அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சர்வதேச புலிகள் தினம்: கானூர் ஆர்வலர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! 0 சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதை - நடிகர் சூர்யா 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

திரை இசைத் திலகம்” கே.வி. மகாதேவன் -24 பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   29 , 2014  09:01:05 IST

 

 

"ஒவ்வொரு கச்சேரிக்கும் முன்னதாக நான் குறைந்தது அரை மணி நேரமாவது எனது சங்கீதம் நல்லபடியாக அமையவேண்டும் என்பதற்காகவும் கல்பனா சக்தி பெருகவேண்டும் என்பதற்காகவும்  இறைவனைப் பிரார்த்தனை செய்வேன்."  - சமீபத்தில் மறைந்த இசைக் கலைஞர் "மாண்டலின்" ஸ்ரீனிவாஸ்.  (அவருக்கு நமது மனமார்ந்த அஞ்சலி.)

 

 

 "சின்னஞ்சிறிய வண்ணப் பறவை" பாடலைக் கவியரசர் எழுதிக் கொடுத்ததும் அதற்கு யாரைப் பாடவைக்கலாம் என்று ஒரு ச ர்ச்சை எழுந்தது.

 

பெண் குரலுக்கு எஸ். ஜானகிதான் என்று ஒரு மனதாக முடிவானது.  ஆண் குரலுக்கு பி. பி. ஸ்ரீனிவாஸை  பாடவைக்கலாம் என்று முதலில் நினைத்தார் கே.வி. மகாதேவன்.

 

ஆனால் பாடல் காட்சியில் நடிப்பவர் சிவாஜி என்று உணர்ந்ததும் அவருக்கேற்ப கம்பீரமான குரலாக இருக்கவேண்டும் என்று தோன்றியதும் சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைக்கலாம் என்று கே.வி. மகாதேவன் முடிவெடுத்தார்.  தயாரிப்பாளர், இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு ஆகியவர்களும் அதற்கு சம்மதித்ததும் சீர்காழி கோவிந்தராஜனை எஸ். ஜானகியுடன் இணைத்துப் பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.

 

தர்பாரி கானடா ராகத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் சஞ்சாரங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தன.  வெகு உற்சாகமாகப் பாடிக் கொடுத்தார் சீர்காழி.  பாடல் பதிவும் முடிந்தது.  நடிகர் திலகத்திற்குப் பாடல் போட்டுக் காண்பிக்கப் பட்டது.  "அருமையாக வந்திருக்கிறது" என்று அவர் பாராட்டுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள்.

 

ஆனால் பாடலைக் கேட்ட சிவாஜி கணேசனின் முகம் சுருங்கியது.

 

"என்ன இது? எனக்கு டி.எம்.எஸ். குரல் தான் பொருந்தும் என்று தெரியாதா?

கோவிந்தராஜன் பாட்டுக்கு நான் வாயசைச்சு நடிச்சா ஜனங்க ஏத்துக்க மாட்டாங்க.  இந்தப் பாட்டை டி.எம்.எஸ். பாடினாத்தான் நான் நடிக்க முடியும்." - என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் சிவாஜி.

 

எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் தன் பிடிவாதத்தைக் கைவிடாததால் மறுபடியும் டி.எம்.சௌந்தரராஜனைப் பாடவைத்து பாடலைப் பதிவு செய்தார் கே.வி. மகாதேவன்.

 

கல்லூரி விழாவில் மாணவி சாரதா பாடலை ஆரம்பித்து சரணம் வரும் போது "உலகம் புரியவில்லை" என்ற வரிகளை அடுத்த வரி மறந்து திணறும் போது பார்வையாளர்களின் கேலித்தனமான விசில் சப்தம் காதைப் பிளக்க மேலே என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து தடுமாறி தவிக்கும்போது "மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி" என்று டி.எம்.எஸ். எடுப்பாகத் தொடங்கும்போது அப்படியே நம்மைக் கட்டிப்போடத் தவறாது.

 

பாடலில் டி.எம்.எஸ்.ஸுக்கு ஈடுகொடுத்து எஸ். ஜானகி கொடுத்திருக்கும் பிருகா சஞ்சாரங்கள் அவரது திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

 

தான் பின்னணியில் இருந்துகொண்டு பாடலின் பெருமை முழுவதையும் பின்னணி பாடிய இருவருக்குமே சேர்த்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.

 

அடுத்து டி.எம்.எஸ். தனித்துப்பாடும் ஒரு சோகப் பாடல்.  "மயக்கம் எனது தாயகம்" - கண்ணதாசனின் வரிகளுக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறது கே.வி.மகாதேவனின் இசை.

