அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயன்றார்- முதல்வர் குற்றச்சாட்டு 0 டிராக்டர் பேரணிக்கு தயாராகும் விவசாயிகள் 0 தமிழகத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் ராகுல்! 0 இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய புதிய குழு 0 சூர்யாவைப் பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி 0 டிவிட்டரில் அசுரனாக மாறிய தனுஷ் 0 பா.இரஞ்சித் படத்தில் ஹீரோவான யோகிபாபு 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கனாமீது வருபவன் – 29 அய்யப்பன் மகாராஜன் எழுதும் தொடர்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   05 , 2014  06:53:30 IST

 
 
ஆயீஷாவின் இறைஞ்சுதல்கள் தீவிரத்தினை அடைந்தநேரத்தில் நலிந்தக் கேவல் ஒன்று தாஜிடமிருந்து வெளிப்பட்டது. தெவக்கத்தைப் போன்று அந்தக் கேவல் விட்டுவிட்டு வந்ததைத் தொடர்ந்து பிறகு தாஜின் உடல்  அசைவு காணத் துவங்கியது. 
‘’ ஒண்ணும் இல்ல. இப்ப உள்ள புள்ளையோ சீமத்தனமான வேலைகளக் காட்டிப் பாக்கத்தான் செய்யும். நாம அதக் கண்டுக்கிடப் பிடாது. கேட்டியா? அப்பத்தான் அதுகளும் சீரா வளரும்....ஏம்புள்ளையளப் பாத்தேல்லா.....? எஞ்செருப்புச் சத்தம் கேட்டாப் போதும்...அடங்கி ஒடுங்கி மூலையிலப் போயி சொதுங்கிக்கிடும்....புள்ளையோனா, அது புள்ளையோ..! அதுமாதிரி வளத்தப் பாருங்கோ...அப்பத்தான் மானம் மரியாதையோட சீவிக்க முடியும்..
செரி, சமயமாச்சு. நா வாரேன்...அவளுக்கு கொஞ்சம் துணிமணி எடுக்கணும்னு கொஞ்சநாளா கருவிக்கிட்டுக் கெடந்தா இன்னைக்காவது போயி ஏதாவதுப் பாக்கணும்.. ‘’ என்று காதர் கிளம்பினார்.
‘’ இரிடே வந்ததுதான் வந்தே...ஒருவாய் காப்பியத்தான் குடிச்சிட்டுப் போயேன்...’’ உதுமான் கேட்டதை ஆயிஷா கேட்கவில்லை. 
 
‘’ காப்பிக் குடிக்கதுக்கா வந்தேன்.? ‘’ காதர் நிமிர்ந்து உதுமானைப் பார்த்தார். உதுமானின் கண்கள் நிறைந்து நின்றன. 
 
‘’ நீ ஒன்னும் கவலைப்படாதே அந்தப் பயல என்னச் செய்யணும், எங்கத் தட்டணும்னு எனக்குத் தெரியும். அத நாம்பாத்துக்கிடுதேன். நம்ம புள்ளைய சொல்பேச்சுக் கேக்க வக்கது நமக்கு நல்லது. அத மனசில வச்சிக்கோ. ஒருக் கோடு போட்டா அதத் தாண்டி வரப்படாது புள்ளையோ...’’ என்று காலால் கோடு போட்டுக் காட்டிப் பேசினார். ‘’ மழைக்கக் கோளு இன்னுந் தீரல. ’’  சொல்லிக் கொண்டே காதர் கிளம்பிச் சென்றார். 
 
தாஜ் உயிர்ப்பாதி பிணம்பாதியாகக் கிடந்தாள். ஆயிஷா ஓடியோடித் தேயிலைப் போட்டு எடுத்து வந்தாள். கிழங்கு அவித்துக் கொடுத்தாள். பேரீச்சம்பழத்தையும் மிக்சரையும் பிடிக்குமே என்று கொண்டு வந்து வைத்தாள். லாலாக் கடைக்குப் போய் உப்பேரியும் அல்வாவும் வாங்கி வந்து கொடுத்தாள். ஆனால் அவளது நம்பிக்கையை தாஜ் தன் பெருமூச்சால் தகர்த்தாள். எனினும் கூட மாளாதத தனது அன்பின் கரிசனத்தை மகளின் துயர மனதிற்கு இதமாக்கித் தரத் தலைப்பட்டுக் கொண்டேதான் இருந்தாள் ஆயிஷா. 
 
