![]() |
ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2Posted : வெள்ளிக்கிழமை, ஜுன் 05 , 2020 17:15:02 IST
35.பாப்பாவின் சொந்த யானை
இது 'ஆனையில்லா' கதையின் தொடர்ச்சி போலத் தோன்றும்.குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகள் நாடகமாக நடித்துக் காட்டுவது அதில் குழந்தை,தான் ஏற்றுள்ள யானை பாத்திரத்துக்கு மனதளவில் கொடுத்துள்ள குணச்சித்திரத்தை எப்படி வெளிப்படுத்துகிறது என்பது சுவாரஸ்யம். குழந்தைகளின் மன விசித்திரங்களைச் சித்தரிக்கும் கதை .உலகத்தில் உள்ள யானைகள் பொதுவாக இருக்கலாம். ஆனால் இந்த பாப்பாவின் யானை அதன் மன உலகத்தை விரிப்பதாக அவற்றின் தன்மைகள் வேறு என்றும் காட்டும் கதை.
36.வான்நெசவு
தொலைத்தொடர்புக் கோபுரங்கள் அமைக்கும் மனிதர்களின் உணர்வுகள் பற்றிய கதை. கோபுரத்தின் உயர்வு எழுச்சி போலவே அவர்களின் தொழில்சார்ந்த வாழ்க்கை அன்பு ,பாசம், காதல் பற்றிச் சொல்லும் கதை. 38 ஆண்டுகளுக்கு முன் தொலைத்தொடர்பு டவரில் மலர்ந்த காதல் பற்றிய நினைவுகள். இது 'வான்கீழ்' கதையின் இரண்டாம் பாகம் எனலாம்.
37.ஓநாயின் மூக்கு
தவறு செய்த ஒருவனைச் சட்டம் எந்த வகையிலும் மோப்பம் பிடித்துக்கொண்டு வரும். அவனை தேடிக்கொண்டே இருக்கும். ஓநாயின் மூக்கைப் போல மோப்பம் பிடித்துக்கொண்டு வரும் என்று சொல்கிற துப்பறியும் கதை. மர்மக் கொலைகள் பற்றி துப்பறியும் வரலாறு சார்ந்த கதை. தொன்மம், மரபு ,நவீனம் அனைத்தும் சேர்ந்த படைப்பு மட்டுமல்ல அமானுஷ்யமும் கலந்த கதை.
38.மதுரம்
எருமை மாடு என்று நாம் நினைக்கிற ஒரு பிராணியின் மகப்பேறு அனுபவத்தை அணுவணுவாகச் சித்தரிக்கும் கதை.அதன் உளவியல் அதன் விசுவாச அசைவுகள் அனைத்தையும் பற்றிப் பேசுகிறது.விலங்கின் உளவியல் சார்ந்த சித்தரிப்புகள் பிரமாதம்.
39. வனவாசம்
நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசுகிறார்கள். பலநாள்கள் தொடர்பற்று தொழிலில் ஈடுபடாமல் இருப்பது அவர்களுக்கு ஒரு வனவாசம் போலத்தான்.அப்படி ஒரு இடைவெளிக்குப் பிறகு இணைகிற ’அர்ஜுனன் ’ சுப்பையா மற்றும் ’ அல்லி ’ குமரேசன் பாத்திரங்கள் சிறப்பு .அதற்குப் பின் அவர்கள் இணைகிற போது அவர்களுக்குள் தான் எவ்வளவு பகிர்வுகளும் பரவசமும் கனவுகளும்.
40. ஆழி
ப்ரேக் அப் ஆன இரு காதலர்கள் கடைசிச் சந்திப்பாகக் கடற்கரை செல்கிறார்கள். ஆழியின் சுழலில் சிக்கிக் கொள்ளும்போது அவர்களுக்குள் ஏற்படும் மன மாற்றங்கள். கடல் அலையின் சுழலையும் எழுச்சியையும் அற்புதமாக வர்ணிக்கப்பட்டிருக்கும்..
41. மாயப்பொன்
எந்தத் தொழிலும் உளப்பூர்வமான அர்ப்பணிப்போடு செய்யப்படும்போது அது கலையாக மாறுகிறது. அப்படித்தான் மலை, புதர் இடுக்குகளில் மறைந்துகொண்டு சாராயம் காய்ச்சும் இந்த மனிதர்களின் தொழிலும் கலையாக மாறுகிறது. நல்ல தரமான சாராயத்தை மாயப்பொன் போல் அவர்கள் பார்க்கிறார்கள்.சாராயத் தயாரிப்பு முறையும் மறைத்து நிற்கும் மலை காடு சார்ந்த ஒவ்வொரு அசைவையும் பற்றிய சித்தரிப்புகள் நினைத்தாலே இனிப்பவை.
