???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு 0 ஒன்றுமே செய்யவில்லையா?- சுப.வீரபாண்டியன் 0 நினைப்பும் நிஜமும்! - மாலன் 0 தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா 0 கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று 0 ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் 0 எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி! 0 சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது 0 'தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்துவதால் ஆபத்துகள்தான் அதிகம்' 0 செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வு! 0 சரோஜ்கான் - நடன ராணி! 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திரை இசைத் திலகம்- கே.வி.மகாதேவன் 27- பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   20 , 2014  03:55:33 IST


Andhimazhai Image

 

இறைவனின் வாசகத்துக்கு அடுத்தபடியாக இந்த உலகத்துக்கு கிடைத்த உயர்வான பொக்கிஷம் இசைக் கலைதான்" -  மார்ட்டின் லூதர்  

 

திருவிளையாடல் -  புராணப் படங்களில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்த படம்.

 

"புராணப் படமா?  ஏ.பி.நாகராஜன் தான் செய்யணும்" என்ற அளவுக்கு அவருக்கு பெயரையும் புகழையும் வாங்கித் தந்த படம்.

 

1965-ஆம் ஆண்டு வெளிவந்த பிராந்திய மொழிப் படங்களில் தமிழில் சிறந்தபடமாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அரசின் சிறப்பு விருதினைப் பெற்ற படம்.

 

அதற்கு முன்பும் கூட புராணப் படங்கள் வந்திருக்கின்றன.  ஆனாலும் புதிய தலைமுறைக்கு ஏற்றபடி புதிய பாணியில் திரைக்கதை அமைத்து இயக்கி இருந்தார் ஏ.பி. நாகராஜன் அவர்கள்.

 

நடிகர் திலகத்தின் அபாரமான நடிப்பாற்றல் - நுணுக்கமான அசைவுகளைக் கூட துல்லியமாக அவர் வெளிப்படுத்தி நடித்த விதம் - சிவனாக வரும் காட்சிகளில் புருவத்தைக் கூட அசைக்காமல் நடித்த பாங்கு-அனைவரையும் பிரமிக்க வைத்தது.

 

அதுவரை சமூகப் படங்களில் மட்டுமே கையாளப்பட்டு வந்த "பிளாஷ்-பாக்" உத்தியைக் கையாண்டு கதை பின்னப்பட்ட முதல் படம் திருவிளையாடல் தான்.  ஞானப் பழத்துக்காக கோபித்துப் பிரிந்து சென்று தனியாக இருக்கும் முருகனின் சினத்தைத் தணிப்பதற்காக பராசக்தி பரமனின் திருவிளையாடல்களில் சிலவற்றைக் கூறுவதாக கதை அமைத்திருந்தார் ஏ.பி.நாகராஜன்.

 

அதன்பிறகு வெளிவந்த புராணப்படங்கள், பக்திப் படங்கள் எல்லாமே இந்தப் பாணியிலேயே வர ஆரம்பித்தன என்பது கவனத்துக்குரிய விஷயம்.

 

இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் அமைத்த இசை .  அதுவரை அவர் அமைத்த படங்களின் இசையையும் பாடல்களையும் எல்லாம் தூக்கி அடித்தது.  

 

பொதுவாக நடிகர் திலகத்திடம் ஒரு தனித்தன்மை உண்டு.  அவர்  நடிக்கும் படம் எதுவோ அது வெளிவந்த பிறகு அதில் வேறு எத்தனை சிறப்பம்சங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விஞ்சி அவரது நடிப்பு மட்டுமே பெரிதாகப் பேசப்படும்.  அதுதான் முன்னணியில் நிற்கும்.  ஆனால் திருவிளையாடல் படம் ஒரு விதிவிலக்கு.  

 

நடிகர் திலகத்தின் நடிப்புக்கு இணையாக படத்தில் பேசப்பட்ட விஷயங்கள் நாகேஷின் நகைச்சுவை நடிப்பும்.  படத்தின் பாடல்களும்.

 

இன்றளவும் நாகேஷ் காமெடி என்று எடுத்துக்கொண்டால் முதலிடம் பெறுவது திருவிளையாடல் தருமி தானே?

 

அதே போல படத்தின் இசையும் மிகப் பிரமாண்டமாகப் பேசப்பட்டது.

 

"அய்யரின் இசையின் மகத்துவத்தை முழுமையாக உணர்த்திய படம்" என்று கே.வி. மகாதேவனின் உற்ற துணையாக இருந்த உதவியாளர் டி. கே. புகழேந்தி பெருமையாகக் குறிப்பிடுவார்.