மூச்சு வாங்குவது நிற்காமல் போய்க் கொண்டிருந்தது. அடிக்கொருதடவை தாஜ், ஏக்கமிகுந்த பார்வையைக் கொண்ட உதுமானைப் பார்க்க நேர்ந்த போதெல்லாம் அவள் மனது துடித்ததை உதடுக் காண்பித்துக் கொடுத்தது. சகிக்கப் பொறுக்காத உதுமான் வெளியே இறங்கினார். இலக்கில்லாமல் வேகமாக நடந்தார். வடசேரி வரைக்கும் கால் தாங்கவில்லை. வலி தரித்தது. ஒரு ஓரமாக நின்று கொண்டார். கையில் குழந்தையுடன் கிழிந்து தொங்கிப் போன வாயினைக் கொண்ட ஒரு தகப்பன் அவர் அருகில் வந்து நின்றான். சிலநோடிகளுக்குப் மேலும் அவனதுக் கிழிந்த வாயை அவரால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. உதுமான் முகத்தைத் திருப்பிக் கொண்டார். புரிந்துகொண்ட அவன் குழந்தையுடன் அவரை விட்டு அகன்றான். போகும்போது கவனித்தார். அவன் குழந்தைக்கு மூச்சு சாதாரண நிலையில் இல்லை. சற்று இழுத்து வாங்கிக்கொண்டிருந்தது. அதைக் கண்ட உதுமானுக்கு சற்று அழுதால் பரவாயில்லை எனத் தோன்றியது. அவர் அடக்க முயன்றார். எனினும் பெருந்துயரத்தை சுமந்து வந்த மனம் அடங்கப் பிடிக்காமல் திணறியது. வேகமாக புதுக்குடியிருப்பிற்குச் செல்லும் வழியில் இறங்கி அழுதபடியே நடந்தார்.
 
புத்தகப்பை தாஜை தன்னோடு சரித்துக் கொண்டது. ஒரு புள்ளியாகத் துவங்கி குறுக்கும் நெடுக்குமாக மாறிமாறி வளர்ந்த பல கோடுகள் இணைந்து மற்றவர்களிடத்திலிருந்துத்  தன்னைத் தனித்து வைத்து விட்டதாக தாஜ் வருந்தினாள். நியாயங்களை வளர்த்துக் கொண்டு போவதற்கு அவள் அத்தனை பலமுடையவளாக இல்லை. இப்போதைக்கு கனத்த அமைதியினையே அவள் விரும்பினாள். ஆனால் அது அத்தனை உசிதமானதாகவும் இல்லை . உடல் தளர்வதும் மனம் சீறுவதுமாக இருந்தது. தனித்தனியாக உம்மாவுக்கும் வாப்பாவுக்கும் கடிதங்களை எழுதி வைத்துவிட்டு ஏதாவது செய்துகொள்ளலாமா எனவும் யோசித்தாள். அந்த யோசனை அவளை மேலும் துயரத்தை நோக்கியேத் தள்ளியது. உம்மாவின் வாசனை, கடிதம் எழுதும் மன நிலையை துரத்தி அனுப்பியது. உடல் அசதியை அடைந்த நேரம் தூக்கம் இழுத்தது. அதேசமயம் நடந்த நிகழ்வுகளின் காரணமாக அவநம்பிக்கைக் கொண்ட பயம் அவளைச் சூழ்ந்து வந்து தூங்கவிடாமல் அச்சுறுத்தியது. 
 
பிச்சிப்பூ செடிகளின் வளையத்தில் மாட்டிக்கொண்டது போன்ற ஒரு தோட்டத்தின் மத்தியில் அழகான ஒரு சிறிய வீடு. இரவில் உறுமிக்கொண்டும் பகலில் சிறகுகளை அடித்து தடதடத்துக் கொண்டும் சுற்றி வருகிறது புறாக்களின் கூட்டம். வழிசலைத் துடைத்து விட்டுக் கொண்டு முற்றத்துக்கு நெடுநேராய் சந்திரன் வரும் வரையில் பாடம் படித்துக் கொண்டிருக்கிறார்கள் சிறுவர்கள்.  பாடங்களை எழுதுபவர்களிடம் இருந்து சிதறிச் செல்லும் கையெழுத்துக்களை நேராக்கி ஓவியம் போல ஒழுங்கு செய்ய கற்றுக் கொடுக்கிறாள் தாஜ். சமாளிக்கும் சேட்டைக்காரர்களை விழி உருட்டி அடக்குகிறாள். மாணவர்களின் சத்தங்களைக் கேட்டுப் புறாக்களும் உறுமியவாறு  படிப்பினை ஆமோதிக்கின்றன.
 
