???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்! 0 கரூரில் கமல்ஹாசனை நோக்கி செருப்பு, முட்டை வீச்சு! 0 கோவில் கல்வெட்டில் தேனி எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்! 0 கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு! 0 மருத்துவ படிப்படிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 26ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு! 0 இந்தியாவில் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குஜிலிப்பாட்டு- 3- சித்தானை எழுதும் தொடர்- கும்பகோணம் நீலத்தநல்லூர்- மாட்டுச்சந்தை பாட்டு! பகுதி-1

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   06 , 2014  05:49:45 IST


Andhimazhai Image

குறுங்குடி மடத்தில் தளிகை சாப்பிட்டுவிட்டு, உறங்கப்போகும் வேளையில்தான் நம்மாழ்வார் இயற்கை எய்தினார் என்னும் செய்தி தெரிய வந்தது; பதறிப்போனேன். கோடானுகோடி ஆண்டுகளாக நம்மோடு வாழ்ந்துவந்த மண்ணையும், நீரையும் நஞ்சாக்கிவிட்டு, பயிர்பச்சைகளையும் அஃறிணை உயிர்களையும் மரபு திரித்து வேடிக்கைப் பார்க்கும் பன்னாட்டு நிறுவனக் கொள்ளையர்களையும் அதற்கு துணைபோன இந்திய அரசையும் எதிர்த்து வினாக்களை எழுப்பிய மாமனிதர் நம்மாழ்வார். இன்னும் சில ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்க வேண்டும்.

 

இன்று கிராமங்களில் மனிதர்களைக் காணமுடியவில்லை; வயதான பெரியவர்கள் மட்டும் ஆங்காங்கே வசிக்கின்றனர்; இளந்தாரிகள் இடம்பெயர்ந்துவிட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் தீவிரமான புலப்பெயர்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். கிராமமக்கள் நகரங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த இடப்பெயர்வு எதுவரை சென்றுள்ளது என்றால், நெல்லை மாவட்டத்தில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளைத் தேர்தல் ஆணையம் இரத்து செய்யும் அளவுக்குச் சென்றுவிட்டது. மானாவாரி நிலங்கள் மட்டுமின்றி, ஆற்றுப்பாசன நிலங்களைக்கூட பிளாட் போட்டு விற்றுக்கொண்டிருக்கின்றனர். சமவெளி நிலங்கள் இல்லாத கேரளத்திலிருந்து வந்து மலையாளிகள் தங்கள் அரபு பணங்களைக் கொட்டி தமிழ்நாட்டு விளைநிலங்களை அடிமாட்டு விலையில் வாங்கிப் போடுகின்றனர். பருவமழைகள் அடிக்கடி பொய்த்துப் போகின்றன. அணைக்கட்டுகளுக்கு தண்ணீர் திறந்துவிட அண்டை மாநிலங்கள் மறுக்கின்றன. இந்நிலையில் வேளாண்மை செய்து பொருளீட்டுவது என்பது இயலாத ஒன்றெனக் கருதி, வேளாண்மையை விட்டு விவசாயிகள் வெளியேறுகின்றனர்.

 

நகர்ப்புறமயமாக்கம் விரைவாக நிகழ்ந்து வருவதால் விளைநிலங்களின் பரப்பளவு குறைந்துகொண்டே வருகின்றது. ஆற்றுப்பாசன நிலங்களில் இறால் பண்ணைகளை ஏற்படுத்தி விளைநிலத்தை நாசமாக்குகின்றனர். நிலத்தடிநீரை அதிகமாக உறிஞ்சுவதால் கடல்நீர் நிலத்தடியில் புகுந்து நன்னீர் ஊற்றை உப்பாக்குகின்றது. இவற்றையெல்லாம் விட ‘அறிவியல் வேளாண்மை’ என்று கூறிக்கொண்டு பன்னாட்டுக் கம்பெனி கொள்ளையர்கள், பூச்சிக்கொல்லிகளையும் விதைகளையும், உரங்களையும் உழவர்களின் தலையில் வலுக்கட்டாயமாக கட்டிவிட்டு அவர்களைக் கடனாளியாக ஆக்குகின்றனர். மரபுவித்துக்களை அழிப்பது, மண்ணை விஷமாக்குவது, மரபு வேளாண்தொழில்நுட்பங்களை காயடிப்பது என்பன போன்ற வன்முறைகளை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியாமல் விவசாயி அல்லாடுகிறான். இந்த நிலையில் விவசாயமாவது? மயிராவது?

