அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   05 , 2020  17:32:22 IST

 

முந்தைய இரு பகுதிகளிலும் இந்தக் குறிப்புகளின் மூலம் உணர்ச்சிவசப்பட்டுக் கதையின் மையக் கருத்தையோ  சொல்ல வந்த உள்ளடக்கத்தையோ நான் வெளிப்படுத்த முடியாமல் போய் இருக்கலாம் .  என் மனதில்  மலர்ந்த அனுபவத்தை எனக்கு விளக்கிச் சொல்லத் தெரியாமல் போய்  இருக்கலாம். மனம் பேதலிக்கும் பரவச நிலைதான் அதன் காரணமாக இருக்கக்கூடும்.

ஆனால் தினமும் ஒரு பித்துப்பிடித்த மனநிலையில்  ஜெயமோகனின் சிறுகதைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். அவர் எவ்வளவு வேகமாக ஓடினாலும் பின்தொடர்வது என்று முடிவு செய்திருந்தேன்.ஆனால் பொசுக்கென நிறுத்திவிட்ட உணர்வு. மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

 

நிறைவு என்ற பகுதியை பார்த்தவுடன் மனம் சோர்ந்து உற்சாகம் வடிந்து விட்டது என்பது உண்மை.

இருந்தாலும் இந்தக் கோடையை வாடையாக மாற்றிய ஜெயமோகனின் கதைகளுக்கு நன்றி.

மீண்டும் தொடர்வா என்பது எங்களுக்குக் தெரியும்.எழுதாமல் அவரால் இருக்க முடியாது.

 

சோழிகளை குவளையில் போட்டு குலுக்கி குப்புறக் கவிழ்த்து மல்லாந்து கிடக்கும் சோழிகள் எத்தனை? கவிழ்ந்து கிடக்கும் சோழிகள் எத்தனை? கோடு போட்டவை எத்தனை ? புள்ளி விழுந்தவை எத்தனை? என்று எண்ணுவது போல,இந்தக்கதைகளையும் மாற்றி மாற்றி நினைவுகளில் புரட்டிக் கலந்து உதிர விட்டு ஒப்பிட்டு மகிழ்ச்சி அடைகிறது மனம்.

 

கதைகளில் வரும் பாத்திரங்களை,கதைமாந்தர்களை ஒப்பிட்டுப்  பார்ப்பதை அனிச்சையாக மனம் அசைபோட்டுக் கொண்டே இருக்கிறது. இதைத் தவிர்க்க முடியவில்லை ஏனென்றால்  மனதிற்கும் வேறு வேலை இல்லை.

 

 

பிரெஞ்சுக்காரி  பாலியல் பட அழகி எல்லாவின்  கதைதான்  யாதேவி, சர்வ பூதேஷு, சக்தி ரூபேண என்று மூன்று பாகங்களாக வந்திருக்கின்றன.

 

’வான் நெசவி’ன் பிளாஷ்பேக் தான் ’வான் கீழ்’.அல்லது ’வான் கீழ்’ கதையின் தொடர்ச்சிதான் ’வான்நெசவு’.

 

போழ்வு கதையின் தொடர்ச்சி தான் ’இணைவு’.’ஐந்து நெருப்பி’ன் கதை மேலும் தொடரும் சாத்தியமுள்ளது.

கேரளா திருவிதாங்கூர் பின்னணியில் ஆயிரம் ஊற்றுக்கள், ஆட்டக் கதை உள்ளன.

 

சுற்றுகள் ,குருவி ,வானில் அலைகின்ற குரல்கள், உலகெலாம் நான்கும் தொலைத் தொடர்புப் பணிகள் பற்றிய பின்னணியில் அமைந்த கதைகள் என்று புரிந்து கொள்ள முடியும். ’லூப்’ பைக்கூட இந்த வரிசையில் சேர்க்க முடியும்.

 

ஜெயமோகனின்   கதைகளில் விலங்குகளுக்கும்  மனிதர்களுக்குமான  தொடர்புகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. யானை தொடர்பான கதைகளாக வரும்

’ஆனையில்லா’ கதையின்  இன்னொரு முகமாக ’பாப்பாவின் சொந்த யானை’யைக் கூறலாம்.’துளி’யும் ’ராஜ’னும் இந்த வரிசையில் அடங்குவன.

