???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மலரே, குறிஞ்சி மலரே!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   04 , 2018  09:26:38 IST


Andhimazhai Image

  வத்தலகுண்டுவில் இருந்து புறப்பட்டு கொடைக்கானல் மலைக்கு ஏறும்போது சோதனைச் சாவடியில் காவலர் ஒருவர் வழிமறித்தார். வண்டிக்குள் எட்டிப்பார்த்தவர், ஏட்டைய்யா ஒருவரை கொடைக்கானலில் கொண்டுபோய் விடமுடியுமா? அவருக்கு பணிக்கு நேரம் ஆகிவிட்டது என்றார். அவருடன் கருநிற ஜெர்கின் அணிந்த ஒருவர் நின்றிருந்தார். உள்ளே போக்குவரத்துக் காவல் சீருடை.  ஒரு சில நொடி யோசனைக்குப் பின் அவரை ஏற்றிக்கொண்டோம். முன் இருக்கையில் அமர்ந்துகொண்டார் ஏட்டையா. வண்டி மலையேறத் தொடங்கியது. அவரிடம் சென்னையிலிருந்து வரும் பத்திரிகையாளர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டபிறகு மெல்ல பேச ஆரம்பித்தோம். முதல்நாள் நள்ளிரவுக்குப் பிறகுதான் வீட்டுக்குத் திரும்பியதாகவும் இப்போது விரைந்துகொண்டிருப்பதாகவும் கூறினார். வழியிலேயே உயரதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, ‘ஏன் இவ்வளவு சீக்கிரம் வருகிறீர்கள்? மாலை வரலாமே’ என்று தகவல் கிடைத்தாலும் ஏட்டு உற்சாகம் இழக்கவில்லை. ‘ எப்படியானாலும் தாமதமாகப் போவது எனக்குப் பிடிக்காது. நான் பெரிய அதிகாரிகளிடம் ஓட்டுநராகப் பணியாற்றியவன். நேர ஒழுங்கு எனக்கு முக்கியம்’ என்று சொல்லிக் கொண்டார்.

சமீபத்தில் மலையில் காருடன் ஒருவனைக் கொண்டுவந்து, அவனைக் காருக்குள் வைத்துக் கொலை செய்து பள்ளத்தாக்கில் போட்டுவிட்டச் சென்ற சம்பவம் பற்றிப் பேச்சு திரும்பியது. மதுரை பதிவெண் கொண்ட கார் அனாதையாக நின்றதில் இருந்து துப்புத் துலக்கி, அதன் உரிமையாளரைத் தேடி பின்னர் அந்த கொலை கண்டு பிடிக்கப்பட்டதை விவரித்தார். அது ஒரு திருமணமான பெண்ணுக்கும் கார் ஓட்டுநருக்குமான உறவில் நேர்ந்த கொலை. அப்பெண்ணின் கணவர், ஓட்டுநரைக் கொல்ல ஆள் அனுப்பிவிட்டிருந்தார்.

 

அந்த ஓட்டுநர் இளைஞன் சொந்தமாக உழைத்துக் கார் வாங்கி இருந்தான். மிக நல்ல பையன் என்றுதான் எல்லோரிடமும் பேர் வாங்கி இருந்தான். காருக்குள் அமர்ந்து நிறைய நேரம் தொலைபேசியில் பேசுவான் என்பதை மட்டும் எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். “ நிறைய பெண்களிடம் பேசியிருக்கிறான். அதில் இந்த பெண்ணும் உண்டு.” என்ற ஏட்டையா,” அந்த பையனின் உடலை எடுக்க அவனது உறவினர்கள் நேற்றே வந்துவிட்டனர். உடலை பள்ளத்தாக்கில் போய் எடுத்துவர அறுபதாயிரம் ரூபாய் கேட்டுக் கொண்டிருந்தனர். என்ன ஆனது என்று தெரியவில்லை” என்றார்.

 “அறுபதாயிரம் ரூபாயா?”