 

இன்று உழவுத்தொழில் புரிவது வருவாய் இழப்பைத்தரும் தொழில் மட்டுமன்று; இழிவான தொழில் என்ற கருத்தும் ஏற்பட்டுவிட்டது. வேளாண்மையே இவ்வாறு அல்லாடும்போது வேளாண்மை சார்ந்த அஃறிணை உயிர்களான மாடு, ஆடு, கோழி முதலியன பற்றி எதுவும் கூறாமலேயே அவற்றின் நிலை என்னவென்று உங்களுக்குப் புரிந்திருக்கும்.

 

வேளாண்மை அழிகின்றது என்றால் வேளாண்மை மட்டுமல்ல; வேளாண்மையோடு தொடர்புடைய பண்பாடு, பண்பாட்டு அசைவுகள், பண்பாட்டு புழங்குபொருட்கள் என அவற்றோடு சார்ந்த அனைத்துமே அழிந்துபோய்விடும். வேளாண்மைப் பண்பாடு என்னும் ஒன்றே உருத்தெரியாமல் போய்விடும். அழிந்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டு வேளாண்மைப் பண்பாட்டு அசைவுகளில் ஒன்றுதான் ‘மாட்டுச் சந்தை’.

 

பழந்தமிழகத்தில் ‘மாடு’ என்னும் சொல் கால்நடைகளைக் குறிக்காது. அது ‘செல்வம்’ என்ற பொருளைத்தரும் சொல்லாகும். ‘கேடில் விழுச்செல்வம்’ என்ற குறளில்வரும் ‘மாடல்ல’ என்னும் சொல்லுக்குக்கூட ‘செல்வம்’ என்பதே பொருள். சமூகத்தில் ‘நிலம்’ பொன்னுக்கு நிகராக செல்வப்பொருளாக ஆவதற்குமுன், அதாவது நிலவுடைமை ஏற்படுவதற்குமுன், கால்நடைகளே செல்வமாக இருந்துவந்தன. நிலவுடைமை ஏற்பட்ட பின்தான் ‘செல்வம்’ என்பது கால்நடைகளிலிருந்துமாறி நிலம் வைத்திருப்பவரே செல்வம்மிக்கவராக எண்ணப்பட்டார். அதனால்தான் பழந்தமிழகத்தில் ஆநிரை கவர்தலுக்கும், ஆநிரை மீட்டலுக்கும் போர்கள் நடந்தன. மாடசாமி, மாடன், சுடலை மாடன் என்னும் திராவிடத் தெய்வப் பெயர்களில் வரும் ‘மாடன்’ என்னும் சொல்லுக்குக்கூட ‘செல்வன்’ என்றே பொருள்; ஆலமர் செல்வன் என்பதுபோல இவன் சுடலையின் செல்வன்.

 

அவ்வாறென்றால் பழந்தமிழகத்தில் மாடுகளைக் குறிக்க எச்சொல் பயன்பட்டது? ‘ஆ’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அதுதானே ஆநிரை கவர்தல்! மாடுகளைத் தமிழர்கள் வேளாண்தொழிலுக்கு மட்டும் பயன்படுத்தவில்லை. வணிகச்சாத்துகளில் வணிகப் பண்டங்களை வண்டிகளில் இழுத்துச் செல்வதற்கு வணிகர்களும், போர்தளவாடங்களைப் போர்முனைக்கு இழுத்துச்செல்ல அரசர்களும் பயன்படுத்தினர். நம் முன்னோர் ‘ஆ’ என்று அழைத்த மாடுகளைப் பற்றியும், மற்ற அஃறிணை உயிர்களைப் பற்றியும் தமிழில் ஏராளமான சொற்கள் உண்டு. அச்சொல்வளம் இலக்கியங்களில் பயின்றுவந்ததைக் காட்டிலும் வேளாண்மக்களின் வழக்காற்றில் இருந்துவந்த சொற்கள் மிக அதிகம். இவற்றில் வட்டாரவழக்குகள்கூட உண்டு. இன்று அச்சொல்வளத் தொகுப்பு மறைந்துகொண்டே வருகின்றன.