 

துப்பறியும் தன்மைகொண்ட வகையில் பத்துலட்சம் காலடிகள், வேரில் திகழ்வது ,கைமுக்கு, போன்ற கதைகளைக் கூறலாம். இவை குற்றப்பின்னணி  கொண்டதாகவும் திகழ்வன.

 

அனைத்து கதைகளின் மையமும் அகம் நோக்கிய நகர்வாக இருப்பதை உணர முடிந்தது. நிலமும் சூழலும் மன உணர்வுக்குத் துணைக்கருவிகள் ஆகியுள்ளன .’எந்த இலக்கியமும் சொல்வதல்ல ,பேசுவதல்ல, கூறுவதல்ல, வாழ்ந்து காட்டுதல் வாசகனை வாழ்ந்து பார்க்கச் செய்தல் ’என்கிற வகையில் ஜெயமோகனின் படைப்புகள் இருக்கின்றன.இத்தனை நாள்களும் வாசிக்கவில்லை; வாழ்ந்து பார்த்தோம்.

 

இக்கதைகளைத்தொடர்ந்து அவரது பிற தொகுப்பிலுள்ள சிறுகதைகளையும்  வாசித்துவிட உந்தப்பட்டு பெரும்பாலும் வாசித்து விட்டேன்.

 

கலையின் உன்னதக் கணத்தில் கலைஞன் ஒருவன் விஸ்வரூபம் எடுக்கிறான். அப்போது அவனை இறைவனாகக் கூட கூப்பிடத் தோன்றும் என்பதை உணர முடிந்தது. கலைகளை ஆராதிக்கும் ,உயர்த்திப் பிடிக்கும் ஜெயமோகனின் மனம் பல கதைகளின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. பல கலை மாந்தர்கள் இருப்பதை  கதைகளின் மூலம் கண்டு கொண்டேன்.

 

பகவதியின் தோற்றத்தை சுவரில் வரையும்’ இறைவன்’ மாணிக்கம் ஆசாரியாகட்டும் ,மூன்று வேடங்கள் புனைந்து நாடகத்தில் நடிக்கும்  ’தேவி’ ஸ்ரீதேவியாகட்டும் ,நாடகத்தைத் தொழிலாகக் கொண்டு திரியும் ’வனவாசம்’ அர்ஜுன் பார்ட் சுப்பையா, அல்லி பார்ட் குமரேசனாகட்டும், கேரளத்து சமையலில் கொடிகட்டிப் பறக்கும் ’சூழ்திரு’ மாணிக்கம் நாயராகட்டும், தொலைதொடர்பு துறையில் சுற்றுகளில்  கைதேர்ந்த ’குருவி ’மாடன் பிள்ளையாகட்டும், துப்பறிவதில் குருவை மிஞ்சிய  ’வேரில் திகழ்வது’ ரொசாரியோ சீடனாகட்டும்,சாராயம் காய்ச்சுவதில் செய்தொழில் நேர்த்தி கொண்ட’ மாயப்பொன் ’நேசையனாகட்டும்,நகை வேலையில் கரைகண்ட நல்ல நாதஸ்வர ரசிகராக வாழ்ந்த , ’தேனீ ’சண்முகமணியின் தந்தையாகட்டும், மனக்கண்முன் விரியும் உருவங்களை சிற்பமாக வடிக்கும் வாய் பேச முடியாத ’ஆகாயம் ’குமாரனாகட்டும் அனைவரிடமும் இந்தத் தன்மையை காண்கின்றேன்.

 

இந்த வரிசையில் பல கதைகள் பல பாத்திரங்கள் மூலம் அறத்தின் குரலை ஆவேசமான குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.அந்த வகையில் ’பலிக்கல்’ சங்கரன் போற்றி ,’போழ்வு’  மாவிங்கல் கிருஷ்ணபிள்ளை, ’இணைவு’ பத்மநாபன் தம்பி, ’ஐந்து நெருப்பு’ முத்து,’இறைவன்’ இசக்கி அம்மை, ’மாயப்பொன்’ நேசையன்,  ’பிறசண்டு’ சிரோமணி  என்று பலர் மூலம் விரிந்து எழுந்து ’ராஜன்’ பூதத்தான் வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 

ஆன்ம உணர்வுகளின் ஈரத்தில் பயணம் செய்யும்  அனுபவங்களாக   கூடு, கரு, போன்ற கதைகளைச் சொல்லலாம்.