 

அந்த அளவுக்கு இசையின் ஆக்கிரமிப்பு அதுவும் நடிகர் திலகத்தின் நடிப்புக்கு இணையாகப் பேசப்படும் அளவுக்கு இருந்தது.

 

முதல் காட்சியிலேயே இசையின் ஆக்கிரமிப்பு துவங்கி விடுகிறது.  

கயிலாயத்தில் தேவரும், முனிவரும், நாரதரும், பூத கணங்களும் சிவபூஜை செய்யும் காட்சி.

 

பலதரப்பட்ட இசைக்கருவிகளைக் கையாண்டு அருமையான தனி ஆவர்த்தனத்தை ஆதி தாளத்தில் வெகு அற்புதமாக அமைத்து மெய்சிலிர்க்க வைத்தார் கே.வி.மகாதேவன்.

 

சங்கீதத்தில் "காலப்ரமாணம்" என்று ஒரு சொல்வழக்கு உண்டு.  தாளத்தில் அது மிக முக்கியமான் ஒரு அம்சம்.  அதன்படி ஒவ்வொரு வாத்தியத்தையும் கணக்கு பிசகாமல் கையாண்டு மகாதேவன் அமைத்திருக்கும் அந்த தனி  ஆவர்த்தனமும் அதைத் தொடரும் சீர்காழியின் கணீர்க் குரலும்.

 

"சம்போ மகாதேவா" - என்ற ஒரே வரியை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி விரியவைத்து என்னமாய்த்தான்  அமைத்திருக்கிறார் மகாதேவன்! 

 

நமது கர்நாடக சங்கீதத்தில் "யதி" என்று ஒரு அமைப்பு உண்டு. நாம் தமிழில் அணி என்கிறோமே அது போன்றது தான் இது. இது பலவகைப்படும்.. அவற்றில் "கோபுச்ச யதி" என்று ஒன்றும் "ச்ரோதோவக யதி" என்றும் ஒன்று உண்டு.

 

"கோபுச்ச யதி" - என்றால் பசுவின் வாலைப்போல ஆரம்பத்தில் அகலமாக இருந்து போகப்போக குறுகி வரும் பாடல் அமைப்பு. முமூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதரின் ஆனந்த பைரவி ராக கீர்த்தனை "தியாகராஜ யோக வைபவம்" இதற்கு சரியான உதாரணம்.

"தியாகராஜ யோக வைபவம்,

அகராஜ யோக வைபவம்.

ராஜயோகவைபவம்,

யோக வைபவம்,

வைபவம்,

பவம்,

வம்" - என்று கீர்த்தனையின் ஆரம்பத்தில் இந்த கோபுச்ச யதிக் கிரமத்தை கையாண்டிருக்கும் தீட்சிதர். சரணத்தில் "ச்ரோதோவக யதி" வகையை அமைத்து முடித்திருக்கிறார்.

 

"ச்ரோதோவக யதி" - என்றால்..? எப்படி ஒரு ஆறு உற்பத்தியாகும் இடத்தில் ஆரம்பத்தில் குறுகியும், போகப்போக விரிந்தும் செல்லுகிறதோ அது போன்ற ஒரு ஆற்றொழுக்கு போன்ற பாடல் அமைப்புக்கு "ச்ரோதோவக யதி"என்று பெயர். மேலே குறிப்பிட்ட தீட்சிதர் கீர்த்தனையின் சரணத்தில்

 

"பிரகாசம்,

தத்வப் பிரகாசம்,

சகல தத்வப் பிரகாசம்" என்று இந்த "ச்ரோதோவக யதி" கிரமம் அமைந்திருக்கிறது.

இந்தச் "ச்ரோதோவக யதி" கிரமத்தைக் கையாண்டு 

தேவா

மகாதேவா

சம்போ மகாதேவா ..   என்று பாடலின் ஒற்றை வரியை வைத்தே மோகன ராகத்தில் பாடலை அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.

 

சீர்காழி கோவிந்தராஜன் முடித்ததும் வீணையில் மோகன ராகத்தை கலைமகள் மீட்டுவதாக வரும் சஞ்சாரங்கள்...  இப்படி எல்லாம் பாடலை இப்போது போடவேண்டும் என்றால் அதற்கு கே.வி. மகாதேவன்தான் மறுபடியும் பிறந்து

வரவேண்டும்.