 

பால்மாடு, சினைமாடு, மலட்டு மாடு, வறட்டு மாடு என்று மாடுகளின் தன்மைக்கேற்ப அவற்றின் பெயர்கள் அழைக்கப்பெறும்.

 

‘பொலிகாளை’ என்னும் சொல் குறிக்கும் பொருள் வேறு; ‘காளைமாடு’ என்னும் சொல் குறிக்கும் பொருள்வேறு;  காயடிக்கப்பட்ட இளம் காளைகளுக்கு மட்டுமே காளைமாடு என்னும் சொல் பொருந்தும். பொலிகாளை என்பது காயடிக்கப்படாத இளம் காளைகளை மட்டுமே குறிக்கும். இளம் பெண் கன்றுகளை ‘பசு’ எனக் குறிப்பிடுதல் தவறாகும். அவை கிடேரிகள் ஆகும். கிடேரிகள் ஈன்று பால் தரும்போது பசுவாகும். மாடுகளின் தொகுதிகள் நிரைகள் என்றும் மந்தை என்றும் அழைக்கப்பட்டன.

 

ஒரு மந்தை என்பது 100 மக்களையும் 100 கிடேரிகளையும் 5 பொலிகாளைகளையும் கொண்டது. ஊர் பொதுஇடங்களில் மந்தை அமர்த்தப்படுவதால் பின்னாட்களில் ஊர் பொதுமன்றங்களான வெட்டவெளிகள் மந்தைகள் என்று அழைக்கப்பட்டன. மந்தைஇடமான பொதுமன்றங்களில் நடக்கும் வழக்குகளில் சொல்லப்பட்டவர்கள் மந்தைசாமி, மந்தகாளை ஆனார்கள். மந்தைகளை உரிமையாக உடையவர்கள் கீதாரிகள்; “நாங்க கீதாரிகள் வம்சம் - கிருஷ்ணனோட அம்சம்” என்பது நாட்டுப்பாடல். இவ்வாறு தமிழ்ச் சொற்களுக்கும் மாடுகளுக்கும் உள்ள உறவைக் கூறிக்கொண்டே போகலாம். நமக்கு நகம் வளர்வது போல, மாடுகளுக்கு குளம்பு வளர்ந்துகொண்டே செல்லும். அவற்றைச் செதுக்கி இரும்பில் லாடங்களை அடிப்பதற்கு என்றே ஆசாரிகள் இருந்தனர். மாட்டின் வயிற்றைக் கயிற்றால் இறுக்கி, கால்களைக் கட்டி ஆசாரிகள் இலாடம் அடிப்பர்கள். இலாடம் கழன்ற மாடுகள் கால்களை நொண்டும். ஆதீண்டு குற்றிக்கற்கள் பற்றி சங்க இலக்கியத்தில் குறிப்புக்கள் உண்டு.