‘’ இந்தப் பாருங்கலே...சாக்கட்டிய ஒரேப்பிடியா பிடிச்சி இந்தியாவ வரையிதேம்பாருங்க. கைய எடுக்கவேக் கூடாது...மேப்ப வரைஞ்சி முடிச்சதும் ஊர்பேரல்லாத்தையும் இந்தமாதிரி குறிச்சிக்கிடணும் என்னா...? ‘’ பயலுகள் வாயைப்பிளந்து ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். 
‘’ ஒங்களுக்குந் தாமுட்டி சொல்லுதேன் . பாத்துக்கிடுங்கோ...’’ ஒற்றை நிமிடங்கொண்டு விரலெடுக்காமல் தாஜ் இந்திய வரைபடத்தை வரைவதைக் கண்ட பெண்பிள்ளைகள் திறந்த வாய்களை மூடுகிறார்கள்.
 
‘’ அசோகர்னா யாருன்னுத் தெரியுமா? ’’
 
‘’ நாஞ் சொல்லட்டா...எனக்கு அவர நல்லாத் தெரியும்? ’’ ஒரு பொடிப் பெண் கைத் தூக்கினாள்.
 
‘’ ம்...சொல்லுப் பாக்கலாம். யாருட்டீ? ’’
 
‘’ ஐசுக்காரரு...ஆனா சாலை ஓரங்கள்லயெல்லாம் மரங்களா நட்டு வச்சாராம். ரொம்பதூரம் நடந்தே போறவராம். கால் வலிக்கும்லாக்கா. அதான். செலசமயம் பால் யாவாரமும் நடத்துவாரு. ம்..பொறவு,.....?’’ அவள் மற்றவர்களைப் பார்க்கிறாள். திடீரென நினைவு வந்தவளைப் போல, ‘’ ஆங், அவருக்கிட்ட சுக்குப்பால் ஐஸ் வாங்கிக் குடிச்சா நல்லா இருக்கும். அதுக்கப் பொறவு,.....ஆங், நம்மள எங்கப் பாத்தாலும் பாசமா சிரிப்பாரு. ஆனா கடைசியில புத்தமதத்துல யாரோ அவர மாத்தி உட்டுட்டாங்க...’’ அனைவரும் சிரிக்கிறார்கள்.
 
‘’ ஒனக்கு எப்பிடிட்டீ அசோகரத்  தெரியும்? ‘’
 
‘’ நாம் பாத்துருக்கனே....எங்கப்பா காட்டித்தந்திருக்காரூ...! ’’
 
‘’ வாய மூடுட்டீ..... கொடலு ஒட்டி ‘’ தாஜ் கோபிக்கிறாள். அந்த சிறுமி புரியாமல் ஏமாற்றம் கொள்கிறாள்.
 
‘’ போ. போயி, செடிக்கித் தண்ணி ஊத்திட்டு வா. ரெண்டுவாளி ஊத்தணும். ஆமா. பொறவுதான் அசோகருல்லாம் ‘’ அவள் போகையில் மற்றப் பெண்களும் அவளுடன் கிணற்றங்கரைக்குச் செல்கிறார்கள். தண்ணீர்ப் பிடித்து செடிகளுக்கு ஊற்றுகிறார்கள். சிலர் பிச்சிப் பூக்களைப் பறித்துத் தலைக்கு வைத்துக் கொள்கிறார்கள். ஒளிவீசும் நிலாவின் வெளிச்சத்தில் பட்டுப்பட்டு மறையும் அவர்களின் முகங்கள் தமிழ்த் துணைப் பாடநூல் கதைகளில் வரும் தேவதைகளின் முகங்களாக அவளுக்குக் காட்சியளிக்கின்றன. 
 
சட்டென செருப்புச் சத்தம் கேட்கிறது. அனைவரும் பயந்து ஓடுகிறார்கள். பொடிப்பெண் வாளியைப் பாதிக் கிணற்றிலேயே விட்டுவிட்டு ஓடிவிடுகிறாள். வேகவேகமாக வந்தக் கைகள் புத்தகப்பைகளைத் தூக்கிச் செல்கின்றன. சில சிறுவர்கள் பைகளைத் தோள்மீது போட்டுக்கொண்டு பையின் வாரினை வாயால் கடித்து வைத்துக் கொண்டு மதில் மீது ஏறி வெளியேக் குதிக்கிறார்கள். மிரள்வது போலக் கேட்கின்றன புறாக்களின் சத்தங்கள். நிலவினை மேகம் மறைக்க வெளிச்சம் நீங்கி இருள் சூல் கொள்கிறது. தாஜ் வாசலைப் பார்க்கிறாள். வாசலின் முன்னே ஒருக் கோடு வரையப்பட்டிருக்கிறது. அதன் பின்னே தனது தடித்த செருப்புக் கால்களுடன் வந்து நிற்கிறார் காதர். அதைக் கண்டதும் மூச்சு மறுபடியும் நிலையில்லாது தெவங்கத்துவங்குகிறது. நெஞ்சின் படபடப்புக் கூடுகிறது. ஆயிஷாத் தனது கண்ணீரை தைலம் போல தாஜின் மீது வழியவிட்டுத் தடவிக் கொடுக்கிறாள். உம்மாவிடம் நிறையப பேச வேண்டும் போல இருக்கிறது. உம்மாவின் கண்ணீருக்கு அஞ்சி அவளது சேலைத்தலைப்பைப் பிடித்து சுருட்டி வைத்துக் கொள்கிறாள் . 
 