 

இப்படிப் பாடல்கள் அனைத்துமே ஒன்றை ஒன்று விஞ்சும் வகையில் இருந்தாலும் "குங்குமம்" படம் வணிகரீதியாக எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் தோல்வி கண்டது.  ஆனால் அந்தத் தோல்வி பாடல்களைப் பாதிக்கவில்லை. பெருவெற்றி கண்டு இன்றளவும் நிலைத்து நிற்கின்றன "குங்குமம்" படப் பாடல்கள்.

 

இதே கதைதான் அடுத்து வெளிவந்த "இரத்தத் திலகம்" படத்திற்கும்.

 

இந்திய - சீனப் போரின் பின்னணியில் கவிஞர் கண்ணதாசன் கதை வசனம் எழுதிப் பாடல்களையும் எழுதி இருந்தார்.

 

தனது வழக்கப்படி கவிஞரின் பாடல்கள்  அனைத்தும் எழுதப்பட்ட பின்னரே மெட்டமைத்தார் கே.வி. மகாதேவன்.

 

"பசுமை நிறைந்த நினைவுகளே"  இன்றும் கல்லூரி வாழ்க்கை  முடிவுறும் இறுதிநாளில் மாணவர்களின் மனோநிலையை துல்லியமாக பிரதிபலிக்கும் இந்தப் பாடலை வெல்ல இன்று வரை வேறு எந்தப்பாடலும் பிறக்கவே இல்லை.  

 

"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" - கவிஞரே காட்சியில் தோன்றி தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தார் "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு" பாடலில்.  உமர் கய்யாமின் "அழகின் சிரிப்பு" கவிதையின் பிரதிபலிப்பாக அமைந்த இந்தப் பாடலுக்கு மகாதேவன் அமைத்த இசையும் டி.எம்.சௌந்தரராஜனைப் பாடவைத்திருக்கும் விதமும் கவிஞரே பாடல் காட்சியில் வாயசைத்து நடித்திருப்பதும் காலத்திருக்கும் மறக்க முடியாதவை. 

 

"புத்தன் வந்த திசையிலே போர்

புனித காந்தி மண்ணிலே போர்

சத்தியத்தின் நிழலிலே போர்

தர்மத் தாயின் மடியிலே போர்" - பாடலைக் கேட்பவர்களை வீறு கொண்டு எழவைக்கும் வகையில் கே.வி.மகாதேவனின் இசை இருக்கிறது.  பாடலை குழுவினருடன் பாடியிருப்பவர் டி.எம்.சௌந்தரராஜன். 

 

போர்முனையில் இரவு நேரத்தில் ஒய்வு நேரத்தில் ராணுவ வீரனின் கண் முன்னே பாரத மாதா தோன்றினால் அவனது மன நிலை எப்படி இருக்கும்?

 

இப்படி ஒரு பின்னணியில் கவிஞர் எழுதிய பாடல்தான் "பனிபடர்ந்த மலையின் மேலே" பாடல்.  டி.எம்.எஸ். பாடியிருக்கும் இந்தப் பாடலின் சரணங்களை விருத்தமாகவும் பாடலாகவும் வித்தியாசமாக அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன். 

 

"தாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது" - கேள்வி பதில் பாணியில் அமைந்த ஒரு அருமையான டூயட்.  டி.எம். சௌந்தரராஜன் - எல்.ஆர். ஈஸ்வரியைப் பாட வைத்து அமைத்துக் கொடுத்தார் கே.வி. மகாதேவன்.  (படத்தில் இந்தப் பாடல் காட்சி இடம் பெறவில்லை.   ஆனால் வானொலி நிலையத்தாரால் முன்பு அடிக்கடி ஒலிபரப்பப் பட்ட பாடல்.

 

படம் என்னவோ தோல்விதான்.  ஆனால் பாடல்கள் இன்றும் பசுமையாக நிலைத்திருக்கின்றன.

 

"நீங்காத நினைவு" -  எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, கல்யாண்குமார், புஷ்பலதா ஆகியோர் நடித்த படம்  கே.வி. மகாதேவன் இசை அமைப்பில் வெளிவந்தது.

 

இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இப்போது கேட்டாலும் மனதை வருடத் தவறவில்லை.

 

"ஓஓ சின்னஞ்சிறு மலரை மறந்துவிடாதே.  சிரித்துக்கொண்டே என்னை வருந்த வைக்காதே." -  படத்தில் இருமுறை இடம் பெறும் பாடல் இது. 

 

பி.சுசீலா- எல்.ஆர். ஈஸ்வரி இணைந்து பாடுவதாக ஒரு முறையும், டி.எம். சௌந்தரராஜனின் குரலில் இன்னொரு முறையும் பாடல் ஒலிக்கிறது.  பஹாடியில் அமைந்த மெட்டு முதல் முறை கேட்கும்போதே மனதை கொள்ளை கொள்ளும் மெட்டு.