 

கிடேரிகளுக்கும், பசுக்களுக்கும் பிறப்புறுப்பில் அவ்வப்போது தினவு ஏற்படுவது உண்டு. அந்தத் தினவை அடக்க அவை படப்புகளில் உராயும். அதனால் விவசாயிகள் நீர்த்துறைகளில், கண்மாய்க் கரைகளில் குத்துக்கற்களை நட்டு வைத்தனர். தினவு எடுத்த கிடேரிகள் அக்கற்களின் மீது தன் உறுப்பைத் தேய்த்து தன் தாகத்தைத் தணித்தன. நம் சமூகத்தில் மாடுகளைக் காயடிக்கும்முறை, கண்களைக் கலங்க வைக்கும். காளைக் கன்றுகளின் விதைக்கொட்டைகளை இரு மூங்கில் கம்புகளுக்கு இடையே கொடுத்து நெரிப்பர். அப்போது கன்றுகள் எழுப்பும் உயிர்போகும் கூச்சல் அவலமானது. மூங்கில் கட்டைகளுக்கு இடையே நெரிபட்ட விதைக்கொட்டைகள் கூழாகிவிடும். மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு இடுவதற்கென்றே ஒரு இரும்பிலான கருவி ஒவ்வொரு கிராமத்திலும் பெரிய சம்சாரிகளின் வீட்டில் இருக்கும். ஓரிரு மாடுகளை வைத்திருக்கும் சிறு சம்சாரிகள், அவர்களிடம் போய் இரவல் வாங்கிவந்து தன் கன்றுகளுக்கு மூக்கில் கயிறு இடுவர். இதுபோன்ற பல்வேறு வேளாண்பண்பாடுகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

 

இன்று தென்னிந்தியா என்று அழைக்கப்படும் அன்றைய பழந்தமிழகத்தில் எண்ணற்ற மாட்டு இனங்கள் இருந்தன. அந்த இனங்கள் ஒன்றோடு ஒன்று கலப்பு ஏற்பட்டு திரிந்து போகாதவாறு திராவிட மக்கள் 19ஆம் நூற்றாண்டுவரை தொடர்ந்து காப்பாற்றி வந்தனர். திருச்செங்கோடு மாட்டினம், ஆலம்பாடி மாட்டினம், பர்கூர் மாட்டினம், பாலமலை மாட்டினம், கொல்லிமலை மாட்டினம், பெரம்பலூர் மாடு, காங்கேயம் மாடு, மணப்பாறை மாடு, உம்பளாச்சேரி மாடு, இருச்சாளி மாடு, புலிக்குளம் மாடு, தம்பிரான் மாடு, தென்பாண்டி மாடு, திருவண்ணாமலை மாடு, துரிஞ்சித்தாழை மாடு, நடு மாட்டினம், புங்கனூர் குட்டை மாட்டினம் என மாட்டினங்கள் பல இந்த மண்ணில் இருந்தன.

 

ஆலம்பாடி மாடுகள் தருமபுரி மாவட்டத்திலும் பர்கூர் மாட்டினம் வடதமிழகத்திலும், புலிக்குளம் மாடுகள் மதுரை, சிவகங்கை, தேனி மாவட்டங்களிலும் காங்கேயம் மாடுகள் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இருந்துவந்தன. இன்றும் காங்கேயம் இனம் பழைய கோட்டை மன்றாடியார் வீட்டில் திரிந்து போகாமல் வளர்த்து வருகின்றனர். ஆந்திராவில் ஓங்கோல் எனப்படும் நெல்லூர் மாடுகள் ஆந்திராவின் கிழக்குக் கடற்கரை மாவட்டங்களில் நெல்லூர் முதல் விசாகப்பட்டினம் வரையிலும் இருந்தன. சென்னையில் அந்நாளில் செல்வந்தர்களின் வீடுகளில் இருந்த பசுக்களில் பெரும்பாலான ஓங்கோல் பசுக்கள்தான். மைசூர்சாதி மாடுகள் என்றே ஒரு மாட்டினம் உண்டு. மைசூரில் குடியேறிய ஹாலிக்காரர் என்னும் வட இந்திய வகுப்பினர் தங்கள் புலப்பெயர்வின்போது கொண்டுவந்த மாட்டு இனம் இது. பெருஞ்சுமை கொண்ட வண்டிகளை எளிதாக இழுத்துச் செல்லும் வல்லமை உடையது.

