???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்! 0 கரூரில் கமல்ஹாசனை நோக்கி செருப்பு, முட்டை வீச்சு! 0 கோவில் கல்வெட்டில் தேனி எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்! 0 கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு! 0 மருத்துவ படிப்படிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 26ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு! 0 இந்தியாவில் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புதிய தொடர்- குஜிலிப்பாட்டு-1- இரா.சித்தானை

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   16 , 2013  03:40:10 IST

பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு, நான் மாடு மேய்த்துக்கொண்டிருந்த காலம் அது. கொஞ்சநாள் தேநீர்க்கடை ஒன்றிலும் வேலை செய்தேன். மதிய நேரத்தில் மாஸ்டர் சுடுகாட்டுக்குப்போய் கஞ்சா இழுப்பார். என் வேலைகளில் அவருக்கு கஞ்சா கசக்கித்தருவதும் ஒரு வேலையாகும்.

                                                                  

அங்குள்ள புளியமரங்களுக்கு அடியில் விதவிதமான ஆட்களைப் பார்க்கலாம்; பிச்சையெடுப்போர், சாமியார்கள், தொழுநோயாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டோர், குடிகாரர்கள் (மதுவிலக்குச் சட்டம் அமுலில் இருந்த காலம்), ஜாமீனில் வந்தவர்கள் என, விளிம்புநிலையினரின் பிருந்தாவனமாக இருந்த ஏகாந்தமான இடம் அது. சுவர்முட்டித் தண்ணீர் என்னும் போதைச்சரக்கு அங்கே கிடைக்கும். ஒரு கிளாஸ் 1 ரூபாய்தான். இலவச இணைப்பாக வெல்லக்கட்டி ஒன்றைத் தருவார்கள். அந்தச் சரக்கைப் போட்டுவிட்டு சுவரில் முட்டினால்கூட வலி தெரியாதாம்; அதனால்தான் அந்தப் பெயர்.

 

ஒரு பக்கம் துட்டு வைத்துச் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள்; இன்னொரு பக்கம் ஆடுபுலி ஆட்டம். சிலர் கொட்டாவி விட்டுக்கொண்டு அனந்த சயனத்தில் இருப்பார்கள்.

 

இப்படித்தான் ஒருநாள் மாஸ்டர் கஞ்சா மயக்கத்தில் படுத்துக் கிடந்தார். கீழ்மூலையில் பாலத்துக்குப் பக்கத்தில் இருந்த புளியமரத்தடியில் ஒரே கூட்டமாக இருந்தது. ஒருவர் தப்பு அடித்துக்கொண்டு பாடிக்கொண்டிருந்தார். எல்லோரும் போதையில் இருந்தார்கள். ஏதோ எம்.ஜி.ஆரைப் பற்றிய பாட்டு அது என்பது எனக்குப் புரிந்தது. இன்னும் கவனமாகக் கேட்டேன்.

 

மன்றமுரசு பேப்பர் நடத்திய முசிறிப்புத்தன் பெயரைக்கூட அந்தப் பாடகர் சொன்னார். டீக்கடையில் மன்றமுரசு வாங்குவார்கள். நானும் அவ்வப்போது அந்தப் பத்திரிகையைப் படித்து வந்ததால், முசிறிப்புத்தனின் பெயர் மனதில் பதிந்திருந்தது.

 

பாட்டின் முடிவில், ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு செங்கோல் கொடுக்கும் காட்சியைப் பாடினார். மீனாட்சியிடமிருந்து சொக்கநாதர் செங்கோல் வாங்குவதை (மீனாட்சி திருமணம்) அந்தக் காட்சியுடன் ஒப்பிட்டுப் பாடினார் அந்தப் பாடகர். வெள்ளிச் செங்கோலை எம்.ஜி.ஆரின் கையில் ஜெயலலிதா கொடுத்தவுடன், எம்.ஜி.ஆர். நிமிர்ந்து அந்தச் செங்கோலை மேல்நோக்கிப் பார்ப்பாராம். (அவ்வாறான புகைப்படம் உள்ளது) அந்தப் பாடகர் எழுந்துநின்று, கையில் செங்கோல் இருப்பது போலவும், அதை நிமிர்ந்து மேல்நோக்கி (எம்.ஜி.ஆர். பார்ப்பது போல) ஒரு நிமிடம் அப்படியே நின்றார். “அப்படி போடுறா” என்று போதையில் இருந்தவர்கள் கத்தியபடியே காசுகளைப் போட்டனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் பாடிய பாட்டு புரிந்தது போலவும், புரியாதது போலவும் இருந்தது.

