![]() |
கலகத் தலைவன்: திரைவிமர்சனம்!Posted : சனிக்கிழமை, நவம்பர் 19 , 2022 10:25:38 IST
பெற்றோரைக் கொன்ற கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்த்து சண்டை செய்யும் ஒருவனின் கதையே ‘கலகத் தலைவன்’.
கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் வஜ்ரா என்ற நிறுவனம், புதிய லாரி ஒன்றை அறிமுகப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால், அந்த வாகனம் உமிழும் புகையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட மாசு அதிகம் இருப்பதாக தெரியவருகிறது. இந்த ரகசியத்தை வஜ்ரா நிறுவனம் மறைக்க நினைக்க, அது வெளியே கசிகிறது. இதை வெளியிட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க, வஜ்ரா நிறுவனம் அர்ஜூனை (ஆரோன்) நியமிக்கிறது. அவர் தனது, கொடூரமான புலனாய்வை தொடர, அது திருமாறனிடம் (உதயநிதி ஸ்டாலின்) கொண்டு போய் சேர்க்கிறது. வஜ்ரா நிறுவனத்துக்கும் திருமாறனுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
இயக்குநர் மகிழ் திருமேனியின் முந்தைய படங்களைக்காட்டிலும் 'கலகத் தலைவன்' செறிவான திரைக்கதை அம்சம் கொண்ட திரைப்படம். அதற்கு காரணம் கார்ப்பரேட் அரசியல், சுற்றுச்சூழல் பிரச்சினை, சந்தை பொருளாதாரம், தொழிலாளர் உரிமை இழப்பு, கார்ப்பரேட் - அரசு உறவு, காதல் ஆகியவையே.
படத்தின் முதல் பாதியில் வரும் காதல் காட்சிகளும் கிளைமாக்ஸ் காட்சியும் படத்தின் விறுவிறுப்பைக் குறைத்து விடுகிறது. ஒருத்தன் நாலு பேரை அடிக்க முடியாது என இறுதிக்காட்சியில் லாஜிக் பார்க்கும் இயக்குநர், அதே ஒருத்தன், சாதாரணமாக நான்கு சிசிடிவி காட்சிகளை நீக்குவது, தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பது, வில்லன்களைக் கொலை செய்யும் வித்தியாசமான உத்தி போன்றவற்றிலும் யோசிக்காமல் விட்டது ஏன்?
கார்ப்பரேட் ஊழியராகவும், ரவுடிகளை பந்தாடுபவராகவும் வரும் உதயநிதி நடிப்பில் மிளிர்கிறார். நிதி அகர்வாலிடம் ஹெண்ட்பேக் பற்றி சொல்லும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. மிடுக்கான உடல் மொழி, கருணையற்ற பார்வை, இரக்கமில்லா மனிதர் என எதிர்மறை கதாபாத்திரத்தில் அடித்து ஆடியிருக்கிறார் ஆரோன். குறைந்த நேரம் மட்டுமே வந்தாலும் கலையரசன் நடிப்பு கவனிக்க வைக்கிறது. நிதி அகர்வால் கதாபாத்திரம் வலுவாக எழுதப்படவில்லை. படத்தில் மற்ற நடிகர்களும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.
ஸ்ரீகாந்த் தேவா, ஆரோல் கோரலி பின்னணி இசை சில இடங்களுக்கு ஓகே என்றாலும், சில இடங்களில் ஹாரர் படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அசைபோடும் அளவிற்கு பாடல்கள் எதுவும் இல்லை. தில்ராஜ் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் தொழில்நுட்ப ரீதியாகப் படத்திற்கு பலம்.
சுவாரஸ்யமான தொடக்கம், விரிவான விவரணை என செல்லும் திரைப்படம் காதல், ‘பழிக்குப் பழி’ என்ற பழைய பஞ்சாங்கத்தை கடந்திருக்கலாம். இருப்பினும் கலகத் தலைவன் விறுவிறுப்பு.
தா.பிரகாஷ்
|
|