 

திப்புசுல்தான் போர்த்தளவாடங்களை இழுத்துச் செல்வதற்காக மைசூர் சாதி மாடுகளை விருத்திசெய்ய தனிப் பண்ணை வைத்திருந்தார். திப்பு ஆங்கிலேயர்களிடம் தோற்றபின் இந்தப் பண்ணை ஆங்கில நிர்வாகத்தின் கீழ் வந்தது. அயல்நாட்டினரான ஆங்கிலேயர்களுக்கு இம்மாட்டினத்தின் பண்புகள் பற்றி தெரியாத ஆங்கிலேயர்கள் முறையாகப் பண்ணையை நிர்வகிக்காததால் மைசூர் இனம் திரிந்து போய்விட்டதாம்.

 

இந்த மண்ணிலேயே உருவான இந்த மாட்டினங்கள் இந்த மண்ணுக்குரிய தட்பவெப்ப நிலையையும், வறட்சியையும் தாங்கக்கூடியவை. ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு முக்கியத்துவம் வாய்ந்தவை. அதன் மரபணுக்கள் நோய்த்தொற்றுகள் ஏற்படாத வகையில் அவற்றைக் காப்பாற்றும் வண்ணம் இயற்கையாக இம்மண்ணின் உணவு, நீர், தட்பவெப்பநிலைக்கு ஏற்ப இயல்பாக அமைந்தவை.

 

அறிவியல் வேளாண்மை என்னும் பெயரில் தென்னிந்திய மண்வகைகளுக்கு ஏற்ப அதற்கே உரிய மரபான நெல்லினங்களை மரபு மாற்றம் செய்து, கலப்பு, திரிபு நெல்லினங்களை உற்பத்தி செய்தார்களே அதுபோன்று இந்த மாட்டினங்களையும் கலக்கச் செய்து திரிந்து போகச் செய்தனர். இங்கிலாந்திலிருந்து ஜெர்சி, பீரிசியன் இன மாடுகளைக் கொண்டுவந்து இங்குள்ள மாடுகளுடன் இனச்சேர்க்கை செய்து புதிய இன மாடுகளை உற்பத்திசெய்து பரப்பினார்கள். அவை பால் கறந்தன; ஆனால் அவற்றின் காளைமாடுகள் விவசாய வேலைகளுக்கும் பயன்படாமல் போயின. புதிய புதிய நோய்கள் எல்லாம் மாடுகளுக்கு வந்தன. அண்மையில் கோமாரிநோயால் ஏராளமான கால்நடைகள் இறந்து போயின. இன்னமும் இறந்துகொண்டுதான் உள்ளன. ஆங்கில மருந்துகளால் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தலைகவிழ்ந்து நிற்கின்றது. 

அஃறிணை உயிர்களுக்கான மரபான மருத்துவ அறிவு திராவிட சமூகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்தே வந்துள்ளது. மாடுகளின் நோய்களுக்கு மாட்டு வாகடங்கள் என்னும் தனி சித்த மருத்துவ நூல்கள் இருந்தன; இன்றும் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் மாட்டு வைத்தியர்கள் இருந்தார்கள். மாடுகளுக்கு வரும் கரப்பான் நோய்க்கு சோற்றுக்கற்றாழையைப் பறித்து அதன் சோற்றை 5 நாள்கள் தேய்த்தாலே கரப்பான் பறந்து போய்விடும்.

நான் சிறுவனாக இருந்தபோது அடுத்த தெரு மாடு ஒன்று இரை எடுக்காமல், தண்ணீர் குடிக்காமல் செருமிக்கொண்டே இருந்தது. கண்களில் இருந்து நீர் வேறு வந்துகொண்டே இருந்தது. வைத்தியர் வந்தார்; மாட்டின் தலையைத் தடவிக்கொண்டே இருந்தார். வாயினுள் கையைவிட்டுப் பார்த்தார். இரண்டுபேர் அதன் வாயைத் திறந்து பிடித்துக்கொண்டனர். வைத்தியர் அதனுடைய தொண்டைக்குள் கையைவிட்டு கட்டி ஒன்றை வெளியில் எடுத்தார். மாடு அதன்பின் இரை எடுத்தது. அந்தக் கட்டி என்னவென்றால் புண்ணாக்குக் கட்டி. அவசரம் அவசரமாக புண்ணாக்குத் தண்ணீரைக் குடித்த மாடு உரலின் அடியில் கரையாமல் இருந்த புண்ணாக்குக் கட்டி ஒன்றைத் தின்றுள்ளது; சரியாக மெல்லாததால் அது தொண்டையில் போய் சிக்கி இருக்கிறது.