 

யட்சிகளின் ஆதிக்கம் சில கதைகளில் உண்டு.நற்றுணை,படுகை, சிவமயம் என்று தொடர்கிறது.கதை நிகழ்விடங்கள் தமிழ்நாடு குமரிப் பகுதி, கேரளா, காசி, திபெத் பீடபூமி, பசிபிக்கடலிலுள்ள டான்னா தீவு என்று புறப்பட்டு ஆப்பிரிக்கா வரை செல்கிறது.பெரும்பாலான கதைகள் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியில் நிகழ்வன.

 

கதைகளிடையே ஜெயமோகன் கூறுகின்ற தத்துவ விசாரங்கள், ஞானமரபு கருத்துக்கள், சித்தாந்த வளைவுகள், திரிபுகள் ,எழுச்சிகள் போன்றவை ரசிக்கத் தக்கவை. அவை ஞானத் துளிகளாக ஆங்காங்கே தெறிக்கின்றன.

 

பெண் பாத்திரங்கள்!

 

ஒவ்வொரு பெண் பாத்திரமும் தங்களது வாழ்க்கையில் நல்லதோ கெட்டதோ  உச்சம் தொட்டவர்களாக இருக்கிறார்கள்.

ஸர்வபூதேஷு கதையில் வரும் பிரெஞ்சுக்காரி பாலியல் பட நடிகை எல்லா ஆன்சல்,சர்க்கஸ் காரி ’வேட்டு’ ஜானகி ,சரஸ்வதி பலே கைகாரிகள். சைக்கிள் ரேஸ் ரெக்கார்ட் டான்ஸ் கூத்துக் காரி ’லீலை’ தாட்சாயணி தன் மனதில் பட்டதை செய்வதில் துணிச்சல் காரி நிமிடத்துக்குள் நிறம் மாறுபவள் ,’பால்’மணக்கப் பேசும் ’கோட்டை’ அணஞ்சியம்மை கிழவி,ஒரு டைரி எழுதிவிட்டு அதன் பக்கங்களில் வாழ்க்கையைத் தொலைக்கும் ’தேவகிச் சித்தியின் டைரி’ தேவகி,

தற்காலத்தில் இருந்து கற்காலத்துக்குச் செல்ல விரும்பும் தொன்மப் பயணி ’அனலுக்கு மேல்’ டச்சுக்காரி ஈவா பேக்கர்,’தேவதை ’பெண் பத்திரிக்கையாளர் மேரி பென்சாம் ,’கண்ணாடிக்கு அப்பால்’ கதையில் மாயாவி போல பயமுறுத்தும் சிசிலி,வழியில் கண்ணில் படுபவர் பற்றியெல்லாம்  செய்தி சொல்லும் ’நூஸ்’ நாணி ஆசாரிச்சிக்கிழவி,ஆறு பிள்ளைகளைப் பறிகொடுத்து ஆவேசமாய் எழுகிற  ’ஆயிரம் ஊற்றுக்கள்’ உமையம்மை ராணி,

தன்னுடைய கல்வி வேட்கையை ரகசிய யக்ஷியாக வைத்துக்கொண்டு படித்து மேலே உயர்ந்த ’நற்றுணை’ அம்மிணித் தங்கச்சி,எத்தனை வேடங்கள் என்றாலும் ஏற்று துவம்சம் செய்யும் நாடக நடிகை’ தேவி’ ஸ்ரீதேவி ,பகவதி ஓவியத்தை வரைந்து தரும் மாணிக்கம் ஆசாரியை முதற் கடவுளாக பார்க்கும் ’இறைவன்’ இசக்கியம்மா, குழந்தை மனம் மாறாத ’ஆயிரங்கால் மண்டபம்’ சிறுமி செண்பகக் குழல்வாய்மொழி, அறிவாளியாகி உயரே பறக்கும் பெண் விஞ்ஞானி ’என் பெயர்’ பத்மாவதி, அமெரிக்கா செல்ல ஆங்கிலம் கற்கும் கிழவி ’பெரியம்மாவின் சொற்கள்’ பெரியம்மா,யாருடைய பாவமும் நமக்கு வேண்டாம் என்று கூறும் ’நிலம் ’ராமலட்சுமி இப்படி எத்தனை பெண்கள்!  எத்தனை குணச்சித்திரங்கள் வழியே மனதில் வந்து அலையடிக்கிறார்கள்.