 

தொடர்ந்து பி.சுசீலாவின் குரலில் "நமச்சிவாய வாழ்க" என்ற மாணிக்கவாசகரின் சிவபுராண வரிகள்...

 

"ஈசனடி போற்றி எந்தையடி போற்றி..."  என்று தொடரும் அர்ச்சனைப் பதிகத்தை யஜுர் வேதத்தில் "யோபாம் புஷ்பம் வேதா" என்று துவங்கும் "மந்த்ர புஷ்பம்" - பகுதியை நினைவுறுத்தும் வகையில் மெட்டமைத்து திருவாசகத்தை தமிழ் வேதம் என்று கொண்டாடும் அளவுக்கு அற்புதமாக கையாண்டிருக்கிறார் கே.வி. மகாதேவன். 

 

ஞானப் பழத்துக்காக கோபமுற்று தாய் தந்தையைப் பிரிந்து செல்லும் முருகனை சாந்தப் படுத்தும் விதமாக அவ்வையாராக வரும் கே. பி.சுந்தராம்பாள் பாடும்  

"ஞானப் பழத்தைப் பிழிந்து"  என்ற தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் பாடலை இடையிடையே ஒற்றை வயலினைக் கையாண்டு காம்போதி ராகத்தில் ஆரம்பித்து, சாவேரி, மோகனம், கானடா என்று ராகமாலிகை விருத்தமாக வெகு சிறப்பாக அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.  

 

தொடர்ந்து படத்தில் இடம் பெறும் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

 

"பழம் நீயப்பா" - பாடலில் முருகனுக்குகந்த ஷண்முகப்ரியா ராகம் தான் எத்தனை அழகாகக் கையாப்பட்டிருக்கிறது!   பாடலின் இடையே வரும் இணைப்பிசையில் நம் மனதை அப்படியே கட்டிப்போட்டுவிடுகிறார் கே.வி.மகாதேவன். 

 

பி.பி.ஸ்ரீனிவாஸ் - எஸ். ஜானகியின் குரல்களில் "பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்"  மகாதேவனின் இசையில் நடபைரவி ராகத்தில் கலந்து கேட்பவர் செவிகளை மட்டுமல்ல மனதையும் நிறைக்கிறது.  இந்தப் பாடலில் நாதஸ்வரமும், புல்லாங்குழலும் தான் எவ்வளவு லாவகமாகக் கையாளப் பட்டிருக்கின்றன.  நடபைரவியில் இத்தனை இனிமையாக - காலத்தை வென்று நிற்கும் அளவுக்கு ஒரு திரைப்படப் பாடலை வேறு யாராலுமே தரமுடியாது. 

 

இடைவேளைக்கு முன்வரும் சிவதாண்டவத்திற்கு மகாதேவன் அமைத்திருக்கும் இசை .   உண்மையிலேயே மகாதேவ தாண்டவம் தான்.  தாள வாத்தியங்களில் ஆதிக்கம் நிறைந்திருந்தாலும் வயலினில் ஹம்சானந்தி ராகத்தை பளிச்சென்று மின்னல் போல வெளிக்காட்டி மறைக்கும் லாவகம் - கே.வி. மகாதேவனால் மட்டுமே சாத்தியம்.  

 

"நீலச்சேலை கட்டிகிட்ட சமுத்திரப்பொண்ணு"  - கண்ணதாசனின் நயமான வரிகள் விரகதாபத்தால் தவிக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை எடுத்துக்காட்டுகின்றன என்றால் அதற்கு "பஹாடி"யில் மகாதேவன் அமைத்திருக்கும் மெட்டும் அதனை பி.சுசீலா பாடி இருக்கும் அழகும், நடிகையர் திலகம் வெளிப்படுத்தும் பாவங்களும் பாடலுக்கு தனி இடம் கொடுத்து விடுகின்றன.  

 

அடுத்து  "ஒரு நாள் போதுமா" ..  பாடலுக்கு வருவோம்.  உண்மையிலேயே இந்தப் பாடலை கே.வி.மகாதேவன் அமைத்திருக்கும் அழகை - பாடலின் சிறப்பம்சங்களைப் பகிர்ந்து கொள்வது என்றால் அதற்கு  ஒரு நாள் போதாது தான்.  