42.உலகெலாம்
உலகெல்லாம் மின் அலைகளும் மின்காந்த அலைகளும் விரவிக்கிடக்கின்றன. இந்த அறிவியல் உண்மையை பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்ட ஒரு மனிதனின் இதயம் உணர்கிறது. அதன் தாக்கத்தை உணர்ந்து அதிரும் அவனது உணர்வுகளைச் சொல்லும் கதை.
43. கைமுக்கு
களவுக் குற்றச்சாட்டை நிரூபிக்க கைமுக்கு என்ற பழக்கம் தெற்கத்தி மண்ணில் இருந்திருக்கிறது. இந்தக்கதையில் வரும் மகேஷ் கல்லூரியில் படிக்கும் மாணவன். வறுமை தந்த தாழ்வுணர்ச்சியால் திருடுகிறான். குற்றவுணர்ச்சி மறைகிறது .அதன் எல்லை வரை தொடுகிறான் அவனைப் பற்றிய கதை இது.சமகால சித்தரிப்பாக மலர்ந்துள்ள யதார்த்த கதை இது.
44. பிடி
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மலரும் கலை உணர்ச்சியை வெளிப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கலா உணர்ச்சி உடையவர்களைத்தான் ராமையா போன்ற கலைஞர்களும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அப்படி இருவர் இணையும் கதைதான் பிடி.நிஜக் கலைஞன் நிஜ ரசிகனை இனம் கண்டுணரும் கதை.
45.முதல் ஆறு
ஒரு பஸ் பயணத்தில் மலர்கின்ற காதல் உணர்வை அழகாகச் சித்தரிக்கும் கதை .இதைப் படிப்பவர்கள் அனைவரும் ஆண்கள் நாயகனாகவும் பெண்கள் நாயகியாகவும் இடம் மாறி அமர்ந்து கொள்வார்கள். கதையுணர்வில் உணர்ந்து நுழைந்து வாலிப உணர்வுகள் விழித்துக்கொண்டு வாழ்ந்து அனுபவிக்க வைக்கும் கதை.
46. மலைகளின் உரையாடல்
ஒரு ஜடப் பொருளாக தோன்றும் மலைகள் தங்களுக்குள்ளே பேசிக் கொள்வது எப்படி?அதை தொலைத் தொடர்புத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் எப்படி உணர்கிறார்கள் ?அதன் மொழியை எப்படி அறிகிறார்கள்? என்பதுதான் கதை மையம்.மாயத்தன்மையும் சூழலியல் சிந்தனையும் புதிர் நிறமும் கொண்ட கதை.
47. இறைவன்
எந்தத் தொழிலிலும் கலைஞனாக உச்சம் கொள்ளும் தருணம் அவன் பூமிக்கு மேலே சில அடிகள் உயரே நிற்கிறான். ஒருவன் தன்னுடைய தூரிகையின் மூலம் வண்ணங்களின் மூலம் ஒரு தேவதையை வீட்டுக்குள் வரவழைக்கும் கதை. பாமரனாகக் தெரியும் மாணிக்கம் ஆசாரி தன் ஓவியத் திறமையால் உச்சத்துக்குப் போகும் காட்சிகள்,சித்தரிப்புகள் பிரமாதம். ஓவியத் திறமையால் இறைவனாக உருவெடுக்கும் மாணிக்கம் ஆச்சாரியின் கலையின் விஸ்வரூபம் தெரிவது உணர்ச்சிகரமான தருணங்கள்.
48. நற்றுணை
ஒரு பெண் தான் அடைய நினைக்கும் இலக்கை அடைவதற்கு அவளுக்குள் குவியும் ஆவேசத்தையும் வேட்கையையும் ஒரு யட்சியாக,தன்னுடைய வேட்கையை ஒரு தேவதையாக தன்னுள் இருந்து வெளிப்படுத்தி ஜெயிக்கும் அம்மணி தங்கச்சி என்ற பெண்ணின் கதை.
49. கரவு
பாம்பின் கால் பாம்பறியும் என்பதாக திருடர்களுக்குள் உள்ள அனுசரணையை எதிர்பாராத திருப்பமாக வெளிப்படுத்தும் கதை.
