமும் ஏக்கமும் பிரதிபலிக்கின்றன. 

 

கே.பி.சுந்தராம்பாள் பாடியிருக்கும் "சென்று வா மகனே சென்று வா" பாடலும்,  

"காலத்தில் அழியாத காவியம் தரவந்த மாபெரும் கவிமன்னனே" -     பாடலும் இன்றளவும் காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கின்றன என்றால் கவிஞரின் வரிகளை அவை சொல்லவரும் கருத்துக்கள்  சிதையாத வண்ணம் அருமையான முறையில் அமைத்திருக்கும் கே.வி. மகாதேவனின் திறமைதான் மூல காரணம்.

 

"குழந்தையின் கோடுகள் ஓவியமா" - என்று விருத்தமாகத் தொடங்கி  'கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்."  - என்று மகாகவி காளிதாசனின் காவியங்களான மேகசந்தேசம், குமார சம்பவம், சாகுந்தலம் ஆகியவை பிறப்பதை அழகாக எடுத்துரைக்கும் பாடல்.

 

 

டி.எம்.எஸ்.  - பி. சுசீலாவின் குரல்களில் ஒரு அருமையான ராகமாலிகையாக அமைத்து செவிகளையும் மனதையும் நிறைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன். 

 

கவியரசர் வார்த்தைகளை வடித்திருக்கும் அழகை ரசிப்பதா அந்த வார்த்தைகளுக்கு இசையால் உயிர் கொடுத்திருக்கும் மாமாவின் திறமையை வியப்பதா - என்று கேட்பவரை கண்டிப்பாகத் திகைக்க வைக்கும் பாடல் இது.

 

ஆனால்..

 

பாடல்கள் வெற்றி பெற்ற அளவுக்கு படம் வெற்றிபெறவில்லை என்பதை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

 

*****************

 

நகைச்சுவை நடிகர் வி.கே.ராமசாமி வி.கே.ஆர். பிக்சர்ஸ் என்ற பானரில் தயாரித்த சொந்தப் படம்தான் "செல்வம்".

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, எம்.வி.ராஜம்மா, எஸ்.வி. சஹஸ்ரநாமம், எஸ்.வி. ரங்கராவ், நாகேஷ் ஆகியோர் நடித்த இந்தப் படத்துக்கு கதை வசனம் எழுதி இயக்கியவர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். 

 

கே.வி. மகாதேவனின் இசை வண்ணத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் வாலியும் ஆலங்குடி சோமுவும் எழுதினர்.

 

"அவளா சொன்னாள் இருக்காது" - என்ற பாடலின் அமைப்பைப் பார்த்தோமானால் வசன நடையில் அமைந்திருக்கும்.  ஆனால் இந்தப் பாடலுக்கு மகாதேவன் அமைத்திருக்கும் மெட்டு அதற்கு தனி ஏற்றத்தைத் தருகிறது.  

 

டி.எம்.எஸ். பாடியிருக்கும் விதமும் வார்த்தைகளுக்கு கொடுத்திருக்கும் அழுத்தமும் இன்றைய இளம் பாடகர்கள் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

 

"ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல" - டி.எம்.எஸ். - பி.சுசீலா பாடும் இந்த ஏக்கப் பாடலின் அமைப்பையும் சிறப்பையும் வருணிக்க வார்த்தைகளே இல்லை. 

 

தாராபுரம் சுந்தரராஜன் - ஜமுனா ராணி இருவரின் குரலில் காலங்களை கடந்து இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலாக "எனக்காகவா நான் உனக்காகவா" - பாடலை கே.வி. மகாதேவன் அற்புதமாகக் கொடுத்துவிட்டிருக்கிறார். நமக்காகத்தான். 

 

******************

 

கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் கதை வசனம் இயக்கத்தில் வெளிவந்த அவரது சொந்தப் படம் "சின்னஞ்சிறு உலகம்".

 

பொய்யே சொல்லாத ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக ஒரே ஒரு பொய்யைச் சொல்கிறான்.  அந்த ஒரு பொய்யினால் அவனுக்கு கனவிலும் எதிர்பாராத ஏற்றங்களும் செல்வமும் வந்து சேருகின்றன.  ஆனால் அவன் மனநிறைவாக வாழ்ந்தானா?

 

"சின்னஞ்சிறு உலகத்தின்" கதை இதுதான். 