 

மாட்டின் சில நோய்களுக்கு இரும்புக் கம்பியைக் காயவைத்து சில குறிப்பிட்ட இடங்களில் சூடு வைக்கும் வைத்தியத்தையும் நான் பார்த்துள்ளேன். என் கால்நடை மருத்துவ நண்பன் இதை விலங்குகளுக்கான அக்குபங்சர் என்பான். குழந்தைகளுக்கு மருந்து புகட்ட சங்கு இருப்பதுபோல, மாடுகளுக்கு நீர் மருந்துகளைப் புகட்ட மூங்கிலை சங்கு போன்ற அமைப்பில் சீவி வைத்திருப்பார்கள் வைத்தியர்கள். மாடுகளின் வயதினை அறிய அதன் பற்களை எண்ணி சரியான வயதினை நிர்ணயிக்கும் மாட்டுத் தரகர்கள் இன்றும் இருக்கின்றனர். இந்த மரபு அறிவு எல்லாம் அழிந்து போய்விடுமே. அடுத்த தலைமுறைக்கு இந்த அறிவு சென்றடையாதே... ஏனெனில் இன்று மாடுகள் மனிதனுக்குத் தேவையில்லாத உயிரினமாகிவிட்டன. வேளாண்மை வீழ்ந்துவிட்டதால் கேரளாவிற்கு அடிமாட்டிற்காக மாடுகள் கொண்டு செல்லப்படுகின்றன.

 

அன்றொரு நாள், திருமோகூர் வீதியில் போகும்போது, மாட்டுச்சாணி மருந்துக்குக்கூட கிடைப்பதில்லை என்று ஒரு பாட்டி என்னிடம் அங்கலாய்த்தார்.

 

மதுரையின் மத்திய பேருந்து நிலையத்தின் பெயர் மாட்டுத்தாவணி நிலையம். தென்பாண்டி நாட்டில் மாட்டுச்சந்தையைக் குறிக்க மாட்டுத்தாவணி என்னும் சொல்லைப் பயன்படுத்துவர். தென் மாவட்டங்களில் கழுகுமலை மாட்டுத்தாவணி புகழ்பெற்ற மாட்டுச்சந்தையாகும். மதுரை மத்தியப் பேருந்து நிலையம் தற்போது இருக்குமிடத்தில்தான் பாரம்பரியமாக மாட்டுச்சந்தை நடைபெற்று வந்தது. இன்று நகரவாசிகள் அதனை பஸ் ஸ்டாண்ட் ஆக மாற்றிவிட்டனர். அதென்ன மாட்டுத்தாவணி?

 