 

திருடர்கள் வருகிறார்கள் !

 

இந்தக் கதை வரிசையில் நிறைய திருடர்கள் வருகிறார்கள் சின்னஞ்சிறிய திருடனிலிருந்து கொள்ளைக்காரன் வரை.

 

‘எழுகதிர்’ கதையில் வரும் கோயில் கொள்ளையன் தொடங்கி ’வருக்கை’யில் வரும் உள்ளூர் திருடன் தங்கன்,’முத்தங்கள்’ ஆடு திருடன் மூக்கன்,வெளியூர் சென்று  திருடும் ’கரவு ’கதையில் வரும் தங்கன், செல்லன், கண்ணெதிரே வீடு புகுந்து கொள்ளையடித்த ’பிறசண்டு’ இன்னாசி,சென்னை வீடுகளில் திட்டமிட்டு கொள்ளையடிக்கும் படித்த திருடன் ’கைமுக்கு’ மகேஷ் என்று காலத்துக்கேற்ற எத்தனை வித திருடர்கள்.

 

விந்தை உணர்வு தரும் விலங்குகள்!

 

இந்தக் கதைகளில் எத்தனை விலங்குகள்?

’விலங்கு’ கதையில் வரும் அமானுஷ்ய செம்மறியாடு,’மாயப் பொன்’ புலி, ’இடம் ’ குரங்கு , ஆனையில்லா, துளி,பாப்பாவின் யானை, ராஜன்  கதைகளில்  வரும் யானை, ’மதுரம்’ எருமை மாடு,

’கரடி’யில் வரும் சர்க்கஸ் கரடி ஜாம்பன், ’கிடா’வில் வரும் பலி ஆட்டுக்கடா, ’பூனை’யில் புலியாக வரும் பூனை , ’முத்தங்க’ளில் துரத்தும் நாய்கள்,

’துளி’யில் வரும் கருப்பன் நாய், ’பெரியம்மாவின் சொற்கள்’ கதையில் வரும் நாய் வெட்டுமணி,

’வெண்கட’லில் வரும் எருமைகள் காளி,கோணக்கொம்பி என எத்தனை விலங்குகள்.!

 

’லூப்’ மலைப்பாம்பு. ’ஆடகம்’ நாகப்பாம்பு, ’நச்சரவு’, ’நாகம்’, ’கயிற்றரவு ’என வரும் நல்லபாம்பு,

என எத்தனைப் பாம்புகள்!

 

’குருவி’ யில் ஒயரில்கூடு கட்டும் குருவி, ’காக்காய்ப் பொன்’னில் வரும்  துறவியின் துறவறத்தை கேள்விக்குள்ளாக்கும் காகம், ’நிழல் காக’த்தில் வரும் விடாது துரத்தும் காகம் , ’விசும்பு ’கதையில் வரும் வெள்ளை கறுப்பு ஸ்டார்க்குகள், நீலவால்டால்கள் , மங்கோலிய சேண்ட் ப்ளோவர்கள் என எத்தனைப் பறவைகள்!

 

சில கதைகள் நுண்ணிய வர்ணிப்பால் மனம் கவருகின்றன. அனலுக்கு மேல், சூழ்திரு ,பெயர் நூறான்,மாயப்பொன், முது நாவல்,படுகை, பாடலிபுத்திரம், மன்மதன்,போன்றவற்றை நான் ரசித்ததாகச் சொல்வேன்.

 

ஜெயமோகன்  வைத்திருக்கும் தலைப்பு பொருண்மை மிக்கதாக இருக்கும்.சில ,கதையைச் சொல்லும் .சில கதையை வெளிப்படச் சொல்லாது .சில பூடகமாக இருக்கும் .சில மௌனமாக இருக்கும்.சில அழகு காட்டும்.சில செறிவு மறைத்திருக்கும்.

எனக்கு பிடித்த தலைப்புகள் பொலிவதும் கலைவதும், துளி, வேரில் திகழ்வது ,சூழ்திரு, பலிக்கல், நிழல்காகம் ,ஆகாயம், கைதிகள் ,ஒரு கணத்துக்கு அப்பால், நிலம், குருதி, படுகை போன்றவை சில.

 

கதைகளில் எத்தனை எத்தனை உணர்ச்சிகள் !

