![]() |
இலங்கை அதிபர் மாளிகைக்குள் மக்கள் ஆவேசம் - கோத்தபாய தப்பி ஓட்டம்!Posted : சனிக்கிழமை, ஜுலை 09 , 2022 14:27:18 IST
இலங்கையின் தலைநகர் கொழும்புவில் அமைந்துள்ள அரசுத்தலைவர் மாளிகைக்குள் இராணுவத் தடைகளை மீறி போராட்டக்காரர்கள் நுழைந்தனர் என்றும் இரண்டாவது நாளாகப் போராட்டம் மட்டுமீறிப் போன நிலையில் அரசுத் தலைவர் கோத்தபாய இராஜபக்ச தப்பியோடிவிட்டார் என்றும் பன்னாட்டு ஊடகம் ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, இன்று மதியம்வாக்கில் கொழும்பு காலி முகத் திடலில் ஆயிரக்கணக்கில் குழுமிய போராட்டக்காரர்கள், அரசுத்தலைவர் மாளிகையை நோக்கி முற்றுகையிடத் தயாராகினர். அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து காவல்துறையினரும் இராணுவத்தினரும் தடுப்பு முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை.
கிங்ஸ்பரி ஓட்டல் அருகே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த காவல்துறை தடை அரண்களை போராட்டக்காரர்கள் தூக்கிவீசினர். மக்களின் கோப ஆவேசம் கட்டுக்கடங்காத நிலைமைக்குச் செல்லவே, அதன் வீச்சை உணர்ந்த காவல்துறையினர் அங்கிருந்து அகலத் தொடங்கினர்.
தொடர்ந்து முன்னேறிச் சென்ற போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். அவற்றை சில இடங்களில் வந்த வழியாகவே மக்கள் திருப்பித் தாக்கவும் செய்வதைக் காணொலிகளில் பார்க்கமுடிகிறது.
இதனிடையே, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 19 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்களில் இருவர் காவல்துறை அதிகாரிகள் என்றும் கூறப்படுகிறது.
போராட்டக்காரர்களின் ஆவேசம் ஒரு கட்டத்தில் எல்லை மீறிச்சென்று, அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர்.
முன்னதாகவே, அசாதாரண நிலைமையைக் கணக்கில்கொண்டு அதிபர் கோத்தபாய அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்பட்டது. ஏஎஃபி செய்திநிறுவனம் இதைத் தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர் மாளிகை வட்டாரம் தொடர்ந்து கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது. English Summary
kota baya rajabaksha escape from president residence 09-07-2022
|
|