???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஔவையின் கவிதையும் மோட்டார் மெக்கானிஸமும்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   11 , 2019  02:48:14 IST


Andhimazhai Image
“தமிழ் கவிதைகள் என்னை எனது சொந்த ஊருக்கே அழைத்து செல்கின்றன. குறுந்தொகை-யில் உள்ள  ‘அணில் ஆடும் முன்றில்’ பாடலை வாசிக்கும்போது எனது சொந்த ஊரின் நிலம், வாழ்வுச்சூழல் நினைவுக்கு வரும்” என்று குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழாவில் பேசிய மலையாளக் கவிஞர் ராமன் குறிப்பிட்டார்.

இளம் படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் வகையில் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. முதல் ஆண்டு இந்த விருதானது கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் ஆண்டு இந்த விருது கண்டராதித்தனுக்கு வழங்கப்பட்டது.

மூன்றாம் ஆண்டுக்கான விருது தற்போது கவிஞர் ச. துரைக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்த விருது வழங்கும் நிகழ்வு சென்னை நந்தனத்தில் உள்ள தக்கர்பாபா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் தேவதேவன், கேரள கவிஞர் பி. ராமன், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

கவிஞர் ச. துரைக்கு, பி.ராமன் விருது வழங்கினார். இதைத்தொடர்ந்து ரூ  50,000 மதிப்பிலான காசோலையை ச.துரைக்கு ஜெயமோகன் வழங்கினார்.
 
கேரள மாநிலத்தின் பட்டம்பி என்ற பகுதியை சேர்ந்தவர் கவிஞர் பி. ராமன். கனம், துரும்பு ஆகிய கவிதை தொகுப்புகளை எழுதி உள்ளார். இவர் பேசியதாவது:
 
”இளம் படைப்பாளிகளை அங்கீகரிக்கும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வது  மகிழ்ச்சியளிக்கிறது.  தமிழ் புதுக்கவிதையினை போற்றும் ஒரு நபராக நான் இருப்பதுதான், இந்த விழாவில் நான் கலந்துகொள்ள எனக்கு இருக்கும் தகுதி என்று  நினைக்கிறேன். நான் எழுதத்தொடங்கிய காலக்கட்டத்தில்,  மலையாளத்தின் தலை சிறந்த கவி ஆற்றூர் ரவிவர்மா தமிழ்க் கவிதைகளை பற்றிய  ஒரு தொகுப்பை மலையாளத்தில் வெளியிட்டார். இந்த புத்தகங்கள் எங்களைபோன்ற கவிஞர்களுக்கு தூண்டுதலாக இருந்தன.

ஊட்டி மற்றும் ஒகேனக்கலில் ஜெயமோகன் நடத்திய தமிழ் மலையாள கவிதை உரையாடல் அரங்கத்தில்  கலந்துகொண்டபோது, தமிழ் கவிஞர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் நான் தமிழை வாசிக்கப் பழகியிருந்தேன். சிலரின் உதவியுடன் தமிழ் கவிதைகளை வாசிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

தமிழ் புதுக் கவிதைகளை வேற்று மொழி கவிதையின் அறிமுகம்  என்று மட்டும்  பார்ப்பது சரியாக இருக்காது. மலையாளத்திற்கும் சொந்தமான தமிழ் மொழியினுடைய பாரம்பரியத்தில் உருவாகி வந்தே தமிழின் புதிய கவிதைகள்.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி,  தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ’நிலம் பூத்து மலர்ந்த நாள்’ (மனோஜ் குரூர்) என்ற நாவல், தமிழை தாய்வீடாக கொண்ட மலையாள பாரம்பரியத்தை எப்படி கேரள இளம் படைப்பாளிகள் பார்க்கிறார்கள்  என்பதற்கு சிறந்த உதாரணம்.
 
