உபேந்திரா, சிவராஜ்குமார், கிச்சா சுதீப், ஷ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடிப்பில் பான் இந்திய படமாக வெளியாகி இருக்கிறது கப்ஜா. இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம்?
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் தொடங்குகிறது படத்தின் கதை. சுதந்திரப் போராட்ட வீரரான தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு ஆர்கேஸ்வரர் (உபேந்திரா) குடும்பம் அமரேஸ்வரம் என்ற ஊருக்கு புலம் பெயர்கிறது. விமானப்படை வீரராக தனது வாழ்வைத் தொடங்கும் ஆர்கேஸ்வரர், காலத்தின் கட்டாயத்தால் டானாக மாறுகிறார். இதனால் அவருக்கு எதிரிகள் அதிகரிக்க, அரசாங்கமும் அவரை தீர்த்துக் கட்ட நினைக்கிறது. இறுதியில் எதிரிகளையும், அரசாங்கத்தையும் ஆர்கேஸ்வரர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதற்கான விடை சொல்லும் கதையே கப்ஜா.
கே.ஜி.எஃப் போன்று படமெடுக்க நினைத்திருப்பர் போல இயக்குநர் சந்த்ரு. கதை, கதாபாத்திர உருவாக்கம், இசை, லொக்கேஷன் என அனைத்திலும் கே.ஜி.எஃப் சாயல் தான் தெரிகிறது. கே.ஜி.எஃப் படத்தின் இசையமைப்பாளரான ரவி பஸ்ரூர் தான் இந்தப் படத்திற்கும் இசை அமைத்துள்ளார். ஏனோ அவரின் இசை இந்தப் படத்திற்கு எடுபடவில்லை.
அதேபோல், வலுவில்லாத வசனங்களும், நாயகனை சுற்றியே நகரும் காட்சியமைப்புகளும், அளவுக்கு அதிகமான ரத்தம் தெறிக்கும் வன்முறையும் ஒருகட்டத்தில் மேலதிக அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ் டப்பிங் படு மோசம். பாதி வசனங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஏகப்பட்ட பெயர்களை சொல்கிறார்கள். அது எதற்கென்றே தெரியவில்லை.
படத்தின் ப்ளஸ் என்றால், கதாபாத்திர தேர்வு, ஒளிப்பதிவு, ஆடை வடிவமைப்பு போன்றவற்றை சொல்லலாம்.
கப்ஜா விட்ட கப்சா பார்வையாளர்களை கும்புடு போடவே வைத்தது.