இதேத் தெருவில் சொந்தமாக இடம்வாங்கி விருப்பம்போல வீடுகட்டி, வீடு நிறையப் பிள்ளைகளை உட்காரவைத்து பாடம் நடத்தி ......இல்லை, எனதுக் கனவுகளை கோடு போட்டு நிறுத்தி வைத்து விடுகிறார்கள். பொருத்திப் பார்க்க ஒப்புமைப்படுத்த ஒவ்வொருக் குடும்பத்திலும் எனக்கொப்பப் பிள்ளைகள் இருக்கிறார்கள்.  நான் யாரைப் பின்பற்றி வாழவேண்டும்? என் விருப்பப்படி வாழ்வதற்கு நான் ஏன் மற்றவர்களிடம் அனுமதி பெற வேண்டும்? அப்படி என்ன குற்றத்தினை நான் செய்துவிட்டேன்? அடிப்பதின் வலி அடிப்பவருக்கு ஏன் தெரிவதில்லை?  பலமற்றவனின் பிள்ளைகளை பணமுள்ளவன் வழிநடத்துவது ஏன் ? கேள்விகள் சரப்படக்கு போல வெடித்துக் கொண்டேயிருக்கின்றன
 
அவள் கேள்விகளைத் தடுத்து நிறுத்தினாள். அவள் கைவிட்டதும் அவை வசமிழந்து தனியேப் போய் விழுந்தன. அவள் அவற்றைத் தற்காலிகமாக உயிற்றவைகளாக மாற்றினாள். கலைந்து தொங்கும் தனதுக் கனவுகளையே பழையபடியும் கோர்க்க முடியுமா  என்று முயற்சி செய்ய நம்பிக்கையை திடமாக உருவாக்க முற்பட்டாள். தூக்கம் துண்டுபட்டுப் போனதில் இமை மீது பாரம் அழுத்தி வலிக்கும்படி செய்தது. கண் மூடினாலும் வலித்தது. திறந்திருந்தாலும் வலித்தது. உடலெங்கும் பரவி மூச்சு விடக்கூட வலித்தது. நினைவுகளையும் கனவுகளையும் ஒருசேர அணைத்துக்கொள்ள அவள் வழி தேடினாள். அதன் வழியே வலிகளைத் துறப்பது சாத்தியமற்றது என்பதை அவள் உணர்ந்தாள். பிறகு சகித்துக் கொள்ள முடிவு செய்து வலியினை விசாலமாக ஏற்றுக் கொண்டுக் கண்களை மூடினாள். எனினும் மூடியக் கண்களுக்குள் இருந்து ஒரு கேள்வி அவளை நோக்கி எழுந்தது. ‘’ இந்த வலி துன்பம் எல்லாம் எதற்காக ? ‘’. அவளிடம் பதில் இல்லை. கேள்வி வளர்ந்தது. ‘’ சரி, இன்பம் போல தான் கனவு கண்டது எதற்காக? ‘’. அதற்கும் பதில் இல்லை.  ‘’ உண்மையில் இன்பமாக வாழ்வதுதான் எதற்காக ? ‘’. பதிலில்லை. ‘’ எல்லாம் மரணத்திற்காகத்தானே ? ‘’ பதில் தெரிந்தது போல இருந்தது. கண்மூடிய இருளுக்குள் மனம் மீன் போல வளைந்து நெளிந்து நீந்தத் துவங்கியது. 
 

(கனா தொடரும்)

 

 

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக் கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத் தொடர் இது. செவ்வாய்தோறும் இது வெளியாகும்.  உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு எழுதுங்கள்)

 

 

 

கனா மீது வருபவன் -25

கனா மீது வருபவன் -26

கனா மீது வருபவன் -27

கனா மீது வருபவன் - 28
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...