1990-களின் தொடக்கத்தில் நான் தீவிரமாக எழுதத்தொடங்கிபோது, மலையாள கவிதைகள் சற்று சலிப்புட்டுவதாக இருந்தன.  அதிக அரசியல் உள்ளடக்கங்களை கொண்டதாக இருந்தது. சாதாரண மனிதன் வாழ்வில் காணப்படும் எதார்த்த அழகியல் மலையாள கவிதைகளில் இடம் பெறவில்லை.

மேலும் மலையாள கவிதையில் அதிக சப்தங்கள் மட்டுமே இருந்தன. உள்ளே ஜீவன் இல்லாத நிலையில் கவிதைகள் இருந்தன. தமிழ் கவிதைகள் என்னை எனது சொந்த ஊருக்கே அழைத்து செல்கின்றன. குறுந்தொகை-யில் உள்ள ’அணில் ஆடும் முன்றில்’ பாடலை வாசிக்கும்போது எனது சொந்த ஊரின் நிலம், வாழ்வுச்சூழல் நினைவுக்கு வரும். ஞானகூத்தனின் கவிதையை படிக்கும்போது நான் மலையாள கவிஞனை வாசிப்பதுபோலவே தோன்றும். 
 
கலாப்ரியா கவிதையில் ‘ஒரு ஜோதிடன் இருப்பான். வழியில்போகும் சிறுவனை அழைத்து காய வைத்திருக்கும் பொருட்களை பார்த்துகொள்ளச் சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்குள் சென்று அவன் மனைவி குளிப்பதை ஒளிந்திருந்து பார்ப்பான். இது போன்ற நபர்களை எனது சொந்த ஊரில் நான் பார்த்திருக்கிறேன். இந்த அன்றாடத் தன்மையை நான் மலையாளத்துக்குக் கொண்டு செல்ல விரும்புகிறேன்.

கவிதைக்கு தனிப்பொருள் தேவையில்லை, எதையும் கவிதையாக்கலாம் என்பதை மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் உணர்த்துகின்றன.  ‘சாரதா’ என்ற பெயரை மட்டும் வைத்து ஒரு கவிதை எழுதியிருப்பார் மனுஷ்யபுத்திரன். அது என்னை மிகவும் ஈர்த்தது.

பயணத்தின்போது, தண்ணீர் பாட்டிலை வாங்கும்போதெல்லாம் தேவதேவன் கவிதைதான் நினைவுக்கு வரும்.  ‘பாலைவனத்தில் பயணம் செய்பவர்களுக்கு தன் கையில் இருக்கும் நீர்க்கலமே சோலை’ என்று எழுதியிருப்பார். அதுபோல் ச. துரையின் கவிதையில் வரும் கூர்கா-வை பற்றிய கவிதை எனது சொந்த ஊரில் உள்ள கூர்காவை நினைவுப்படுத்தியது.

 
சில மாதங்களுக்கு முன் கவிஞர் சுகுமாரனிடம் தொலைபேசியில் பேசியபோது, இளம் கவிஞர்கள் பற்றி உரையாடினோம், அப்போது ச. துரையின் கவிதைகள் பற்றி அவர்  பேசினார்.
 
இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன் தற்செயலாக ஜெயமோகன் தொலைபேசியில் அழைத்து இந்த நிகழ்வுக்கு வருமாறு அழைத்தார்.
 
மலையாள மொழியின் பழைய கவிஞர்கள் அதாவது சங்கம்புழா போன்ற கவிஞர்கள் இப்போது இருக்கும் மலையாள கவிதைகளை படித்தால், அவர்கள் இது கவிதையா ? என்று கேட்பார்கள். அப்படி ஒரு மாற்றம்  மலையாள கவிதை மொழி நடையில் ஏற்பட்டுள்ளது. அதுபோல் ஒரு மாற்றம் தமிழ் கவிதையிலும் நிகழ்ந்திருக்கிறது. படிமத்தின்(கவிதையைக் காட்சியாகத் தோன்றச் செய்வது படிமம்)பயன்பாடு முற்றிலுமாக தமிழ் கவிதையில் குறைந்துள்ளது என்று நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.
 