 

ஜெமினிகணேசன்,(மாஜிக்) ராதிகா  , கே.ஆர். விஜயா, நாகேஷ், வி.கே. ராமசாமி, சாரங்கபாணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

 

இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.

 

வாலியின் பாடல்களுக்கு மகாதேவன் அமைத்த இசை பாடல்களை வெற்றி பெற வைத்திருக்கின்றன.

 

படம் வந்த புதிதில் அடிக்கடி வானொலியில் இடம்பெற்ற பாடல்கள்.

 

"மனசிருக்கணும் மனசிருக்கணும் மல்லிகைப் பூவாட்டம். - அது

வெளுத்திருக்கணும் வெளுத்திருக்கணும் பச்சைப் புள்ளையாட்டம்."   

 

- டி.எம்.எஸ். - பி.சுசீலா பாடும் இந்தப் பாடல் இன்றளவும் வாடாத மல்லிகையாக நினைவில் மனம் வீசுகிறது என்றால் கிராமிய மனம் வீசும் வண்ணம் அற்புதமாகக் கே.வி.மகாதேவன் பாடலை அமைத்திருக்கும் விதமே காரணம்.

 

கதாநாயகியின் அறிமுகப் பாடல் "புதுமைப் பெண்களடி.  பூமிக்குக் கண்களடி."  -என்ற  பி.சுசீலா பாடும் பாடல். 

 

இந்த வரிகளைப் பாருங்கள்:

 

கவிக்குயில் சரோஜினி

கணக்குக்கு சகுந்தலா

ஐ.நா. சபையின் பதவியிலே அமர்ந்தவர் விஜயலட்சுமி.

 

இப்படி ஒரு வசன அமைப்பில் ஒரு பட்டியல் போல அமைந்த வரிகளுக்கும் இசை வடிவம் கொடுத்து பாடலாக்க முடியும் என்று கே.வி. மகாதேவன் நிரூபித்த பாடல் இது.

 

"விட்டகுறையோ இல்லை தொட்ட குறையோ" - பாடல் பி.சுசீலாவின் குரலில் கேட்கும் போது மட்டுமே இனிக்கும். ஆனால் நிலைக்காத பாடல் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

 

"உள்ளம் என்பது உலகமாகலாம் "  - பி.சுசீலாவின் குரலில் ஒரு இனிமையான உற்சாகமான பாடல். 

 

சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரியின் குரல்களில் ஒரு டூயட் - இரண்டாவது கதாநாயகனாக வரும் நாகேஷ் - கே.ஆர். விஜயா பாடுவதாக அமைந்த பாடல் "சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக் கொண்டிருப்பேன் மூச்சும் பேச்சும் உள்ளவரை"  -  கிராமிய மெட்டில் அமைந்த பாடல்.   

 

சின்னஞ்சிறு உலகம்" படம் - நூறு நாட்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்ற அதே நேரத்தில் திருவிளையாடலைத் தொடர்ந்து கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்த ஏ.பி.நாகராஜனின் அடுத்த படம் காலத்தை வென்று நிற்கும் காவியப் படமாக பெருவெற்றி கண்டது.

 

புதுமைப் பித்தனின் குறுநாவல் ஒன்றுக்கு திரைவடிவம் கொடுத்து ஏ.பி.என். அவர்கள் இயக்கிய இந்தப் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் அனைத்துப் பாடல்களுமே கே.வி. மகாதேவனின் இசை வண்ணத்தில் காலத்தை வென்று காற்றலையில் நிலைத்து நின்று விட்டிருக்கின்றன.

 

ஒரு முறை சன் தொலைக்காட்சியில் தனது பிறந்த நாளை ஒட்டி ஒளிபரப்பான சிறப்பு நேர்காணலில் பங்கு கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களிடம் "நீங்கள் பார்த்த திரைப்படங்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தமான படம் எது?" என்ற கேள்வி கேட்கப் பட்டது.

 

தனக்கு மிகவும் பிடித்தமான படமாக சூப்பர் ஸ்டார் அவர்கள் குறிப்பிட்ட படம் ஏ.பி.நாகராஜனின் இந்தப் படம்தான்.

 

அதுதான்..

 

"சரஸ்வதி சபதம்"

 

(இசைப் பயணம் தொடரும்..)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...