 

அன்பு , பாசம்,காதல், வன்மம், காமம், கழிவிரக்கம்,குற்ற உணர்ச்சி, வீரம், தாய்மை, புத்திர சோகம், பரிவு, அச்சம், குழப்பம், விரக்தி, செருக்கு, ஆதிக்கம், அகங்காரம், பெருமை, எழுச்சி, கள்ளம், நகைச்சுவை,இழிவு,மன்னிப்பு என்று எத்தனை உணர்ச்சிகள், உணர்வுகள் வெளிப்பட்டுள்ளன!

 

கதையில் வரும் நான் ரசித்த உவமைகள் ,   வரிகள் நிறைய உண்டு. சில ஒரு சோற்றுப் பதங்கள்.

 

’வான் கீழ்’ கதையில் வரும்  ராஜம்மை பற்றிக்கூறும் போது  ஜெயமோகன் எழுதியுள்ள  ’அவள் நகங்களும் சற்றே கருமை கலந்த செம்மை. வாழைப்பூ நிறம்போல  என்பதை  ரசித்தேன்.  கதையில் இறுதிவரியாக வரும் .

அவளை அவன் முத்தமிட்டபோது உழுதுபோட்ட புதுமண்ணின் மணம்..’என்பதை எல்லாம் ரசித்தேன்.

 

’முதல் ஆறு ’கதையில் வரும்

’தக்கலை பஸ் எப்போதும் கூட்டமாகவே இருக்கும். ஒரு மாணவர் கூட்டத்தை அப்படியே இரண்டு கைகளாலும் நெல்லை எடுப்பதுபோல அள்ளி எடுத்துக்கொண்டு வரும்’  என்பதையும்  ரசித்தேன்.

  

’நிழல்காகம் ’ கதையில் வரும் உவமைகள் ,  உதாரணங்கள்,

 

’பழுதடைந்த மடாலயம். இருண்டு புழுதிபடிந்து பின்பக்கம் சற்று சரிந்து ஏதோ பூச்சியின் கழற்றப்பட்ட குருதிச்செந்நிறமான ஓடு போல ரசிப்புக்குரியவை.

 

’வெண்கடல் ’கதையில் வரும்  ’சுரைக்காய்க்குடுக்கை போலக் கன்னங்கரிய பளபளப்புள்ள சருமம். சுருண்ட கூந்தல் தார் போல பளபளப்பாக பெஞ்சிலிருந்து தரைநோக்கி வழிந்திருந்தது.

 

உருண்டையான முகம். மெல்லிய புருவங்களுக்குக் கீழே பெரிய கண்கள். சிப்பிபோல இமைகள் மூடியிருக்க உள்ளே விழிகள் நிலையில்லாமல் அசைவது தெரிந்தது.

 

தைலத்தில வாசன வாறது பெண்ணு சமையுறதுக்குச் சமானமாக்கும்’ ரசித்தேன்..

 

மாடு காளியின் தோற்றம் பற்றி, ’பாறைக்குழியில் தேங்கிய மழைநீர் போல இருந்தன அவள் கண்கள். உப்புத்தாள்போன்ற நாக்கு.

 அவளுடைய பெரிய உடல் நீர் நலுங்காமல் காற்றில் அலைவருவதுபோல வந்தது. கரையில் ஏறிப் பெருமூச்சுடன் கைக்குழந்தை கைநீட்டி வாங்குவதுபோல கனத்த நாக்கை நீட்டித் தழையை வாங்கிச் சுருட்டி வாய்க்குள்ளே கொண்டுசென்றாள் என்பதையும்

 நான் அவள் காம்புகளைப்பிடித்து அட்டைகளை எடுத்தபோது ஒரு காம்பிலிருந்து பால் ஊறி சொட்ட ஆரம்பித்தது. இலைக்கள்ளிச்செடியின் தண்டை முறித்ததுபோல ’ என்பதை எல்லாம் ரசித்தேன்.

 

’ வெறும் முள் ’ கதையில் வரும்    அந்த நதிக்கு மேல் செஸபான் மரங்களைப் பார்த்தால் பாலைநிலத்தில் விழுந்து கிடக்கும் ஒரு பச்சைத்துவாலை போல தெரியும்  என்பதையும்  ரசித்தேன்.