50. ஐந்து நெருப்பு
நான்கு திசைகளிலும் நெருப்பு இருப்பதாகச் சொல்வார்கள். அந்த கோர தாண்டவத்தில் சிக்கிக் கொண்டவன் எதற்கும் அஞ்சாமல் உடைமுள் குவியலில் குதித்தால் எப்படி இருக்கும்? வறுமை அனைத்தையும் செய்ய வைக்கும்.அப்படித்தான் கதை நாயகன் முத்து அனைத்து வெம்மைக்கும் நெருப்புக்கும் முள்ளுக்கும் துணிகிறான்.அவனது வறுமையின் கோர முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.
51. லீலை
’சைக்கிள் ரேஸ்’ ரெக்கார்ட் டான்ஸ் ஆட்டக்காரி தாட்சாயணியின் கதை. ஒரு பெண் தன் வாழ்க்கையைப்பற்றி முடிவெடுக்கமுடியும் எனவும் தன் சுதந்திரத்தை எந்த ஒரு பின்புலத்திலும் சாத்தியப்படுத்த இயலும் என்றும் வெளிப்படுத்தும் கதை.
52. காக்காய்ப்பொன்
துறவறத்தில் தான் முழுமையாக இருப்பதாக அகங்காரம் மிக்க துறவி ஒருவர். காகம் கொண்டு வந்து அவர் வீட்டு முன் போடும் சின்னச் சின்ன பொருள்கள் அவரது அகங்காரத்தை சீண்டுகிறது. நிலை குலைகிறார். அதன் விளைவைச் சொல்லும் கதை.
53. பலிக்கல்
அதிகார ஆதிக்கம் நிறைந்த ஒருவனால் பழி சுமத்தப்பட்டு சிறை சென்று சகல கசப்புகளையும் சந்தித்த ஒருவரிடம் சம்பந்தப்பட்ட குற்றவாளி அழகிய நம்பியா பிள்ளையின் மகன் மனம் மன்னிப்பு கோர வருகிறது. மனசாட்சியுடன் வந்து பலியிடப்பட்ட பலிக்கல்லிடம் அதாவது சங்கரன் போற்றி என்பவரிடம் மன்னிப்பு கோரத் துடிக்கிறது .அதன் உணர்வுகள் சார்ந்த உன்னதமான கதை.குற்றவிணர்ச்சியின் தாக்கத்தையும் மன்னிப்பின் மகத்துவத்தையும் உணர்த்தும் கதை.
54. நஞ்சு
தன்னுடைய குடும்ப பிரச்சினைக்காக கண்ணில்பட்ட இளைஞனை பகடைக்காயாக்கித் தன் கணவனைப் பழி வாங்கப் பயன்படுத்திக் கொள்கிறாள். தான் ஏமாற்றப்பட்டதை இதில் பயன்படுத்தப்பட்டஇளைஞன் உணர்கிறான்.அவளை எங்கு பார்த்தாலும் அவமானப்படுத்த வேண்டும் என்கிற நஞ்சு நெஞ்சுடன் காத்திருக்கிறான். அவளைத் தேடிப் பழிவாங்கத் துடிக்கிறான் .ஒரு நாள் அவளைப் பார்க்க நேரிடுகிறது.ஓடித் துரத்திப் பிடித்து விடுகிறான். அவர்களுக்குள் நிகழும் சந்திப்பும் உரையாடலும் எதிர்பாராத திருப்பமும் தான் கதை.
55.போழ்வு
வரலாற்றில் ரத்தக்கறை படிந்த பக்கங்களைப் புரட்டிக் காட்டும் கதை. தளவாய் வேலுத்தம்பி தன் அதிகார மமதையாலும் சந்தேகத்தாலும் சந்தேகப்பட்ட , மாவிங்கல் கிருஷ்ணபிள்ளையை இருபுறமும் யானையை இழுக்கவிட்டு இரண்டாகப் பிளக்கிறார். அன்று பார்த்தவர்கள் மட்டுமல்ல இன்று அதைப் படிக்கிறவர்களுக்கும் குலைநடுங்கும்.