 

"அன்பு வாழ்க ஆசை வாழ்க இன்பப் பண்பாடும் மனம் வாழ்க"  -  டி.எம்.எஸ். - சுசீலாவின் குரலில் சங்கராபரண ராகத்தின் அடிப்படை ஸ்வரங்களை கையாண்டு பாடலைக் கொடுத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.  இந்தப் பாடலில் "ஆசை" என்ற வார்த்தையை டி.எம்.எஸ். உச்சரிக்கும் விதமே அலாதி.  

 

இந்தப் படத்தில் இன்றளவும் மறக்கவே முடியாத பாடல் ஒன்று உண்டு என்றால் அது பி.சுசீலாவின் குளுமைக் குரலில் ஒலிக்கும் "எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா"  - என்ற பாடல் தான். கீரவாணி ராகத்தைக் கச்சிதமாகப் பயன்படுத்தி காலத்தை வென்று நிற்கும் இந்தக் காவியப் பாடலைக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.  காதலின் பிரிவில் கூட இப்படி ஒரு பாடல் கிடைக்கும் என்றால் அந்தப் பிரிவே இனிமையானதுதான்.  

 

********

"பெண் மனம்" - அமரர் லக்ஷ்மி அவர்கள் எழுதிய ஆனந்த விகடனில் வெளியாகி வாசகர்களின் மனத்தைக் கவர்ந்த நாவல்.

 

எல்.வி. பிரசாத் அவர்கள் இந்த நாவலை "இருவர் உள்ளம்" என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து இயக்கினார். கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத சிவாஜி கணேசன், சரோஜாதேவி, எஸ்.வி.ரங்காராவ், சந்தியா, எம்.ஆர்.ராதா, டி.பி. முத்துலட்சுமி, டி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் நடிக்க படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத இசை அமைத்தார் கே.வி. மகாதேவன்.

 

ஜனரஞ்சகமாக அமைந்த பாடல்கள் அனைவர் செவிகளையும் தேனாக நிறைத்தன.

 

"பறவைகள் பலவிதம்" - படத்தின் ஆரம்பக் காட்சியில் இடம்பெற்ற இந்தப் பாடலை டி.எம். சௌந்தரராஜன் பாட மெலடியும் துள்ளலும் கலந்த பாடலாகக் கொடுத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.

 

ஏ.எல். ராகவன் - எல்.ஆர். ஈஸ்வரியின் குரல்களில் "புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை" - ஒரு நகைச்சுவைப் பாடல்.  கரஹரப் பிரியா ராகத்தின் அடிப்படை ஸ்வரங்களை வைத்துக்கொண்டு நாட்டுப்புறப் பாணியில் பாடலை அமைத்துக் கொடுத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.

 

"கண்ணெதிரே தோன்றினாள்" - டி.எம்.சௌந்தரராஜன் தனித்துப் பாடும் இந்தப் பாடலின்  முகப்பிசையும் இணைப்பிசையும் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன. 

 

ஒரே ராகத்தை ஒரே படத்தில் பாடல்களுக்கு பயன்படுத்தும் போது ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பயன்படுத்தி அசத்தி இருக்கிறார் கே.வி. மகாதேவன்.

 

அந்த வகையில் "கண்ணெதிரே தோன்றினாள் " பாடலை சங்கராபரண  ராகத்தின் அடிப்படை ஸ்வரங்களை வைத்துக்கொண்டு கொடுத்தவர் அதே ராகத்தின் அடிப்படையில் டி.எம். எஸ். - பி. சுசீலா இணைந்து பாடும் " "நதி எங்கே போகிறது கடலைத்தேடி" -- பாடலையும் கொடுத்திருக்கிறார்.  ஆனால் இரண்டிலும் தான் எத்தனை வித்தியாசம்!  முன்னதன் சாயல் துளிக்கூட இல்லாமல் அடுத்த டூயட் பாடல்.  அதுவும் அதே ராகத்தின் ஸ்வரங்களை வைத்துக்கொண்டு.

 

இரண்டையுமே வெற்றிப்பாடலாக்கி இருப்பது மகாதேவனின் தனித்திறமை.

"நதி எங்கே போகிறது" பாடலில் வழக்கம் போல இணைப்பிசையில் வீணை, வயலின்கள் கோலோச்ச, பல்லவியில் பாங்கோஸ், சரணத்தில் தபேலா என்று பயன்படுத்தி  விறுவிறுப்பான வகையில் பாடலைக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன். 