“எல்லாம் பேரம் பேசும் தன்மையைப் பொறுத்தது. கீழே இறங்கும்முன்பு உடலில் எந்த நகையும் வந்து சேராது. எங்களைக் கேட்கக் கூடாது என்று சொல்லிவிடுவார்கள். யாருமே தேடி வராத பிணங்களை எடுக்கச் சொல்லும்போது காவல்துறைக்காக இறங்கி எடுப்பார்கள். நம் துறையால் இவ்வளவு கூலி தர முடியாது. அந்த கூலியையும் இப்படி ஈடுகட்டிக் கொள்வார்கள்.

 

கிருஷ்ணா நடித்த கழுகு படம் நினைவில் வந்துபோனது. பிந்து மாதவி அதன் பின்னர் ஏனோ பெரிதாக சோபிக்கவில்லை. பிக் பாஸில் வந்தார் போலிருக்கிறது. போதைக் காளான், பேரிஜாம் ஏரி என்று பேசிக்கொண்டே வந்தபோது தேநீர் குடிக்கலாம் என்றபோது, “பாய்லர் டீ இருக்கும் கடையாகப் பார்த்து நிறுத்துங்கள்,” என்றார் நண்பர் சேரமான். ஒரு வளைவில் இரு கடைகள் இருந்தன. இரண்டிலும் வெண்கலப் பாய்லர்கள் பளபளத்தன.

 

 “பாய்லர் மட்டும்தான் இருக்கும். அங்கே பாய்லர் டீ இருக்காது. சாதாரண டீ தான் இருக்கும். எதற்கும் விசாரிப்போம்,” என்றார் ஏட்டையா. கேட்டபோது அதுவே உண்மை என்று தெரிந்தது. வெண்கல பாய்லர்கள், வெறும் அடையாளங்களாக மாறிவிட்டிருக்கின்றன. சேரமான் தேநீரே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

அடர்ந்த மரங்கள் நடுவே மேலேறிச் சென்ற பாதையில் மென்குளிர் வரவேற்க கொடைக்கானல் வந்துவிட்டிருந்தோம். ஏட்டையா நகருக்குள் நுழைந்தவுடனேயே ஓரிடத்தில் காலை உணவு அருமையாக இருக்கும் என்று சொல்லி இறங்கிக் கொண்டார். நாங்கள் ப்ரையண்ட் பூங்காவுக்கு வண்டியை விட்டோம். அங்குதான் குறிஞ்சிப்பூக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என்று சொல்லி இருந்தார்கள். ஆமாம், நாங்கள் குறிஞ்சியைக் காணவே மலையேறி இருந்தோம். இது கடந்த மாதத்தில் ஒரு நாள் நாங்கள் மேற்கொண்டிருந்த பயணம். நாம் பூமியில் வாழ்ந்திருக்கும் இந்த நாற்பது ஆண்டுகளில் குறைந்தது மூன்றுமுறையாவது குறிஞ்சிப்பூக்கள் பூத்திருக்கலாம். ஒருமுறையேனும் அவற்றைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கவில்லை. எனவே இம்முறை அவற்றைப் பார்த்துவிட வேண்டும் என நினைத்திருந்தோம். குறிஞ்சி என்ற பெயர் சங்கப் பாடல்களைப் பள்ளித் தமிழ் வகுப்புகளில் அறிமுகம் ஆவதற்கு முன்பே நம் எல்லோருக்கும் அறிமுகமாகி விடுகிற பெயர். பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் என்பதே இம்மலரை அதிசயமாக்குகிறது.

 

சாண்டில்யனின் ராஜமுத்திரை நாவலில் வரும் மலை நாட்டுப் பெண்ணின் பெயர் குறிஞ்சி. சேரமன்னன் வீரரவியிடம் வீரபாண்டியன் குறிஞ்சியை தூது அனுப்புவான். அவளது கைவிரல்களில் இருக்கும் பச்சிலைக் கறைகளை வைத்து அவள் மருத்துவம் தெரிந்த மலை நாட்டுப் பெண் என்று அவளை அடையாளம் காண்பதாக சாண்டில்யன் எழுதியிருப்பார். கதையின் நாயகி இளநங்கை, குறிஞ்சியைக் கண்டு பொறாமைப் பட்டுக்கொண்டே இருப்பாள்.