56.சீட்டு
வாழ்க்கையே ஒரு சீட்டாட்டம் போலத்தான் .ஒரு பெண்ணின் கனிந்த பேச்சையும் மெலிதான சிரிப்பையும் வேறு மாதிரி அர்த்தப்படுத்திக் கொண்டு வாழ்பவர்கள் சமூகத்தில் ,அதை கருவியாகக் கொண்டு சாதித்தும் வாழலாம் என்று நினைக்கும் ஒரு கணவனைப்பற்றிய கதை.நடுத்தர வர்க்கத்தின் நெருக்கடி சூழ் பொருளாதாரம் பற்றிப் பேசுகிறது.
57.கூடு
பெளத்தம் அடையாளங்கள் சார்ந்த அறிவுபூர்வமான ஒரு கதை .அந்த மடாலயங்களில் நிகழ்ச்சிகள், ஆலயங்கள் அமைப்பு ,பற்றற்ற வாழ்க்கை, அந்த மலைக் குகைகளில் சூழல் அனைத்தையும் கண் முன்னே நிறுத்துகிறது கதை.நிகழ்விடம் சார்ந்த நிலக்காட்சிகளின் வர்ணிப்பு அருமை.
58.முத்தங்கள்
ஆடு திருடும் திருடன் ஒருவன் துரத்தப்பட கிணற்றில் குதித்து தப்பிக்க முயல்வதும், அங்கே தேவதைபோல் ஒரு அமானுஷ்ய சக்தி அவனை ஆட்கொள்ளப் பார்ப்பதும் கதை. மேஜிக்கல் ரியலிசம் கொண்ட கதை.நாய்கள் பற்றிய சித்தரிப்புகள் அது சார்ந்த விவரிப்புகள் சுவை அளிப்பவை.
59. சிவம்
காசியையும் காசியைச் சார்ந்த இடங்களையும் அணுவணுவாக படம்பிடித்து காட்டும் கதை. நாம் ஏதோ ஒரு வாரம் காசியில் தங்கி வாழ்ந்து வந்தது போல் ஒரு உணர்வு தரும் விவரணைகள் கொண்ட கதை.
60.தேவி
ஒரு நாடகம் அரங்கேற்றுகிறார்கள் மூன்று வேடங்கள் .மூன்றிலும் நடிக்க வேண்டியது ஒரே நடிகை .ஏற்று நடித்து அனாயாசமாகத் தன் திறமையை வெளிப்படுத்துகிறாள் நாடக நடிகை ஸ்ரீதேவி. மூன்று என்ன முந்நூறாகவும் தன்னை வெளிப்படுத்திக் காட்ட முடியும் என்கிற நடிகையின் ஆற்றலின் வீரியத்தை உணர வைக்கும் கதை.
61. லாசர்
ஒரு வண்டைப் பிடித்து லாசர் அது இறந்து போனதாக நினைக்கிறான். பாதிரியாரிடம் சென்று உயிர்ப்பிக்க வேண்டுகிறான். அதேபோல் தன் கண்முன் எதிரில் இறந்த தன் பாப்பாவும் உயிர்ப்பித்து விடுவாரா என்று நினைக்கிறான்.பாதிரியாரால் எல்லாவற்றையும் உயிர்ப்பிக்க முடியுமா என்று யோசிக்கிறான்.
62.நிழல்காகம்
தாத்தா ஒரு காகத்தைக் கொன்று விடுகிறார். அந்த காகத்தின் சாபம் அவரை மட்டுமல்ல அடுத்தடுத்த மூன்று தலைமுறைக்கும் நிழலாய் தொடர்ந்து கொத்திக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பேரன் எப்படிச் சாப விமோசனம் பெற்றவனாக மீள்கிறான் என்பதுதான் கதை.
63.பிறசண்டு
தன் வீட்டுக்கு வந்து தன் கண் முன்னே அமர்ந்து மாமா என்று அழைத்துவிட்டு அவர் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு வீட்டில் நகைகளையும் செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்ற திருடனுக்கு தண்டிக்க வாய்ப்பு இருக்கும்போது மன்னிப்பு கொடுக்கும் ஒரு பெரிய மனிதரின் குணம் குன்றில் ஏறி நிற்கிறது.மன்னிப்பை விட சிறந்த அறம் இல்லை என்கிறது கதை.
64.கரு1- 2
வெளிநாட்டிலிருந்து திபெத் பீடபூமி பகுதியில் பயணிக்கும் மதம் தேடல் சார்ந்த மனிதர்களின் கதை .கிறிஸ்தவ நிறம் ஏறிய பயணக்கதை.வரலாறு, புதிர், சூழல், நிலக்காட்சி என இணைந்து வாசிப்பதற்கு ஏற்ற கதை.வாசிப்பின் வழியே அக வெளியை விரிய வைக்கும் அற்புதமான ஒரு சோதனை முயற்சி.