 

’மதுரம் ’    கதையில் வரும்  சற்றுநேரத்தில் மெல்லிய படலத்தால் சுற்றப்பட்ட வெள்ளைநிறமான கன்றுக்குட்டி உள்ளிருந்து சலவைக்காரியின் மூட்டை போலப் பிதுங்கி வெளிவந்தது.  வாழைப்பூமடல் போல நாக்கு ,என்பதை ரசித்தேன்.

நாயின் குரைப்புக்கு,  பெரிய செம்புக்குட்டுவத்தில் செம்பு அகப்பையால் அடிப்பதுபோன்ற ஒலி என்று நாயின் குரைப்பைச்சொல்லியிருந்ததை எல்லாம் ரசித்தேன்.

 

 

’முதுநாவல்’  கதையில் வரும்  ’ காதரின் கைகள் மிகநீளமானவை, . விரல்கள் ஒவ்வொன்றும் மூங்கில்கள் போல. தலைப்பாகை முகத்திற்குமேல் ஒரு பெரிய துணிப்பறவை அமர்ந்திருப்பதுபோல தோன்றும்.

முழங்கால்வரை நீண்டு கிடக்கும் மிகநீளமான அங்கிபோன்ற சட்டை.

காதர் மிகக்குறைவாகவே பேசினான்.  அவன் குரல் உறுமியை மீட்டியதுபோல ஆழமான கார்வை கொண்டிருந்தது.  ஒருகாலை மடித்துவைத்து தலையை ஓணான்போல சற்றே நீட்டிஅமர்ந்திருந்தான்.

 

அவன் கையில்  இருக்கும் சுருட்டு  பித்தளைப் பூண்போட்ட இரும்புலக்கை போலத் தெரியும்’  என்பதை எல்லாம் ரசித்தேன்.

 

’என்பெயர்’ கதை நாயகி பத்மாவதி கூறும்

’திருவிழாக் கூட்டத்தில் யானை போன வழியே பின்தொடர்ந்து போவதுபோல எளிதாக நான் முன்னேறினேன்’  என்பதையும்  ரசித்தேன்.

 

’பெயர் நூறான் ’கதையில் வரும்

புல்லரித்து கழுத்தில் மயிர்ப்புள்ளிகள்  தெரிந்தன.

கற்பனைக்கு அளவே இல்லை அது நுரைமாதிரி அப்படியே வளர்ந்திரும். என்பதை எல்லாம்  ரசித்தேன்.

 

’ஆட்டக் கதையில்’  ஒரு நீண்ட பேட்டியை உயிரோடு இருப்பவர்களை போஸ்ட்மார்ட்டம் செய்யும் வழக்கம் இது ’என்பார். அதை  ரசித்தேன்

 

’ ஏகம் ’ கதையில் வரும்

குழல் குழைந்தது. மெல்லிய புகைபோல சுருளவிழ்ந்தது. பட்டுத்திரைச்சீலை போல குழைந்து நெளிந்தது.பொன்னிற நாகம். மயிலின் திரும்பும் கழுத்து. மெல்ல எழும் நாரையின் சிறகுவிரிப்பு. அசையாச்சிறகுகளுடன் வட்டமிடும் பருந்து. அதன் நிழல். தொலைவில் ஒளிர்ந்தபடிச் செல்லும் சிற்றோடை ’ என்ற வரிகள் அருமை.

 

’ நாகம் ’ கதையில் வரும்    ’ கதவின்  இடுக்குகள் வழியாக குளிர்க் காற்று நாலைந்து இடங்களில் பீறிட்டது. குளிர்ந்த நீர்த் தாரைகளின் தொடுகை போலிருந்தன ’ என்பதை எல்லாம்  ரசித்தேன்

 

’ படுகை ’   கதையில் வரும்

’உலகுடன் பிணைக்கும் நிஜம் போல அவர் குரல் இருட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும்.,

மூளியலங்காரி கண்ணீர் போல முப்பது நாளும் மழை,மூத்தபட்டன் பூணூல் போல ஒரு ஒற்றையடிப்பாதை,

எங்கள் இளம் பருவத்திலேயே வள்ளியாறு ஒரு நீல ரிப்பன் போல ஆகிவிட்டிருந்தது,

ஒரு செயற்கைத் தோட்டம். காட்டுக்குள் வழி தவறி வந்த நகரத்துக் குழந்தை போல குரோட்டன்ஸ் சிவப்புடன் நின்று கொண்டிருந்தது.’என்பதை எல்லாம்  ரசித்தேன்