“தாவளம்” என்னும் சொல் “வாணிகச்சாத்துகள் இறங்கும் இடம்” என்னும் பொருளைக் குறிக்கும். அதாவது வணிகர்கள் நூற்றுக்கணக்கான வண்டிகளில் பொருட்களை ஏற்றிச்சென்று, ஊர்ஊராக வியாபாரம் செய்வர். வணிகச்சாத்துகளுக்கு என்று தனியான வழித்தடங்கள் உண்டு. இவற்றை வணிகப் பெருவழிகள் என்பர். இந்த வழித்தடங்களில் பழகிப்போன சாத்துக்கள் தங்களுக்கு வசதியான, பழக்கமான இடங்களில் தங்கி வணிகம் செய்வர். இந்த இடங்களைத்தான் மக்கள் ‘தாவளம்’ என்றனர். இந்த தாவளங்களைப் பார்த்தால் மாடுகள் மயமாக இருக்கும். அவை அனைத்தும் வணிகப் பொருட்களை இழுத்துவந்த மாடுகள். இதைப் பார்த்த மக்கள் ‘ஆ அளம்’ என்றனர் (ஆ-மாடு, அளம்-இடம்) இந்த ஆ அளம் என்ற சொல் பின்னாளில் மருவி தாவளம் ஆயிற்று. தென்பாண்டி நாட்டில் இந்தத் தாவளத்தை தாவள நிரை என்று கூறாமல் (ஆ அளம்நிரை என்று கூறாமல்) தாவள அணி என்றனர். இதுதான் தாவள அணி, தாவணி ஆயிற்று. (அணி-கூட்டம், வரிசை) அவது அணி, நிரை என்னும் சொற்கள் நுண்ணிய வேறுபாட்டுடன் ஒரு பொருளைக் குறிக்கும். இங்கு காரணப்பெயர் இடுகுறிப்பெயராக மாறியது. பருவப்பெண்கள் போடும் தாவணிக்கு மார்பு மேலே போடும் சிற்றாடை என்பது பொருள்.

 

மாட்டுத் தாவணிகள் என்று கூறப்படும் மாட்டுச்சந்தைகள் தென்னிந்தியாவில் பல இடங்களில் காலங்காலமாக நடைபெற்று வந்தன. தமிழ்நாட்டில் மதுரை, அந்தியூர், திருப்பூர், கண்ணபுரம், கழுகுமலை, மதுரை மாட்டுச்சந்தைகள் புகழ்பெற்றவை. இப்புகழ்பெற்ற மாட்டுச்சந்தைகளில் ஒன்றுதான் கும்பகோணம் நீலத்தநல்லூர் மாட்டுச்சந்தை. மாட்டுச்சந்தைகள் நகரின் வெளிப்புறத்தில்தான் நடக்கும். எனவே, கும்பகோணம் நகரையொட்டிய நீலத்தநல்லூரில் ஆண்டுதோறும் மாட்டுச்சந்தை நடைபெற்று வந்துள்ளது. இந்தச் சந்தையைப் பற்றிப் பாடிய குஜிலிப் பாட்டு நூல் ஒன்று நமக்குக் கிடைத்தது. “கும்பகோணம் நீலத்தநல்லூர் மாட்டுச்சந்தை பாட்டு” என்பது அதன் தலைப்பு. ஜெகமெங்கும் டேப்புடன் பாடிவரும் கும்பகோணம் வாணாதுரை பத்துகட்டு வீதி தங்கமெடல் பரிசு பெற்ற வித்துவான் K.குருசாமிதாஸ் அவர்கள்தான் இதனை யாத்த கவிஞர். கையலகத்தில் எட்டுப் பக்கங்கள் கொண்ட நூல் இது. விலை / அணா; வெளிவந்த ஆண்டு குறிப்பிடப்படவில்லை. குருசாமி தாஸ் நாகூர் ஆண்டவரின் பரமபக்தர்போலும்; நாகூர் ஆண்டவர் துணை என்று எழுதி நூலைத் துவங்குகின்றார். மொத்தம் இரண்டு பாட்டுகள் தெம்மாங்கில் நடைச்சிந்து ஒன்று, மற்றொன்று ஒயில்கும்மி பாட்டு.

 

“மாமியத்தை மாமியத்தை பார்த்து வந்தேண்டி

மாட்டுசந்தை அதிசயத்தை கேட்டு வந்தேண்டி

கருப்பு காளை ரெண்டுகோடி ஓட்ட போனேண்டி

கருத்த பையன் தெருத்திகிட்டான் பொருத்து வந்தேண்டி

 

யேலம்மா-எட்டிநடை-வீரம்மா”

என்று தொடங்கும் தெம்மாங்கில் 18 ஓரடி மெட்டுகள் மாட்டின் இயல்புகளையும் வியாபார முறைகளையும் விவரிக்கின்றன.