இதைத்தொடர்ந்து பேசிய தேவதேவன், “ நான் முதலில் எழுதிய 180 கவிதைகளை இரு தொகுப்புகளாக வெளியிட முயற்சித்தபோது, பெரிய கவிஞர்களின் முன்னுரை தேவைப்பட்டது. ஆனால் அது கிடைப்பதற்கு 4 ஆண்டுகள் ஆனது. ஆனால் தற்போது அப்படியில்லை. அதனால் காலம் மாறிவிட்டது என்று சொல்ல முடியாது. சிலருக்கு சில சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

ச. துரையின் மத்தி தொகுப்பில்  உள்ள வெள்ளரிப்பிஞ்சு, சப்தங்கள் போன்ற தலைப்புகளில் அவர் எழுதிய கவிதைகள் அதிக நுட்பமானதாக இருக்கிறது. அந்த நுட்பங்கள் அவர் அனுபவத்தின் ஆழத்தை காட்டுகிறது.

ஒரு அனுபவம் கவிதையாவதற்கு கவிஞரின் ஆளுமை மிக முக்கியம். உதாரணமாக நானும் எனது நண்பரும் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தோம். அதே இடத்தில் பல பெண்களும் , ஆண்களும் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.  அதில் உடல் செழுமை கொண்ட பெண் ஒருவர்,பின்புறமாகக் கயிறு வைத்து கட்டியதுபோன்ற  ஆடை அணிந்திருந்தார். அனைவரின் கவனமும் அங்கு சென்றுவிட்டுத் திரும்பி வந்தது. சிறிது தூரம் சென்றவுடன் நான் நண்பரிடம் கேட்டேன் ’ நீங்க அந்தப் பெண்ணை பார்த்தீர்களா?  அவர் ஆம் என்றார். என்ன நினைத்தீர்கள் என்று கேட்டேன் ஒன்றுமில்லை என்றார். இங்கே அனுபவம் மட்டும் கிடைத்திருக்கிறது.

இந்த அனுபவத்தை கவிதையாக  ஒருவர் எழுதியிருக்கிறார்.  பெண்ணின் பின்புறத்தை ஒரு திறந்த வெளி என்று நினைத்த பறவை அவரை உற்று நோக்கியது.  பின்புற ஆடையில் இருக்கும்  கயிறு முடிச்சுகளை பார்த்தபோது, அங்கே மனிதன் ஒருவன் ‘கால் மேல் கால் போட்டு’ அமர்ந்திருப்பதுபோல தோன்றியது.  ப்பூ இவ்வளவுதானா என்று சொல்லிவிட்டு அந்த குருவி சென்றுவிட்டது எனச் செல்கிறது அந்த கவிதை. இதுதான் ஒரு அனுபவம் கவிதையாவதற்கு ஓர் உதாரணம்,” என்றார் தேவதேவன்.

இதைத்தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகன் பேசியதாவது: ‘’ திருமணப் பந்தியில் அழகிய பெண்கள் சாப்பிடுவதைவிட, குழந்தைகள் சாப்பிடுவது மிக அழகாக இருக்கும். அதுபோலத்தான் இலக்கியக்கூட்டத்தில் கவிஞர்களின் இருப்பும். கவிதையில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு மாற்றங்கள் நிகழ்ந்து வந்தது. தமிழின் புதிய கவிதைக்கும்  பழைய கவிதைக்கு உள்ள வேறுபாட்டைப் பற்றி தமிழ் ஆசிரியர்களிடம்  கேட்டால் அவர்களுக்கு பதில் தெரியாமல் இருக்கலாம்.
 