 

விரும்பியவளைக் கைபிடித்த ஆண்மகனின் சந்தோஷத்தை "கண்ணெதிரே தோன்றினாள் "பாடலில் கொடுத்தவர், விருப்பமே இல்லாத மணவாழ்வில் நுழைந்த பெண்ணின் சோகத்தை "இதயவீணை தூங்கும் போது பாடமுடியுமா" பாடலில் கொடுத்திருக்கிறார். பி. சுசீலாவின் மயக்கும் குரலில் மென்மையான சோகரசம் ததும்பும் இந்தப் பாடலை "கரஹரப்ரியா" ராகத்தின் அடிப்படையில் அமைத்திருக்கிறார்.

 

 டி.எம்.எஸ். - சுசீலாவின் குரல்களில் இனிமையான டூயட். வழக்கம் போல இணைப்பிசையில் வீணை, வயலின்கள் கோலோச்ச, பல்லவியில் பாங்கோஸ், சரணத்தில் தபேலா என்று பயன்படுத்தி ஒரு விறுவிறுப்பான டூயட் பாடலைக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.

 

"கண்ணே கண்ணே உறங்காதே" - பி.சுசீலா.

 

"அழகு சிரிக்கின்றது" - டி.எம்.எஸ். - பி.சுசீலா.

 

"ஏன் அழுதாய் ஏன் அழுதாய்" - டி.எம்.எஸ். குரலில் ஒரு சோகப்பாடல்.  என்று இருவர் உள்ளம் படத்தில் அனைத்துப் பாடல்களும் மெகா ஹிட் பாடல்கள் தான்.

 

படமும் வெற்றிபெற்றது.  ஆனால் கதையை எழுதிய எழுத்தாளர் லக்ஷ்மிக்கோ தனது கதை சரியாகப் படமாக்கப்படவில்லை என்று வருத்தமும் ஏமாற்றமும் ஏற்பட்டது.

 

என்ன செய்வது?  நாவலைப் படமாக்கும்போது ஜனரஞ்சகத்துக்காக மாறுதல்கள் தவிர்க்கமுடியாதவைதானே.

 

****

நடிகர் திலகத்துக்காக "இருவர் உள்ளம்" பாடல்களைக் கொடுத்தவர் மக்கள் திலகத்துக்காக கொடுத்ததுதான் "பரிசு".  டி. யோகானந்த்தின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். சாவித்திரி ஜோடி சேர்ந்து நடித்தனர்.  முதல் முதலாக ஒரு சமூகப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார் சாவித்திரி. ஏற்கெனவே எம்.ஜி.ஆருடன் அவர் நடித்த "மகாதேவி" ஒரு சரித்திரப் படம்.

 

"பட்டுவண்ணச் சிட்டு" - டி.எம்.எஸ்.

"எண்ண  எண்ண  இனிக்குது" - டி.எம்.எஸ்- பி.சுசீலா.

"கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு"  டி.எம். எஸ். - பி. சுசீலா.

"காலமென்னும் நதியினிலே" - பி.சுசீலா.

"பொன்னுலகம் நோக்கிப் போகின்றோம்" -  பி. சுசீலா.

என்று பரிசு படப்பாடல்கள் எல்லாமே இசை விருந்தாக அமைந்தன.

படமும் வெற்றி பெற்றது.

******

ர்மம் தலை காக்கும் படத்துக்குப் பிறகு எம்.ஜி.ஆரை வைத்து தனது அடுத்த படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார் சின்னப்பா தேவர். ஒரு "கௌபாய்" பாணிக் கதையை தயார் செய்து அதற்குத் தகுந்தாற்போல ஆரூர்தாஸை திரைக்கதை வசனம் எழுத வைத்தவர் விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் கொண்டு சென்றார்.

 

"முருகா.  நம்ம அடுத்த படம் இந்த இங்கிலீஷ்லே "கௌபாய்" என்று சொல்லறாங்களே அந்த டைப் படம்." என்று தேவர் ஆரம்பித்ததுமே எம்.ஜி.ஆர். குறுக்கிட்டார்.

 

"அது இருக்கட்டும் அண்ணே.  படத்துக்கு இசை யாரு?" என்று கேட்டார் அவர்.

 

தேவரின் புருவங்கள் விரிந்தன.

 

"என்ன முருகா இப்படிக் கேக்குறீங்க.  வழக்கம் போல நம்ம "மாமா" தான்.​- என்று தேவர் முடிப்பதற்குள் குறுக்கிட்டார் எம்.ஜி.ஆர்.

 

"அதைத்தான் நான் சொல்லவந்தேன். இந்தப் படத்துக்கு "மாமா" இசை அமைக்கவேண்டாம்."  - என்றார் எம்.ஜி.ஆர். 

 

((இசைப் பயணம் தொடரும்.)

 

 

(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)

(பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)

 

- See more at: http://andhimazhai.com/news/view/pgs-manian-18-08-2014.html#sthash.QevHRu2e.dpuf

 

 

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 17

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 18

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 19

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 20

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 21

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 22

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் 23

 

 

 

 

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...