  “மலரே குறிஞ்சி மலரே.. என்று எம்ஜிஆர் மாதிரி பாடிக்கொண்டிருக்கிறீர்களா?’’ என தொலைபேசியில் அழைத்து எங்களுக்கான  “பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பரிசோதித்த கண்காணிப்பாளரான’ என் துணைவியார் கேட்டார். “அது எம்ஜிஆர் அல்ல சிவாஜி,’’ என பவ்யமாக பதிலளித்தேன். அதற்குள் பூங்காவுக்குள் நுழைய சீட்டுகளை சேரமான் வாங்கியிருந்தார். உள்ளே போனதும் எங்கே குறிஞ்சிப்பூக்கள் எனக்கேட்டு  விரைந்தோம். குழந்தைகள் விளையாடுவதற்காக ஒதுக்கி இருந்த பூங்காவின் ஒரு பகுதியில் மலைச்சரிவில் அடர்ந்து வளர்ந்திருந்தன குறிஞ்சி செடிகள். அவற்றில் இளநீலத்தில் பூக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்தன. தொலைவில் இருந்து பார்த்தால் வெளிர் நீலப் போர்வையால் செடிகளை மூடி இருப்பதுபோல. கிட்டே போய் பூக்களைத் தொட்டுப் பார்த்தோம். கனமான சிறிய இலைகள். புதராக வளரும் செடி.   மலரே குறிஞ்சி மலரே என்று சேரமான் சத்தமாகப் பாட, பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அதிர்ந்தார்கள். நாய் ஒன்று தெறித்து ஓடியது.

 

அடுத்து, பூங்காவில் பார்ப்பதைவிட இயற்கையான சூழலில் மலைச்சரிவில் குறிஞ்சி பூத்துக் கிடப்பதைப் பார்க்கவேண்டும் என தோன்றிவிட்டதால் வண்டி அருகே இருந்த வில்லுப் பட்டி கிராமம் நோக்கிச் சென்றது. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய கிராமப் பஞ்சாயத்து வில்லுப்பட்டி பஞ்சாயத்துதான் என்றார் ஓட்டுநர். அவருக்கு சொந்தக்காரர்கள் வில்லுப் பட்டியில் உண்டு.

 

இறங்கியும் ஏறியும் சென்ற சாலை குறுகலான சாலையான போது வில்லுப்பட்டிக்குள் நுழைந்திருந்தோம். தொலைவில் மலைச்சரிவில் குறிஞ்சி பூத்திருந்தது தெரிந்தது. ஆங்காங்கே வீடுகள். மலைச்சரிவுகளில் ஏதேதோ பயிரிட்டு இருந்தார்கள். ஆட்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். வில்லுப்பட்டி என்று ஒரு அழகான சிமெண்ட் வளைவு இருந்த இடத்தில் சிலர் பேசிக்கொண்டு நின்றார்கள். அவர்களிடம் குறிஞ்சிப் பூக்களைக் காண எப்படிப் போகவேண்டும் என்று கேட்டபோது வழி காட்டினார்கள். அந்த பாதை சரேலன இறங்கி காணாமல் போய், பிறகு மீண்டும் தோன்றியது. ஓட்டுநர் காரைச் செலுத்த அஞ்ச, “ நானும் வரட்டுமா?” என்று கேட்டவாறே ஒரு பெரியவர் எங்களுடன் ஏறிக்கொண்டார்.