ஆனால் பழைய கவிஞர்கள் இதற்கு பதில் சொல்வார்கள். அதாவது எதையும் கவிதையாக்கலாம் என்று இருந்த நிலையில் ஒரு மாற்றம் வருகிறது. கவிதையில் கவிதை மட்டும்தான் இருக்க வேண்டும். அப்போது எது கவிதை என்ற கேள்வி எழுந்தது. வெறும் வருணனைகள்தான் கவிதை என்று கூறப்பட்டது

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அறிஞர் பேராசிரியர் ஜேசுதாஸிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர்  ஒளவை எழுதிய ‘ ஈதல் அறம் ஈட்டல் பொருள் இன்பம் , வீடு ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு- என்கிற  கவிதையைப் படித்து காண்பித்தார். பின்பு இதுதான் தலைசிறந்த கவிதை என்று கூறினார். பேராசிரியரோ இது கவிதையல்ல; ஒரு சூத்திரம், மோட்டார் மெக்கானிஸ விளக்கக் குறிப்பு போல்தான்( motor user manual) இருக்கிறது என்றிருக்கிறார். அவர் புண்பட்டு விட்டார். பேராசிரியருடான உறவே துண்டிக்கப்பட்டது.

சக்கரியாவின் ஒரு கவிதை இருக்கிறது. கிளியால் அதன் கூண்டைவிட்டு வெளியே செல்ல முடியவில்லை. காளிதாசன் காலம் முதல் கிளியின் கூண்டு பற்றிய வருணனைகள் இருக்கின்றன. இதனால் கிளியால் இந்த வருணனைகளைத் தாண்டி கூண்டைவிட்டு வெளியில் வர முடியவில்லை. பெண்கள் என்ன சுதந்திரம் அடைகிறார்களா? 2000 ஆண்டுகள் அவர்களை தொடர்ந்து வர்ணித்து இருக்கிறோம். அந்த வர்ணனைகள் இல்லை என்றால் என்ன ஆகும்! எங்கே வர்ணனை என்று கேட்டு மீண்டும் அதே கூண்டுக்குள் பெண்கள் வந்துவிடுவார்கள்.
 
இதைத்தொடர்ந்து கவிதையில்  படிமத்தின் பயன்பாடு தொடங்கியது. கவிதையில் ஒரு பகுதியை வாசகனின் கற்பனைக்கு விட்டுவிடுவதுதான் படிமத்தின் செயல்.  ஒரு கட்டத்தில் கவிஞர்களுக்கு எல்லாம் படிம வெறி பிடித்துவிட்டதுபோல் நிலை ஏற்பட்டது. படிம தொழிற்சாலை வைத்து நடத்துவதுபோல கவிதையில் அதிக படிமங்கள் பயன்படுத்தப்பட்டன.
 
இதைத்தொடர்ந்து படிமங்கள் குறைந்து நுண்சித்தரிப்புகளுக்குள் கவிதையின் வளர்ச்சி சென்றது.  உள் அர்த்தங்களும், உவமைகளையும் இல்லாமல் கவிதைகள் உருவாகத்தொடங்கின. தற்போது முகப்புத்தகத்தில் எழுதுபவர்கள் இந்த நுண்சித்தரிப்புகளை வைத்து எழுதுகிறார்கள். தற்போதைய காலத்தில் எந்த கவிதை வரியும் 15 நிமிடங்களுக்கு மேல் நினைவில் இருப்பதில்லை.கவிஞரின் மிகப்பெரிய சவாலே, வாசகன் மனதில் நிலைத்திருப்பதுதான்.

ச. துரையின் கவிதைகளில் மீண்டும் படிமத்தின் அழகியலை பார்க்க முடியும். சிறுநாட்கள் ஒதுக்கி வைத்த படிமத்தின் பயன்பாட்டை மீண்டும் தன் கவிதை மூலம் தொடக்கி வைத்துள்ளார் ச. துரை” என்றார் ஜெயமோகன். முன்னதாக அருணாசலம் மகாராஜன் ச.துரையின் கவிதைகளைப் பற்றி விரிவாக உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து பேசிய ச.துரை, விருது வழங்கிய எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
 
-வாசுகி

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...