 

வடநாட்டில் இருந்துவரும் ஹேமநாத பாகவதர் பாண்டியமன்னனின் சபையில் பாடுவதாக காட்சி.  நாடெங்கும் உள்ள பாடகர்களை எல்லாம் வெற்றி கொண்ட ஆணவத்தில் மிதக்கும் ஹேமநாத பாகவதரை விறகுவெட்டியாக வரும் ஈசன் எப்படி தன்னிலை உணரவைக்கிறார் என்பது கதை

 

ஆரம்பத்தில் இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைக்க விரும்பினார் ஏ.பி.நாகராஜன்.  ஆனால் தோல்வி அடையும் கதாபாத்திரத்துக்கு தான் பாடுவதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்த காரணத்தால் சீர்காழி கோவிந்தராஜன் தன்னால் பாட முடியாது என்று நயமாக மறுத்து விட்டார்.

 

சங்கீதத்தில் முடிசூடா மன்னனாக வரும் பாடகருக்கு ஒரு சங்கீத வித்வானையே பாடவைத்தால் என்ன என்று தோன்றியதும் அனைவருக்கும் ஒருமனதாக நினைவுக்கு வந்த பாடகர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் தான்.

 

அவரிடம் சென்று கதையமைப்பைக் கூறி ஹேமநாத பாகவதருக்காக அவர் பாடவேண்டும் என்று தயக்கத்துடன் கோரிக்கை வைத்தார்கள்.

 

"என்னது? தோற்றுப்போகும் சங்கீத வித்வானுக்கு நான் பாடணுமா? என்னை என்னவென்று நினைத்தீர்கள்?" என்றெல்லாம் கூச்சல் போடாமல் - சற்றுக்கூட முகம் சுளிக்காமல்,"அதுக்கென்ன தாராளமா பாடறேன்" - என்று எந்த ஒரு சங்கடமும் இல்லாமல் சம்மதித்தார் பாலமுரளிகிருஷ்ணா.

 

கவியரசர் பாடலுக்கான பல்லவியை இப்படி எழுதிக் கொடுத்தார்:

 

"நாதமா  கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா"

 

இந்தப் பல்லவியை மேலே சொன்ன அதே "ச்ரோதோவகயதி" முறையைப் பின்பற்றி..

"ஒரு நாள் போதுமா

இன்றொரு நாள் போதுமா

நான் பாட இன்றொரு நாள் போதுமா

நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா..

- என்று வரிக்கு வரி வார்த்தைகளைக் கூட்டி அமைத்த திறமையை என்னவென்று சொல்வது? 

அதே சமயம் இந்தப் பாடலுக்கு கே.வி. மகாதேவன் தேர்ந்தெடுத்த ராகமோ "மாண்ட்".  

 

கதைப்படி ஹேமநாத பாகவதர் வடநாட்டிலிருந்து வரும் ஒரு சங்கீத நிபுணர்.  பாண்டிய நாட்டுக்கு வருகை தந்து அரசவையில் பாட வருகிறார்.  

 

யாருக்குமே அவரது சொந்த மண்ணுக்கு உரித்தான விஷயங்களில் தானே பிடிப்பு சற்று அதிகமாக இருக்கும்.  ஆகவே தான் ஹேமநாத பாகவதர் தன் பாடலை ஹிந்துஸ்தானி ராகமான மாண்ட்டில் ஆரம்பிக்கிறார்.  மாண்ட்  -  இது ஒரு ஹிந்துஸ்தானி ராகம்.  கேட்பவரை கிறங்கடிக்கும் வன்மை வாய்ந்த ஒரு ராகம். நமது தென்னக கர்நாடக இசையில் கச்சேரியின் பிற்பகுதியில் இடம்பெறும் துக்கடாக்களுக்கு பயன்படுத்தப் படும் ராகம். எம்.எஸ். அம்மா அவர்கள் பாடிப் பிரபலமடைந்த வள்ளலாரின் "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்"  மாண்ட் ராகத்தில் அமைந்தது தான்.

 

அந்த ராகத்தில் துவங்கும் "ஒரு நாள் போதுமா"  பாடலைக் கேட்டு வரகுண பாண்டியன் மட்டும் அல்ல.  நாமுமே அல்லவா கிறங்கிவிடுகிறோம்.

 

சரணத்தில் "குழலென்றும் .." என்ற வார்த்தைக்கு பிறகு ஒரு சிறு ஆலாபனை, ஸ்வரம் என்று பாடிய பிறகு அந்த வார்த்தைக்கு தக்கபடி குழலிசையில் முடிப்பதும், அதே போல "யாழென்றும்.." என்ற வார்த்தைக்கு பிறகு வரும் ஸ்வரங்களை வீணையில் இசைத்து பிறகு இரண்டு வார்த்தைகளையும் இணைத்து பாடலைத் தொடர்வதும்.....  கே.வி.மகாதேவனுக்கு மட்டுமே சாத்தியம்...