 

அதற்கு கொஞ்சநாளைக்கு முன்னால், மதுரையில் எம்.ஜி.ஆர். இரசிகர் மன்ற மாநாடு நடந்ததைப் பற்றியும், எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா செங்கோல் கொடுத்த செய்தியும் நினைவுக்கு வந்தது. ஓ.. தினத்தந்தியில் வந்த நியூசை பாட்டாகக் கட்டியிருக்கிறார் என்பது எனக்குப் புரிந்தவுடன் பரவசமே ஏற்பட்டது.

 

இதுபற்றி மாஸ்டரிடம் கேட்டபோது, தூத்துக்குடியிலும், மணியாச்சியிலும் இதுபோன்ற ஆட்கள் இருப்பதாகச் சொன்னார். அதன்பின் நீண்டநாள் கழித்து காரைக்குடி அருகில் நடந்த சந்தையில் இவரைப்போன்ற பாடகரைப் பார்த்தேன். அவரிடம் ‘தப்பு’ இல்லை; இரு சிமிண்ட் தகடுகளை விரலிடுக்கில் வைத்துக்கொண்டு பாடினார். இவரும் புத்தகம் எல்லாம் விற்கவில்லை. பாடிமுடிந்தவுடன் கிடைத்த காசை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

 

முதுகலைப் படித்து முடித்துவிட்டு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு நண்பரைப் பார்க்கப் போனேன். அங்குள்ள ஓலைச்சுவடித் துறையில் ‘மதுரை நாடகசாலை தீக்கோள் கும்மி’ என்னும் சுவடி இருந்தது. அ.மாதவையா எழுதிய பத்மாவதி சரித்திரத்தில், மதுரையில் இருந்த நாடகசாலை ஒன்று தீப்பற்றி எரிந்தது பற்றி விவரிக்கப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. அந்தச் சுவடியை முழுவதும் படித்துப் பார்த்தேன். ஆனால், அந்தப் பாட்டு ஏற்கெனவே குஜிலிப் புத்தகமாக வந்ததைப் பார்த்து ஏட்டுச்சுவடியில் நகல் செய்தது என்று தெரியவந்தது. இதன் பின்புதான், இந்தக் குஜிலி இலக்கியப் புத்தகங்களைத் தேடித்தொகுக்க வேண்டும் என்னும் ஆவல் மிகுதியாயிற்று.

 

குஜிலி இலக்கியம் பற்றி இதுவரை செய்யப்பட்டுள்ள ஓரிரு ஆய்வுகள் கூட, கிடைத்துள்ள ஒருசில குஜிலி நூல்களை வைத்துச் செய்யப்பட்டவை ஆகும். கோலார் தங்கவயலிலும், இலங்கையிலும், பர்மாவிலும், சிங்கப்பூரிலும் என, தமிழர் சென்ற இடங்களில் எல்லாம் குஜிலி நூல்களை எழுதி, பதிப்பித்து வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

 

பழைய புத்தகக் கடைகள், நூலகங்கள், வாழ்ந்துகெட்ட வீடுகள் என இவ்வாறான இடங்கள் பலவற்றிலும், தேடத் தேடக் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன குஜிலிகள்; எல்லா நூல்களையும் எழுத முடியாவிட்டாலும், என் மனங்கவர்ந்த ஒருசில குஜிலி நூல்களை வாரந்தோறும் அறிமுகப்படுத்துவேன். தேர்ந்தெடுக்கப்பட்ட குஜிலி இலக்கியத் தொகுப்பு ஒன்றை உருவாக்குவது என் ஆசைகளுள் ஒன்று.

 

 

------------------------------------------------------------
இன்று இலக்கியம் என்றாலே “புலமை சார்ந்தது” என்றும், “கருவிலே திரு” என்றும் இலக்கிய டப்பாக்கள் சிலர் கதைவிட்டுக் கொண்டிருக்கின்றனர்;  நந்தியாவட்டைப் பூவும் மச்சினியின் தாவணியும் கதையில் வந்துவிட்டால் அது உன்னத இலக்கியம் ஆகிவிடுமா என்ன? இல்லையெனில் ஒருசில தெய்வசிகாமணிகளிடம் தீட்சை வாங்கிவிட்டால் உன்னத இலக்கியம் ஒழுகிவிடுமா என்ன?

