???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காதலுக்கு மரியாதை!- அசாதாரணமான மனிதர்கள்!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   05 , 2018  01:11:23 IST


Andhimazhai Image

இயக்குனர் ஃபாசிலின் ‘அனியத்திப்ராவு’ மலையாளத் திரைப்படத்தின் தமிழ்ப் பிரதி ‘காதலுக்கு மரியாதை’. இரண்டையும் அவரே எழுதி இயக்கியிருக்கிறார். மலையாளத்திலும் தமிழிலும் ஷாலினி கதாநாயகி; மலையாளத்தில் குஞ்சாகோ போபனும், தமிழில் விஜயும் கதாநாயகர்கள். தமிழில் வெளிவருபவற்றுள் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு காதல் படங்கள்தான். அத்தனை படங்கள் வந்திருந்தாலும், சில மாத்திரமே அதன் வித்தியாசமான கதை சொல்லல், கதாபாத்திரம், சிறந்த இயக்கம் போன்ற காரணங்களால் மனதில் நிற்கின்றன. காதலுக்கு மரியாதை அத்தகையதொன்று.

 

ஓர் உயர் வர்க்க இந்துக் குடும்பத்தின் ஒரே செல்லப் பையன் ஜீவாவிற்கும், ஏறத்தாழ அதே வசதியுடைய கிறிஸ்துவக் குடும்பத்தின் மூன்று ஆண்களுக்குப் பிறகு பிறக்கும் கடைக்குட்டிச் செல்லப் பெண்ணான மினிக்கும் உண்டாகும் காதல், வெவ்வேறு மத நம்பிக்கைகளையுடைய குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி ஜெயிக்கிறதா, இல்லையா? குடும்பம் கடைசிவரை தாங்கள் மிக நேசித்து வளர்த்த தங்கள் பிரியமான குழந்தைகளின் ஆசையை ஏற்றார்களா நிராகரித்தார்களா என்பது கதை. வெவ்வேறு மத பின்னணியைக் கொண்ட காதலன் காதலி இணைவதும் பிரிவதும்கூட தமிழ் சினிமா கதையுலகிற்குப் புதிதல்ல. ஆனாலும், ஃபாசிலின் காதலுக்கு மரியாதை இந்த வகைமைகளில் மிகமுக்கியமான ஒன்றாக இருப்பதற்குக் காரணம் இங்கு மதம் அரசியலாக்கப்படாமல், அடிப்படைவாதமாகவும் இல்லாமல், கதாபாத்திரங்களின் தனிப்பட்ட நம்பிக்கைக்குள்ளாகவே இயங்குகிறது. உண்மையில் மினி வேறு யாரையாவது காதலித்திருந்தாலும், அவர்களது அண்ணன்களுக்கு அதில் உவப்பிருக்காது. அவர்களது கதாபாத்திரம் இத்தகைய குடும்பத்தில் இருக்கும் சராசரி ஆணாதிக்கவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அப்பட்டமான மதவெறியர்களாக அல்ல.

 


படத்தின் இன்னும் சில சுவாரசியமான அம்சங்களைக் குறித்தும் நீண்டு பேசமுடியுமென்றாலும், இன்றைய சூழலில் ஸ்டாகிங் (Stalking), ஹராஸ்மெண்ட், (Harassment) போன்றவை எப்படி காதல் ஆகாது என்றும், ‘ஆண்’ மைய வெளிப்பாடாகவே இருந்துவரும் தமிழ் சினிமாக் காதலில் பெண்ணின் ‘ஒப்புதல்’ எத்தனை முக்கியமானது என்றும் பார்வையாளர்களிடையே, குறிப்பாக பெண் பார்வையாளர்களிடையே ஒரு பிரக்ஞை ஏற்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், இருபது வருடங்களுக்கு முன்பு வந்த ‘காதலுக்கு மரியாதை’யை அதில் பொருத்திப் பார்த்துப் பேசுவது முக்கியம் என்று கருதுகிறேன். ஜீவா, மினியின் ஒப்புதல் இல்லாமல் அவளைத் திருமணம் செய்துகொள்வேன் என்று அவளது அண்ணனின் முன்னிலையில் சொல்ல நேர்வதைக் குறித்து அவளிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்கிறான். வருந்துகிறான். அதே வேளையில், அவளை விரும்புவதும் உண்மை என்று அழுத்தமாகச் சொல்கிறான். ஒருவேளை மினிக்கு அவன் மீது காதல் இல்லையென்றால் அதைத் தெரியப்படுத்துமாறும் அவளிடம் கேட்கிறான். ஆனால் பின்பு, மினியே அவனைத் தேடி வந்து தானும் அவனைக் காதலிப்பதாகத் தெரிவிக்கிறாள். தனித்துப் பார்க்கும்பொழுது இவை சாதாரணமான காட்சிகளாகத் தோன்றலாம். ஒரு பெண் வாய்விட்டுத் தன்னை விரும்பவில்லை என்று சொன்னாலும் அவள் தலையில் கல்லைத் தூக்கிப் போடுவேன் என்று மிரட்டியாவது அவள் வாயிலிலிருந்து காதலைப் பிடுங்கும் ஹீரோக்களை வெகு சாதாரணமாகக் கொண்ட தமிழ்படங்களின் மத்தியில் இந்தக் கதாபாத்திரங்கள் நிச்சயம் அசாதாரணமானவை.