 

இரண்டாவது பாட்டான ஒயில்கும்மியில் மொத்தம் 67 கண்ணிகள்; ஒயில்கும்மியில் முழுவதும் மாட்டு வியாபாரிகளின் பெயர்கள். ஆரணி ஜாகிரிலிருந்து தொடங்கி பல ஊர் மாட்டு வியாபாரிகளின் பெயர்கள் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் வாழ்ந்த மாட்டு வியாபாரிகள் பற்றிய ஆவணத் தொகுப்பாக இந்த 67 கண்ணிகளும் அமைந்திருப்பது வியப்புக்குரியது. மாட்டு வியாபாரிகளில் பல சாதிகளைச் சார்ந்தவர்களும் இருந்துள்ளனர். இசுலாமிய வகுப்பினரும், ஏன் பார்ப்பன வியாபாரிகள் கூட இருந்துள்ளனர். ஆனால், தலித் மாட்டு வியாபாரிகள் ஒருவர்கூட அப்போது இல்லையா எனக் கேள்வி எழுகின்றது.

 

இங்கு இன்னொரு கேள்வி மாட்டுச்சந்தையில் குஜிலிக்காரர்களுக்கு என்ன வேலை என்று கேட்கலாம். மாட்டுச்சந்தை என்பது மாட்டுவியாபாரிகள், தரகர்கள் மட்டும் கூடும் இடமில்லை. மாட்டு வண்டிகள், சாட்டைக் கம்புகள், வாய்கூடுகள், கயிறுகள், மண் பெட்டிகள், களைக்கொத்திகள், ஏலம் போடுவோர், காபி கிளப்புகள் என விவசாய எக்ஸ்போ கண்காட்சி போலத்தான் அந்தக் கால மாட்டுச்சந்தை நடக்கும். எங்கெல்லாம் கூட்டம் கூடுகிறதோ அங்கெல்லாம் நம் பாடகனும் போய்விடுவான். 1897இல் கும்பகோணத்தில் நடந்த மகாமகத்தின்போது பிரம்மாண்டமாக நீலத்தநல்லூர் மாட்டுச்சந்தை நடந்ததாம். அப்போது அங்கு கால்நடை மருத்துவராகப் பணியாற்றியவர் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் அவர்கள். இவர்கள் அங்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி மறு ஆண்டு சந்தையிலும் மாட்டு டாக்டராகப் பணியாற்றிட வெள்ளை அதிகாரிகள் அழைத்தார்கள். இந்த முதலியார்தான் 1885இல் “இந்து தேசத்து கால்நடைக்காரர் புஸ்தகத்தை” தமிழில் மொழிபெயர்த்தவர். இந்த மாட்டுச்சந்தை பாட்டை விவரித்து எழுதுவதைவிட நீங்களே படித்துச் சுவையுங்கள். இன்று மாடுகளும் இல்லை; மாட்டு வியாபாரிகளும் இல்லை. எங்கோ ஓரிரு இடங்களில் நடைபெறும் சந்தைகளில் கூட கேரள கசாப்புக் கடைக்காரர்கள் வியாபாரிகளிடம் மாட்டை, அடிமாட்டு விலைக்கு பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இக்கட்டுரையை எழுதி முடிக்கும்முன் ஹரப்பா முத்திரைகளில் காணப்படும் பருத்த திமில் கொண்ட அந்த ‘ஆ’ திமிறி எழும் காட்சிதான் எனக்கு நினைவில் எழுகின்றது.

(இந்த குஜிலிப் பாட்டு பகுதி இரண்டில் இடம்பெறுகிறது.)

 

(பண்பாட்டு ஆய்வாளரான இரா.சித்தானை எழுதும் குஜிலிப்பாடல்கள் பற்றிய அறிமுகத் தொடர் திங்கள் தோறும்  வெளிவரும். தொடர் பற்றிய உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com-க்கு எழுதுங்கள்)

 

 


English Summary
கும்பகோணம் நீலத்தநல்லூர் மாட்டுச்சந்தை பாட்டு.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...