 

தமிழ்நாட்டு சிறுபத்திரிகை இலக்கியம் என்பது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட தலித், பழங்குடி மக்களின் சமூக எழுச்சிக்கு எதிராகத் தோற்றுவிக்கப்பட்டு இயங்கியது என்பது வெட்டவெளிச்சமான உண்மை. இலக்கியத்தை நவீனப்படுத்துதல், மொழியை நவீனப்படுத்துதல் என்பன போன்ற அடையாளங்களின் மூலம் தீண்டாமை, வகுப்புவாரி உரிமை, மொழிப் போராட்டம், பகுத்தறிவு, ஆலயநுழைவு, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை முதலிய எந்தவொரு சமூக விடுதலைக் கருத்தியலையும் மறந்தும்கூட ஆதரிக்காத பாசிச இலக்கியமே தமிழ்நாட்டு சிறுபத்திரிகை இலக்கியம். தமிழிலக்கிய மரபில் தல புராணங்கள் என்னும் பெயரில் செய்யுள் குவியல்களை எழுதிவிட்டு அவற்றை இலக்கியங்கள் என்று சொல்லித் திரிந்தது ஒரு கூட்டம். இன்று அவை படிப்பாரின்றி காயலான் கடையில் எடைக்குக் கிடைக்கிறது. அதுபோன்று வைதிக வருண தத்துவத்தின் பகடைக்காயாக விளங்கிய சிறுபத்திரிகை இலக்கியம் ஒட்டுமொத்தமாக ஒருநாள் காகித ஆலையில் அரைபடும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இந்தக் காலத்தில் எழுதப்பட்ட சூத்திர இலக்கிய எழுத்துக்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டு சொற்குப்பைகளாகச் சரித்திரத்தில் சொல்லப்பட்டன.

 

சூத்திர சொற்குப்பைகள் என்று சொல்லப்பட்ட பார்ப்பனர் அல்லாத எழுத்துக்களின் முன்னோடிதான் குஜிலி புத்தகங்கள். இந்த மண்ணில் செவ்வியல் மரபு என்பதும் புலமை மரபு, மேலோர் மரபு என்பனவும், பார்ப்பன சாதி இந்துக்களின் கூட்டணியில் உண்டான மரபாகும். இந்த மரபுகளில் சொல்ல முடியாத செய்திகளையும், சொல்ல மறுக்கும் செய்திகளையும் இந்த மரபால் பின்பற்றப்பட முடியாத பண்பாட்டுக் கூறுகளையும் குஜிலி இலக்கியங்கள் பேசின.

 

செவ்வியல் மரபில் டன் டன்னாக நூல்கள் எழுதப்பட்டு, குவிக்கப்பட்ட காலத்தில் கூட எழுதப் படிக்கத் தெரியாத சூத்திர மரபிலிருந்து விடுகவிகளும் சொலவங்களும் அழிப்பாங்கரைப் பாடல்களும் கதைகளும் உருவாகிக்கொண்டுதான் இருந்தன. இந்த மரபின் நீட்சி வளர்ந்துகொண்டேதான் இருந்தது.

 

சென்னை மாகாணத்தில் அச்சுப்பொறியைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அரசு அனுமதித்த பின்பு, செவ்வியல் இலக்கியங்களை அறிஞர்கள் பதிப்பித்தபோது, சூத்திரக் கவிஞர்களும் தாங்கள் எழுதிய இலக்கியங்களை அச்சாபீசில் அச்சடித்தார்கள். இவ்வாறு அச்சடிக்கப்பட்ட சிறுபுத்தகங்களில்தான் குஜிலி என்னும் இலக்கிய வகை இருப்பது தெரியவந்தது.