 

காதலைச் சொல்வதில் மட்டுமல்ல, அக்காதலை குடும்பத்திற்காக வேண்டாம் என்றும் முடிவெடுப்பதிலும் மினியின் குரலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ஜீவாவும் மினியும் தங்கள் குடும்பத்தை எதிர்த்தே காதலிக்க நேர்ந்தாலும், ஒரு கட்டத்தில் அவர்களின் அன்பை இழக்க நேரிடும் மன அழுத்தம் தாங்காமல் வேண்டாம் என்று பிரிவதற்கும் மினியே முடிவெடுக்கிறாள். தங்கள் காதலை ஒருவரையொருவர் குடும்ப அன்பிற்காகத் தியாகம் செய்வது என்பது குடும்பம் என்ற அமைப்பு வெளிப்படுத்தும் வன்முறையென்றாலும், காதல் கைகூடவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வதைவிடவும் இதுதான் சரியென்று மினி தைரியமாகவே இம்முடிவை எடுக்கிறாள். அதை ஜீவா ஏற்றுக்கொள்கிறான்.

 


இவர்களின் பெருந்தன்மையால் தங்களின் பிடிவாதம் தளர்வதை உணரும் மினியின் குடும்பமும், அதற்குக் காரணமாக அமையும் உச்சக்காட்சியும் மிகவும் உணர்வுபூர்வமானவை. காதல் பிரிவதற்கு குடும்பத்தின் ஆண்கள் காரணமாக இருந்தாலும், மினி-ஜீவாவின் காதல் கடைசியில் சேர்வதற்கு இருவரின் அம்மாக்களே காரணமாகின்றனர். ஜீவாவின் அம்மா, மினியைத் தன் மருமகளாகக் கேட்க, ஜீவாவின் தந்தையாலோ, மினியின் அண்ணன்களாலோ மறுப்பு சொல்ல முடியவில்லை. பொதுவாகத் தமிழ்த் திரைப்படங்களில் காதலர்களின் அம்மாக்களுக்கு எந்த அதிகாரமும் இருப்பதில்லை. ஆனால், இதில் கதாநாயகி மட்டுமல்ல, மற்ற முக்கியப் பெண் கதாபாத்திரங்களும் காத்திரமானவை. தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கக்கூடியவை. படம் நெடுகிலும் இவர்கள் இருவரின் பாத்திரப் படைப்பையும் கவனித்தால், அவர்களின் ‘ஏஜென்சி’யை எத்தனை நம்பும்படியாக இயக்குனர் ஃபாசில் படைத்திருப்பார் என்பது விளங்கும். காதல் திரைப்படங்கள் எல்லா கட்டத்திலும் வருபவைதான். ஆனால், காதலுக்கு மரியாதை போன்ற எளிமையான, காத்திரமான கதாபாத்திரங்களைக் கொண்ட திரைப்படங்கள் எல்லா காலத்திற்குமானவை.

 

-விலாசினி

(அந்திமழை நவம்பர் 2018 இதழில் வெளியான கட்டுரையின் முழுமையான வடிவம்)
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...