???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கபாலியும் காலாவும்: இரஞ்சித் வார்த்த இரண்டு ரஜினிகள்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   08 , 2018  07:13:08 IST


Andhimazhai Image
பாலி. ‘அடுத்து யாருக்கு ரஜினிகாந்த் கால்ஷீட்?’ என்று திரைநோக்கர்கள் பேசிக்கொண்டிருந்தவேளையில் பா.இரஞ்சித்தை தன் இயக்குநராக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் ரஜினிகாந்த். அப்போது இரஞ்சித்துக்கு, அவ்வளவாக  அரசியல் அடையாளம் இல்லை. அட்டகத்தியில் அவர் பேசிய அரசியலை யாரும் புரிந்துகொள்ளவுமில்லை. மெட்ராஸ் மூலம், தான் பேச நினைத்த அரசியலை தெளிவாகக் காட்டியிருந்தார் இரஞ்சித். ஆனாலும் இரஞ்சித்தின், கலையடையாளம் முழுக்க அரசியலைச் சார்ந்திருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.  காலா அப்படி அல்ல. ஒருபக்கம் இரஞ்சித், அழுத்தமாக ஓர் அரசியலை முன்வைத்து நகர்ந்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம், உச்சநாயகனாகத் திகழும் ரஜினிகாந்த், தன்னை அரசியல்வாதியாகவே பிரகடனப்படுத்தவும் செய்துவிட்டார். 
 
 
எதிர்பார்த்ததுபோலவே காலா இரஞ்சித் பேசநினைத்த அரசியலை தெள்ளத்தெளிவாக மக்கள் முன் வைத்துவிட்டது. கபாலி, வேறொரு நாட்டில் மறுக்கப்படும் தங்களது உரிமைக்காகப் போராடும் மக்களின் தலைவன் கதை. இதுவும் அப்படியே. ஆனால், வேறொரு நாட்டில் அல்ல. தங்கள் சொந்த நாட்டிலேயே. ஆனால் மாநிலத்துக்கு வெளியே. இதன்மூலம் இரஞ்சித், சொல்ல நினைக்கும் விஷயம் என்னவென்று புரிந்து கொள்ளலாம்.
 
 
கபாலியில் ஒரு காதல் படம் நெடுக வந்து, பாண்டிச்சேரிக் காட்சியில் நிறைவுறும். அந்தக் காட்சியின்போது கபாலியோடு நாமும் தவிப்போம். இதில் மாறாக, காலாவின் ஒரு காதலி, காலா இருக்குமிடம் வருகிறாள். முன்னாள் காதலனைப் பார்க்க அல்ல. அவளது பணிநிமித்தம். அப்படி வந்தபோது, காலாவைச் சந்திக்கும் காட்சி இரண்டுமே அற்புதம். வீட்டில் சந்திப்பதும் சரி, வெளியில் சந்திப்பதும் சரி. இயல்பாக இருந்தது. வெளியில் சரீனாவைச் சந்தித்துவிட்டு வந்தபிறகு, காலாவை, மனைவியான செல்வி (ஈஸ்வரி ராவ்) எதிர்கொள்ளும் காட்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ரசிக்கச் செய்த காட்சி.  
 
 
காலாவுக்கும் செல்வி(ஈஸ்வரி ராவ்)க்குமான காதல் காட்சிகள், கபாலியின் காதல் காட்சிகளைவிடவும் முதிர்ச்சியானதாக இருந்தது. ஒரு பாசமுள்ள குடும்பத்தலைவனாக, மனைவியிடம் பாசம் காட்டி அடங்கிப்போகும் கணவனாக, அறுபது வயதை எட்டும் நாயகன் பாத்திரச் சித்தரிப்பு சிறப்பு என்றே சொல்லவேண்டும்! இடைவேளைக்கு முன்புவரை, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி இருவருமே படத்தை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அதுவும் வழக்கமாக அறிவுரை நாயகனாகவே பார்க்கப்பட்டு வந்த கனியை, எப்போதும் போதையோடும், கலாய்த்தல் மொழியோடும் திரியும் கதாபாத்திரமாகக் கட்டமைத்தது இரஞ்சித்தின் சாமர்த்தியம் என்றால், அதைத் தன் தேர்ந்த நடிப்பால் நிறைவு செய்திருப்பது கனியின் சிறப்பு.
 
 
கபாலி, கபாலியானது எப்படி என்று ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சியில் நிறுவியிருப்பார் இரஞ்சித். ஆனால் இதில் வேங்கையன் பெருமையோடு சரி. காலா மக்களுக்கு என்ன செய்தார் என்பது காண்பிக்கப்படவில்லை. போராடும் தன் மகன் லெனினை (மிஸ்டர் மணிகண்டன், மிகச்சிறப்பான எதிர்காலம் உண்டு உங்களுக்கு!) பெரிதாகப் பாராட்டாமல், பாராமுகம் காட்டும் காலா, அவருக்குப் புரிய வைக்க முயற்சிக்கலாமே? அவரது போராட்ட வழி தப்பு, தன்னுடைய வன்முறை வழிதான் சரி என்பதுதான் காலா சொல்ல நினைப்பதா? எனின், அது எப்படிச் சரியாகும்?
 