65. இணைவு
’போழ்வு’ கதையின் இரண்டாம் பாகம். திருவிதாங்கூர் வரலாற்றில் ரத்தக்கறை படிந்த பக்கங்களை நினைவூட்டும் கதை. முதல் பாகமான போழ்வில் தான் சந்தேகப்பட்ட ஒரு மனிதரை இரண்டாகப் பிளந்த வேலுத்தம்பி இரண்டாம் பாகத்தில் தன் தம்பியால் கொலை செய்யப்படுகிறார் .அதுமட்டுமல்ல தன் விருப்பப்படியே அப்படிக் கொலை செய்யப்பட்டு உயிர் இழக்க நேர்கிறது.
66. முதுநாவல்
திருவிதாங்கூரில் நடந்த கதையாகத் தொடங்குகிறது. ஊரையே மிரட்டிக் கொண்டிருக்கும் ஆரியசாலை ரவுடி தலைக்கெட்டு காதருக்கும் அவனை அடக்க நினைக்கும் ஏட்டு இடும்பன் நாராயணனுக்கும் நடக்கும் நேருக்கு நேர் மோதல்.மயிர்க்கூச்செறியும் சம்பவங்கள் நிறைந்த கதை. இருவருக்குமான மோதல் காட்சிகள் எந்த ஒரு ஆக்ஷன் படத்தையும் தோற்கடிக்கும்.அனைத்திற்கும் வாய்பேசாது மௌனமாக நிற்கிறது முதுநாவல் மரம்.
67. தேனீ
குடும்பத்திற்காக உழைத்துக் தேய்ந்துபோன தன் தந்தையைப் பற்றிய மகனின் நினைவுகள் கதை.பொற்கொல்லர் குடும்பத்தில் பிறந்து ஓய்வின்றி உழைத்தாலும் அவர் நாதஸ்வரத்துக்குத் தீவிர ரசிகராக இருந்தார்.திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் பரம ரசிகரான தன் தந்தையைப் பற்றிய நினைவுகளை மகன் சொல்வதுதான் கதை. கலை ரசனை கோணத்தில் பல நுண்ணுணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது இக்கதை.
68..ராஜன்
பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் தன் அகங்காரத்தாலும் வேறு ஊரில் உள்ள பர்வதராஜன் என்ற யானையை வாங்க வேண்டும் என்று துடிக்கிறார் ஒருவர். இல்லையேல் அந்த யானையைக் கொன்று விடவேண்டும் என்று ஆணையிடுகிறார். அப்படி மிரட்டிப் பணிக்கப்பட்ட பூதத்தான் ஓடிப்போய் அந்த யானையிடம் தஞ்சம் அடைகிறான் . அந்த யானை அவனை ஆட்கொண்டு தானும் விடுதலை அடைந்து அவனையும் விடுதலை பெறச் செய்கிறது. இது ஓர் உணர்ச்சிமிக்க கதை.
69. ஆகாயம்
சிற்பிகள் கோயிலுக்காகப் பல சிற்பங்களை செதுக்கி வருகிறார்கள். அவர்களில் ஒருவன் குமாரன் என்பவன், வாய் பேச முடியாதவன். ஏதோ அவன் மனக்கண்ணில் கண்ட சிற்பத்தை செதுக்கிக் கொண்டிருக்கிறான். அது சிற்ப சாஸ்திரத்திற்கு உட்பட்டதா?ஆகம நெறிகளுக்குள் அடங்குமா? அது பூஜிக்கப்பட வேண்டியதா? என்ற விவாதம் வருகிறது. அவன் சிற்பம் செதுக்கக் கூடாது என்றும் அவன் விரலை வெட்டவேண்டும், அவனைத் தண்டிக்க வேண்டும் என்றெல்லாம் பேச்சு எழுகிறது. . எது பாவம் எது புண்ணியம் என்கிற விவாதம் நடக்கிறது .முடிவு என்ன எனத் தெரியாமல் விடை தேடி அலைகிறார்கள். கடைசியில் அந்த வாயில்லாச் சிற்பி என்ன ஆகிறான் என்பது கதை.
(தொடர்ச்சி பகுதி மூன்றில்)
-அருள்செல்வன், சென்னை 92
|
|