 

 பெரியம்மாவின் சொற்கள் ’  கதையில் வரும்

"அதை எப்படிச் சொல்வது? chastity என்றேன். இன்னும் கொஞ்சம் நகர்ந்து piety என்றேன். அர்த்தம் சரியாக உட்காரவில்லை. என்பதை அவன் சொல்ல,பெரியம்மாவோ யுத்தம்னா அப்டித்தான். கையூக்குள்ளவன் காரியக்காரன். நாக்குள்ளவன் நாடுபிடிப்பான்.” என்பாள். ரசித்தேன்

 

’ஏறும் இறையும்’ கதையில் வரும்

’ஆரபி, தேவகாந்தாரம் ரெண்டும் பாடினா. அதுவும் சேந்தாப்ல…”

 

“ரெட்டைக் குழந்தகளை ஒரே சமயம் தூக்கி ரெண்டு மார்பிலயும் பால் குடுக்கிற மாதிரின்னு தோணித்து. என்கிற வரிகள் ரசித்தேன்.

 

இவை கிளிச்சீட்டாய் நான் எடுத்த ஒரு துளி மாதிரிகள்.எடுக்கவும் சொல்லவும் ஏராளம் உள்ளன.

 

நிறைவாக ஒன்று சொல்வேன். ஜெயமோகனின்  சிறுகதைகள் வாசித்தல் அனுபவம் என்பது அவர்  எங்களை எல்லாம் பறக்கும் மாயக் கம்பளத்தில் அமரவைத்து ஆகாய வெளியில் மிதக்கவிட்டு அலையடித்து பறக்கச் செய்து, திடீரென கீழே இறக்கி ,கடலுக்கு மேலே சுழல விட்டு ,மலை முகட்டுக்கு அருகில் மோதுவது போல் சென்று, மழையில் நனைய வைத்து, வெயிலில் அலைய விட்டு,குகைகளுக்குள் நுழைய விட்டு,பனி மூட்டத்தில் குளிர வைத்து,மேகத்தைத் தீண்டவிட்டு, திடீரென்ற பள்ளத்தாக்கில் இறக்கி அதிரவைத்து  , மீண்டும் மேலேற்றி புல்வெளியில் அலையவிட்டு , தரையில் கொண்டு வந்து இறக்கிய அனுபவத்தை தந்தது.

 

ஜெயமோகன்  கதைகள் ஒவ்வொன்றும் தனித்தனி வகைமைக்குள் அடங்குவன .

 

அவை என் போன்ற வாசகர்களுக்கு ஏற்படுத்தியுள்ள எழுச்சிகள், மகிழ்ச்சிகள், நெகிழ்ச்சிகள்,துடிப்புகள், , விரிவுகள், செறிவுகள் பல வகையின.

வாழ்வியல் தளங்களிலும் அழகியல் தளங்களிலும் தத்துவ தளங்களிலும் ஒவ்வொன்றும் காதோரம் வந்து ரகசியக்கிசுகிசுப்பாய் அணுக்கம் கொடுத்தவை.வான விரிவு அளவுக்கு ஞான விரிவு கொடுத்தவை.

பேசிக்கொண்டே இருந்தால் பிதற்றல்கள் ஆகிவிடுகின்றன என் வார்த்தைகள்.

நிறைவாக  சொல்லத் தோன்றுவது இதுதான்  ’மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு கதைதான்’.

69 கதைகளில் ஜெயமோகன்  காட்டிய படைப்பூக்கம், அந்தப் ’பித்திசைவு’ என்னைப் பிரமிக்க வைத்திருக்கிறது. ஜெயமோகன்  கதைகளைப்படித்து முடித்தபின் அவற்றின் விளைவாக ,வாசித்த வாசகனுக்குள்ளும் படைப்பூக்கம் மலர்ந்து கிளர்ந்தெழ வைக்கும்.

ஜெயமோகன்  அவரது சித்தாந்த எல்லைகளை விடுத்தும் கருத்துக்கட்டங்களை விலக்கியும் கூட ரசிக்கத்தக்கவர்.  அவர் மீதுள்ள விமர்சன விலகல்களைத் தாண்டியும் அவர் நல்லதொரு  படைப்பூக்கம் கொண்ட படைப்பாளி என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர்.

 

(முடிந்தது)

 

- அருள்செல்வன், சென்னை 92

 

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...