 
‘ஹரிதாதா... உன்ன நான் போகச்சொல்லலியே’ காட்சி,  ‘குமாரு... யாரு இவரு’ காட்சி. ‘முடிஞ்சா முதுகுல குத்திக்கோ’ காட்சி என்று  சில இடங்களில் நடிக்க ரஜினியால் மட்டுமே முடியும். எல்லாம் மிரட்டலான மாஸ் காட்சிகள். காவல்நிலையத்தில் நாற்காலியைத் தூக்கி அடிக்கும் ஒரே காட்சி போதும்!
 
 
எனக்குப் படத்தில் மிகப்பிடித்த ஒருவிஷயம், கதாபாத்திரங்கள் எவருமே எந்தவிதப் பூச்சுமற்ற முகத்தோடு வலம்வந்ததுதான். வில்லன் மற்றும் அவனது ஆட்களுக்கு மட்டும் கொஞ்சம் மேக்கப் இருந்ததைப் போலத் தோன்றியது. மற்றபடி ரஜினி, ஈஸ்வரிராவ், சமுத்திரக்கனி, மணிகண்டன், திலீபன் என்று எல்லாருமே நம் மண்ணின் நிறத்தோடு இருந்தனர். காலாவின் காதலி சரினாவாக நடித்திருந்த ஹூமா குரேஷி, இயல்பிலேயே சிவந்த நிறம் என்பதாலும், அது அவரது முஸ்லிம் கதாபாத்திரத்தோடு பொருந்தி இருந்ததாலும் ரசிக்க முடிந்தது. அதைப்போலவே, அஞ்சலி பாட்டீலை போலீஸார் உடையைக் களைந்து பாலியல் ரீதியாக அவமானப்படுத்த நினைக்கும்போது அவர் சடாரென்று லத்தியை எடுத்து போலீஸாரை வெளுப்பது நிச்சயம் இரஞ்சித்தின் கலைத்திறனுக்கும், கருத்தியலுக்கும் பாராட்டைப் பெற்றுத்தரும் காட்சி.  வில்லன் நானாபடேகர், நடிப்பில் தானொரு சீனியர் என்பதைக் காட்டியிருந்தார். அலட்டலே இல்லாத நடிப்பு
 
 
பாடல்களும், படமாக்கப்பட்ட விதமும் பரவாயில்லாமல்தான் இருந்தது. படத்தின் நீளம்கருதி இருக்கலாம். ஆனால் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ‘வாடி என் தங்கச்சில’ கொண்டாட்டம்!  ‘உரிமையை மீட்போம்’ பாடலோடு, அவற்றின் மாண்டேஜ் காட்சிகளும் பொருந்தியிருந்தது. பின்னணி இசை, படத்தின் மொத்த உணர்வையும் கடத்தியிருந்தது. சந்தோஷ் நாராயணன் ஏமாற்றவில்லை. வில்லனுக்கான இசைத்துணுக்கும்.. மிகச்சிறப்பு.
 
 
படத்தில் ஒரு காட்சி வருகிறது. 144 தடையுத்தரவு போடப்பட்டிருந்த தாராவிக்குள் போலீஸ் உதவியுடன் வில்லனின் ஆட்கள் புகுந்து, துவம்சம் செய்கிறார்கள். எனக்கென்னவோ இந்தக் காட்சியை மனதில் வைத்துதான், தூத்துக்குடியில் உள்ளே புகுந்தது சமூகவிரோதிகள் என்று ரஜினிகாந்த் பேசியிருப்பார் என்று தோன்றுகிறது. அந்த நிருபர் ”எப்படிச் சொல்றீங்க?” என்று கேட்டதற்கு “போனமாசம்தானே ஷூட்டிங் பண்ணோம்.. அட படத்தச் சொன்னேன்பா” என்று சிரித்துவிட்டுப் போயிருக்கலாம். மிஸ் பண்ணிட்டீங்களே தலைவரே!
 
 
காலாவும் கபாலியும் வயதான நாயகர்கள். இரஞ்சித் இந்த அறுபது வயது பாத்திரங்களை வைத்துக்கொண்டு இரண்டு படங்களைத் தொடர்ந்து செய்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உரிமைப் போராட்டங்கள். மலேசியாவில் வாழ்வுரிமை. மும்பையில் நில உரிமை! கபாலியில் இரஞ்சித் தூக்கலாகத் தெரிந்தார்! காலாவில் தூக்கலாகத் தெரிகிறவர் ரஜினி, அத்தனை அரசியல் நெடியையும் மீறி!
 
 
படத்தின் இறுதிக்காட்சி, தமிழ்ப்படங்களில் ஒரு புதியமுயற்சி அல்லது மைல்கல் எனலாம். வெள்ளுடை வில்லனை, கறுப்பு, சிவப்பு, நீலம் என்று மாறி மாறி துரத்தியடிக்கிறது. நாயகன் இறக்கவேண்டும் என்று நினைக்கிறான் வில்லன். ஆனால் வில்லன் இறப்பது நாயகனுக்கான வெற்றி அல்ல. வில்லனின் கருத்துகளும், கொள்கைகளும் மடிவதே சிறப்பானதாக இருக்கும் என்பதை அந்த இறுதிக் காட்சியில் ஒரு கலைப்போராளியாக நிறுவியிருக்கிறார் இரஞ்சித். வாழ்த்துகள் இரஞ்சித்! 
 
 
 
-காதம்பரி


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...