 

மெட்ராஸ் ரயில் கலகம், பஞ்சாப் படுகொலைச் சிந்து, இராவுத்தர் புகழ் அலங்காரச் சிந்து, சைதாப்பேட்டை ஆற்றில் பஸ் விழுந்த சிந்து, சென்னை வினோத சிங்காரப் பாட்டு, கள்ளப்புருசன் ஆசையால் பிள்ளையைக் கொன்ற கனகாம்பாள் துயரம், அம்மாக்கண்ணு கொலைச் சிந்து, தென்னிந்திய தீவட்டி திருடன் பாட்டு, காசைக் கவரும் வேசி விலக்கு, கிண்டி ரேஸ் பாட்டு, அண்டாசீட்டுப் பாட்டு, வெள்ளசேதக் கும்மி, ஆதிதிராவிடன் பாட்டு, பாரதியார் பாட்டு பறிமுதல் சிந்து, சுயமரியாதைக் கும்மி, மகாத்மா காந்தி அரஸ்ட் பாட்டு, தென்னமரக் கும்மி, புறா பாட்டு, தேசமக்களை நாசப்படுத்தும் தேயிலைத் தோட்டப் பாட்டு, திருச்செந்தூர் இரயில்மார்க்க வழிநடைச் சிந்து... என, நூற்றுக்கணக்கில் குஜிலி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வெளிவந்தன.

 

‘குஜிலி’ என்னும் சொல்லுக்குப் பொருள், தற்காலத்தில் வழங்கப்பட்டுவரும் பொருளன்று; சென்னை பிராட்வே பகுதியில் இருந்த குச்சிலிக் கடைத்தெருவில், பாமரர்கள் பாடுவதற்கும் படிப்பதற்கும் இரசிப்பதற்கும் பாமரர்களால் பாடப்பெற்ற, அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் இந்தத் தெருவில் விற்கப்பட்டதால், இப்புத்தகங்களுக்கு ‘குஜிலி புத்தகங்கள்’ என்னும் பெயர் ஏற்பட்டுவிட்டது.

 

இந்தப் புத்தகங்கள் படிக்கப் படிக்க சுவாரசியமானவை. படிக்க கையில் எடுத்தால் கீழே வைக்க மனம் வராது. செவ்வியல் இலக்கிய மரபு, பாடாத, சொல்லாத அல்லது புறக்கணித்த கருப்பொருள்களை எல்லாம் குஜிலி நூல்கள் பேசின. சமூகத்தை எந்தெந்த விஷயங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றனவோ அவையெல்லாம் குஜிலி நூல்களின் கருப்பொருள்களாக இருந்துள்ளன. தமிழர்கள் எல்லாவற்றுக்கும் பாட்டுப் பாடுவார்கள்; உட்கார்ந்தால் பாட்டு; எழுந்தால் பாட்டு; நின்றால் பாட்டு என எல்லாவற்றுக்கும் பாட்டுதான். எங்காவது ஒருவன் கொலை செய்யப்பட்டுவிட்டால் கொலைச்சிந்தும், கொள்ளையடித்துவிட்டால் திருட்டுச்சிந்தும் பாடப்பட்டுவிடும். சென்னைக்கு டிராம் வண்டி வந்தவுடன் அதற்கொரு குஜிலி, ஆகாய விமானம் வந்தவுடன் அதற்கொரு குஜிலி, மூக்குப்பொடிக்கு ஒரு குஜிலி, கள்ளுக்கடைக்கு ஒரு குஜிலி, காந்திக்கு ஒரு குஜிலி, பகவத்சிங்குக்கு ஒரு குஜிலி என, குஜிலி கவிஞர்கள் பாடாத பொருள்களில்லை.

 

குஜிலி புத்தகங்கள், கம்ப இராமாயணப் புத்தகம்போல தடியாக, தலைக்கு வைப்பது போல எல்லாம் இருக்காது. குறைந்தது ஐந்து பக்கம்; அதிகம் போனால் பத்துப் பக்கங்கள்தான் இருக்கும். வெங்காயச்சருகு போன்ற தாளில் அச்சடிக்கப்பட்டிருக்கும். புத்தகம் முழுவதும் பாட்டுக்கள்தான். ஏதோ ஓரிரண்டு புத்தகங்களில் மட்டும் எங்கோ கொஞ்சம்போல வசனங்கள் இருக்கும். பெரும்பாலும் சிந்துப் பாடல்கள்தான்.

