பந்தாவாக ஊரை சுற்றும் கணவனுக்கும், சுயமரியாதையுடன் வாழ நினைக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கும் கலகலப்பான கைகலப்பே 'கட்டா குஸ்தி' திரைப்படம்.
வருங்கால மனைவி குறித்த பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் நாயகன் வீராவுக்கு (விஷ்ணு விஷால்) இரண்டு பொய்கள் சொல்லி மணம் முடிக்கப்படுகிறார் கீர்த்தி (ஐஸ்வர்யா லட்சுமி). அந்த பொய்கள் என்ன? அது தெரியவரும் போது விஷ்ணு விஷால் என்ன செய்கிறார்? என்பதை சொல்வதே படத்தின் கதை.
கணவன் மனைவி இடையேயான முரண் தான் படத்தின் கதை என்றாலும், அதை நல்ல திரைக்கதையாக மாற்றி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் இயக்குநர் செல்லா அய்யாவு.
நாயகி அறிமுகக் காட்சி, சண்டைக்காட்சி, உரையாடல் காட்சிகள் என பெண்கள் வரும் இடமெல்லாம் படம் பட்டாசாய் வெடிக்கிறது. ஆண்கள் தோரணையாக வந்தாலும் அவர்கள் காமெடியன்களாகவே தெரிகின்றனர்.
படத்தின் முதல் பாதி பார்வையாளர்களை கவரும் வகையில் வேகமெடுக்கிறது. திருமணத்திற்காக கூறிய பொய்யை சமாளிக்க போராடும் நாயகி, மனைவியிடம் கெத்து காட்ட நாயகன் செய்யும் செயல்கள், ஆர்ப்பரிக்க வைக்கும் இடைவேளை என அசத்தலாக செல்கிறது. இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்திற்கு பிறகு யூகிக்கக் கூடிய காட்சிகளும், வழக்கமான கிளைமாக்ஸையும் மாற்றியிருக்கலாம்.
நாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி குஸ்தி வீராங்கனையாக களமிறங்கியிருக்கிறார். கிராஃப் வெட்டி, சேலையை ஏற்றிக்கட்டி எதிரிகளை பந்தாடுவதாகட்டும், குஸ்தி போட்டிகளிலும் கெத்து காட்டியிருக்கிறார். அதேசமயம் கிராமத்துப் பெண்ணாகவும் நடிப்பில் உச்சம் தொடுகிறார்.
கட்டுமஸ்தான உடலுடன் வரும் நாயகன் விஷ்ணு விஷாலுக்கு கிராமத்து பையன் கதாபாத்திரம் கொஞ்சம் பொருந்தாமலே உள்ளது. கருணாஸ், காளிவெங்கட், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி வரும் காட்சிகளில் காமெடிக்கு பஞ்சமில்லை. ஹரிஷ் பெராடி. வில்லன்கள் அஜய், சத்ரு உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பையே வழங்கியுள்ளனர்.
‘படிச்சவ அதிகாரம் பண்ணுவா... படிக்காதவதான் அடங்கி போவா’, ‘நீளமான முடியில்லன்னா அவ பொண்ணுல்ல; பையன்,’போன்ற வசனங்கள் யதார்தமாக உள்ளன. அதேபோல் கருணாஸை பார்த்து காளிவெங்கட் பேசும் ‘நீ அம்மாகிட்ட மட்டும் வாங்கி குடிச்சி…சின்னமா கிட்ட கூடத்தான் வாங்கி குடிச்ச” என்ற வசனம் அரசியலை நினைவுபடுத்துவதாக உள்ளது.
ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். பொள்ளாச்சி, பாலக்காடு என இரண்டு மாநில நில பரப்பை அழகாய் பதிவு செய்திருக்கிறது ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு.
குடும்பத்துடன் பார்க்கும் பார்க்கும் அளவுக்கு சிறந்த பொழுதுபோக்கு படமாக கட்டா குஸ்தி இருக்கும் என்பது ஐயமில்லை!