வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் இல்லம் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் இல்லம், நிறுவனங்கள் என 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். குறிப்பாக தருமபுரி மாவட்டம் கெரஹோட அள்ளி பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு மற்றும் கரியமங்கலம் பகுதிகளில் மட்டும் 19 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டது.
சோதனைக்குப் பின் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ஊழல் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார் எனவும், அந்த 500 கோடி ஊழல் செய்ததை மறைக்கவே தனது வீட்டில் சோதனை நடத்தியிருக்கின்றனர் என தெரிவித்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் தரமில்லாத 21 பொருட்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடையவில்லை எனவும், இதை மறைக்கவே சோதனை நடத்தப்பட்டது எனவும் தெரிவித்தார். ஒரு சில தொலைக்காட்சிகளில் கட்டு கட்டாக பணத்துடன் எனது புகைபடத்தையும் சேர்த்து தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டது என கூறிய அவர், இங்கே நடந்த சோதனையில் நகை, பணம், பொருள் என எதுவும் கைப்பற்ற பட வில்லை எனவும், தவறான தகவலை ஊடகங்கள் வெளியிட்டு, அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் எனவும் குற்றம்சாட்டினார்.
தவறான செய்தி வெளியிட்ட தொலைக்காட்சிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், கடந்த ஆட்சியில் 2500 ரூபாய் பொங்கல் பரிசாக எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார், அதை மக்கள் இப்போது பேசிவிடக்கூடாது என்பதற்காக ஊழல் பிரிவை ஏவி பொய்யான சோதனை நடத்தி இருக்கின்றனர் எனவும், சோதனையில் பொருள், நகை, பணம், பொருள் எதுவும் கைப்பற்ற பட வில்லை என சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையெழுத்திட்டு சென்றுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
தொலைக்காட்சிகளில் தவறான செய்தி வெளியிட்டதற்கு மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட வேண்டும் எனவும், இல்லை எனில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்த அவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2500 ரூபாய் வழங்கினார். தற்போது அதையும் கொடுக்காமல் 500 கோடி ஊழல் செய்ததை மறைக்கவே இந்த சோதனை என்று மீண்டும் தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்பு துறை செய்திக் குறிப்பில் நகை, பணம் கைப்பற்றப்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், லஞ்ச ஒழிப்பு காவல் துறை கையெழுத்திட்டு கொடுத்த கடிதத்தில் நகை, பணம், பொருள் எதுவும் கைப்பற்றப்பட வில்லை என்றுதான் எழுதி கொடுத்து இருக்கின்றனர் எனவும், 12 மணி நேரத்திற்கு மேலாக துருவி துருவி விசாரித்து போலீஸ் எதையும் செய்ய வில்லை எனவும் சி.வி.சண்முகம் தெரிவித்தார். இரவு சோதனை நிறைவடையும் வரை காத்திருந்த அதிமுக தொண்டர்கள் அதன் பின்பே கலைந்து சென்றனர்.