 

‘பஞ்சம் கிடையாது பாண்டிவள நாட்டில்’ என்பதுபோல், எழுத்துப் பிழைகளுக்குப் பஞ்சம் இருக்காது; எழுத்துப்பிழை, தொடர்பிழை, சந்திப்பிழை என எல்லாப் பிழைகளும் இருக்கும். சந்தைகளிலும், முச்சந்திகளிலும், திருவிழாக் கூட்டங்களிலும் குஜிலி கவிஞர்கள் தப்பை அடித்துப்பாடி இந்தப் புத்தகங்களை விற்றுள்ளனர். தமிழ்ச் செவ்விலக்கிய மரபு இந்த இலக்கிய நூல்களை ஓரக் கண்கொண்டுகூட பார்க்கவில்லை; இலக்கிய வரலாற்று நூல்களும் இவற்றை அங்கீகரிக்கவில்லை.

 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய இந்த இலக்கியவகை, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் ஓங்கி வளர்ந்து செழித்து இன்று காணாமல் போய்விட்டது. அண்மையில் இந்திராகாந்தி ஒப்பாரிச் சிந்தும், எம்.ஜி.ஆர். மறைந்த பரிதாபச் சிந்தும் பாடப்பட்டு, அச்சடிக்கப்பட்டாலும், தகவல் தொழில்நுட்பம் வீட்டுக்குள் வந்துவிட்டதால், பாட்டைக் கேட்க எவரும் வீதிக்கு வருவதில்லை.

 

தமிழ்ப் பதிப்புத்துறை பற்றிய தன் முனைவர்பட்ட ஆய்வின் ஒரு பகுதியாக, குஜிலி நூல்களைச் சலபதி ஆய்வு செய்திருந்தார். அப்பகுதியை இன்னும் செழுமைப்படுத்தி, 2004இல் முச்சந்தி இலக்கியம் என்னும் பெயரில் நூலாக வெளியிட்டார். ஆனால் அதற்குமுன், சி.மா.இரவிச்சந்திரன், மருததுரை, கடவூர் மணிமாறன் முதலியோர் இதுபற்றி முன்னத்திஏர் பிடித்திருந்தனர்.

 

இந்த இலக்கிய வகைக்கு வெகுசனப் பண்பாட்டு இலக்கியம், அடித்தள மக்களின் இலக்கியம், பாமர மக்களின் இலக்கியம், விளிம்புநிலை இலக்கியம், முச்சந்தி இலக்கியம், பஜார் இலக்கியம், குஜிலி புத்தகம், பெரிய எழுத்துப் புத்தகம், காலணா புத்தகம் என்றெல்லாம் மக்களும், ஆய்வாளர்களும் பெயரிட்டுள்ளனர்.

 

செவ்வியல், மேட்டிமை இலக்கிய மரபுக்கு எதிரான வெகுசன இலக்கியமாக குஜிலியைக் கருதும் இவ்வாய்வாளர்களின் ஆய்வு எனக்கு உவப்பை அளிக்கவில்லை. பார்ப்பனரால், வைதிகத்தால் கையகப்படுத்த முடியாத இலக்கியமாகத்தான் குஜிலி இலக்கியத்தை நான் கருதுகின்றேன். பார்ப்பன வைதிகம் கையகப்படுத்த முடியாத, பண்பாட்டு அடுக்குகளில் குஜிலி இலக்கியமும் ஒன்று. (வைதிகக்கூறுகளை உள்வாங்கிய பார்ப்பனரல்லாதார், பார்ப்பனர் போன்று எழுதிய குஜிலிகளும் உள்ளன.)

 

இந்த இலக்கிய வகை எதிர் வைதிகப் பண்பாட்டை, தன் இயல்பாகக் கொண்டுள்ளதால், குஜிலி இலக்கியத்தைப் பார்ப்பனர்களால் கையகப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. பார்ப்பனர் பாடிய ஒரு குஜிலி புத்தகம் கூட எனக்குக் கிட்டவில்லை. தமிழின் தொல்லிலக்கியமான சங்க இலக்கியத்தில் கூட பார்ப்பனப் புலவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால், குஜிலி இலக்கிய வகையினுள் அவர்களால் நுழைய முடியவில்லை.

 

(பண்பாட்டு ஆய்வாளரான இரா.சித்தானை எழுதும் குஜிலிப்பாடல்கள் பற்றிய அறிமுகத் தொடர் திங்கள் தோறும்  வெளிவரும். தொடர் பற்றிய உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com-க்கு எழுதுங்கள்)

 

 

(தொடரும்)



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...