 

அவர் வழிகாட்ட, வண்டி முன்னேறிச் சென்றது. வழியெங்கும் உருளைக் கிழங்கு, காரட் தோட்டங்களைத்தாண்டி, தொலைவில் நாங்கள் கண்ட சரிவுக்குச் சென்றோம்.  “அது எங்கள் தோட்டம்தான். அங்கேதான் குறிஞ்சி பூத்திருக்கிறது. கவலைப் படாமல் வாங்க…” என்ற பெரியவர்  எங்களை பின் தொடருமாறு சொல்லி வண்டியை விட்டு இறங்கி மலையில் ஏறிச் சென்ற நடைபாதையில் புகுந்தார். அவரைப் பின் தொடர்ந்து நடந்தோம். விலங்குகளுக்காக கம்பி வேலி இட்டிருந்த ஒரு தோட்டத்தில் செடிகளைப் பிடுங்கினார். காரட்டு கிழங்குகள் செந்நிறத்தில் தொங்கின கழுவிச் சாப்பிடுங்கள் என்றார். அருகே இருந்த கோவிலைக் காண்பித்து வில்பட்டி முருகன் என்று சொன்னவருடன் கிட்டத்தட்ட ஓடிக்கொண்டிருந்தோம். மூச்சுவாங்கியபோது, குறிஞ்சி செடிகளின் அருகே வந்துவிட்டிருந்தோம்.


 “ பூக்கள் காயத் தொடங்கி உள்ளன. விரைவில் இவை அரிசியாகிவிடும் என்றார். அடர்த்தியாக வளர்ந்திருந்த செடிகளில் அந்த நீலமலர் கொத்துக்கள் மெல்ல பழுப்பாகிக் கொண்டிருந்தன. அருகில் நின்று பார்த்துக்கொண்டே இருந்தோம். இன்னுமொரு பனிரெண்டு ஆண்டுகள் ஆகும் இவற்றைக் காண.

 “நீங்கள் இதுவரை எத்தனை குறிஞ்சி மலரும் காலங்களைக் கண்டிருப்பீர்கள் அய்யா?”

“ஆறு இருக்கலாம்..” என்ற பெரியவர் சில கொத்துகளை ஒடித்து வீட்டுக்குப் போய் குழந்தைகளிடம் காட்டுங்கள் எனத் தந்தார். உருளை, காரட் செடிகள் பயிரிடப்படுவது அவற்றின் விலைகள் எனப் பேசிக் கொண்டே மீண்டும் திரும்பி காருக்கு வந்து சேர்ந்தோம்.  குறிஞ்சியைப் பார்த்த பிரமிப்பு ஒருபுறம் இருப்பினும் இது வரை வாழ்நாளில் சில டன்கள் அளவுக்கு தின்றிருக்கும் உருளைக் கிழங்குகளைத் தரும் செடியையும் அதைவிட கொஞ்சம் குறைவாக சாப்பிட்டிருக்கும காரட்டுகளைத் தரும் செடியையையும் முதல் முதலாக பார்த்த பெருமையும் ஒருபுறம் சேர்ந்துகொண்டிருப்பதை உணர முடிந்தது.

பெரியவர் விடைபெற்று ஊருக்குள் சென்றார். நாங்கள் அங்கேயே ஒரு கடையில் தேநீர் அருந்தியவாறு ஊரைச் சுற்றிப் சரிந்திருந்த மலைகளை நோக்கிக் கொண்டிருந்தோம். இன்னும் ஒரு பனிரெண்டு ஆண்டுகள் கழிந்து, இதே வில்பட்டிக்கு வந்து குறிஞ்சி மலர்களைக் காணமுடியுமா? அல்லது அவை மலர்ந்த இடங்களும் தோட்டங்களாக மாறி காரட் பயிரிடப் பட்டிருக்குமா என்ற யோசனையுடன் திரும்பி வந்தோம். உடனே நகரங்களில் மட்டும் காலி இடங்களில் எல்லாம் கட்டடங்களைக் கட்டித்தள்ளுகிறீர்கள்? இங்குமட்டும் மலைச்சரிவுகளை குறிஞ்சிக்காக விட்டுவைக்கவேண்டுமாக்கும்… என்று எதிர் எண்ணமும் தோன்றியது.

 

 “குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன என் மனம் வாடியதென்ன” என்ற பாடலை சேரமான் பாடத் தொடங்க, அதுவரை மெதுவாக காரை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநர், பதறிப்போய் வண்டியின் வேகத்தைக் கூட்டினார்.

 

 -அரிஞ்சயன்

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...