 

கடைசி சரணத்தில் கவிஞர் ராகத்தின் பெயர்களை இணைத்து பாடல் வரிகளை அமைக்க அவற்றை முறையே தோடி, தர்பார், மோகனம், கானடா என்று அந்தந்த ராகங்களிலேயே அமைத்து ஒரு ராக முத்திரைப் பாடலாக அமைத்துவிட்டிருக்கிறார் கே.வி. மகாதேவன்.

 

இங்கு கையாண்ட ராகங்கள் அனைத்துமே தென்னாட்டுக்கு சொந்தமான கர்நாடக ராகங்கள் தான்.  

 

ஹிந்துஸ்தானியில் மட்டும் தான் என்று இல்லை  நான் உங்கள் கர்நாடக சங்கீதத்திலும் கரை கண்டவன் என்று ஹேமநாத பாகவதர் பறை சாற்றிக் கொள்வது போல வரிக்கு வரி ராகம் மாறும் பாடலாக அமைத்து கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப பாடலை அமைத்திருக்கும் விதம் அந்த கதாபாத்திரத்தை கே.வி. மகாதேவன் எந்த அளவுக்கு உள்வாங்கிக்கொண்டு இசை அமைத்திருக்கிறார் என்பதற்கு ஒரு சான்று.

 

ஒரு இசை அமைப்பாளர் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு இந்தப் பாடலின் மூலம் ஒரு இலக்கணமே வகுத்துக்கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன் என்றால் அது மிகை அல்ல.

 

அடுத்து டி.ஆர். மகாலிங்கத்தின் கணீர்க் குரலில் இரண்டு பாடல்கள்.  இரண்டுமே சிறப்பான பாடல்கள்.

 

"இல்லாததொன்றில்லை"  என்ற விருத்தம்.   இந்த விருத்தம் சிம்மேந்திர மத்யமம், ஹிந்தோளம் ஆகிய இரண்டு ராகங்களின் சேர்க்கையில் அமைந்தது. 

 

பீம்ப்ளாசில் அதாவது ஆபேரியில் - "இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை."  -  கவிஞர் இந்தப் பல்லவியை இறைவனுக்காக செய்தாரா  அல்லது கே.வி. மகாதேவனை மனதில் வைத்துக்கொண்டு கொடுத்தாரா என்பது தெரியாது.  ஆனால் இந்தப் பாடல் உண்மையிலேயே அரும்சாதனை தான். பாடலின்

உச்சத்தில் பொங்கும் உணர்ச்சிப் பெருக்கும், அதை சிறப்பாக பிரதிபலிக்கும் வண்ணம் வரிகளுக்கிடையே இணைத்திருக்கும் இணைப்பிசையும் பாடலை சிகரத்தில் ஏற்றி நிறுத்திவிடுகிறது.

 

இந்த மாதிரி ஒரு பாடலைக் கேட்டபிறகும் இறைவன் சும்மா இருப்பாரா?.  பாணபத்திரருக்காக விறகு விற்க மட்டுமல்ல எதைச் செய்யவும் இறங்கி வரமாட்டாரா?

 

அப்படி விறகுவெட்டியாக வரும் இறைவன் பாடுவதாக அமைந்த "பார்த்தாப் பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்" -  பாடல்.  சரியான நாட்டுப்புற மெட்டுப் பாட்டு.  இந்தப் பாடலை வெற்றிப் பாடலாக மாற்ற மகாதேவனுக்கு கைகொடுத்த ராகம் சிந்துபைரவி. 

 

அடுத்து ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்குவதற்காக விறகு வெட்டியாக வந்த பரமன் அவர் தங்கி இருக்கும் மாளிகையின் வெளியே உள்ள திண்ணையில் வந்து படுத்துக்கொண்டு பாடுவதாக அமைந்த பாடல் "பாட்டும் நானே பாவமும் நானே".

 

டி.எம். சௌந்தரராஜன் அற்புதமாகப் பாடி இருக்கும் இந்தப் பாட்டுக்கு மகாதேவன் அமைத்த இசை .. உச்சத்தின் உச்சம்.  "கௌரி மனோகரி"  ராகத்தைக் கையாண்டு இந்தப் பாடலை அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.

 

அதில் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது?

 

அடுத்த இடுகையில் சொல்கிறேனே!

 

(இசைப் பயணம் தொடரும்..)

 

(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)

 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 23

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 24

 திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 25

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 26

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...